Blog

  • akshay-pooja

    அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
    இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.
    சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. “அட்சயா” எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்றதால் தங்கம், வெள்ளி, கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
    பஞ்சாங்கம் படி, அட்சய திருதியை திதி ஏப்ரல் 18-ம் தேதி காலை 3:45 மணிக்கு தொடங்குகிறது.
    ஏப்ரல் 18 ம் தேதி காலை 6:19 முதல் 12:34 மணி வரை அட்சய திருதியை பூஜை மேற்கொள்ளலாம்.

  • akshaya-gold

    ஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை நன்னாளில் மக்கள் அனைவரும் தங்கம் வாங்க, தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு.
    தங்கம் வாங்கும் முன் கவணிக்க வேண்டியவை..
    தங்க நகைகளை வாங்கும் போது, அதன் உண்மையான மதிப்பைத் தீர்மானிக்கும்போது, அதன் தூய்மைக்காக அதை சரி செய்ய வேண்டும்.
    இந்திய தரநிலைகள் (பி.ஐ.எஸ்.இ.) என்பது தங்க நகைகளுக்கு அடையாளமாக இருக்கும் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஆகும் மேலும் அதன் தூய்மை அடங்கும்.
    எனவே, ஒவ்வொரு நகைப்பகுதியும் ஒரு பி.எஸ்.ஐ. முத்திரை, பெற்றிருக்க வேண்டும்.
    தங்க நகைகள் எந்த ஒரு விலையில் இருந்து ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு மாறுபடுகிறது என்பதை சரி பார்ப்பது நல்லது.
    மாறுபட்ட தயாரித்தல் விலை மற்றும் அவற்றின் மீது வழங்கப்பட்ட தள்ளுபடிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தெரிந்த முடிவுகளை எடுக்கவும்.
    தங்க நகைகள் பொதுவாக வழக்கமான தங்க துண்டுகளைவிட அதிக விலை உயர்ந்தவை, மற்றும் விலையுயர்ந்த கற்கள் நகைகள் அழகு சேர்க்கின்றன போது, அவர்கள் ஒரு ஆபரணம் மதிப்பு குறைக்கின்றன.
    பதிக்கப்பட்ட கல் விலைமதிப்பற்றதாக இருந்தாலும், தங்கம் மட்டுமே பரிமாற்ற மதிப்பைப் பெறுவீர்கள். எனவே கல் நகைகளை தவிர்ப்பது நல்லது.

  • thirupathy-chutney

    திருமலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் பொங்கல் மற்றும் உப்புமாவுடன் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சட்னி வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் துவக்கியுள்ளது.
    திருப்பதி, திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் 24 மணி நேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால் , மோர் ஆகியவற்றை வழங்கி வருகிறது.காத்திருப்புஅறைகளிலும், பக்தர்கள்அதிகம் கூடும்முக்கியப் பகுதிகளிலும் , அன்னாதனம், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல், ரவை , சேமியா உப்புமா உள்ளிட்டவை வழங்கும்போது, அதற்கு இணையாக சட்னியும் வழங்க வேண்டும் என மாதந்தோறும், குறைகேட்பு நிகழ்ச்சியில் பக்தர்கள்தேவஸ்தான அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்து வந்தனர்.இதையேற்று , தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பொங்கல் மற்றும் உப்புமா சிற்றுண்டிகளுடன், வேர்க் கடலை சட்னி வழங்கும் நடைமுறையை துவக்கியுள்ளது.
    இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமலை எழுமையானை தரிசிக்க, வார இறுதி நாட்கள் , விடுமுறை நாட்களில், பக்தர்கள்அதிக அளவில் வருவது வழக்கம். தற்போது, தேர்வு முடிந்து கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், தமிழ் புத்தாண்டு முதல் திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அதனால், இதற்கு முன் தர்ம தரிசனத்தில், 3 மணிமுதல், 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வந்த பக்தர்கள், தற்போது, 15 மணிநேரம் காத்திருக்கின்றனர். எனவே தேவஸ்தானம் நிர்வாகம், பக்தர்களின் காத்திருப்பு சிரமத்தை குறைக்க, தர்ம தரிசன பக்தர்களுக்கு விரைவில் நேர ஒதுக்கீடு முறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

