Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • சிராப்பள்ளி சித்திரைத் தேர் திருவிழா

    தென்கைலாயம் என போற்றுதலுக்குரிய சிறந்த சிவ வழிபாடு ஆலயமாக மாநிலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள “சிராப்பள்ளி” என அழைக்கப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவில் சீர்மிகு சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது..

    இந்த கொடியேற்ற திருநாளில் சிராப்பள்ளி தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய பாடல் நினைவுக்கு வருகிறது.
    மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல், செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச், சுந்தம் மலர்கள் கடைமேலுடையார் விடையூரும், எந்தன் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே!

    கொடி உயர கோ உயரும்! கோ உயர மக்கள் குடி உயரும் என அன்றைய கால சான்றோர்கள் கூறுவது வழக்கம்.
    ஒரு நாட்டின் வளம், நலம், செல்வம், ஆகிய அனைத்திற்கும் அந்நாடு சிறந்து விளங்குமானால் அந்த நாட்டை “கொடி நீதி வழுவாத ஆட்சி” என்பார்கள். அது போல இறைவனுக்கும் கொடி மிகவும் முக்கியமானது.

    பரம்பொருளாகிய “சிவபெருமானுக்கு இடபக்கொடியும்” சக்தி வடிவமாகிய “அம்பாளுக்கு சிம்மக்கொடியும்” விஷ்ணு வடிவமான “பெருமாளுக்கு கருடக்கொடியும்” அமைந்துள்ளது. இவற்றில் தனி அம்பாள் கோவில்களில் மட்டுமே தான் சிம்மக்கொடியேற்றப்படும். சிவாலயத்தில் உள்ள அம்பாளின் திருவிழா காலங்களில் ரிஷப கொடியேற்றப்படும்.

    ஒரு ஆலயத்தின் திருவிழாவின் முதல் தொடக்க நாளில் கொடியேற்றம் நடைப்பெறுகிறது. கொடியேற்றப்பட்டு அன்று மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று. எட்டுதிக்கு என்ற அஷ்டதிக் பாலகர்களுக்கு பலியிட்டு தச கட்டு வைபவம் நடைப்பெறும்.
    அப்படி செய்யும் பொழுது திருவிழா முடியும் வரை அந்த ஊரை காத்து திருவிழா நன்முறையில் நடைபெற நடக்கும் பூஜையாகும். ஒரு திருவிழாவில் கொடியேற்றம் என்பது மிகவும் முக்கியமானது நிகழ்வாகவே கோவில்களில் அமைக்கின்றது.

  • கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில்

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிஞ்சி ஆண்டவர் கோயில். பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் மலை நிலத்திற்கும், குறிஞ்சி செடிகளுக்கும் இடையேயான பிணைப்பை குறிக்கும் சொல்.

    12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் இந்த அரிய வகை குறிஞ்சி மலர்கள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் அழகை ரசித்த ஆஸ்திரேலிய பெண்மணி ஆர்.எல்.ஹாரிசன் என்பவர், இப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவரை திருமணம் செய்தார். தனது பெயரை லீலாவதி என மாற்றிக் கொண்டார். கொடைக்கானலில் தங்கிய அவர், அங்கிருந்தே முருகன், தண்டாயுதபாணியாய் வீற்றிருக்கும் பழநி மலையை தினமும் பார்த்து பரவசமடைந்துள்ளார்.

    மழைக்காலங்களில் மேகக் கூட்டங்கள் பழநி மலை மற்றும் கோயிலை மறைத்ததால், கொடைக்கானலில் ஒரு பகுதியிலேயே கடந்த 1936ல் ஒரு முருகன் கோயிலைக் கட்டி வழிபட்டுள்ளார். பின்னர் ராமநாதனின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் இந்தக் கோயிலை பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். இதன் பின்னர், இக்கோயில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    தற்போதும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலின் இடதுபுறத்தில் இருந்து பார்த்தால் பழநி மலைக்கோயிலை காணலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், குறிஞ்சி ஆண்டவரான முருகனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    மலர் வழிபாடு
    கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மே மாதத்தில் மலர் வழிபாடு நடைபெறும். இதனைக் காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடை முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் குறிஞ்சி முருகனுக்கும் இந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    குறிஞ்சி செடி
    குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடையில் குறிஞ்சி செடிகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இச்செடிகள் பூக்கும். கடந்த 2006ல் குறிஞ்சிப் பூக்கள் நீல நிறத்தில் கொடைக்கானலில் பூத்து குலுங்கின. பச்சைப் புடவையை மாற்றி, நீலக்கலரில் புடவை கட்டி பவனி வருகிறாள் கொடைக்கானல் மலை இளவரசி என இந்த அழகை இப்பகுதி மக்கள் சிலாகிக்கின்றனர்.
    12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிஞ்சி மலர் பூக்கும் காலங்களில், இக்கோயிலில் உள்ள முருகனுக்கு பெரும்பாலும் குறிஞ்சிப் பூக்களைக் கொண்டே அலங்காரங்கள் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

  • ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் ….

    பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி,

    எந்த ஊருக்கு பிரயாணம் செல்லவும் ஒரே இடத்தில் பயணச்சீட்டு வாங்குவதைப்போலவும்

    பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம்.

    அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு.

    நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள்.

    கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.

    நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர்.

    பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.

    ஸுதர்ஸனாய ஸ்வாஹா… என்றால் அங்கு சக்கரத்தாழ்வார் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை.

    அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள்.

    ஆதலால் அனைத்து இல்லங்களிலும் வருடத்திற்கு ஒரு முறையேனும் ஹோமம் செய்வோம்

  • திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கொடியேற்றம்

    திருவாடானை, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது.
    சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள்முழங்க பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருக்குசிறப்பு தீபாராதனை நடந்தன.

    தேவஸ்தானகண்காணிப்பாளர் பரமேஸ்வரபாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர்சுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 24ல் திருக்கல்யாணமும், 28 ல் காலை 9:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும்.

    விழா நாட்களில்பஞ்சமூர்த்தி புறப்பாடு, பூதம், அன்னவாகனம், வெள்ளி ரிஷப வாகனம்,நந்தி, சிம்மம், வெட்டுங்குதிரை, காமதேனு போன்ற பல வாகனங்களில்பாகம்பிரியாள் தாயார் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.29ல் தீர்த்தவாரியும், அன்று இரவு பஷ்பபல்லக்கும்,மறுநாள் கொடியிறக்கமும் நடைபெறும்.

  • அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் சித்திரை தேரோட்டம்

    அவிநாசிலிங்கேசுவரர் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 27ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று காலை வேத பாராயணம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
    முன்னதாக கோயிலில் யாகசாலை முன்மண்டபத்திலும், கொடிமரத்தின் முன்புறமும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, கொடி மரத்துக்கும், பலிபீடத்துக்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    கொடித்துணியில் அதிகாரநந்தி, சூரிய சந்திரன், சிவலிங்கம், ஆகியன வரையப்பட்டு பூ மாலை அணிவிக்கப்பட்டு, கொடி பூஜைகள் நடந்தது. சண்டிகேசுவரர், விநாயகர், சுப்ரமணியர், அவிநாசியப்பர், கருணாம்பிகையம்மன் ஆகிய உற்சவர்களுக்கு அபிஷேக, அலங்கார, மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
    பெங்களூரு வேத விக்யான் மகா வித்யாபீட முதல்வர் சுந்தரமூர்த்திசிவம் தலைமையில் வேத பாடசாலை மாணவர்கள் குழுவினர் வேத பாராயணம் நிகழ்த்தினர். வேத பாராயணம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தேர்த்திருவிழா துவங்கியது.
    இதையடுத்து, நேற்றிரவு திருமுருகன்பூண்டியில் இருந்து திருமுருகநாதர் வருகையும் நடந்தது. 24ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடக்கிறது.
    25ம் தேதி இரவு கற்பகவிருட்சம் யானை வாகனம், சுவாமிதிருக்கல்யாணம், யானைவாகனக்காட்சிகள், திருவீதி உலா ஆகியன நடக்கிறது. 26ம் தேதி காலை சோமஸ்கந்தர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும், திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது.
    27ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி காலை 10 மணிக்கு கருணாம்பிகையம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், தேர் நிலை சேர்தலும் வண்டித்தாரை, பரிவேட்டை நடக்கிறது.
    29ம் தேதி தெப்பத்தேர் உற்சவ நிகழ்ச்சியும், 30ம் தேதி நடராஜபெருமான் மகாதரிசனமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, கோயில்செயல் அலுவலர் அழகேசன் ஆகியோர் செய்துள்ளனர்.

  • நீலகிரி செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய அன்னமலை முருகன்…

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்து இருக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். அமைதியைத் தேடி பலர் இமயமலைக்கு செல்வார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டிலேயே அதற்கு இணையான ஒரு புனிதமான இடம் உள்ளது.

    அதுதான் நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள அன்னமலை தண்டாயுதபாணி கோவில். மஞ்சூர் கீழ்குந்தாவை அடுத்துள்ள அன்னமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில், நம்மை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில் இது.

