Blog

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 17

    புனோம் பென் விடுதியில் தூங்கி எழுந்தோம். நாங்கள் நினைத்ததைக் காட்டிலும் முன்னதாகவே எழுந்துவிட்டோம். எப்படியும் ஒன்பது மணிக்குதான் கண்ணைப் பிட்டுக்கொள்ள முடியும் என்று நினைத்தோம். ஆனால் ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம். புறப்பட்டு வெளியே வந்தபோது எட்டரை மணியிருக்கும். தங்கிய ஹோட்டலில் காலை உணவு வசதி இல்லை. அது தங்குமிடம் மட்டும்தான். ஆகவே, வேறுவழியின்றி வெளியே பசியாறப் புறப்பட்டோம்.

    ஒவ்வொர் இடமாகப் பார்த்துப் பார்த்துத் தேடினாலும் நாங்கள் நினைப்பது போன்ற எந்தவோர் உணவகமும் கண்ணில் அகப்படவில்லை. எல்லாமே உள்ளூர்க்காரர்களுக்கு ஏற்ற உணவுக் கடைகள்தான். அங்கிருந்து எழும் வாடை எங்களை நெருங்கவே விடவில்லை. அனைவருமே அசைவ உணவு உட்கொள்ளக் கூடியவர்கள்தான் என்றாலும் காலை உணவுக்கு அசைவம் உண்டு பழக்கமில்லை.

    சிங்கப்பூரில் ஆங்காங்கே பொது உணவுக் கடைகள் இருக்கும். ஹாக்கர் செண்ட்டர் என்று அழைப்போம். அதில் எல்லாருக்கும் ஏற்ற உணவுத் தெரிவுகள் கிடைக்கும். சீன உணவுக் கடைகள் அதிகமிருக்கும் அங்கு. மலாய், இந்திய இனத்தவருக்கென ஒரு கடையாவது ஒதுக்கப்பட்டிருக்கும். இந்தியக் கடைகளை நடத்துவது பெரும்பாலும் இந்திய முஸ்லிம்களாக இருக்கும். அங்கு பெரும்பாலும் தோசையும் பரோட்டாவும் கிடைக்கும். முன்பு இடியாப்பமும் புட்டும் ஆயத்த உணவாக அங்கு கிடைத்து வந்தன. இப்போது ஏனோ அவை பெரும்பாலும் கிடைப்பதில்லை உணவு அங்காடிகளில்..

    அதுதவிர மேற்கத்திய உணவும் அங்கேயே கிடைக்கும். கொஞ்சம் நடந்தால், மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி, பர்கர் கிங் போன்ற விரைவு உணவுக் கடைகள் தென்படும். ஆனால் புனோம் பென்னில் அப்படி எதையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் ஓட்டுநரான ராவும் எங்கள் தேவையை ஊகித்து ஒவ்வொரு கடையாக நிறுத்துவார். உள்ளே போன எங்களில் ஒருவர் வெளியே வரும்போது அவருடைய முகத்தை வைத்தே “எட்ரா வண்டியை” என்று கூவுவோம் எல்லாரும்.

    இந்தக் கடை தேடலிலேயே ஒரு மணி நேரத்துக்கும் மேல் வீணாயிற்று. ஒரு வழியாக அரண்மனை உள்ள ராஜ வீதிக்கு அருகே ஒரு கடையைப் பார்த்து உள்ளே நுழைந்தோம். ரொட்டி, ஆம்லெட், காப்பி கிடைக்கும் என்றதும்தான் எங்களுக்கு உயிர்வந்தது. ஒரு ஆளுக்கு பத்து வெள்ளி வரை வரும் என்றாலும் பரவாயில்லை இதுக்குமேல் அலையத் தெம்பில்லை என்று அமர்ந்துவிட்டோம்.

    கடைக்காரப் பையன் குறிப்பெடுத்து எங்களுக்கான உணவைத் தயாரித்து எடுத்துவர மேலும் அரைமணி நேரமானது. வெறுத்துவிட்டோம். காத்திருக்கும் நேரத்தில் விளையாடுவதற்கென்று சில சீட்டு விளையாட்டுகளும் வண்ணம் தீட்டும் தாள்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. இலவச இணைய வசதியும் இருந்தது. அதனால் ஓரளவு சமாதானமானோம். பேசாமல் ஒரு ரொட்டி பாக்கெட் வாங்கிக் கடித்துக் கொண்டே பாதி இடம் பார்த்திருக்கலாமே என்று அலுத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்து வெளியேறினோம்.

    அப்போது முடிவெடுத்தோம். இனிமேல் வெளியூரோ வெளிநாடோ தங்குவதற்கு விடுதி பதிவு செய்யும்போது காலை உணவுக்கும் சேர்த்துப் பதிவு செய்ய வேண்டும். கூடிய மட்டும் அந்த வசதியுள்ள விடுதியில்தான் தங்கவேண்டும் என்று. இல்லாவிட்டால் இப்படித்தான் நேரம் விரயமாகும். வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்புமிக்கது. அங்கு பார்க்க வேண்டியவை ஏராளம் இருக்கும். ஒருவேளை உணவுக்கு இப்படி அலைந்து நேரத்தை வீணடிப்பது அராஜகம்.

    பசியாறி முடிக்கும்போது மணி பத்தைத் தாண்டிவிட்டது. மாலை நான்கு மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும். இடையில் இருப்பதோ ஆறு மணி நேரம்தான். மதிய உணவுக்கு எப்படியும் அரை மணி நேரமாவது வேண்டும். தங்கியிருந்த விடுதிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சந்தை இருந்தது. கம்போடியா நினைவாகச் சில பொருட்களாவது அங்கே வாங்க வேண்டுமென பரணி ஒரே அடம்.

