Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • siva-who-resurrected-yema

     

    திருப்பபைஞ்ஞீலி அற்புதங்கள்

     

    ஞீலி என்பது கல்வாழையில் ஒரு வகை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை என்று பொருள் . பசுமையான ஞீலி வாழையை  தல விருட்சமாக கொண்டுள்ளதால் இத்தலத்திற்கு திருப்பபைஞ்ஞீலி என்று பெயர் .

     தேவாரம் பாடிய அப்பர் சுவாமிகள்  , திருச்சி மலைக்கோயில்,திருவானைக்கோயில், திருவெறும்பூர், திருப்பராய்த்துறை ஆகிய தலங்களில் தரிசனம் செய்து முடித்து விட்டு நடைப்பயணமாக திருப்பைஞ்ஞீலிக்கு வந்தார். கடும் வெயிலில்  நடந்து வந்த  களைப்பு, பசி மயக்கம் என மிகுந்த களைப்புடன் அப்பர் இருந்த நிலையில் , எதிரில் நடந்து வந்த ஒருவர், ” அய்யா , யார் நீங்கள் ?எங்கு செல்கிறீர்கள்? களைப்புடன் இருக்கிறீர்களே?” என்று அன்பு பொங்க கேட்டார். அப்பர், “ நான் திருப்பைஞ்ஞீலி செல்கிறேன். அங்குள்ள சிவ பெருமானை தரிசிக்க வேண்டியே இந்த பயணம்  .” என பதிலளித்தார். உடனே அப்பரை கேள்வி எழுப்பியவர், ” நான் சிவபெருமானை பூஜிக்கும் அந்தணர். என்னிடம் கட்டு சாதம் உள்ளது. இதை உண்டு , தாகம் தீர்த்து செல்லலாம்.நானே அழைத்து செல்கிறேன்”  என்றார். அப்பர்  களைப்பு தீரப் பசியாறிய பின்னர், அந்த அந்தணர் , அப்பரை, திருப்பைஞ்ஞீலி திருக்கோயிலுக்கு அழைத்து சென்றார். அதுவரை அப்பருடன் பேசிக்கொண்டு வந்த அந்தணர் அங்கு திடீரென மறைந்து விட்டார்.ஆச்சர்யப்பட்டு நின்ற அப்பருக்கு , ரிஷப வாகனத்தில் சிவபெருமான் , பார்வதி தேவியுடன் சேர்ந்து காட்சியளித்தார். தன்னை பசியாற்றி,  இறைவன் கொடுத்த தரிசனத்தால் உள்ளம் மகிழ்ந்த அப்பர் , அங்கு திருக்கோயில் கொண்டிருக்கும்  ஞீலிவனேஸ்வரரை போற்றிப்  பாடினார்.

     

    திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஸ்வரர் திருக்கோயில்.  தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதமான  தலம் திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கு விசாலாட்சி அம்பிகை சமேதராய்  அருள்பாலிக்கிறார் ஞீலிவனேஸ்வரர். பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுயம்பு லிங்கமான  சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. வசிஷ்ட முனிவருக்கு, எம்பெருமான் நடனக் காட்சியை காட்டி அருளிய தலம் இது என்பதால் மேலைச் சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது .

     

    வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்று ஏற்பட்ட போட்டியில்  , அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கைலாயத்தை  தளர்த்த சண்ட மாருதத்தை உண்டு பண்ணினார். கடுமையாக வீசிய சண்ட மாருதத்தால்  கைலாயத்திலிருந்து எட்டு சிகரங்கள்  பெயர்ந்து விழுந்தன.

     இவற்றுள் சுவேதகிரி என்பதே திருப்பைஞ்ஞீலி திருத்தலமாகும் .  ஆகவே இது தென்கைலாயம் எனவும்  வழங்கப்படுகிறது.

     

    தல  புராணம்

     

    பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ததாகவும்  அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்ததாகவும் கூறப்படுகிறது . சப்தகன்னிகளின் வேண்டுகோளின்படி அம்பாள் இங்கே  எழுந்தருளி,  சப்த கன்னிகளிடம்,நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்ட காலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள், என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கி விட்டனர் . பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு .

