Category: கோவில்கள்

கோவில்கள்

  • கிருஷ்ணரை கொண்டாடும் பஞ்ச துவாரகைகள்

     

    எப்போதும் ஆட்டம்,கொண்டாட்டம் என வாழ்வின் அத்தனை வண்ணங்களையும் நமக்கு காண்பித்த பகவான் கிருஷ்ணரை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. மதுரா சிறைச்சாலையில் தான், அவர் பிறந்தது என்றாலும், அவர் ஆட்சி புரிந்தது என்னவோ துவாரகையில் தான்.

    கிருஷ்ணர் தனது தாய் மாமன் கம்சனை மதுராவில் அழித்தபோது, அதைக் கேள்விப்பட்ட கம்சனின் மாமன் மதுரா மீது போர் தொடுத்து தோல்வியை தழுவினான்.

    போரினால் மதுராவின் கோட்டை வலுவிழந்து விட்டது. கிருஷ்ணருடைய  பாதுகாப்பிற்கு கருடன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த இடம்தான் துவாரகை. பிற்காலத்தில் ரிஷிகளின் சாபம் காரணமாக யாதவ குலமே அழிய நேர்ந்தது.  துவாரகா நகரின் பெரும் பகுதியும் கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது இருக்கும் புனிதத் தலமான  ஆதிதுவாரகையின் வாயிலாக ஐந்து திருத்தலங்கள் விளங்குகின்றன. அந்தத் திருத்தலங்கள்  ‘பஞ்சதுவாரகா’ என்று அழைக்கப்படுகிறது.

     

                                                                

    வைகுண்டம் செல்லும் நுழைவாயில் என்று  கருதப்படும் ‘மோட்ச துவாரகை’தான் பஞ்ச துவாரகையில் மிகவும் பிரதானமானது. 108 வைணவத் திருத்தலங்களில் இத்தலம் 104-ஆவது திவ்ய தேசமாகும். குஜராத் மாநிலத்தில் உள்ள ‘ஓசா’ துறைமுகத்திற்கு அருகில், ‘கோமதி’ என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது இத்தலம். இங்குள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பக்தர்களின் நாயகனான ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி, கல்யாண நாராயணர் என்று அன்புடன் வழிபடுகிறார்கள். சங்கு சக்கர தாரியாக, நான்கு கரங்கள் கொண்டு சேவை சாதிக்கிறார் இங்குள்ள மூலவர்.இங்கு  பகவான் கிருஷ்ணருக்கு திகட்ட திகட்ட காலை ஐந்து மணி முதல் இரவு வரை பதினேழு முறை பிரசாதம் சமர்ப்பித்து, மணிக்கு ஒருமுறை விதவிதமாக ஆடை மாற்றி அலங்கரிக்கிறார்கள். காலை திருப்பள்ளியெழுச்சி தொடங்கி இரவு சயனம் வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.இது தவிர  காலையில் தங்கப்பல் குச்சியால் கிருஷ்ணரின் பற்களைத் துலக்குவார்கள். இதற்குப் பிறகு, லட்டும் ஜிலேபியும் சமர்ப்பிப்பார்கள். பிறகு ஏழரை மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைப்பார்கள். எட்டு மணிக்கு சர்க்கரை, பால், தயிர் படைக்கப்படுகிறது. பிறகு, அப்பம், பாலில் கலந்த சிற்றுண்டியுடன் திருவமுது படைக்கப்படுகிறது. அதற்குப்பின், கனிவகைகள். இப்படி பிரசாதங்களைத் தொடர்ந்து அளித்தபின் உணவு செரிக்க லேகியமும் கொடுக்கிறார்கள்.

    பஞ்ச துவாரகையில் அடுத்து ‘பேட் துவாரகை’. இத்தலம் கடலிலுள்ள தீவுபோல் இருப்பதால் தீவுத் துவாரகை என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள அரண்மனை, பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த அரண்மனை எனப்படுகிறது.

                                                                  

    குஜராத் மாநிலம், போர்பந்தர் என்னும் ஊரிலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீநாத் துவாரகை.இது  மூன்றாவது துவாரகை. இத்தலத்தில் கோவில் கொண்டு அருள்புரியும் பகவான் கிருஷ்ணருக்கு தினமும் எட்டு வேளை  வழிபாடுகள் நடைபெறுகின்றன. பகவான் வைரம், வைடூரியம் முதலான நவரத்தினங்கள் பதித்த திருவாபரணங்களை  தினமும் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    நான்காவது டாஸ்ரோடி துவாரகை. இத்தலம் துவாரகையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பகவான் கிருஷ்ணர் அவதரித்த சிறைச்சாலை அமைந்த ஊரான வடமதுராவிலிருந்து, பாதாளம் வழியாக தீர்த்தம் நதியாகப் பாய்ந்து இந்த ஊருக்கு வருவதாகக் நம்பப்படுகிறது.