    இந்த லட்சணத்தில் எதைப் பார்ப்பது ? அரண்மனை அருகிலேயே இருந்தது. முதலில் அதைப் பார்த்து முடிப்போம் என்று முடிவெடுத்தோம். நல்லவேளை அரண்மனைக்கான அனுமதிக் கட்டணம் அதிகமில்லை. எங்கள் கையிலிருந்த விட்டமின் ப எல்லாம் கிட்டத்தட்ட காலியாகும் தறுவாயில் இருந்தோம். நாலு வெள்ளியோ ஐந்து வெள்ளியோ கட்டணம். அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனோம். அரண்மனை என்றால் நம்ம ஊர்போல கோட்டை கொத்தளங்களோடு பிரமாண்டமாய்ப் பழமைப் பிசுக்கேறி வெளவால் பறக்கும் இடம் என்று நினைக்க வேண்டாம். 

         

    சும்மா துடைத்து வைத்த வெண்கலச் செம்பு மாதிரித் தக தக தக என மின்னியது அரண்மனை. காலை வெயிலில் பொன் போல் சுடர்ந்தது அரண்மனை. முற்பகல் வேளையாக இருந்தாலும்கூடக் கடுமையான வெயில் இல்லை. நிர்வாக வசதிக்காகப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் அவை கண்ணை உறுத்தாத வண்ணம் அரண்மனைக் கட்டட வடிவத்தோடு இயைந்து செல்லும் வகையில் கட்டப்பட்டிருந்தன.

    அரண்மனை நுழைவாயிலிலேயே அனுமதிச் சீட்டு விற்குமிடம் இருந்தது. இதென்ன பெரிய விஷயமா என்று சிலர் நினைக்கலாம். ஆமாம், பெரிய விஷயம்தான். நீங்கள் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் போயிருக்க மாட்டீர்கள். தஞ்சாவூர் அரண்மனைக்குச் சென்றிருக்க மாட்டீர்கள். பூம்புகாரிலுள்ள எழுநிலை மாடத்துக்குப் போயிருக்க மாட்டீர்கள். ஏனென்றால், அங்கெல்லாம் பார்க்க வேண்டிய இடத்திலிருந்து ரொம்ப தூரம் தள்ளித்தான் அனுமதிச் சீட்டு விற்கும் கூடம் இருக்கும்.

    அதைத் தெரிவிக்கும் எந்த அறிவிப்பும் இருக்காது. அதைக் கடந்து நுழைவுச் சீட்டுக் கிழிக்கும் இடத்துக்கு அருகே போனபிறகுதான் “அந்தா அங்கண போயி டிக்கெட் வாங்கிட்டு வாங்க” என்று ஒருவர் உங்களை ஆற்றுப்படுத்துவார். வேகாத வெயிலில் வேகு வேகென்று நடந்து போய்ச் சீட்டு வாங்கித் திரும்ப வேண்டும். வேறு வழியில்லை. இது என் அனுபவம். இப்போது மாறியிருக்கலாம். இந்தியாவை விட்டு வெளியே வந்ததுமுதல், ஒவ்வோர் இடத்திலும் மனம் அந்த இடத்தை இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

    என் நண்பர்களும் அப்படித்தான். ஏன் நம்மவர்கள் ஒரு சிறிய விஷயத்தில்கூட அக்கறை செலுத்துவதில்லை என்று வியந்துபோகும் எங்கள் மனம். இந்தியாவைவிடப் பொருளாதாரத்தில் பலமடங்கு பின்தங்கியுள்ள கம்போடியாவின் தூய்மை வியக்கத்தக்கது. அரண்மனை அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. இந்தியாவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் அபாரமாகப் பராமரிக்கப்பட்டு வரும். மற்ற இடங்கள் பெரும்பாலும் குப்பைதான்.

    தஞ்சாவூர் அரண்மனையிலுள்ள மராட்டா தர்பார் என்னும் கூடம் கவின்மிக்க இடம். வண்ண வண்ணச் சுதைச் சிற்பங்கள் அழகு கொஞ்சும் எழில்மிக்க இடம். பட்டை பட்டையாகத் தூண்களும்.. வளைவுகள் மிகுந்த மேற்கூரையும்… பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இடம். கலைடாஸ்கோப்பைத் திருகினால் உருவாகும் வண்ண வண்ண வடிவங்களைப் பார்ப்பது போலிருக்கும் அந்த கம்பீரமான வண்ணக்கூடம். சுமார் 500 ஆண்டுப் பழமை மிக்க இடம். ஆனால் அதற்குச் செல்லும் வழியெல்லாம் இருட்டு, நூலாம்படை, வௌவால் புழுக்கை துர்நாற்றம், தர்பார் தரையெங்கும் புழுதி. எவர் வேண்டுமானாலும் சுவரில் கிறுக்கினால் அதைத் தட்டிக் கேட்க நாதியற்ற தனிமை.

    தர்பாரின் நடுநாயகமாக உள்ள அலங்காரக் கூடத்தின் பின்னால் உள்ள சுவரில் அமைச்சர்கள் இருவர் அருகில் நிற்க, இரண்டாம் சிவாஜி மகாராஜாவின் அழகான ஓவியம் ஒன்று தீட்டப்பட்டிருக்கும். இவர் மன்னர் சரஃபோஜியின் மகன். இவர்தான் தஞ்சையை ஆண்ட கடைசி மராட்டிய மன்னர். 1833-1855 இவரது ஆட்சிக் காலம். இவருக்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம் உள்ளே புகுந்துவிட்டது. ஜீவகளை ததும்பும் இந்த சிவாஜி மன்னரின் ஓவியம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. ஓதம் பொங்கும் பழங்காலச் சுவர் காரணமாகத் தரையிலிருந்து நாலு அடி உயரம் வரை அது மொத்தமாக அழிந்தே போனது. மிஞ்சியுள்ள இடத்தில் கையெட்டும் தூரம் வரை கிறுக்கல்கள்.