     

     

    மேலும் அப்பருக்கு  அந்தணர் உருவில்  அமுது பாலித்ததால் சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் ஆண்டவருக்கு  சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் அப்பர் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     

     

     

     குழந்தை வடிவில் எமன்

     

    பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் பாலகனாக அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்ததால்  , உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமி தேவி  சிவபெருமானிடம் முறையிட்டாள். மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்து தருமாறு முறையிட , சிவபெருமான் மனமிரங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்தார் .  தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார் . அதனால் இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.   

     

    எமனுக்கு தனி சந்நிதி உள்ளதால்  ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. ஞீலிவனேஸ்வரர் சன்னதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே உள்ள ஒன்பது குழிகளில்  தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.

       

     

    ஆலயத்தின் விசேஷ பரிகார பூஜை

     

    பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும் என்கிறார்கள் .  

     

    இந்த பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல்5.30 வரையும் நடத்தப்படுகிறது .

     

    கல்லில் உள்ள தேரைக்கும் படியளக்கும் எம்பெருமான் ஈசன் , அப்பருக்கு படியளந்த இந்த  அற்புத திருத்தலத்தைப் பார்க்க நம் மனமும் விழைகிறது அல்லவா ?

     

    திருச்சிற்றம்பலம் …….

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

  • 2017-05-29-13-43-43

    திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க தியாகராஜ சுவாமி கோவிலில் ஆழித் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    இக்கோவிலின் ஆழித் தேரானது ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
    இக் கோவில் விழாக்களில் பங்குனி உத்திர விழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித் தேரோட்டம், கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    30 அடி அகலம், 30 அடி உயம், 220 டன் எடை கொண்ட ஆழித்தேரானது மூங்கில் மற்றும் பனங்கட்டைகள் கொண்டு மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு 300 டன் எடையுடன் உள்ளது.
    திருவாரூர் ஆழித் தேராட்டம் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் காமராஜ், கலெக்டர் நிர்மல் ராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
    தேர் நகர தொடங்கியதும் பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என் பக்தி முழக்கம் எழுப்பினர். தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேரானது கீழ வீதி, மேல வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக மாலை நிலைக்கு வந்தது. ஆழித் தேருக்கு பின்னால் சண்டிகேஸ்வரர், அம்மன் தேர் இழுத்து வரப்பட்டது.

  • 108

    திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு விழா, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
    நந்தி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலின் மகா குடமுழுக்கு விழா கடந்த மாதம் 10-ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது.
    இதைத்தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாக சாலை, 5 கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும், 108 சங்காபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    இதில், திருத்தணி பெரிய தெரு பஜனை குழுவினர் பங்கேற்று, முருகன் பக்தி பாடல்களை பாடினர். இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • 2017-05-29-13-27-24

    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
    தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் காரணமாக வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆங்காங்கே குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதையொட்டி, தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்பேரில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வருண யாகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் வருண யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
    மேலும், கோயில் வளாகத்தில் உள்ள கருடாழ்வார் சந்நிதி, கோயில் குளத்தில் வேத விற்பன்னர்கள் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, வேதம் ஓதி சிறப்பு யாக பூஜை செய்தனர்.

  • 2017-05-29-09-56-47

     

    நாம் நம்முடைய கடமைகளை ஒழுங்காக  நெறி தவறாமல் செய்து வந்தால் நாம் அழைக்காமலேயே  , இறைவனே வந்து நமக்கு அருள் புரிவார் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் பின்வரும்  இந்த  கதை .

    முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும்,பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.பார்த்தேன்” என்றார் பரமன்.பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.

    அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்” . ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள். வணக்கம், முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

     

    முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார். சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி,நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

     

    மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர். அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.

     

    முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார். அப்பனும் அம்மையும் விடவில்லை.“ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

     

    முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?”என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.

     

    அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?”என்று கேட்டார் முனிவர்.

    முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

     

     

    திருச்சிற்றம்பலம்.