    ஐந்தாவது மூலத்துவாரகை. இத்தலம் போர்பந்தரிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கொஷனார் என்னும் ஊருக்கு அருகில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் பகவான் பல ஆண்டுகள் அரசாண்டார். இங்கிருந்துதான் கிருஷ்ணர் வைகுண்டம் சென்றார் என்றும்,அதன்பின் இத்தலம் கடலில் முழ்கியது என்றும் கூறுகிறார்கள். மூலத்துவாரகையில் அனைத்து முக்கிய நதிகளும் சங்கமம் ஆவது சிறப்பு.

  • திருப்பதி கோவிலில் 9 ½ மணி நேர தரிசனம் ரத்து

     

    திருமலை,ஜூலை-28 ,திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    அடுத்த மதம்(ஆகஸ்டு)7-ந்தேதி இரவு 10.52 மணியில் இருந்து நள்ளிரவு 12.48 மணிவரை  சந்திர கிரகணம் ஏற்படுகிறது.அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கோவிலின் அனைத்துக் கதவுகளும் சாத்தப்பட்டு,மறுநாள்(8- ந்தேதி),அதிகாலை 2 மணிக்கு கோவிலின் கதவுகள் திறக்கப்படுகின்றன.ஏழுமலையான் கோவிலில் மொத்தம் 9 ½ மணி நேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    இதையடுத்து கோவிலை சுத்தம் செய்து மூலவர் வெங்கடாஜலபதிக்கு புண்ணியாவதனம்,நைவேத்தியம் செய்யப்படுகிறது.அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது.அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து இலவச தரிசனம்,திவ்ய தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம்,வி,ஐ,பி. தரிசனம்  ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    எனவே  7-ந்தேதி ஏழுமலையான்  கோவிலில் விசேஷ பூஜை, கல்யாண உற்சவம்,ஊஞ்சல் சேவை,ஆர்ஜித பிரம்மோற்சவம் வசந்த உற்சவம்,சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.மேலும் தோமால சேவை, அர்ச்சனை சேவை ஆகியவை ஏகாந்தமகா(பக்தர்களுக்கு அனுமதியின்றி நடக்கிறது.

  • வள்ளி மலையில் அமைந்துள்ள முருகன் கோவில்

    ஒருசமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்திலுள்ள ஒரு வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி மான் வடிவில் அவர் முன்பு வரவே, முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவன் நம்பிராஜன் குழந்தையை எடுத்து,வள்ளி என பெயரிட்டு வளர்த்தான். முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது.

        

     கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.

     

     

    மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்;குமரி வள்ளிக்கு சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.

     

    பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. அருணகிரியாரால் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று  என்றழைக்கிறார்கள். இவ்விடங்கள் வனத்திற்குள் இருப்பதால் தகுந்த பாதுகாப்போடு சென்றால் பார்த்து வரலாம். மலையடிவாரத்தில் ஆறுமுகன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கிருந்து 50 கி.மீ., தூரத்தில் திருத்தணி இருக்கிறது.

     

    இத்தலத்து முருகப்பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள். எத்தனை கோபம் , மனக்குழப்பம் ஆகியவைகளோடு இருந்தாலும் இத்தலத்து முருகனை வணங்கினால் அத்தனை கோபமும் குழப்பங்களும் விலகிவிடுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்ககை.வேலூரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் வள்ளிமலை இருக்கிறது. பொன்னை என்ற ஊருக்குச் செல்லும் பஸ்கள் இத்தலம் வழியே செல்கிறது.

     

  • ஏரி காத்த ராமரின் கதை

    பெருமாளுக்கும் நீர் நிலைகளுக்கும் ஆதிகாலம் தொட்டே தொடர்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டவன் அந்த ஆதிபிரான். இவனே லட்சுமணனுடன் இணைந்து மதுராந்தகம் ஏரி உடையாமல் இரவெல்லாம் காத்து நின்றான் என்கிறது தல புராணம். இறைவன் தன் சக்தியால் ஒரு கண நேரத்தில் ஏரி உடையாமல் காத்துவிட முடியும். ஆனால் ராமர் மனித உருக் கொண்டு பிறந்ததால் வில்லேந்தியே மதுராந்தகம் ஏரியைக் காத்ததாகக் கூறப்படுகிறது.

    மதுராந்தகம் ஏரி முற்காலத்தில் அதனைச் சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களுக்கு பாசனத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீராகவும் பயன்பட்டு வந்தது. மழை நீரைத் தேக்கிவைக்கும் இந்த ஏரியில், அதிகப்படியான நீரின் காரணமாக உடைப்பு ஏற்படுவது வழக்கம்.