           (ஓவியத்தில் இருப்பது சரஃபோஜியா சிவாஜியா என்று இப்போதுதான் குடவாயில் பாலு ஐயாவை அழைத்துக் கேட்டேன். அவர்தான் இந்த விவரங்களைச் சொன்னார். மேலும் அவர் மராட்டா தர்பார் என்று அந்தக் கூடத்தை அழைப்பது சரியல்ல என்கிறார் தமது “தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு” நூலில். நாயக்கர்களால் கட்டப்பெற்ற அந்த கொலு மண்டபத்தின் மூலப் பெயர் லக்ஷ்மி விலாசம். செவ்வப்ப நாயக்கர் இதைக் கட்டியிருக்கலாம். பிற்காலத்தில் மராட்டிய மன்னர்களும் அதை கொலு மண்டபமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். சுதைச் சிற்பங்கள் உட்படப் பலவும் பிற்கால மராட்டியர்களின் சேர்க்கை என்பதால் நாயக்க பாணி மறைந்து மராட்டியக் கலை பாணி மேலோங்கிவிட்டது என்று எழுதுகிறார் குடவாயில்.)

    இப்படித்தான் ஒருமுறை கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்களைப் பார்க்கக் குடும்பத்தோடு போயிருந்தோம். பல ஆண்டுகளாகப் போக நினைத்த இடம் என்பதால் நின்று நின்று ரசித்து ரசித்து மன்மதனையும் ரதியையும் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே காமிரா எடுத்துச் செல்லக் கூடாதாம். ஏன் என்றால் பதில் இல்லை. அப்படித்தான் என்றார்கள். சரி தொலைகிறது. சிற்பங்கள் பூராவும் நூலாம்படை படிந்து பராமரிப்பு இல்லாமல் நின்றன.

    நூலாம்படையைக் கைகளால் களைந்து கொண்டிருந்தபோது ஊழியர் ஒருவர் வந்து “சார் செலையெல்லாம் தொடக் கூடாது சார்” என்று அதட்டினார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் பார்த்தீர்களா?” என்று கடுமையாகக் கேட்டதும் பேசாமல் போய்விட்டார். ஒருக்காலும் இம்மாதிரி ஆட்களிடம் பணிந்து போகாதீர்கள். கருவறை மூர்த்தியைப் படம் எடுக்கக் கூடாது என்பதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. ஆனால், வெளிப்புற மண்டபத்திலுள்ள சிலைகளைப் படம் எடுக்கக் கூடாது என்பதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் ? இன்றுவரை எனக்குப் புரியவில்லை.

    கம்போடிய அரண்மனையின் வெளிப்புறத்தில் படம் எடுக்கத் தடையில்லை. 1860களில் கட்டப்பட்ட கம்போடிய அரண்மனை வளாகத்துக்குள் பல்வேறு கட்டடங்கள் உள்ளன. அவற்றுள் எங்கள் கண்ணுக்கு முதலில் தட்டுப்பட்டது கொலு மண்டபம். சரிவான கூரையுடன் கூடிய அழகான கட்டடம். தாய்லந்துக் கட்டட பாணியை ஒத்த கட்டட பாணி.

    கரண்ட மகுடம் போல் படிப்படியாகக் குறுகி மேலே ஊசிபோல் முடிகின்றன கட்டடத்திலுள்ள மூன்று கோபுரங்களும். நடுவில் இருக்கும் கோபுரம் பெரியது. அதன் இருபக்கமும் அளவிற்சிறிய கோபுரங்கள். நடுவிலுள்ள கோபுரத்தின் மேலே நான்முகன் முகம் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அப்பட்டமான கம்போடிய முகம். ஊழ்கத்தில் அமைந்த தோற்றத்தில் இல்லாமல் கண்களைப் பளிச்சென வெறித்துப் பார்க்கும் தோற்றம் பிரம்மனுக்கு.

    அந்த முகத்துக்கு மகுடம் வைத்தது போல் கோபுரம் சுருங்கி மேலேறுகிறது. கோபுரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கின்னரர்கள் அதைத் தாங்கிப் பிடிப்பது போன்ற அழகிய சிலைகள் உள்ளன. அந்தக் காலத்தில் இங்கேதான் மன்னருக்குப் பட்டாபிஷேகம் நடந்திருக்கும். இன்னமும் இங்கே சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவாம். முக்கிய விருந்தினர்களை மன்னர் சந்திப்பதும் இங்கேதானாம். வேலைப்பாடு மிக்க சில அரியணைகளோடு வெளிநாட்டுப் பிரதானிகள் அளித்த மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் இங்கே கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நின்று நிதானமாகப் பார்க்க ஒரு முழுநாள் வேண்டும்.

    எங்களுக்கு அதற்கு நேரமில்லை. லேசாகக் கண்களால் மேய்ந்துவிட்டு அடுத்த கட்டடத்திற்குச் சென்றோம். ஒவ்வொரு கட்டடமும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட தோட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கிறது. கொலு மண்டபத்துக்குப் பக்கத்திலேயே இருக்கிறது பௌர்ணமி அரங்கு. இதற்குக் கூரை மட்டும்தான். பக்கவாட்டுச் சுவர்கள் கிடையாது. நல்ல உயரமான தளத்தின் மீது தூண்களோடு உள்ளது அரங்கு. உள்ளே ஒரு மேடை. அதற்கு மட்டும் பக்கச் சுவர்கள் உள்ளன. கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்க இந்த இடம். பௌர்ணமி அன்று ஏகாந்தமாக அமர்ந்து இசை கேட்டு, அப்சரஸ் நடனம் கண்டு ரசிப்பார் மன்னர்.

    அதன் அருகிலேயே சில்வர் பகோடா. அதாவது வெள்ளிக் கோபுர அரங்கு. இது மன்னர் குடும்பத்துக்கான பௌத்த ஆலய வளாகம். உள்ளே விதவிதமான புத்தர் சிலைகள் உள்ளன. ஆலயத்துக்கு வெளியே ஒரு தாழ்வாரத்தைத் தாண்டினால் மன்னர் நொரோடம் ஒரு வெள்ளைக் குதிரையில் அமர்ந்தவாறு உள்ள சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் இருபக்கங்களிலும் வெள்ளி மாடங்கள் உள்ளன. அதில் மன்னரின் அஸ்திக் கலசம் வைக்கப்பட்டிருக்கிறதாம். அண்மையில் கட்டப்பட்டதுதான் என்றாலும் மிகுந்த வேலைப்பாடுமிக்க மாடங்கள்.