     

  • the-power-of-lord-venkateswara-perumal

     

     

    தீராத வினையெல்லாம் தீர்த்து வைத்து ,  கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் திருமலையில் வீற்றிருக்கிறார் வேங்கடேச பெருமாள் .  மொழி பேதங்களைக் கடந்து உலகில் உள்ள பக்தர்களை ,தன்பால் ஈர்த்து கொண்டிருக்கும் காந்தம் அந்த கருணாமூர்த்தி . காத்திருப்பவர்களுக்கு  இந்த தெய்வத்தின் தரிசனம்  சில நொடிகளே  என்றாலும் , நெடுதூரம் கடந்து  , நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள் . திருமலா திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தங்கும் இடம்   மற்றும் அன்னதான சேவை  செய்து வருகிறது .

     

    திருமலையில் பெருமாளும் , திருப்பதியில் தாயாரும்  தன்னை நாடி , இதம் தேடி ஓடி வருபவர்களின்  துயர் துடைக்கிறார்கள்  . திருப்பதி திருமலைக் குறித்த பல ஆச்சரியமூட்டும் தகவல்களை  படிக்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கும் . அந்த அரிய பொக்கிஷங்களை சக்தி ஆன் லைன்  வாசகர்களுக்கு தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் .அத்தகைய  பொக்கிஷங்கள் இதோ :

     

     திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் ’சிலாதோரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடங்கள் . ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

     ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

     எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோ த்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

    ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

     திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

     திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

     ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்தின் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

     ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

     உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

     பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

    .அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் .  51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

    ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

     ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடிக்கும் மேல், இவருயை நகைகளை வைத்துக்கொள்ள  இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

     ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடிக்கும் மேல்.

     

     மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

     ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார்.

     வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழி மாத அர்ச்சனைக்கும்  வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.

     சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

     

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

    ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளிய மரம்.

     எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

     1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

     ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

    .ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் ஸ்ரீவாரி புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

     

    வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண் கவரும் அழகோடு இருப்பார்.

     திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கினார்.

     

     திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.!!!

    ஓம்  நமோ நாராயணாய …..

     

  • everything-has-got-some-reasons

     

    ஊழ்வினை காரணமாக , சகுனியின் கள்ள சூதாட்டத்தால் நாட்டை இழந்த பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த காலம் . பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் கழிக்க வேண்டிய கட்டாயம் . அதன் பின்னர் ஓர் ஆண்டை யாரும் தங்களை அடையாளம் காண முடியாத அஞ்ஞாத வாசத்தில் கழிக்க வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்து விரைவில் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ள வேண்டும் .அவர்களுக்கு இருந்த ஒரே தைரியமும் நம்பிக்கையும் கண்ணன் அவர்களுக்கு கொடுத்து வந்த தைரியம் தான் . ஒருநாள், அர்ஜுனன் கண்ணனிடம் , ‘‘கண்ணா! துர்வாச முனிவரைப் போன் றவர்கள் திடீர் திடீர் என்று பலரை சபித்து விடுகிறார்களே? முனிவர்களோ வேறு யாருமோ சபித்தாலும் பாதிப்பு ஏற்படாமல் காத்துக்கொள்ளமுடியாதா?’’ என்று கேட்டான் . ‘‘ஏன் காத்துக்கொள்ள வேண்டும்? சாபம் என்பதுகூட இறைவனின் அருளால் வரமாக கொள்ளலாம் ” என்றான் கண்ணன்.

    பாஞ்சாலிக்கு கண்ணனின் பதில் புரியவில்லை . ‘‘ கண்ணா ! வரம்தான் இறைவனின் அருள். சாபம் எப்படி வரமாக இருக்க முடியும் ? ’’ என்றாள் . “முடியும். சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பங்களும் நேர்வதுண்டு. சாபமோ வரமோ எதுவானாலும் இறைவன் நன்மைக்காக கொடுத்துள்ளான் என்று ஏற்று வாழ்ந்தால் சாபத்தினால் கூட நன்மை காணமுடியும். சாபம் வரமாக மாறும் சந்தர்ப்பம் அர்ஜுனன் வாழ்விலும் நேரலாம். யார் கண்டது?’’ . கண்ணனின் இந்த விளக்கத்தைக் கேட்டுப் பாண்டவர்கள் யோசனையில் ஆழ்ந்தார்கள். போருக்கு இன்னும் ஓராண்டு பாக்கியிருந்த நிலையில் வனவாச காலத்திலேயே இந்திரனிடம்சென்று வலிமையான அஸ்திரங்களைக் கேட்டுப்பெறுமாறு கண்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினான்.