    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த லயோனல் பிளேஸ், ஏரிக்கரையைப் பலப்படுத்தப் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலனேதும் ஏற்படவில்லை. இங்குள்ள இந்த ராமர் கோயிலுக்கு வந்த அவரிடம், அப்போது இருந்த அர்ச்சகர் கோயிலைச் செப்பனிட்டு, தாயாருக்கு தனிச் சன்னிதி அமைத்துத் திருப்பணி செய்து தரக் கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு மாவட்ட ஆட்சியரும் பெருமாளிடம் ஓர் கோரிக்கை வைத்தார். தெய்வ பலத்தால் வரும் ஆண்டு ஏரி உடைப்பெடுக்காமல் இருந்தால், திருப்பணியை ஏற்று நடத்துவதாக ராமருக்கு கோரிக்கை வைத்தாராம் மாவட்ட ஆட்சியர்.


    பருவ மழை வந்தது. வழக்கம்போல் ஏரி நிரம்பித் தளும்பியது. கவலையுடன் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரின் கண்களுக்கு இரு இளைஞர்கள் தென்பட்டனர். அவர்கள் கைகளில் நாண் பூட்டிய வில்லில் அம்பு பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாம். மின்னல் ஒளியில் இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர், அம்பிலிருந்தும் மின்னல் ஒளி தோன்றியதைக் கண்டாராம். அதற்குப் பின்னர் ஏரிக்கரை உடையவில்லை என்பது வரலாறு.


    தான் கூறியபடியே தாயாருக்குத் தனிச் சன்னிதி கட்டிக் கொடுத்தாராம் மாவட்ட ஆட்சியர். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னிதியில் உள்ளது. இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏரி காத்த ராமர் எனப் புகழப்பட்டார் மூலவர் ராமர்.

    இரண்டு தேர் ஒரே பிரம்மோற்சவத்தில் இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது இத்தலத்தின் சிறப்புப் பெருமை. ஆனி பிரம்மோற்சவத்தில், ராமர், புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப் பெருமாள் மற்றோரு தேரிலும் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.
    தரிசனம் தரும் பலன் தம்பதியர் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவது போல ராமரும் சீதையும் கை கோத்து நின்று நற்பலன்களைத் தருவதாக ஐதீகம். கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் வகையில் ராமானுஜர் திருவுருவக் காட்சி. இங்குள்ள கண்ணன் பிள்ளைப் பேறு வழங்கும் வள்ளல் என்பது ஐதீகம்.


    சீதையுடன் கை கோத்த நிலையில் காட்சி தருகிறார் மூலவர் ராமர். விபண்டக மகரிஷிக்குக் காட்சி தரும்போது இந்த அன்புக் கோலத்தைக் காட்டி அருளினாராம் ராமர். இதனையொட்டி விபண்டக மகரிஷி கை கூப்பிய நிலையில் இங்கு காட்சி அளிக்கிறார். தனிச் சன்னிதியில் ஜனகரின் மகள் ஜனகவல்லித் தாயார் திருக்கோலம் கொண்டுள்ளார். வெண்ணிற உடையில் உடையவர் ராமானுஜருக்குப் பெரும்பாலும் திருத்தலங்களில் காவி உடை அணிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதிசயமாக இத்தலத்தில் வெண்ணிற உடையில் காட்சியளிக்கிறார் உடையவர். குடும்ப வாழ்கையில் இருக்கும்பொழுதுதான் இத்திருத்தலத்தில் தீட்சை பெற்றார் என்பதால் இத்திருக்கோலம்.

  • பனிக்கட்டி லிங்கமாக மாறும் அதிசயம்

     

     

    சிவபெருமான் பார்வதிக்கு வேதத்தின் உட்கருத்தை விளக்க பார்வதியுடன் இமய மலையின் ஒரு குகை நோக்கிப் புறப்பட்டார். தம்மைப் பின் தொடராது இருக்க , விநாயகர், நந்திபகவான், சந்திரன், நாகராஜன், கங்காதேவி ஆகியோரை போகும் வழியில் உள்ள மாமலேச்சுரம், பகல்காம் சந்தன் வாரி, சேஷ்நாக், பஞ்சதரணி போன்ற ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் முறையே நிறுத்தி கவனிக்க ஆணையிட்டார். அம்பாள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேத ரகசியத்தைக் கண்மூடி சொல்லத் தொடங்கினார் பரமன், சொல்லச் சொல்ல பார்வதி தேவி உம்… உம்  என்ற சப்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பார்வதி தூங்கி விட பரமசிவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, உம்  என்ற சப்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது!

    ரகசியம் முழுவதும் சொல்லி முடித்த பின், ஈசன் கண் திறந்து பார்க்க பார்வதி, தூங்குவதும், உம்  என்ற சப்தம் வருவதையும் கண்டார். சிவன் கண் திறந்தவுடன்,அதுவரை குகையில் இருந்து வேதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கிளி பயந்து பறந்து வெளியே சென்று விட்டது. அந்தக் கிளியைப் பிடிக்க பரமசிவன் தொடரும் வேளையில் சிவ கணங்கள் இருவர் அங்கு மறைந்திருப்பதைக் கண்டார். இந்த ரகசியத்தை அவர்கள் மற்றவர்களுக்கு உரைத்து விடாமல் இருக்க, அந்த இரு சிவகணங்களையும் புறாக்களாக மாற்றினார். இன்றும் அந்த இரு புறாக்கள் மட்டும் குகையில் இருப்பதைக் காணலாம். அதற்குப் பின் சிவபெருமான், கிளியைத் தேடிப் புறப்பட்டார்.