    கோவிலுக்குச் செல்வதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள விநாயகரை தரிசிக்க வேண்டும். விநாயகரை வணங்கி விட்டு சென்றால் வலதுபுறம் அன்னதானக் கூடம் உள்ளது. இதற்கு அடுத்து வலது புறம் சென்றால் தண்டாயுதபாணியை தரிசனம் செய்யலாம்.

    கருவறையில் முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள சிவன் குகை, இங்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. இது தவிர நாகராஜர் சன்னிதி, நவக்கிரகங்கள் போன்றவற்றையும் தரிசிக்கலாம்.

    நாகராஜர் சன்னிதி அருகில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் சிவன்குகை மற்றும் மலையை வந்து முத்தமிட்டு செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.

    சிவன் குகை :
    கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான்.

    திடீரென்று ஒரு நாள் சிறுவன் கிருஷ்ணனைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடினார்கள். அப்போது அவன் கடவுளைத் தேடி அங்குள்ள சிவன் குகைக்குள் இருந்தான். அங்கேயே 3 ஆண்டுகள் முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.

    ஒரு நாள் அவனுக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் இங்கே தான் இருக்கிறேன். பல ஆண்டு களுக்கு முன்னால் வேள்விகளும், அன்னதானமும் நடைபெற்ற புனிதமான இடம் இது. இங்கு மீண்டும் அன்னதானம் தொடர வேண்டும். நான் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறேன்.

    அதற்கான வேலையை நீ தொடங்குவாயாக’ என்று கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஏழையான கிருஷ்ணனால் எப்படி கோவில் கட்ட முடியும். அதே நேரத்தில் முருகனின் கட்டளையை நிறைவேற்ற கிருஷ்ணன் கற்களை சேகரித்து வந்து, மலை உச்சியில் அடுக்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஊர்மக்கள் விஷயம் கேள்விப்பட்டு, அவனுடன் இணைந்தனர். இதன் பலனாக அங்கு 1975-ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

    இன்று அழகாக காட்சி அளிக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம் செய்தால் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவதாக ஐதீகம் உள்ளது.

    அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அமைவிடம் :
    கோவையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும், ஊட்டியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அன்னமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி, குன்னூரில் இருந்து மஞ்சூர் குந்தாவுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக அன்னமலைக்கு தினமும் காலை, மாலையில் பஸ் வசதி உண்டு.

  • திக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேச வைக்கும் கோயில்

    திக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேசவும், பேசும் சக்தி இழந்தவர்கள் அந்த சக்தியை புதிதாகப் பெறவும் அருள்கிறது உத்தமராய பெருமாள் கோயில். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் பெரிய அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது.

    தென்னகத்தில் அந்நிய கலாசார தாக்குதல்கள் மேலும் விரிவடையாமல் விஜயநகர நாயக்க மன்னர்கள் தடுத்ததோடு, அந்தத் தாக்குதல்களால் சிதறடிக்கப்பட்ட கோயில்களை புதுப்பிக்கவும் செய்தார்கள். கூடவே, புதிய கலையம்சம் கொண்ட கோயில்களையும் நிர்மாணித்தார்கள். அந்த வரிசையில் பெரிய அய்யம்பாளையத்தில் மலை மீது உருவான இந்தக் கோயில் ஒரு கற்றளி கோயிலாகும்.

    சதுர வடிவான கருவறையில் ஏகாந்தமாக, தேவியர்கள் இன்றி சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் உத்தமராய பெருமாள் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்க, கீழ் இரு கரங்கள் திருப்பதி-திருமலை பெருமாளைப் போல அபய, கடி ஹஸ்தங்களாகக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

    கருவறையை சுற்றியுள்ள புறச்சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமில்லை. அறைத் தூண்களும், மேல் கோஷ்டங்களும் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதியில் விஜயநகர கலைப்பாணியில் புடைப்புச் சிற்பங்களாக வீரன் அஞ்சலி செலுத்தும் நிலையிலும், அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து செல்லும் நிலையிலும் காணப்படுகிறார்கள்.

    அதிஷ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்ற ஆறு பெரும் பகுதிகளாக கோயில் விமானம் அமைந்துள்ளது. சுவரின் மேலுள்ள பிரஸ்தரம் என்று அழைக்கப்படும் கூரைப் பகுதி, கருவறையை மூடும் அமைப்பாக உள்ளது. இவற்றின் நான்கு மூலைகளிலும் கருட பகவான் காட்சியளிக்கிறார். கிரீவப் பகுதியின் முதல் தளத்தின் நான்கு மூலைகளிலும் கர்ண கூடங்கள் அமைந்துள்ளன.