    இந்த இடத்தில் சற்று உயரத்தில் தண்ணீர்த் தொட்டி அமைத்து தாமரைப் பூக்களை மலரச் செய்திருக்கிறார்கள். அந்த மலர்கள் அந்த இடத்தையே அழகாக்கி விட்டன. அதற்குப் பக்கவாட்டில் அங்கோர் வாட்டின் சிறிய மாதிரி ஒன்று செய்து வைத்திருக்கிறார்கள். அந்த மாபெரும் ஆலயத்தை நன்கு புரிந்துகொள்ள இந்த மாதிரி வடிவம் உதவியாக இருக்கும். இந்தச் சிறிய அளவில் பார்க்கும்போதே அந்தப் பேராலயத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கிறது.

    இதற்குள் வெயில் ஏறிவிட்டது. வியர்த்துக் கொட்டி சட்டையெல்லாம் நனையத் தொடங்கி நிழலுக்கு ஏங்கியது உடல். அரண்மனைக்குள் எங்களைத் தவிர வேறு அதிகமான பயணிகள் யாரும் இல்லை. எல்லா இடங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. அரண்மனையை ஒரு சுற்றி சுற்றிவிட்டு வெளியே வந்தோம். அடுத்த இலக்கு, கம்போடியாவின் தேசிய அரும்பொருளகம். நேரமிருந்தால் S-21 சிறைச்சாலையைப் பார்க்க நினைத்தோம். ஆனால் அது முடியாது. அதற்கு நேரமில்லை.

    புனோம் பென் புறநகர்ப் பகுதியில் இருக்கிறது அந்த உயர்நிலைப் பள்ளி. மிக அண்மையில் நடந்த மாபெரும் இனப் படுகொலையின் சாட்சியாக இன்னும் இருக்கிறது அந்தப் பள்ளி. சுமார் 17-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிறை வைக்கப்பட்ட இடம் அது. அங்கிருந்து உயிரோடு வெளியேறியவர்கள் ஏழு பேர் மட்டுமே !…

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     
     
  • மழலை வரம் தந்த சாய் மகாராஜ்

     

    சீரடி தெய்வத்தின்  ஒவ்வொரு சொற்களும் அவரின் அடியவர்களுக்கு வேத வாக்கு. அவர் சொல்லும் சொற்கள் மகத்துவம் வாய்ந்தது என்று மனமார நம்பினார்கள். அவர் சொல்லிவிட்டால் அது அப்படியே பலிக்கும் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

     ஸோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக் குழந்தையில்லை.  கண்ணில் பட்ட தெய்வங்கள் அனைத்துக்கும் கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள் செய்துகொண்டாள்.  ஆனால் அதற்கான பலனை தான்  காண முடியவில்லை . இதனால் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த அவள்,   இறுதி முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன் சீரடி வந்து பாபாவுக்குச் சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள். 

     மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்.அவள் அவரைத் தனியாகக் கண்டு வீழ்ந்து வணங்கி தனது நீண்ட நாள் கோரிக்கையான பிள்ளை வரத்தை வேண்ட விரும்பினாள். ஆனால் அதற்கான  உரிய சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால், முடிவாக அவள் பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி பாபாவின் நெருங்கிய நண்பரான  ஷாமாவிடம் கேட்டுக்கொண்டாள். 

     ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காகத் தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கூறினார்.  தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு ஜாடை காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார்.  ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார். 

     இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார். ஷாமா அந்தப் பெண்மணிக்கு ஜாடை செய்தார்.  அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம்அளித்தாள்.  பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார்.  அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது. 

     பாபா: ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிறது என்பதைக் கவனி. 

    ஷாமா:  இந்த பெண்மணி, அந்த மாதிரியாக ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள்.  எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள். 

     பாபா: இத்தேங்காய் அவளுக்கு ஒரு மழலையை அளிக்குமா?  இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

     ஷாமா:  உங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நாங்களறிவோம் .  உங்களது சொல் அவளுக்கு நிச்சயம் குழந்தைப் பேற்றை அளிக்கும்.  நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.

    விவாதம் கொஞ்சநேரம் நடந்துகொண்டு இருந்தது.  பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக் கொண்டிருதார்.  ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார்.  முடிவாக பாபா சம்மதித்தார். 

    பாபா: அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்

     ஷாமா:  எப்போது?

    பாபா:  12 மாதங்களில்

    இதன்பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும்உண்டனர்.  மறுபகுதி அவளிடம் அளிக்கப்பட்டது. 

     பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி “தாயே ! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி.  பாபாவின் கருணையால் பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை நிச்சயம் பிறக்கும். நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்” என்று கூறினார்.

     பாபாவின் வாக்கு பொய்யாகவில்லை. அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்.  புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள்.  கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள். பாபாவுக்கு தங்களது  நன்றியை தெரிவிக்க ,அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார்.  ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.

     

    சீரடி சாய் பாதம் பணிவோம் ………

    சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் ……

     

  • செவ்வாய் தோஷம் தீர்க்கும் ஆடி கார்த்திகை விரதம்

     

     தேவர்களை சிறைப்பிடித்து,மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை  பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். அவனை சேர்த்து ஒன்றாக்கிய  உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்’ எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார்.  மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு,அவனருளால்  குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.

     

                                                                            

    இது தான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. ‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’ என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது

     கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

    ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

     எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று   பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறுகிறது. கந்தன் காவடிப் பிரியன் என்பதால், அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை  செலுத்துவது வழக்கம்.

    ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாதலால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும்  நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது.

    வேலுண்டு வினையில்லை…..மயிலுண்டு பயமில்லை…..