    குகையில் இருந்து பறந்து சென்ற கிளிக் குஞ்சு, பரமசிவனுக்கு பயந்து ,ஒளியாக மாறி, தான் பறந்து வந்த வழியில் இருந்து வசிஷ்ட முனிவரின் குடிலை அடைந்து, அருந்ததியின் கருவில் புகுந்து அடைக்கலமானது.

    சில மாதங்களுக்குப் பிறகு, வசிஷ்டர் மனைவியின்  வயிறு கர்ப்பிணிப் பெண் போல் பெரிதாகி , வயிற்று வலியால் துன்பப்பட்டாள். வசிஷ்டர் தன் மனைவியுடன்  பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட அவர்கள் இது பரமனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்டு பரமசிவனிடம் முறையிடுமாறு ஆலோசனை கூறினார்கள். வசிஷ்டர், தன் மனைவி அருந்ததியுடன் பரமசிவனைச் சந்தித்தார். பரமன், அருந்ததியின் வலிக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டு, அருந்ததியின் வயிற்றுக்கருகே சென்று , கிளியே, வெளியே வா  என்று அழைத்தார். கிளி வெளியே வர மறுக்க, மீண்டும், பரமசிவன், கிளியே நீ வெளியே வந்தால் பெரிதும் போற்றப்படுவாய்  என்று அருளினார்.

    சிவபெருமானின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ,கிளி முகத்துடனும், மனித உடலமைப்புடனும் பிறந்த அந்தக் குழந்தைதான் சுகப் பிரம்ம மகரிஷி. 

     

                                                                        

    சுகப்பிரம்மர் ஈசனிடம் ,பரம்பொருளே, தாங்கள் தேவ ரகசியத்தை உபதேசித்த அந்தக் குகையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, அதற்கு சம்மதித்த சிவபெருமானும் , சிரவண மாதத்தில் வரும் இரு பவுர்ணமிகளுக்கு இடையில் ஒரு மாதம் அமர்நாத் பனிக் குகையில்  விஷ்வரூபியாய் பனி லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். 

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத். ஜூன்-ஆகஸ்ட் மாதத்தில் இந்த யாத்திரை நடைபெறுகிறது.

    மலையில் இருந்து விழும் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம் தானே என்று தோன்றினாலும், லிங்க வடிவில் ஆண்டுதோறும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவது தான், இன்றளவும் அதிசயமாக உள்ளது.அதுமட்டுமின்றி அமர்நாத்தில் எந்த விலங்குகளையும், பறவைகளையும் காண முடியாத நிலையில்  அந்த குகையில் வசிக்கும் ஒரு ஜோடி புறாக்களை பார்க்கும் போது இன்னும் ஆச்சரியமாக உள்ளது. தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு இறைவனும், இறைவியுமே அப்படி காட்சித் தருகிறார்கள் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

     

    ஓம் நம சிவாய …

  • சனி பகவான் சுயம்புவாகத் தோன்றிய குச்சனூர்

     

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் அமைந்திருக்கிறது  குச்சனூர்  . இங்கு தான் நவக்கிரகங்களில் முக்கியமானவரான சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றித் தனக்கென ஒரு கோயில் கொண்டுள்ளார்.

     

    தல வரலாறு

     செண்பகநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த தினகரன் என்ற  அரசன் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டான். குழந்தை வரம் கேட்டு  இறைவனிடம் வேண்டிவந்தான். அப்போது கோயிலில் அசரீரி ஒன்று அரசன் காதில் விழுந்தது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அப்படி அசரீரியில்கேட்டபடியே ஒரு  சில தினங்களில்  பிராமணச் சிறுவன் ஒருவன் அரசனிடம் வந்து சேர்ந்தான். அரசனும்  அந்த சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டினான். சில காலத்திற்கு  பிறகு , அசரீரியில் சொன்ன படியே அரசிக்கு  ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர் அரசனும், அரசியும்.குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாயினர். மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான் சந்திரவதனன். சொந்த மகன் சதாகன் அப்படி இருக்கவில்லை. இதனால், அரசன் வளர்ப்பு மகன் சந்திரவதனனையே  அரசனாக்குவது என்று முடிவெடுத்து அவனுக்கே முடிசூட்டினான்.