  • talakona

    தலகோனா, மலைகளின் தலைவன், திருப்பதி ஏழுமலைகளில் முதல் மலை, திருப்பதியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் உள்ளது இந்த தலகோனா மலை. திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. சந்தன மரங்கள் மற்றும் அறிய காட்டு விலங்குகள் இருக்கும் இடம். தலகோனா நீர்வீழ்ச்சி விழும் நீர் எண்ணற்ற மூலிகைகளின் கலவையாகும், காட்டு வழிப்பாதைகள் நிறைந்த இந்த இடம் பக்தியுடன் கோயிலுக்கு செல்பவர்களுக்கு மட்டுமல்ல ட்ரெக்கிங் செல்பவர்களுக்கும் ஏற்றது. திருப்பதியில் இருந்து காரில் சென்றால் எளிதாக சென்றடைய முடியும். இங்கு “அதர்மம்”, “காதல் கொண்டேன்” மற்றும் சில திரைப்படங்களின் படங்களும் எடுக்கப்பட்டதாம். தலகோனா நுழையும் முன் செக்போஸ்டில் உங்கள் வாகனங்களை அலசி ஆராய்ந்த பின்னர் தான் உள்ள அனுமதிக்கிறார்கள். காரில் எத்தனை வாட்டர் பாட்டில் இருக்கிறது என்று கேட்டு பாட்டிலுக்கு பத்து ருபாய் வாங்கிக்கொண்டு, திரும்பி வரும்போது காலி பாட்டிலைக் காட்டி காசைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர், பிளாஸ்டிக் குப்பைகளை கையாள இந்த யுக்தி. செக்போஸ்டிற்கு பிறகு சாலை சுமாராகத்தான் இருக்கும். குரங்குகள் தொல்லையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அருவியிலிருந்து வரும் நீரை ஒரு குட்டை போல் தேக்கி வைத்திருந்தனர். மலை ஏற முடியாதவர்கள் இங்கேயே குளித்து விட்டு செல்லலாம். டிரெக்கிங் போல் இல்லாமல் அனைவரும் சிரமமின்றி ஏற சிமென்ட் கற்களாலும் கைப்பிடிகளாலும் வழி அமைத்திருந்தனர். அரைமணி நேர நடை பயணத்திற்க்கு பின்பு அருவி கொட்டும் ஓசை கேட்கும். சுமார் 80 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாக வீழ்ந்துக்கொண்டிருக்கும். வனத்துறை சார்பில் தடுப்புக்கம்பிகள் இருந்ததால் தைரியமாக அருவின் கீழ் செல்லலாம். மேலே இருந்து ஐஸ் கட்டிகளை எறிவது போல் இருக்கும இந்த நீர் வீழ்ச்சி. வருடம் 365 நாட்களும் தண்ணீர் வந்துகொண்டிருகும் என்றார்கள். சீசனில் தண்ணீரின் வீழ்ச்சி பிரம்மாண்டமாய் இருக்குமாம். இன்னும் சற்று மேலே சென்றால் அருவியின் இன்னோரு பகுதியை காணலாம் என்றார்கள். அங்கு செல்ல படிகள் கூட அதிகம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றும் கடினமாகவும் இல்லை. மிக அற்புதமான ஒரு சூழல் அங்கு. வெகு உயர்ந்த செங்குத்தான மலை முகட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது – வேறெந்த பாறையையும் தொடாமல்! தண்ணீர் விழுந்து தெறிக்கும் தரையும் தெரியவில்லை! அருவியில் நின்றால் தண்ணீர் முழுவதும் நேராக நம்மீதுதான் விழுகிறது – மொத்த விசையுடன். ஒவ்வொரு துளியும் தனித்தனி ஊசியாய் உடலில் இறங்குவது போல, வேறெங்கும் உணர முடியாத இன்ப வேதனை அது!

  • sathura-giri

    சதுரகிரி தல வரலாறு :
    சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் 0/கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

    வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

    சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

    சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

    இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
    இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும்.

    இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
    கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

    இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.


    இரட்டை லிங்கம்:
    ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

    “”சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,”என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, “”நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

    பிலாவடி கருப்பு:
    வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “”சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.
    வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை “பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

    பெரிய மகாலிங்கம்:
    நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்’ என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    தவசிப்பாறை:
    மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் “மஞ்சள் ஊத்து’ தீர்த்தம் உள்ளது.
    தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது.

    உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை “நவக் கிரக கல்’ என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள “ஏசி’ பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் “வெள்ளைப்பிள்ளையார்’ பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

    சுந்தரமூர்த்தி
    கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை “கும்ப மலை’ என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்’ எனப்படுகிறது. அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்’, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

    பார்வதி பூஜித்த லிங்கம் :
    சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என தல வரலாறு கூறுகிறது.

    பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
    இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

    லிங்க வடிவ அம்பிகை
    சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

    சதுரகிரியில் தீர்த்தங்கள்
    சந்திர தீர்த்தம்
    சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

    கெளண்டின்னிய தீர்த்தம்.
    சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

    கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ”பாவகரி நதி” என்னும் பெயரும் உண்டு.

    சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
    இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்’ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

    இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
    இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.

    காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட ‘பிரம்மதீர்த்தம்’ ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட ‘பொய்கைத் தீர்த்தம்”, ”பசுக்கிடைத் தீர்த்தம்”, ‘குளிராட்டித்

    தீர்த்தம்’ போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
    மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
    பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

    அபூர்வ மூலிகைகள் :
    இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
    பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.

    இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
    தவிர கோரக்க முனிவரால் ‘உதகம்’ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

    இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
    விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
    சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
    இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
    அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு.
    இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும்.

    இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
    சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
    இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
    மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.

    உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

    சதுரகிரி மலை – ஒரு ஆன்மிக உலா
    சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
    சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

    சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
    இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
    சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

    நோய் தீர்க்கும் மலை:
    சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
    திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்
    தாணிப்பாறை அடிவாரம் – கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
    மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை’ என்கின்றனர்.
    சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

    ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
    பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
    இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
    மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி’ கோயில் உள்ளது.
    சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
    ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
    சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

    இருப்பிடம்:
    மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
    அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் – செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
    அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

    திறக்கும் நேரம்:
    காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.
    மலைக்கு மேலே – சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

  • sri-adi-sankarar

    ஒரு சிலா் பக்தி ,கோயில் , பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறா்கள்.ஆனால் இன்னும் சிலா்,”சாமியாவது,பூதமாவது,நடக்குறதுதான் நடக்கும் என்கிறா்கள்”.எது சா?
    ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது,அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன்.இதே கேள்வியைக் கேட்டான்.
    ஆதிசங்கரா் அவனிடம்,”மகனே,இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய்.நான் உன்க்கு பதில் அளிக்கிறேன்!” என்றா்.
    அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான்.சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தா்.அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தா். அதற்கு அவன்,”எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?” என்றான்.
    ” ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?”


    ” மரப் பாலத்தை கடக்கிறபோது,திடீா்னு வழுக்கி விழுந்தால்,பிடிச்சுக்கத்தான் சுவாமி!”
    “உன் கேள்விக்கும் அதுதான்பா விடை! அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான்,பத்திரமான இடத்தை அடையமுடியும்.ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால்,அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி,ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!” என்றா் ஆதிசங்கரா்.
    ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.
    நாம் வழிபடவும்,வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்;நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவா் வேண்டும்.எனவே தான் “கல்லோடு ஆயினும் சொல்லி அழு”என முன்னோ்கள் சொல்லியிருக்கிறா்கள்.

  • sabari-visu

    சபரிமலையில் விஷூ பண்டிகையை ஒட்டி பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் விஷூ ‘கைநீட்டம்’ வழங்கினர். சபரிமலையில் சித்திரை விஷூ பூஜைகள் நடந்தது.

    கடந்த 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடந்தது. சித்திரை ஒன்றாம் தேதி கடந்த 14ம் தேதி பிறந்தது. ஆனால் கேரள பஞ்சாங்க கணக்கு படி நேற்றுதான் கேரள கோயில்களில் விஷூ கொண்டாடப்பட்டது.

    அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த காய்கனி அலங்காரத்தை தரிசனம் செய்தனர், தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, ஆகியோர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் பக்தர்களுக்கு நாணயங்களை ‘கைநீட்ட’மாக வழங்கினார். ஏப்.,18 இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

  • thirupathy-laddu

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடைக்காலத்தை ஒட்டி தினமும் 6 லட்சம் லட்டுகளை தயாரித்து இருப்பு வைத்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட இருக்கிறது.
    கோடைக்கால விடுமுறையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, கூடுதலாக லட்டு பிரசாதத்தை தயாரித்து இருப்பு வைத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். லட்டு தயாரிக்கும் கூடத்தில் தற்போது 550 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 310 பேர் லட்டு உருண்டை பிடிக்கிறார்கள். மற்றவர்கள் பூந்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஒரு ஊழியர் தினமும் சாதாரண நாட்களில் 5 ஆயிரம் லட்டுகளும், கூட்ட நாளில் 5 ஆயிரத்து 500 லட்டுகளும் தயாரிக்க வேண்டும். கோவிலில் சாதாரண நாட்களில் மொத்தமாக தினமும் 3 லட்சம் லட்டுகளும், கூட்ட நாட்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் லட்டுகளும் தயாரித்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது தினமும் சிபாரிசு இல்லாமல் 50 ஆயிரம் கூடுதல் லட்டுகள் பக்தர்களுக்கு ரூ.25 வீதம் விற்பனை செய்யப்படுகிறது.
    கோடைக்காலத்தையொட்டி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தினமும் 6 லட்சம் லட்டுகளை தயாரித்து இருப்பு வைத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்காக பூந்தி தயாரிக்கும் இடத்தை சற்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பூந்தி தயாரிக்கும் கூடத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யும் பணிக்காக ஊழியர்களுக்கு எந்திரமும் வழங்கப்பட்டு உள்ளது.
    பூந்தி தயாரிக்கும் கூடத்தில் வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க ரூ.6 லட்சம் செலவில் ஜன்னல்கள் அமைத்து, கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பூந்தி தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

  • 2018-04-14-13-15-15

    அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் விஷ்ணு சக்தி பீடமாகத் திகழ்கிறது கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகை சந்நதி. கல்வியில் சிறந்து விளங்க விரும்புவோர், தொழில் துவங்குவோர், திருமணத்தடை உள்ளோர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குபேர வாழ்வு விரும்புவோர் மங்களாம்பிகைக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்திப் பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலின் முன்பு பொற்றாமரைக் குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக் குளத்திலும் நீராடுவர். இத்தலத்தின் தலவிருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தங்களாக மகாமகக் குளமும், காவிரியாறும் உள்ளன. மங்களநாயகிக்கு ‘மந்திரபீட நலத்தாள்’ எனும் திருநாமமும் உண்டு. சம்பந்தர் இவளை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள்.

  • 2018-04-14-13-02-33

    சித்திரை விஷுவையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஐயப்பனை தரிசனம் செய்ய 4 மணிநேரம் வரை அவர்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது.
    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை சித்திரை விஷு காக கடந்த 10-ந்தேதி திறக்கப்பட்டது.
    சபரிமலையில் வழக்கமாக மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது அதிகளவு பக்தர்கள் குவிந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்திரைவிஷுவுக்குதான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    இந்த ஆண்டும் சித்திரை விஷுவையொட்டி கோவில் நடை திறந்த முதல்நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி ஐயப்பனுக்கு தினமும் நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    தமிழகத்தில் நாளை (14-ந்தேதி) சித்திரை மாத பிறப்பு கொண்டாட்டப்படுகிறது. ஆனால் கேரள பஞ்சாங்கத்தின்படி சித்திரை விஷு கொண்டாட்டம் சபரிமலையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) நடக்கிறது.
    இதையொட்டி 15-ந்தேதி அதிகாலை 4.30 மணி முதல் 7 மணி வரை சித்திரை கனி காணுதல் நடக்கிறது. அன்று சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னதியில் காய், கனிகள் மற்றும் புத்தாடைகள் படைக்கப்பட்டு சாமி தரிசனம் நடைபெறும். மேலும் சாமிதரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கோவில் மேல்சாந்தி சில்லரை நாணயங்களை கைநீட்டமாக வழங்குவார். தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
    சித்திரை விஷுவையொட்டி சபரிமலையில் பக்தர்கள் அதிகளவு குவிந்து உள்ளனர். இதனால் சாமி தரிசனம் செய்ய 4 மணிநேரம் வரை அவர்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதை தொடர்ந்து சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.