Blog

  • 2017-12-10-14-23-35

    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.
    திருவள்ளூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாலங்காடு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம். சென்னை திருப்பதி சாலையில் திருவள்ளூர் தாண்டியவுடன், திருத்தணிக்கு முன்பாகவே இடதுபுறம் அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது. சிவ பெருமானுக்கான ஐந்து சபைகளில் இது ரத்தினசபை ஆகும். காரைக்காலம்மையாருக்கு நடராஜப் பெருமான் காட்சி தந்து ஆட்கொண்ட தலமாகும் இது. இத்தலத்தில் இறைவனின் காலடியில் காரைக்கால் அம்மையார் இன்றும் வாழ்வதாக ஐதீகம். காளிக்கும் சிவபெருமானுக்கும் இடையே நர்த்தனப் போட்டி ஏற்பட்டபோது, ஊர்த்வ தாண்டவத்தை ஆடி சிவபெருமான் காளியை அடக்கியது இத்தலத்தில்தான். இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றும் ஊர்த்வ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வண்டார்குழலியம்மை. இறைவன் சுயம்பு லிங்கமாகவும், இறைவி நின்ற திருக்கோலத்திலும் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வெளியே ஐந்து நிலை ராஜகோபுரமும் உள்ளே மூன்று நிலையுள்ள இரண்டாவது கோபுரமும் கொண்ட ஆலயம் இது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் இருக்கும் மண்டபத்தில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. கோபுரங்களிலும் கோவில் உட்புறங்கள்லும் அழகான சுதைச்சிற்பங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. காரைக்கால் அம்மையார் வரலாறு, மீனாக்ஷி திருக்கல்யாணம், இறைவனின் ஐந்து சபைகள் ஆகியவை சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. உற்சவ மூர்த்திகளாக சிவபெருமானின் ஊர்த்வ தாண்டவ கோலமும், சிவகாமி அம்மையாரும், காரைக்கால் அம்மையாரும் நம்மைக் கவர்கின்றனர். இத்தலத்தில் பைரவர் வாகனமின்றி காட்சி தருகிறார். ஸ்படிக லிங்கமும், மரகத லிங்கமும் இங்கே விமரிசையாகப் பூஜிக்கப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது. இத்திருத்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் (திருவாலங்காடு செப்பேடுகள்) சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்ட சாசனங்களில் சோழ வரலாற்றைக் கூறுகின்றன. இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.

  • 2017-12-09-13-56-57

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், மார்கழி மாத நடைத்திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதம், வரும் 16-ம் தேதி தொடங்கி 2018 ஜனவரி 13-ல் நிறைவடைகிறது. மார்கழி மாதத்துக்கான பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்த தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 முதல் 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிக்கால தீபாராதனை, பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று, திருக்கோயில் நடை திருக்காப்பிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2-09-85-443

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443 மற்றும் தங்க நகைகள் 409 கிராம் 1 கிலோ 275 கிராம் வெள்ளி பக்தர்கள் செலுத்தினர்.
    நினைத்தாலே முக்தி தரும் உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கனவார்களும் பவுர்ணமி உள்ளிட்ட கார்த்திகை தீபம் நாட்களில் லட்சக்கணக்கானவர்களும் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
    திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு காணிக்கையாக பணம் மற்றும் தங்க நகைள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம் வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலையர் கோவில் உள்ளிட்ட 85 க்கும் மேற்பட்ட இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கபட்டு ஒவ்வொரு மாதம் பவுர்ணமி முடிந்தவுடன் எண்ணுவது வழக்கம்
    அதன்படி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மகா தீபம் 3 ஆம் தேதி மாத பவுர்ணமி முடிவடைந்ததை நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி தொடங்கிய நேற்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. கோவில் இரண்டாம் பிரகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையார் ஜெகன்நாதன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் ஆன்மீக பக்தர் என 100க்கும் மேற்பட்டவர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கபட்டது.
    உண்டியல் எண்ணிக்கை முடிவில் ரூ 2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443 ரூபாய்யாகும், மற்றும் தங்க 409 கிராம். வெள்ளி 1கிலோ 275 கிராம் பக்தர்கள் காணிக்கையான செலுத்தியது கோவில் நிர்வகம் சார்பில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டைவிட ரூ 35 லட்சத்து 51 ஆயிரத்து 190 அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