     இதைத்தொடர்ந்து  அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. சனி திசையால் அரசன் தினகரன் பெரும் துயரப்பட்டான் .தந்தை துயரப்படுவதை கண்டு சகிக்காத சந்திரவதனன் சுரபி நதிக்கரையில் இரும்பால் சனியின் உருவத்தைப் உருவாக்கி வழிபட்டான். இந்த வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் சந்திரவதனன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு தகுந்தாற்போல் சனி தோஷம் பிடிக்கிறது. அவரவர் பாவ வினைகளுக்கேற்பவே ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், நன்மைகள்  செய்பவர்களுக்கு, அவரவர் நல்ல செயல்களுக்கு ஏற்றார் போல சனி தோஷத்தின் இறுதியில் நன்மைகள் ஏற்படும்” என்றார்.இந்த விளக்கத்தை கேட்டும் மனம் அமைதி பெறாத சந்திரவதனன் , சனீஸ்வர பகவானிடம்   தந்தையின் துன்பத்தைக் குறைக்கும்படி மன்றாடினான். சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றார்.

                                                          

     சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டான்  சந்திரவதனன். துன்பங்கள் தீர்ந்த நிலையில் சனீஸ்வர பகவானிடம் வேண்டிய சந்திரவதனன் , சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களை அத்துன்பத்திலிருந்து மீட்க வேண்டினான். சனீஸ்வரனும் கோரிக்கையை ஏற்று , குச்சனூரில் சுயம்புவாகத் தோன்றினார். சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய  இடத்தில் குச்சுப்புல்லால் கூரை  அமைத்து சிறிய கோவில் உருவக்கப்பட்டது. இதன்பிறகு  செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூராக மாறியது . இதுவே குச்சனூரில் சனீஸ்வர பகவான் தோன்றிய வரலாறு .

     

    சனி தோஷத்தால் அவதிப்படும் பலரும் குச்சனூர் சனீஸ்வர பகவான்  கோயிலுக்கு வருகை தந்து துயர் நீங்கி செல்கின்றனர்.

     

    சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

    சச்சரவின்றிச் சாகா நெறியில்

    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

  • கஷ்டங்கள் தீர்க்கும் கந்தசாமி

    போக்குவரத்து நெரிசல்மிக்க இன்றைய சென்னையிலும் அமைதி தவழும் சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் எனப்படும் கந்தசாமிக் கோயில்.

    பாரிமுனை ராசப்ப செட்டித் தெருவில் அமைந்துள்ள இந்த கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வேலூர் மாரி செட்டியார் என்பவர்தான் இந்த கோயில் உருவாகக் காரணமானவர். கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகராக இருந்த மாரி செட்டியார், ஒரு தீவிர முருக பக்தர். அவர் திருப்போரூரில் உள்ள முருகனை அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக கிருத்திகை நாளில் கண்டிப்பாக திருப்போரூரில் இருப்பாராம்.

    அப்படி ஒருமுறை அவர் தனது நண்பர் கந்தப்பா ஆசாரியுடன் திருப்போரூர் சென்றபோது, ஒரு இடத்தில் ஓய்வெடுத்தாராம். அப்போது தெய்வத்தின் அருளால் அவர்களுக்கு அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் இருந்த புற்றுக்குள் இருந்து ஒரு முருகன் சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த சிலையை எடுத்துவந்து ஏற்கனவே முத்தையால்பேட்டையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். இந்த சம்பவம் 1673ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஆங்கிலேயே குறிப்புகளில் காணப்படுகிறது.

    இதனிடையே இந்த கோயில் இங்கு எப்படி வந்தது என்பதற்கு கிட்டத்தட்ட இதேபோல ஒரு தல வரலாறு கூறப்படுகிறது. அதன்படி, இந்த பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்து கொண்டிருந்தனர். வழியில் பலத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே,வழியில் ஓர் மடத்தில் தங்கினர். 

    அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினாராம். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன், சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அந்த சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமி இந்த இடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள். இதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    சரி, மீண்டும் மாரி செட்டியாரிடம் வருவோம். தான் கொண்டு வந்த சிலையை வைப்பதற்காக மாரி செட்டியார் ஒரு சிறிய கோயிலைக் கட்டினார். இதற்காக அவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கான இடம் மட்டும் முத்தையாலு நாயக்கரால் கொடுக்கப்பட்டதாம்.

    சுமார் 100 ஆண்டுகள் கடந்த பின்னர் 1780ஆம் ஆண்டில் இந்த கோயில் பதினெண் செட்டியார்களால் திருத்தி அமைக்கப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்த பிறகு, 1860இல்தான் இந்த கோயில் நன்கு விஸ்தரிக்கப்பட்டு கற்கோயிலாக மாற்றப்பட்டது. அதுவரை ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள், இது சாதாரண செங்கற் கோயிலாகத்தான் இருந்தது. 1869ஆம் ஆண்டு வையாபுரி செட்டியார் என்பவர் இந்த கோயிலுக்கு ரூ66,000 நன்கொடையாக வழங்கினார். அவர் இந்த கோயிலுக்காக ஒரு தேரும் செய்ய வைத்ததாக நரசய்யா தனது மதராசபட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

    1880ஆம் ஆண்டு அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் என்பவர் நாராயண செட்டியாருடன் இணைந்து கோயிலின் அருகில் இருந்த நிலத்தை கோயிலுக்காக அளித்தார். அந்த நிலத்தில் தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1901ஆம் ஆண்டு காளி ரத்தின செட்டியார் என்பவர் ரூ.50,000 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்த காசில்தான் கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதுமட்டுமின்றி கோயிலுக்காக காளி ரத்தினம் செட்டியார் ஒரு கிண்ணம் நிறைய வைரங்களும், விலை உயர்ந்த கற்களும் கொடுத்தாராம்.