  • மங்கலம் பொங்கும் ஆடிச்செவ்வாயில் அவ்வை விரதம்

     

    வாரா வாரம் தான் செவ்வாய் கிழமையும் , வெள்ளிக்கிழமையும் வருகிறது. ஆனால் ஆடி மற்றும் தை மாதங்களில்  வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?. ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது ஏதோ நேற்று தோன்றிய வழக்கம் இல்லை. காலம் காலமாக நம் முன்னோர் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் அருள் பெற விரதமிருந்து வருவது வழக்கத்தில் உள்ளது. இவ்வளவு ஏன் அன்னை பராசக்தியே சிவனை அடையும் நோக்கில் இம்மாதத்தில் தான் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். ஆடிச் செவ்வாய் தேடிக்குளி” என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

     ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது  பெண்களின் நம்பிக்கை.

     மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பது வழக்கம். குறிப்பிட்ட நாளில் இரவு அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடி,  மூத்த சுமங்கலி பெண்கள்  வழிகாட்ட, இளம்தலைமுறைப்  பெண்கள் விரதத்தை தொடங்குவர்.

    பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட  ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டையை நைவேத்தியமாக  தயாரிப்பார்கள். மேலும் அன்றைய தினம் செய்யப்படும் நைவேத்தியங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.

    அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி செய்யப்படும் பூஜையில் அவ்வையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை பக்தியுடன் கேட்டு, இறுதியில்  நைவேத்தியமாக செய்த பிரசாதங்களை பெண்களே உண்பார்கள். இதில் ஆண்களை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளைக் கூட   அனுமதிக்க மாட்டார்கள்.  பூஜை முடிந்தபின் வழிபாடு நடந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவார்கள்.இந்த விரதத்தை கடைபிடிப்பதால் குடும்ப ஒன்றுமை நிலைக்கும் என்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி , குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும்  நம்பப்படுகிறது.

     இதை தவிர ஆடிச்செவ்வாயில்  துர்க்கை, முருகனுக்கும் பெண்கள்  விரதம் இருப்பதுண்டு. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணியில் இருந்து  4:30 மணிவரை உள்ள ராகு காலத்தில்  அம்பிகையை வழிபடுவது  விசேஷமாகும். 

     இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால்,விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெற முடியும். மாங்கல்யம் நிலைத்து நிற்பதுடன்,  மணமாகாத பெண்கள்  நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும் வழி செய்யும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.  

     

  • சொல்லின் செல்வர் அனுமன் புகழ் பாடுவோம்

     

    இராமாயணம் என்னும் புண்ணிய இதிகாசத்தில் நம்மால் மறக்க முடியாத ,மறைக்க முடியாத பெயர் அனுமன்.  இதிகாசத்தின்  நடுநாயகமாக விளங்குபவரும் அவரே.  ராமாயணம் முழுவதும், எங்கேயும் தன் அளப்பரிய அறிவைப் பற்றியோ, ராமபிரானுக்கு தான் செய்த தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. அடக்கத்தின் உருவமான அனுமன், சீதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தும், ராமரிடம் தனக்கு இது வேண்டும் ,அது வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை. ஆனால் ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யமும், அங்கதனுக்கு  ராஜகுமாரன் என்ற பட்டமும், விபீஷணனுக்கு  இலங்கையின் அரசபதவியும் கிடைத்தது.  இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன்,“ உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர்”, என்றார்.  “நீ எப்படி கடலைத் தாண்டினாய்?” என ராமன் கேட்டதற்கு ,அனுமன் மிகவும் அடக்கமாக, “எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால்” என்றார்.

    பக்திக்கும் , இறை சேவைக்கும் உதாரணமாக திகழும் அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்ட அவர், தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், போன்றவற்றைத் தருபவர்.

      அப்பேற்பட்ட அனுமனை சாதரணமாக வணங்கி விட முடியுமா?.

    வடமாலை அணியும் வழக்கம் ஏன்?

    ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி அனுமனுக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே “வடமால்யா’ என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடைமாலையாகி விட்டது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியவர்கள்.

     

    வெற்றிலை மாலையின் தாத்பரியம்

     

                                                           

    அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு ராமரைப் பற்றிய விவரங்களை கூறி ராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமனின் தலையில் புஷ்பமாய் தூவி ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்ததால், அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது.

     

     வெண்ணெய் சாத்துதலின்  அர்த்தம்

    ராமசேவையையே தன் மூச்சாக இருந்த அனுமன் , ராவண வதத்தின் போது  போர்க்களத்தில் உடம்பெல்லாம் புண்ணாகி கிடக்க, அவரின் காயத்தின் வேதனையை போக்க குளிர்ந்த பொருளான வெண்ணையை அனுமனுக்கு சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. இதில் ஆச்சரியமான விஷயம், அனுமனுக்கு சாத்தப்படும் இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.

    ராம கடாட்சம் பெற துளசி மாலை

    ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

    காரிய சித்திக்கு குங்குமப் பொட்டு:

    அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால், பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்த வேண்டும். காரியம் சித்தியாகும் வரை இது போல் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

    மேலும் திருமணத்தடை நீங்க அனுமானுக்கு வியாழனன்று வெற்றிலை மாலையும்  எடுத்த  வேலைகளில் வரும் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலையை  சாத்தும் நம்பிக்கையும் உண்டு.

     

    அஞ்சிலே ஒன்று பெற்றான்

    அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்

    கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்

    எம்மை அளித்துக் காப்பான்.

     

    பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமான். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.

     

    விளக்கம்: பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமான். அவரை வணங்கினால் இந்த பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

     

    மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை,மனமுருக பாடி அனுமனை  வழிபட்டால் கல்வி கேள்விகளில் மட்டுமின்றி, பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடத்தையும்  நமக்கு தருவார் அனுமன்.