    இரண்டாவது தளத்தை தெய்வ, மானிட உருவங்கள் தாங்கி நிற்கின்றன. குழல் ஊதும் அனுமன், நரசிம்மர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி ஆகிய தெய்வ உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. இங்குள்ள அர்த்த மண்டபம் சதுர வடிவிலும், தூண்கள் சதுரப் பட்டையாகவும் உள்ளன. தூண்களில் விஜயநகர காலத்திய பெண், திருமால், அனுமன், சங்கு, சக்கரம், அன்னப் பறவை, பெரியாழ்வார், ராமானுஜர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.

    கருவறைக்கு எதிரில் கருட பகவான் மூலவரை நோக்கி கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கிறார். கருவறை வாயில் காவலர்களாக துவார பாலகர்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ளனர். கோயில் அமைந்துள்ள குன்றின் ஒரு பக்கத்தில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்ய குகையும், அனுமன் சந்நதியும் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் தின பூஜைகளும், சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.

    புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, கார்த்திகையில் விஷ்ணு கார்த்திகை, தை மாதத்தில் காணும் பொங்கலுக்கு மறுநாள் மகரத் திருவிழா என்று விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதுதவிர ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நடைபெறும் விசேஷ பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் என்பது திடமான நம்பிக்கை.

    திக்கிப் பேசும் குழந்தைகள், பேச்சிழந்த குழந்தைகள், ஞாபக சக்தி குறைந்த குழந்தைகளுக்கு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஏழு வாரங்கள் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு பிரசாத தேனை அருந்தி வந்தால் குறைகள் படிப்படியாக குணமாகிறது என்கிறார்கள். கோயிலைச் சூழ்ந்துள்ள இயற்கை எழில், அதற்குக் கட்டியம் கூறுகிறது.

    வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கண்ணமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் அமைந்து இருக்கிறது உத்தமராய பெருமாள் கோயில்.

  • திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை

    திருப்பதியில் வாரத்தில் 3 நாட்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் அதிகளவில் சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
    திருப்பதியில் உள்ள அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.
    கோடைக்காலத்தையொட்டி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களால் திருமலையில் கூட்டம் அதிகமாக இருக்கும். வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்து, சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபட முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்காக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, இலவச தரிசனத்தில் அதிகளவில் சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களை குறைந்த எண்ணிக்கையில் தரிசனத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறை நாளை (வெள்ளிக்கிழமை) முதல், ஜூலை மாதம் 16-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
    தரிசன வரிசைகளில் செல்லும் பக்தர்களுக்கு 24 மணிநேரமும் பால், டீ, காபி, குடிநீர் மற்றும் உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அன்னப்பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் கூடுதல் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம். லட்டு பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, குறைந்தபட்சம் தினமும் 3½ லட்சம் லட்டுகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
    பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பவும், அதனை கண்காணிக்கவும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாரத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் பக்தர்கள் 300 ரூபாய் டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். 300 ரூபாய் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபடலாம். இந்த நடைமுறைக்கு பக்தர்கள், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

  • அறுபடை முருகன் கோயில்களில் தரிசனம்!

    முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம். நம் எல்லோருக்கும் அறுபடை வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.
    ஆனால், நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் தள்ளி போட்டுக்கொண்டே இருப்போம். சரியாக திட்டமிட்டால் சீக்கிரமாகவும், சிக்கனமாகவும் அறுபடை வீடு முருக பெருமான் கோயில்களில் தரிசித்து வந்துவிடலாம். மூன்றே நாட்களில் அறுபடை வீடுகளுக்கு பெரும்பாலும் பேருந்துகளிலே செல்ல முடியும்.
    உங்களுக்கு சிறப்பாகவும், சீக்கிரமாகவும் அறுபடை முருகனை தரிசிக்க வேண்டுமெனில், கார்த்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிருங்கள். சாதாரண நாட்களி்ல் ஒவ்வொரு கோயிலிலும் பின்பற்றப்படும் தரிசன நேரம் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
    ஆறு கோவில்களிலும் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கினால் முருகப் பெருமான் சன்னிதியிலேயே அமர்ந்து ஆராதனையின் போது வழிபடலாம். சிறப்பு தரிசனத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்
    (தரிசன நேரம் : காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை)
    தூத்துக்குடி வந்து அங்கிருந்து பஸ் அல்லது காரில் திருச்செந்தூருக்கு வரலாம். முதலிலேயே இணையதளம் மூலமாக அல்லது தொலைபேசி வாயிலாக தங்கும் அறை பதிவு செய்து விடுவது நேரத்தை மிச்சமாக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அங்கு உள்ள நாழி கிணறு மற்றும் வள்ளிகுகையையும் நேரம் இருந்தால் பார்த்துவிடுங்கள். முதல்முறை வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக குறிப்பிடலாம். திருச்செந்தூரில் தரிசனம் முடிநது 12 மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும். அப்பொழுதுதான் முதல்நாள் மேலும் இரண்டு கோயில்களுக்கு போக முடியும்.

    திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்சோலை
    நேரம் : காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை) மதியம் 1 மணியிலிருந்து 4 மணிவரை நடை சாத்தப்படும்)
    (பழமுதிர்சோலை தரிசன நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை)
    இந்த இரண்டு கோவில்களும் மதுரைக்கு அருகில் இருக்கிறது. திருசெந்தூரிலிரிந்து மதுரைக்குச் செல்ல மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். மதுரைக்குப் போகும் நேரத்தை பொறுத்து இரண்டில் எந்த கோவிலுக்கு முதலில் போகலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஏன் என்றால் பழமுதிர்சோலை மதுரையிலிருந்து 21 கீ. மீ. தொலைவில் உள்ளது. மற்றும் மலை மீது உள்ளதால் கோவிலை ஆறு மணிக்கே நடை சாத்தி விடுவார்கள். அதனால் நான்கு மணிக்கு முன்னரே மதுரைக்கு வந்துவிட்டால் மட்டுமே அங்கு முதலில் செல்லவும்.
    காரிலோ அல்லது பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து போகலாம். மதுரை செல்ல மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் முதலில் திருப்பரங்குன்றம் கோயிலை பார்த்து விடலாம். பஸ்ஸில் 30 நிமிடத்துக்கும் குறைவாகவே ஆகிறது. நேரமிருந்தால் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர்மஹால், மற்றும் கடைகளுக்கும் சென்று வரலாம். முதல் நாள் பழமுதிர்சோலை செல்ல முடியவில்லை என்றால், இரண்டாம் நாள் காலை முதல் கோயிலாக பழமுதிர்சோலை செல்லவும். மூன்று கோயில்கள் செல்ல வேண்டும் என்பதால் 6 மணிக்கே கோயிலை அடைய முயற்சி செய்யுங்கள்.

    பழனி கோயில்
    (தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)
    மதுரையில் இருந்து பழனிக்கு காரில் போகலாம். பஸ்ஸில் செல்வதாக இருந்தால் திண்டுக்கல் போய் அங்கிருந்து போவது எளிது. அங்கு போய்ச்சேர இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகிறது. மலை அடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல படி, வின்ச் மற்றும் ரோப் கார் இருக்கிறது. ரோப்காரில் 5 நிமிடத்தில் சென்று விடலாம். தரிசனம் முடிந்ததும் சீக்கிரம் கீழே வந்து முடிந்தவரை 1 மணிக்கு முன்பாக பழனியிலிருந்து கிளம்பினால் அன்றே சுவாமிமலை பார்த்து விடலாம்.

    சுவாமிமலை
    (தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை)
    பழனியிலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறினால் சுவாமிமலையை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. ஒரு வேளை தாமதமானால் தஞ்சாவூரிலிருந்து காரில் போவது நல்லது. உங்களுக்கு நேரம் இருந்தால் இன்னும் நிறைய கோயில்களும் கும்பகோணத்தில் பார்ப்பதற்கு இருக்கிறது. கும்பகோணம் பித்தளை பாத்திரங்கள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு பெயர் பெற்றது.

    திருத்தணி
    (தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)
    கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் போய் அங்கிருந்து திருத்தணிக்கு போகலாம். (சென்னைக்கு 6 மணி நேரம் ஆகிறது). சென்னையிலிருந்து திருத்தணிக்கு மின்சார இரயில் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. காரில் சென்றால் நேராக கோயிலுக்கே சென்று விடலாம். எப்படியும் மதியம் 1 மணிக்குள் தரிசனம் ஆகிவிடும். அன்றே நீங்கள் ஊர் திரும்பிவிடலாம். நேரமிருந்தால் அங்கிருந்து வேலூர் பக்கத்தில் உள்ள தங்க கோயிலுக்கும் சென்று வரலாம்.
    அறுபடை வீடு முருகன் கோயில்களுக்கு வசதியை பொறுத்து கார் அல்லது பஸ்சில் செல்லலாம். உங்கள் வசதிக்கேற்ப இதே வழித்தடத்தில் அல்லது திருத்தணியில் ஆரம்பித்து திருச்செந்தூரில் முடியும் வகையில் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம். ஒரே பயணத்தில் சிக்கனமாவும், சீக்கிரமாகவும் அறுபடை வீடு முருகன் கோயில்களில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக எனது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.