    இந்த கோயிலுக்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வள்ளலார் சென்னையில் வசித்த போது தமிழ் கற்பதற்காக இந்த கோயிலுக்கு அருகில் உள்ள சபாபதி முதலியார் வீட்டுக்கு வருவார். பல நேரங்களில் தமிழ் கற்கப் போகாமல் முருகனைத் தரிசிக்கக் கோயிலிலேயே தங்கிவிடுவாராம். மன முருகிப் பாடலும் பாடுவார்.

    திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள ‘ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்ற பாடலில் கந்த கோட்ட முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார். ‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ என்று கந்த கோட்டத்து முருகனை புகழ்ந்து பாமாலை சூட்டியுள்ளார். வள்ளலாரைப் போன்றே சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் போன்றோரும் இங்கு வந்து பாடியுள்ளனர்.

    இந்த கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே மெட்ராசின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்களாம். கந்த சஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

    8 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கோயிலில் சரவண பொய்கை என்ற பெயரில் ஒரு அழகிய குளம் இருக்கிறது. இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதில் உள்ள நீரின் அளவு கூடாமல், குறையாமல் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். இந்த குளத்தில் கை நிறைய பொறியை அள்ளி வீசினால், மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொறியை கவ்விக் கொண்டு மின்னல் வேகத்தில் நீருக்குள் மறைகின்றன. இங்கு ஒவ்வொரு முறை வரும்போதும், அந்தக் கால மெட்ராஸ் பற்றிய எனது நினைவுகளும் இந்த மீன்களைப் போலவே மூளை நியூரான்களில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஒரே நேரத்தில் பாயும் பரவசத்தை அனுபவிக்க முடிகிறது

  • சிவன் நடனமாடும் காடு

    சிவபெருமானுக்கும் காளிக்கும் ஒருமுறை நடனப் போட்டி நடைபெற்றது. போட்டி உச்சகட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. காளியின் கையே ஓங்கியிருந்த நிலையில் சிவனின் காதில் இருந்த தோடு திடீரென கழன்று விழுந்தது. சிவன் நடனமாடியபடியே அதனை தனது இடது கால் விரல்களால் பற்றி எடுத்து காதில் அணிந்துகொண்டார். இவ்வாறு காலை உடம்புடன் ஒட்டியபடி தலை வரை தூக்கி ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். பெண்ணான காளியால் இவ்வாறு ஆட முடியாததால் போட்டியில் சிவனிடம் தோல்வியுற்றார். இந்த போட்டி நடந்த இடம் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. இங்கு சிவனுக்கும், காளிக்கும் தனித்தனியாக கோவில்கள் இருக்கின்றன.

    காரைக்கால் அம்மையார் சிவனைத் தரிசிக்க திருவாலங்காட்டிற்கு வந்தபோது, அந்த இடம் முழுவதுமே சிவன் ரூபமாக காட்சியளித்ததால் கால் வைக்கத் தயங்கி, தலையால் நடந்து வந்து சிவனை வழிபட்டதாகவும் ஒரு கதை உண்டு. காரைக்கால் அம்மையார் இந்த தலத்தில்தான் முக்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் காரைக்கால் அம்மையாருக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் வடாரண்யேசுவரர், ஊர்த்துவ தாண்டவர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் வண்டார் குழலம்மை.

    கிழக்கு நோக்கி இருக்கும் இந்த கோவிலின் 5 நிலை ராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் உள்ள சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு சண்முகர் எழுந்தருளியுள்ளார். நுழைவு வாயிலைத் தாண்டியதும் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளையுடைய இரண்டாவது கோபுரம் காட்சியளிக்கிறது. இதிலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

     

    இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் இரண்டாவது சுற்றுப் பிரகாரம் வருகிறது. வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இதில் இத்தலம் ரத்தின சபை என்றும், இதுவே முதன்மையான சபை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. நேரே உள்ளே சென்றால் கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்கிறது இந்த கோவிலின் தலப் புராணம். இத்தலத்தில் உள்ள உற்சவர் நடனமாடியபடி காட்சியளிப்பதால் ரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார்.

    நடராஜர் சந்நிதிக்கு மேல் தாமிரத்தினால் விமானம் வேயப்பட்டுள்ளது. நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி உள்ளது. இந்த தலத்தின் பெருமையை அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் காளிக்கென தனிக்கோவில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்கு வரலாம். பேருந்து வசதியும் உண்டு.