      

     

  • சனி பகவான் சுயம்புவாகத் தோன்றிய குச்சனூர்

     

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் அமைந்திருக்கிறது  குச்சனூர்  . இங்கு தான் நவக்கிரகங்களில் முக்கியமானவரான சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றித் தனக்கென ஒரு கோயில் கொண்டுள்ளார்.

     

    தல வரலாறு

     செண்பகநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த தினகரன் என்ற  அரசன் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டான். குழந்தை வரம் கேட்டு  இறைவனிடம் வேண்டிவந்தான். அப்போது கோயிலில் அசரீரி ஒன்று அரசன் காதில் விழுந்தது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அப்படி அசரீரியில்கேட்டபடியே ஒரு  சில தினங்களில்  பிராமணச் சிறுவன் ஒருவன் அரசனிடம் வந்து சேர்ந்தான். அரசனும்  அந்த சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டினான். சில காலத்திற்கு  பிறகு , அசரீரியில் சொன்ன படியே அரசிக்கு  ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர் அரசனும், அரசியும்.குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாயினர். மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான் சந்திரவதனன். சொந்த மகன் சதாகன் அப்படி இருக்கவில்லை. இதனால், அரசன் வளர்ப்பு மகன் சந்திரவதனனையே  அரசனாக்குவது என்று முடிவெடுத்து அவனுக்கே முடிசூட்டினான்.

     இதைத்தொடர்ந்து  அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. சனி திசையால் அரசன் தினகரன் பெரும் துயரப்பட்டான் .தந்தை துயரப்படுவதை கண்டு சகிக்காத சந்திரவதனன் சுரபி நதிக்கரையில் இரும்பால் சனியின் உருவத்தைப் உருவாக்கி வழிபட்டான். இந்த வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் சந்திரவதனன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு தகுந்தாற்போல் சனி தோஷம் பிடிக்கிறது. அவரவர் பாவ வினைகளுக்கேற்பவே ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், நன்மைகள்  செய்பவர்களுக்கு, அவரவர் நல்ல செயல்களுக்கு ஏற்றார் போல சனி தோஷத்தின் இறுதியில் நன்மைகள் ஏற்படும்” என்றார்.இந்த விளக்கத்தை கேட்டும் மனம் அமைதி பெறாத சந்திரவதனன் , சனீஸ்வர பகவானிடம்   தந்தையின் துன்பத்தைக் குறைக்கும்படி மன்றாடினான். சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றார்.

                                                          

     சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டான்  சந்திரவதனன். துன்பங்கள் தீர்ந்த நிலையில் சனீஸ்வர பகவானிடம் வேண்டிய சந்திரவதனன் , சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களை அத்துன்பத்திலிருந்து மீட்க வேண்டினான். சனீஸ்வரனும் கோரிக்கையை ஏற்று , குச்சனூரில் சுயம்புவாகத் தோன்றினார். சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய  இடத்தில் குச்சுப்புல்லால் கூரை  அமைத்து சிறிய கோவில் உருவக்கப்பட்டது. இதன்பிறகு  செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூராக மாறியது . இதுவே குச்சனூரில் சனீஸ்வர பகவான் தோன்றிய வரலாறு .

     

    சனி தோஷத்தால் அவதிப்படும் பலரும் குச்சனூர் சனீஸ்வர பகவான்  கோயிலுக்கு வருகை தந்து துயர் நீங்கி செல்கின்றனர்.

     

    சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

    சச்சரவின்றிச் சாகா நெறியில்

    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

  • இறைவன் நைவேத்தியம் சாப்பிடுகிறாரா ?

     

    குருகுலத்தில் எப்போதும் போல் குரு தன் சீடர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு துறு துறு சீடனுக்கு  எப்போதும் குறுகுறுவென்று தன் குருவிடம் எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அன்றும் அப்படி தான், குரு தனது நித்ய கடமைகளை முடித்து விட்டு இறைவனுக்கு நைவேத்யம் படைத்து பூஜையை முடித்தார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த அந்த சீடன், ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்தியம்  இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இறைவனுக்கு நாம் படையலிடும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டு விட்டால், அதை  நாம் பக்தர்களுக்கு  எப்படி பிரசாதமாக தர  முடியும்?” என்று கேட்டான்.

    சீடனின் கேள்வி குருவுக்கு புரிந்து விட்டது. கேள்விக்கு வெறுமனே பதில் சொல்லாமல் சீடனுக்கு புரியும்படி விளக்கம் தர முடிவு செய்தார். அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ,“நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

                                    

                                                                                     

     

    சீடனுக்கு குரு தன் கேள்விக்கு பதில் சொல்லாதது ஏமாற்றம் தந்தாலும், குருவின் கட்டளைக்கு பணிந்து வகுப்பறையை தயார் செய்தான்.  அன்றைய வகுப்பில் ,அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

    அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சீடனை  சைகையால் தன்னருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

    “எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

    “முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

    “எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

    கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..

    ” பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான்.

    மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..

    “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”என்றார்.

    பதட்டம் அடைந்த சிஷ்யனும் , புத்தகத்தை காண்பித்து கூறினான்

    “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”என்றான்.

    “இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?.இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?.நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

    சிஷ்யன்  ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன்  பார்த்தான். குரு தொடர்ந்தார்,

    “உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?.அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்தியம்  உட்கொள்கிறோம். ”என்று விளக்கினார்.

    இது நாள் வரை தனது அறியாமையை கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்த தனது பக்குவமற்ற தன்மையை எண்ணி வெட்கப்பட்டதுடன், பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்தியம்  செய்து முழுமையடைந்தான் சீடன்.