     இந்திரனுக்கு உரிய மந்திரத்தை ஜபித்து அர்ஜுன னைப் குந்திதேவி, பெற்றதால் தன் மகனான அர்ஜுனன் கேட்டால் இந்திரன் மறுக்காமல் தேவ அஸ்திரங்களைத் தருவான் என்ற நம்பிகையுடன் அர்ஜுனன் விண்ணுலகம் புறப்பட்டான். தேவ சபையில், தன்னைத் தேடி வந்திருக்கும் அர்ஜுனனைப் பார்த்துப் பூரித்தான் தேவேந்திரன்.மன்மதனும் கண்டு பொறாமைப்படும் பேரழகனாக அர்ஜுனனை பார்த்து பாசம் பொங்கியது இந்திரனுக்கு .

    மாவீரனான அர்ஜுனனைப் பார்த்து இந்திர சபையின் பேரழகியான ஒரு நாட்டியக்காரி ஆசை கொண்டாள் . இந்திரனுக்குரியவளான அவளை அடைய ஏராளமானோர் ஏங்கித் தவித்திருக்க அவளோ அர்ஜுனனை அடைய வேண்டும் என்று ஏங்கலானாள் !

    அஸ்திரங்களை வாங்கிக்கொண்டு அவன் விடைபெறுவதற்குள் அதற்குள் அவன் மனதில் பிடிக்க எண்ணம் கொண்டாள் .

    அன்றிரவு காண்போர் கவரக்கூடிய ஆடையை அணிந்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள். தன் அழகை நினைத்து கர்வம் கொண்ட அவள் சப்தமெழுப்பாமல் தன் மாளிகையை விட்டு வெளியேறி , அர்ஜுனன் மாளிகை அடைந்தாள் .

     அர்த்த ராத்திரியில் தன்னை தேடி ,வாயிலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவன் உள்ளம் திகைப்பில் ஆழ்ந்தது. அவளின் ஒப்பனையும் அவள் கண்களில் காணப்பட்ட பேராசையும் அவள் எண்ணத்தைப் புரிய வைத்தன. அந்த தேவலோகப் பெண்ணைப் பார்த்ததும் அவன் மனதில் காதலுக்குப் பதில் மரியாதைதான் எழுந்தது.

    ‘‘தாயே! தாங்கள் யார்? இந்த நள்ளிரவில் என்னைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன?’’ என்று பணிவோடு வினவினான். ‘‘தங்களைவிட வயதில் குறைந்த தோற்றம் காட்டும் என்னைத் தாங்கள் தாய் என அழைப்பது முறையல்ல!’’ என்ற அவள் , மயக்கும் மோகனப் புன்முறுவலோடு ‘‘என்னை ஊர்வசி என்பார்கள். இந்திர சபையில் ரம்பை, திலோத்தமை போல நானும் ஒரு நாட்டியக்காரி என்றாள் . மிகுந்த மதிப்போடு அவளை உள்ளே அழைத்த அவன் ,திடீரென அவள் காலில் விழுந்து வணங்கினான்!

     பதறிய அவள் காலை நகர்த்திக் கொண்டாள். அர்ஜுனன் பணிவோடு பேசலானான் ‘‘அம்மா! தாங்கள் என் தாய்க்கு நிகரல்லவா? தேவேந்திரன் எனக்குத் தந்தை முறையாக வேண்டும் என்றால் தாங்கள் எனக்குத் தாய் தானே?’’ . அர்ஜுனனின் இந்த வார்த்தையைக் கேட்டதும் ஊர்வசியின் விழிகளிலிருந்து அருவி போல் நீர்கொட்டியது. இத்தனை நேரம் மனதில் இருந்த பேராசை இப்போது சீற்றமாக மாறியது . ‘‘உன்னை விட வயதில் குறைந்தவளாகத் தோற்றம் காட்டும் நான் எப்படி உனக்குத் தாய் முறையாக முடியும்? என்று சீறினாள் .