  • 2017-12-09-13-35-11

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தை வரும் 23-ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறைகள் வருவதால் விஐபி தரிசனம் ரத்துசெய்யப்படுகிறது என்று திருப்பதி தேவஸ்தான இணைச்செயல் அலுவலர் ஸ்ரீநிவாச ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்கு ஏற்ப லட்டு செய்வதற்கு இயந்திரங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனவரி 2018 முதல் ஆதார் இருந்தால் மட்டுமே விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

  • 2017-12-06-13-54-53

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வரும் மானிய விலை லட்டு பிரசாதத்தில் உயர்வு இல்லை என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் வழங்கும் லட்டு எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பக்தர்களுக்கு லட்டு, வடை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் கூடுதல் விலையில், லட்டு மற்றும் வடை பிரசாதங்களை பக்தர்களுக்கு தேவைப்படும் அளவில் அளிக்க வேண்டும் என தார்மீக நிறுவனங்கள் தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்தன. அதனை ஏற்று தேவஸ்தானம், பெரிய லட்டு தலா ரூ.200, வடை தலா ரூ.100, சிறிய லட்டு தலா ரூ.50, குட்டி லட்டு தலா ரூ.7 விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் பக்தர்களுக்கு வழங்கும் மானிய விலை லட்டில் எவ்வித மாற்றமும் இல்லை உயர்வும் இல்லை. மேலும் தார்மீக நிறுவனங்கள் அல்லாத தனியார் நிறுவனங்களுக்கு ஏழுமலையான் பிரசாதமான லட்டு, வடை வழங்கபட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2017-12-06-13-30-33

    ஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும். அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம் செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.

  • 2017-12-06-13-20-15

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 29-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலாவும், 30-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலா வருகிறார்.
    ஜனவரி 1-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 2-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 3-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

  • 2017-12-05-04-14-16

    மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி. இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.
    இரட்டை விநாயகர்: மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங் களை வணங்குவது மரபாக இருக்கிறது. இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
    விபூதி விநாயகர்: தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
    பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • 2017-12-04-15-05-49

    திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு, வடை போன்றவற்றை தனியார் நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தனியார் நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு திருப்பதி லட்டு, வடை பிரசாதங்கள் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ரூ.25க்கான ஒரு லட்டை, 200க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.50 ஆகவும், ரூ.100க்கு விற்பனை செய்யும் கல்யாண உற்சவ லட்டை, 10க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.200 ஆகவும், ரூ.25க்கு விற்கப்படும் வடையை 10க்கு மேல் வாங்கினால் ஒரு வடை ரூ.100 ஆகவும், ரூ.3.50க்கு விற்கப்படும் சிறிய லட்டை 1000க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.7 ஆகவும் விற்பனை செய்ய வேண்டும். மேலும், தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட விலை உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் சிபாரிசு பேரில் கூடுதல் லட்டு பெறும் பக்தர்களுக்கும் விரைவில் லட்டு, வடை பிரசாத விலை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • 2017-12-04-14-35-23

    18 படியேறிய பக்தர்கள் கொடிமரம் தாண்டி கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவை கண்டு மனமாற வேண்டிக்கொள்ளலாம். ஐயப்பனை தரிசித்தாலே இந்தப்பிறவியின் பலனை அடைந்த சந்தோஷம் ஏற்படும்.
    மூலஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு “சின்முத்திரை’ காட்டுகிறார். “சித்’ என்றால் “அறிவு’. இந்த வார்த்தையே “சின்’ என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை.
    யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை “யோக பட்டம்’ என்பர்.