  • தன்னைக் காண அடியவருக்கு உதவிய ஸ்ரீ சமர்த்த சாயி

     

    காகாஜி வைத்யா என்பவர் நாசிக் ஜில்லாவைச் சார்ந்த வணியில் வாழ்ந்து வந்தார்.  அவர் ஒரு சப்தஷ்ரிங்கிதேவி உபாசகர். சில காலமாக பல்வேறு மனவருத்தத்தினால்  அவர் பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார்.  மன அமைதி இழந்திருந்த அவர், ஒருநாள் மாலை தேவியின் கோவிலுக்குச் சென்று தம்  கவலைகளை தீர்க்குமாறு,மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.  தேவியும்  அவர் மேல் கருணைக் கொண்டு,இரவு கனவில் தோன்றி அவரிடம், “பாபாவிடம் நீ செல்வாயாக, பின் உன் மனம் அமைதியடையும்”என்றாள்.   இந்த பாபா யார் என்று அவளிடம் கேட்க காகாஜி முற்படும் போது தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார்.  தேவி, தன்னைக் காணுமாறு பணித்த இந்த பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார். 

     சிறிது எண்ணத்திற்குப்பின் அவராகவே இந்த பாபா த்ரயம்பகேஸ்வராக (சிவனாக) இருக்கவேண்டும் என முடிவுக்கு வந்தார்.  எனவே அவர் நாசிக் ஜில்லாவிலுள்ள  த்ரயம்பத்திற்குச் சென்றார்.  அங்கு பத்து நாட்கள் தங்கி, தினந்தோறும் அதிகாலை குளித்து, ‘ஸ்ரீருத்ரம்’ ஓதி, அபிஷேகம் மற்றபிற சமய சம்பிரதாயங்களை செய்தும்   சலனமுற்றவராகவே இருந்தார்.  தமது இருப்பிடத்திற்குச் மீண்டும் சென்ற அவர், தேவியிடம் மீண்டும் மன்றாடினார். அன்றிரவு தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றி, “நீ ஏன் த்ரயம்பகேஸ்வரத்திற்குச் சென்றாய்?  நான் பாபா என்று கூறியது ஷீர்டியைச் சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயியை” என்றாள்.

     அடுத்து தான் எப்போது ஷீர்டிக்குப் போவது, எப்படி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் கவலையாக மாறியது. ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், ஞானி மாத்திரமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார் என்பது காகாஜியின் விஷயத்தில் நிரூபணமானது. காகாஜிக்கு உதவிட பாபா  தனது அடியவரான ஷாமாவையே அனுப்பி வைத்தார்.  அதன் பின்னணி சுவாரசியமானதும், ஆச்சரியப்படுத்துவதும் ஆகும். ஷாமா தமது இளம்வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்.  அவரது தாயார் அவர்களின் குலதெய்வமான வணியில் உள்ள சப்தஷ்ரிங்கிதேவியிடம் தன் மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டாள்.

     தாயாரோ சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஸ்தனங்களில் ஒருவிதத் தோல் வியாதியால் அவதியுற்றாள்.  அத்தருணத்தில் தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் ஒரு வேண்டுதலைச் செய்தாள்.  இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன.  அவளது மரணப் படுக்கையில் தனது மகன் ஷாமாவைத் தன் அருகே அழைத்து வேண்டுதல்களைக் குறித்து அவரது கவனத்தை ஈர்ந்து அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிய பின்பு உயிர் நீத்தாள். 

    சிலநாட்களுக்குப் பின்னர் ஷாமா இவ்வேண்டுதல்களைக் குறித்து மறந்துவிட்டார்.  இவ்வாறாக முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில் ,ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் ஷீர்டிக்கு வந்து அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார்.  ஸ்ரீமான் பூட்டியையும், மற்றவர்களையும் குறித்து அவர் கூறிய முன்னோடிச் செய்திகள் யாவும் உண்மையாயின.  அனைவரும் மகிழ்ந்தனர். 

    ஷாமாவின் தம்பியான பாபாஜியும் ஜோதிடரைக் கலந்து ஆலோசித்தார்.  அப்போது அவரது தாயாரின் வேண்டுதல்களை அவரின் அண்ணன் அவளின் மரணப்படுக்கையில் நிறைவேற்றுவதாக வாக்களித்து இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  எனவே கடவுள் அவர்கள்மீது மகிழ்வுறாமல் அவர்களுக்குத் துன்பங்களை அளித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.  பாபாஜி இதைத் தன் அண்ணனிடம் கூறவும் அவர் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார். ஷாமாவும் மேற்கொண்டு எவ்விதத் தாமதமும் செய்யாமல்,ஒரு பொற்கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி ஸ்தனங்களைத் தயாரிக்கச் சொன்னார்.

     பின்னர் அவர் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து வேண்டிக்கொண்டார்.  சப்தஷ்ரிங்கி கோவிலுக்கு அவரையே போகும்படியும், அவற்றைத் தேவியின் பாதங்களில் அவரையே சமர்ப்பிக்கும்படியும் பாபா வற்புறுத்தினார்.  பாபாவின் அனுமதியையும், உதியையும் பெற்றபின் ஷாமா வணிக்குப் புறப்பட்டார்.  அங்கு அவர் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜியின் வீட்டை வந்தடைந்தார்.  காகாஜி அப்போதுதான் பாபாவைப் பார்க்க மிக்க கவலையுள்ளவராக இருந்தார்.  அத்தருணத்தில் ஷாமாவும் அங்கு வந்தடைந்தார்.  இது தான் சாயின் லீலை.

    தேவி சொன்னது போலவே , பாபாவைப் பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாயும், அடக்கமாகவும் ஆயிற்று. பாபாவிடம் முழுமையாகச் சரணடைந்து தம் கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்தார். 

    தன் பார்வை மற்றும் தரிசனத்தினால் மட்டுமே கூட  பாபா தன் அடியவர்களுக்கு பேரானந்தத்தையும், நிம்மதியையும் தர முடியும் என்பதற்கு காகாஜியின் சம்பவமே ஒரு உதாரணம் .

    ஜெய் ஜெய் சாய் ராம் …..

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (ஆனாய நாயனார் )

     

    இசையால் சிவபெருமானை மயக்கிய ஆனாய நாயனார்

     

    மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்

        மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்

    கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து

        குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்

     தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்

        தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து

    பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்

        போதுகவென் றருளவுடன் போயி னாரே.