    ‘‘தாய்ப் பாசத்திற்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? மகனை விட வயதில் குறைந்த பெண்ணைத் தந்தை இன்னொரு மணம் புரிந்துகொண்டால் அந்த மகனுக்கு அவனை விட இளையவள் தாயாகத் தானே ஆவாள்? தாங்கள் என் தாயாவதும் அப்படித்தான். இவ்வளவு பேரழகுடைய பெண்மணி எனக்குத் தாயாய் இருப்பது குறித்து என் மனம் பெருமை கொள்கிறது தாயே!’’என்றான் அர்ஜுனன் .

     இருசெவிகளையும் கரங்களால் பொத்திக்கொண்ட ஊர்வசி ‘‘மீண்டும் மீண்டும் என்னைத் தாய் என்று சொல்லி அவமானப்படுத்தாதே! நான் உன் மேல் ஆசைகொண்டு உன்னைத் தேடி வந்த பெண். தாய்-மகன் உறவு என்பது இருதரப்பிலும் ஏற்கப்பட வேண்டும். நீ என்னைத் தாய் என்று சொல்வதால் மட்டும் நான் உன் தாயாகி விட மாட்டேன்.’’ . ஆனால் அர்ஜுனன் அமைதியாகவும் உறுதியாகவும் ,‘‘தாயே! உங்கள் உணர்வுகளுக்கு நான் பொறுப்பாக . என் மனநிலையை நான் தெரிவித்தேன். அதில் என்றும் எந்த மாற்றமும் இல்லை ” என்று மீண்டும் அர்ஜுனன் ஊர்வசியின் காலில் விழுந்து வணங்கினான். எரிச்சலடைந்த ஊர்வசியின் விழிகள் இப்போது சீற்றத்தால் சிவந்தன.

     ‘‘ வெட்கத்தை விட்டு உன்னை தேடிவந்த என்னை அவமானப்படுத்திவிட்டாய். ஒரு பெண்ணின் ஆசையை உணராத நீ, பெண்ணாகவும் இல்லாமல் ஆணாகவும் இல்லாமல் இரண்டு தன்மைக்கும் இடைப்பட்ட நிலையை அடைவாய்!’’ என்று சபித்தாள் . தன் துர்ப்பாக்கியமான நிலையை எண்ணி அவன் மனம் வருத்தத்தில் ஆழ்ந்தது. அவன் ஊர்வசியிடம் வேண்டினான், ‘‘தாயே! சற்றே சிந்தித்துப் பாருங்கள். என் நிலை தங்களுக்குப் புரியும். தங்கள் இச்சைக்கு நான் உடன்பட்டால் தாய்க்கு நிகரானவளை அடைந்தேன் என்று சான்றோர் என்னைப் பழிக்கமாட்டார்களா? தங்களுக்கும்தான் அது பெருமையா? அறவழியில் செல்ல நினைத்தவனைச் சபிப்பது எவ்வகையில் தர்மமாகும்? என் நிலை உணர்ந்து எனக்குத் தாங்கள் சாப விமோசனம் அருள வேண்டும்!’’ என்று வேண்டினான் .

    ஊர்வசியின் காம உணர்ச்சி அடங்கியதும், அர்ஜுனன் தரப்பில் இருந்த நியாயத்தை அவள் மனம் உணரத் தொடங்கியது. அவள் ஒரு பெரு மூச்சுடன் சொன்னாள்: ‘‘ஆம். நீ சொல்வது சரிதான். ஆனால் சபித்தது சபித்தது தான். அதைச் சபித்தவரே கூட மாற்ற இயலாது. என்றாலும் சாபத்தின் வேகத்தைக் குறைக்க இயலும். நீ உன் வாழ்வில் ஓராண்டு மட்டும் அலித்தன்மை பெறக் கடவாய். அது நீ விரும்புகிற எந்த ஆண்டாக வேண்டுமானாலும் நீயே தேர்வுசெய்து கொள்ளலாம்!’’ என்று விமோசனம் சொன்னாள் ஊர்வசி. தேவேந்திரனிடமிருந்து அஸ்திரங்களைப் பெற்ற அர்ஜுனன் மீண்டும் கானகம் திரும்பினான்.