    தமிழக சரித்திரத்தின் முக்கியமான பகுதிகளை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்துள்ளன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த 22 செப்பேடுகள் சோழ வரலாறு குறித்து பல அரிய தகவல்களைச் சொல்கின்றன. இவை தற்போது சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

  • முருகனின் பெருமைகள் கூறும் அறுபடை வீடுகள்

     

    தமிழ் கடவுளான முருகபெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் அவரின் அறுபடை வீடுகளின் சிறப்புகளைப் பற்றி , இப்பதிவில் காண்போம் .

    திருப்பரங்குன்றம்:

    ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாக போற்றப்படுவது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகும் . இங்கு அழகுக்கு இலக்கணமாக உருவகப்படுத்தப்படும் முருகப்பெருமான்  அழகிய மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற கையோடு , இந்திரனின் மகளான தெய்வானையை இந்த தலத்தில் திருமணம் செய்து கொண்டார். அமர்ந்த கோலத்தில் இருக்கும்  முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது வேறு எங்கும் காண இயலாத ஒன்றாக சொல்லப்படுகிறது .

    அசுரர்களிடம் சிறைப்பட்டிருந்த தேவேந்திரனையும், தேவர்களையும் , தாய் சக்தியின் அம்சமான வேலைக் கொண்டு சிறை மீட்டார்   முருகன் . அதற்கு நன்றிக் கடனாக இந்திரன்  தன் மகள் தெய்வானையை , போரில் வெற்றி பெற்ற மறுநாள் முருகனுக்கு  இத்தலத்தில் திருமணம் செய்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.   

                                                                   

    திருச்செந்தூர்:

    முருகனின் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்   கடலோரத்தில் அலைகளின் ஓங்கார  சப்தத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது . முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்காக ,போருக்கு  முன்னும் பின்னும் தங்கிய இடம். திருச்செந்தூரில்  முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்றதால் , கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .  அவர் போர் புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டி என்பதால் ,  கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது .  

    போரின் முடிவில்  பெரிய மரமாக நின்ற சூரபத்மனை  முருகன் இரண்டாக பிளக்கிறார் .  அதில் ஒரு பாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார் சேவற்கொடியோன் .    

     

    பழநி:

    வாழ்க்கையின் தாத்பரியத்தை மக்களுக்கு உணர்த்திய  சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி . போகர்  என்ற சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட இத்தலத்தின் முருகன் சிலையின்  மீது அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட நோயும்  தீரும் என்பது நம்பிக்கை .  நாரத முனி  கொண்டு வந்த ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி.

     

    சுவாமிமலை சிவகுருநாதன்:

    சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை  சிறையில் அடைக்கிறார் முருகன் .  அதற்கு விளக்கம் கேட்ட சிவனுக்கு , உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.    அதனால் தான் இத்திருத்தலத்தில் ‘சிவகுருநாதன்’ என்ற பெயரோடு அருள் தருகிறார் முருகன்

    திருத்தணி முருகன்:

    சூரனுடன் போரிட்ட போது மார்பில் ஏற்பட்ட காயத்தின்  தடத்துடன் இங்கு காட்சியளிக்கிறார் முருகன் . திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ,இத்திருத்தலத்தில்  கோபம் தணிந்து சாந்தமானார் . முருகனின் கோபம் தணித்த இடம் என்பதால் இவ்வூர்  ‘தணிகை ‘என பெயர் பெற்றது . இத்தலத்தில் பிரசாதமாக தரப்படும் அபிஷேக சந்தனத்தை பக்தர்கள் நீரில் கரைத்து குடித்தால் அவர்களின்  நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகன் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி.

     

    பழமுதிர்ச்சோலை :

    குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும். தன்னை வழிபடுபவர்களுக்கு  கல்வியறிவும், ஞானமும் தருபவராக இத்திருத்தலத்தில் அருள் புரிகிறார் முருகன் .

    முருகா …முருகாவென்றால்  உள்ளம் உருகாதா என்ற வரிகளுக்கு ஏற்ப , தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவைகளை  , அவர்கள் உள்ளம்,  நன்றியில் உருகும் வண்ணம் நிறைவேற்றிக்கொடுப்பவனே  வெற்றிவேலன் .

  • ரம்பா இளமை வரம் வாங்கிய கோவில்..

    ஏதோ ஒரு பெயர் தெரியாத பழைய திரைப்படத்தில் தேவலோகத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்திரன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த ரம்பா, ஊர்வசிக்கெல்லாம் வயசே ஆகாதா? எப்பப் பார்த்தாலும் அப்படியே இருக்காங்களே என்றேன். அப்படியே இளமையா இருக்கணும்னுதான் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் பூலோகத்திற்கு வந்து வரம் வாங்கிட்டு போனாங்க என்றார் என் நண்பரின் பாட்டி. எந்த ஏரியாவில வரம் வாங்கினாங்க பாட்டி என்றேன்.

