ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டனில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார். திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பி.வி.சிந்து, அவரது தாய் விஜயா, தந்தை ரமணா மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் திருப்பதி வந்தனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று முதலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர், தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். முன்னதாக சிந்து வெற்றிக்கான அவரது பயிற்சியாளர், கோபிசந்த் முடி காணிக்கை செலுத்தினார். முன்னதாக ஏழுமலையான் கோயிலின் ரங்கநாதர் மண்டபம் அருகே உள்ள துலாபாரத்தில் பி.வி.சிந்து, தனது எடைக்கு எடையாக வெல்லம் காணிக்கையாக செலுத்தினர்.
Category: சிறப்பு செய்திகள்
சிறப்பு செய்திகள்
-
விநாயகர் சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்….
விநாயகர் அகவல்….
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! -
விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்….
ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும் என்பது ஐதீகம்.
கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதி என்று சொல்கின்றோம். எனவே, அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.
எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் ‘மூல கணபதி’ என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.
அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் ஆவணி மாதம். அந்த திருநாள்ஆவணி மாதம் 20ம் தேதி திங்கள் கிழமை (05.09.2016) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
வீட்டிலும் சிலை வைத்து வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். -
திருப்பதி கோயிலை ஹெலிகாப்டரில் சுற்றிபார்க்க ரெடியா?
திருப்பதி கோயிலுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா மேற்கொள்வதற்கான வெள்ளோட்டம் இரண்டு நாள்களில் நடக்கவுள்ளது.
இந்த புதிய சுற்றுலாச் சேவை மூலம் ஸ்ரீசைலம், திருமலை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.விஜயவாடாவிலிருந்து காலை 8 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு நேராக ஸ்ரீசைலத்தை சென்றடைகிறது. அங்கிருந்து கார் மூலம் பக்தர்கள், கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அபிஷேகம், குங்கும அர்ச்சனை செய்வித்து, விஐபி தரிசனம் வழங்கப்படுகிறது.
அதன்பின் இழுவை ரயில் மூலம், பாதாள கங்கைக்கு அழைத்துச் சென்று படகு சவாரி செய்ய வைக்கின்றனர். பின்னர் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 1.30 மணிக்கு ஹெலிகாப்டர் திருப்பதியை அடைகிறது.
திருப்பதியிலிருந்து கார் மூலம் திருச்சானூர், சீனிவாசமங்காபுரம், ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களில் தரிசனம் செய்ய வைக்கின்றனர். இதையடுத்து, திருமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு அங்கு தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.
மறுநாள் காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து காலை 7.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 8.30 மணிக்கு மீண்டும் விஜயவாடாவை சென்றடைகிறது.
இதில், விஜயவாடா- ஸ்ரீசைலம் – திருமலை, ஹைதராபாத்-ஸ்ரீசைலம்-திருமலை என இரண்டு சுற்றுலாத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு ஹெலிகாப்டரில் 6 பேர் வசதியாக அமர்ந்து பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ. 15,000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் ஓய்வெடுக்கும் சமயத்தில் ஸ்ரீசைலம், திருமலை அருகில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கவும் சுற்றுலாத் துறை வாய்ப்பு அளிக்கிறது. இதற்கு, ஒரு நபருக்கு ரூ. 2,500 கூடுதலாக கட்டணம் வசூலிக்க உள்ளனர். இதற்கான வெள்ளோட்டம் இன்னும் இரு நாள்களில் நடைபெற உள்ளதாக ஆந்திர சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஓணம் பண்டிகைக்கு சபரிமலை நடை திறப்பு எப்போது?
ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் 13-ந்தேதி திறக்கப்படுகிறது
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின்போதும் முக்கிய பண்டிகைகளின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல மகரவிளக்கு பூஜை, மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
இதனிடையே ஆவணி மாத பூஜைக்காக சமீபத்தில் திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை கடந்த வாரம் அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வருகிற செப்டம்பர் 13-ந்தேதி மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்படுகிறது. அன்று மாலை சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.
மறுநாள் முதல் சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. -
வேளாங்கண்ணி–திருப்பதி இடையே சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேளாங்கண்ணியில் இருந்து 6–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–திருப்பதி சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ரெயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, வேளாங்கண்ணியில் இருந்து 8–ந் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–செகந்திராபாத் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 8 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. -
திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் தேரோட்டம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா பத்தாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். பத்தாம் நாளான புதன் கிழமை காலை தேர்திருவிழா நடைபெற்றது.
திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க காலை 6.05 மணிக்கு பிள்ளையார் ரதம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.தொடர்ந்து காலை 6.40 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் பெரிய தேரில் புறப்பட்டு, வீதி உலா வந்து காலை 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது.
அதன்பின்னர் காலை 7.45 மணிக்கு அம்மன் தேர் திருவீதி வலம் வந்து 8.10 மணிக்கு நிலையினை சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். -
விநாயகர் சிலைகள் தயார்
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்ய, விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன.
வருகிற 5–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. திருப்பத்தூர் தென்மாப்பட்டு பகுதியில் ஆர்டரின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடிவடைந்து அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆர்டரின் பேரில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் தயார் செய்யப்பட்டு தற்போது, அந்த சிலைகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்தது 3 அடி முதல் அதிக பட்சமாக 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. -
ரங்கநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 65.66 லட்சம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் ஜூலை மாதத்துக்கான உண்டியல் காணிக்கையாக ரூ. 65.66 லட்சம் கிடைத்துள்ளது.
வைணவத் தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில். இங்குள்ள நம்பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயிலில் பல்வேறு சன்னதிகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம்.
கடந்த ஜூலை மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் முன்னிலையில் எண்ணப்பட்டன.
இதில் ரொக்கமாக ரூ. 65 லட்சத்து 66 ஆயிரத்து 108ம், தங்கம் 125 கிராமும், வெள்ளி 1,135 கிராமும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 229-ம் இருந்தன. இது கடந்த மாதம் கிடைத்த காணிக்கையைவிட ரூ. 11 லட்சம் அதிகமாகும்.
-
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கோலாகல துவக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா கொடியற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இத்கோயிலில் சுவாமிக்கான முக்கியத் திருவிழாக்களில் ஆவணி மூலத் திருவிழா குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி, சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் 8 சிறிய கலசங்களிலும் 2 பெரிய கலசங்களிலும் வைக்கப்பட்ட புனித நீருக்கு வேத மந்திரம் முழங்க பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் கொடி மரத்தில் தர்ப்பைப்புல் கட்டப்பட்டு, சுவாமி, அம்மனுக்குரிய ஆடைகள் கொடிமரத்தில் அணிவிக்கப்பட்டு கொடிமரத்தின் பீடத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு நிறைவு பூஜைகள் நடைபெற்றன.
செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இரவில் ஆவணி மூல வீதிகளில் சுவாமி சந்திரசேகரராகவும், அம்மனும் எழுந்தருளி அருள்பாலிப்பர். செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் தினமும் இரவில் சுவாமி திருவிளையாடல் திருக்கோலத்தில் அருள்பாலிப்பார். அதன்படி கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி அளித்தல், மாணிக்கம் விற்றது, தருமிக்கிப் பொற்கிழி அளித்தல், உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண்சுமந்தது, விறகு விற்றது என தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். செப்டம்பர் 11 ஆம் தேதி பகலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை மதுரை வைகை புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெறும்.