     

    – யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

     

     லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம்.

    திருமங்கலம் என்ற திருத்தலத்தில்,ஆயர் குலத்தில் ஆனாய நாயனார் அவதரித்தார். சிவதொண்டை தனது மூச்சாக கொண்ட இவரிடம், ஏராளமான பசு மந்தைகள்  இருந்தன. ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவர்.  பசுக்கூட்டத்தை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் போது இவர் குழல் ஊதுவார்.

    ஒருநாள் வழக்கம் போல்,திருநீறு அணிந்துகொண்டு பசுக்களுடன் முல்லை நிலத்திற்கு செல்கிறார். கார் காலமாதலால் வனமெங்கும் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசியது. காணும் பொருட்களிளெல்லாம் சிவனை காணும் நாயனார் , ஐந்தெழுத்து மந்திரத்தை நமச்சிவாய என்று குழலோசையில் வசித்தார்.

    சிவமயமான  குழல் ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நின்றது.  அதே போல எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அசையாமல் நின்றது. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நின்றது.மலர்கள் அசையாமல் நின்றது. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது.

     ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது. வானத்தையும் தன் வசமாக்கிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல்  எழுந்தருளி உமையாள் சகிதம் எதிர்நின்று காட்சி தந்தார்.  அக்குழல் இசையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய”, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் எம்பெருமான்  சிவனோடு ஜோதியில் சங்கமித்தார்.

    இசையால் இறைவனை  வசப்படுத்திய ஆனாயர் வாழ்க்கை நமக்கு சொல்லும் எளிய பாடம் , பெரும் விரதங்கள் , யாகங்கள் , ஹோமங்கள் மூலம் இறைவனை அடையும் முயற்சிகளுக்கு இணையானது இறைவனின் புகழை அனுதினமும் தியனிப்பதும் , மனமுருகி பாடுவதும் என்பதே. தென்னாடுடைய சிவனை இதயத்தில் நிறுத்தி வாயாராப் பாடுவோம் . சிவபெருமானின் பேரருள் பெறுவோம்.

    ஓம் நமச்சிவாய ………

  • நிலம், வீடு, தோப்பு என வசதிகள் பெருக ஆறுமுக பெருமாளின் தயவு வேண்டும்.

     

    நம்மையும்,இந்தப் பிரபஞ்சத்தையும் ஆள்வது நவக்கோள்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஜாதக ரீதியாக கிரக தோஷம் உள்ளவர்கள் அந்த தாக்கத்தில் இருந்து தப்பிக்க பல விரதங்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள் கடைபிடிப்பது வழக்கம்.  இதை முறையாக செய்வதன் மூலம் பிரச்னைகளின் தாக்கம் குறைவதுடன் உடலும், உள்ளமும்  இறைவன் மீது செலுத்த வாழ்வில் அமைதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. அவரவர் ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷ நிவர்த்திக்கு நவக்கிரக வழிபாடு மிகவும் அவசியமானது.

     நவ கோள்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக ஆற்றலிலும்,பராக்கிரமத்திலும் , மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிரகம் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

     ஒரு சமயம், சிவபெருமான் தனியாக யோகத்தில் அமர்ந்திருந்த நேரம், அவரது நெற்றிக் கண்ணில் இருந்து, ஒரு நீர்த்துளி பூமியில் விழ,  அதில் இருந்து மங்களன், ஒரு குழந்தை வடிவாகத் தோன்றினார். பூமாதேவியால் எடுத்து வளர்க்கப்பட்ட மங்களன், சிவபெருமானை நோக்கிக் செய்த கடும் தவத்தின் காரணமாக, நவகிரகங்களில் ஒருவராக  இருந்து அங்காரகன் என்னும் பெயரையும் பெற்றார்.

     நெருப்புக்கு அதிபதியாக விளங்கும் இவர், வீர தீர செயல் புரிதல், அதிகாரம் செலுத்துதல்,ஆளுமைத் திறன், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வளைந்து கொடுக்காத தன்மை,உயர் பதவி, தலைமை பொறுப்பு போன்ற இத்தனையையும்  ஒருவருக்கு அள்ளித் தரக்கூடிய வல்லமை பெற்றவர். 

     ஒருவருக்கு,தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர் அங்காரகன். நம் உடலில் ரத்தத்துக்கு காரகமாக செவ்வாய் இருப்பதால், ஒருவருக்கு செவ்வாய் பலம் குறையும் போது, உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். செவ்வாய்க்கு பூமி காரகன் என்ற அமைப்பும் உள்ளதால் ,இவரது பார்வை பட்டால் தான்  நிலம், வீடு, தோப்பு துரவு போன்ற அசையா சொத்துக்களை வாங்க முடியும்.

    செவ்வாய்க்குரிய கடவுள் ஆறுமுகப்பெருமாள்.ஆதலால்  முருகன் குடிகொண்டுள்ள எல்லா ஸ்தலங்களுக்கும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். ஒருவருக்கு செவ்வாய் கிரகத்தால் தோஷம் இருப்பின் அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப் பெருமானை வணங்குவதால், நிவர்த்தி ஆகும். இதில் பழநியில் கோவில் கொண்டுள்ள தண்டாயுதபாணி சாட்சாத் செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலும், செவ்வாய்க்குரிய பரிகார ஸ்தலங்களில் முக்கியமானதாக விளங்குகிறது.

     தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், மற்றும் முருகன் துதி பாடல்களை மனமுருகப் பாடுவதன் மூலம் ,முருகன் மற்றும் செவ்வாய் எனப்படும் அங்காரகனின்  அருளை பெற முடியும். மேலும் புத்திர யோகமும் பூமி பாக்யம் உள்ளிட்ட சகல யோகங்களும் நம்மை தேடி வரும்.

    ஓம் முருகா ! ஓம் முருகா!! ஓம் முருகா !!!