    கிண்டல் பண்ணாதேடா, இலம்பையங்கோட்டூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே தான் இவங்கல்லாம் வந்து தவம் இருந்து இளமை வரம் வாங்கிட்டு போனாங்க, அவங்க வந்துபோன கோவில் கூட இன்னும் அங்கே இருக்கு தெரியுமா என்று எங்களை அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்தினார் பாட்டி. சரி தான், ரம்பை வந்துபோன கோவிலை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.
     
    ஒருநாள் அதிகாலையிலேயே நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, ரம்பையின் பாதச்சுவடிகளை ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது என்றார்கள். அங்குள்ள திருவிற்கோலம் எனப்படும் கூவம் சிவன் கோவிலிலிருந்து தென்மேற்கே 4 கி மீ. போனால் இந்த ஊரை அடையலாம் என்றார்கள். ஏற்கனவே நான் கூவம் கிராமத்திற்கு (இங்கிருந்துதான் சென்னையின் ஜீவநதி கூவம் புறப்பட்டு வருகிறது) போயிருப்பதால் அது வரை எந்த சிக்கலும் இல்லாமல் போய்விட்டேன்.
     
    அங்கு சென்று விசாரித்தபோது இலம்பையங்கோட்டூரா அப்படி எதுவும் இங்கே கிடையாதே என்று இடியை இறக்கினார் ஒருவர். பயணம் அவ்வளவுதானோ என்ற அச்சத்துடன் வேறொரு பெரியவரை விசாரித்தோம். அவங்க செட் ஆளைப் பற்றி தெரிந்திருக்கும் என்ற நப்பாசை தான். நம்ம கணக்கு சரியாக இருந்தது. இலம்பையங்கோட்டூரைத் தான் இப்போ எலுமியன்கோட்டூர்னு சொல்றாங்க, இன்னும் 4 கிலோ மீட்டர் போங்க ஊர் வந்துடும் என்று வயிற்றில் பால் வார்த்தார். அப்பாடா, தப்பிச்சோம்.
     
    அழகான வயல்வெளிகளுக்கு இடையில் கொக்குகள் வானில் பறக்க, ஒற்றையடிப் பாதையில் வண்டியில் பறந்தோம். அப்படியே வளைந்து நெளிந்து சென்றதில் ஒரு சிற்றூர் எதிர்ப்பட்டது. அடிபம்பில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு நவீன ரம்பையிடம், அக்கால ரம்பை வந்துபோன கோவில் பற்றி விசாரித்தோம். அப்படியே கிழக்கால போங்க என்று கையை வீசினார். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே ஒரு சிதிலமடைந்த பழங்காலக் கோவில் தெரிந்தது.
     
    ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் வந்துபோன கோவில் என்பதால் உள்ளே காலை வைத்ததும் இதயத்தில் சிலிர்க்கிறதா என்று பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் கோவிலின் புராதனம் நம்மை மெல்ல சூழ்ந்து கொள்கிறது. ஒரு கனத்த மௌனத்தை உணர முடிந்தது. ஒரு இனம் புரியாத அமைதி நெஞ்சில் பரவியது. கோவில் குருக்களின் வீடும், பசு மடம் ஒன்றும் கோவில் வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. குருக்கள் கோவிலின் தல வரலாற்றை விளக்கினார். அதை முதலில் சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
     
    திரிபுர சம்ஹாரத்தின்போது சிவ பெருமான் தேரேறி புறப்பட, அவருடன் சென்ற தேவர்கள் தன்னை வழிபடாமல் சென்றதால் விநாயகர் தேரின் அச்சை முறித்து விட்டார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. ஆனால் தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம்தான் இலம்பையங்கோட்டூர் திருத்தலம்.
     
    தேவலோக மங்கைகளான ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகியோர் மாறாத இளமை வேண்டுமென்று இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றனர். இரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் என்று ஆகி, நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள சிவன் மீது திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
     
    இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருக்கிறது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் இருக்கின்றன. இத்தலத்தில் கொடிமரம் எதுவும் இல்லை. வளிப் பிரகாரத்தில் இடதுபுறம் இரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் எனப்படும் அரம்பேஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் இருக்கிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரத்தை வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
     
     
    இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. இத்தல இறைவன் ஒரு சுயம்பு, மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வெளியே இரு புறமும் மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியதாக கூறப்படுகிறது.
     
    தேவர்கள் வழிபட்ட இந்த தெய்வநாதேஸ்வரரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள். 
     
    ரம்பா, ஊர்வசி, மேனகா போல இளமை மாறாமல் இல்லாவிட்டாலும், இருக்கிற வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு வெளியில் வந்தோம். ரம்பா ஊரை பார்த்துட்டோம் டோய்னு… இனி எல்லார் கிட்டேயும் சொல்ல வேண்டியதுதான்.