    அர்ஜுனனின் முகத்தில் இருந்த சோகத்திற்கு என்ன காரணம் என வினவினான் கண்ணன். அர்ஜுனன் ஊர்வசியின் சாபத்தைப் பற்றிச் சொன்னான்.கண்ணன் மகிழ்ச்சியு டன் நகைத்ததைக் கண்டு அர்ஜுனனுக்கு வியப்புத் தோன்றியது. ‘‘என்ன கண்ணா உன் முகத்தில் இத்தனை மகிழ்ச்சி? நான் பெற்ற சாபம் உனக்கு ஆனந்தம் தருகிறதா?’’ ‘‘ஆமாம்!’’ உறுதிபடக்கூறிய கண்ணன் விளக்கலானான்.‘‘அர்ஜுனா! பதிமூன்று வருட வனவாச காலத்தில் கடைசி ஓராண்டை நீங்கள் ஆறுபேரும் அஞ்ஞாத வாசமாகக் கழிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. யாரும் உங்களை அடையாள ம் புரிந்துகொள்ள முடியாமல் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெரும் வீரனான நீ மிடுக்கான தோற்றத்தை எவ்விதம் ஒளித்து வாழ்வாய்? ஊர்வசியின் சாபத்தால் நீ அலித்தன்மை அடையும் ஓராண்டாக அந்தக் கடைசி ஆண்டைத் தேர்வு செய்துகொள்.

     உன் தோற்றம், இயல்பு அனைத்தும் மாறும். உன்னை யாராலும் கண்டு பிடிக்க இயலாது! ஊர்வசி கொடுத்தது சாபமல்ல, வரம். நீ அறநெறி தவறாமல் அவளைத் தாயாக ஏற்றாய். அந்த அறநெறி அவள் மனதில்  ஒரு சாபத்தைத் தோற்றுவித்து அதையே உனக்கு வரமாக மாற்றிவிட்டது! அறநெறியில் நடந்தால் இறுதியில் நன்மைதான் உண்டாகும்! சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பம் உன் வாழ்விலும் நேரலாம் என்று சொன்னேனே? நினைவிருக்கிறதா?’’ இதைக்கேட்டு பாண்டவர் ஐவர் முகத்திலும் பாஞ்சாலி முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

    வாழ்க்கையில் இறையும் இயற்கையும் எல்லா மனிதர்களுக்கு இப்படி சாபங்களையும், வரங்களையும் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றது. சாபங்களை வரங்களாக மாற்றிக் கொள்வதும் , வரங்களை சாபங்களாக வீணடித்துக் கொள்வதும் நம் வாழ்க்கை முறையில் தான் உள்ளது. சாபங்களை இறைவன் துணையோடு வரங்களாக மாற்றி வளம் பெறுவோம்…..

     

     

  • 2017-05-25-08-31-58

     

    பூர்வ ஜென்மப் பாவ புண்ணியங்களில் நம் எல்லோருக்கும் நிறைய நம்பிக்கை இருக்கிறது  .  நல்லது நடந்தால் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்றும் , விரும்பத்தகாதது நடத்தால் பாவத்தின் பலன் என்றும் நம்மை நாம் தேற்றிக் கொள்கிறோம் . சாதாரண லௌகீக வாழ்க்கையிலேயே  பாவ புண்ணிய பலன்களின் ஆதிக்கம் அதிகம் இருக்க முடியும் என்கிறபோது சுவர்க்க லோக  வாழ்க்கைக்கு சொல்லவா வேண்டும் .மண்ணில் பிறந்த எல்லோருக்கும் பாபாவைச் சரணடையும் பாக்கியம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை.

     

     சத்குருவின் பெயர் நம் காதுகளில் விழவும் , அவரின் திரு உருவத்தை  நம் கண்கள் தரிசிக்கவும் , அவரின்  அமுதமொழிகளை கேட்கவும் நாம் கடுகளவாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  பாபாவின் பெருங்கருணை நம் மீது விழுந்தால் மட்டும்  இந்தப் பிறவியில் இதெல்லாம் நமக்கு சாத்தியம். அவரை நினைப்பதற்கே அவரின் கருணை வேண்டும் என்னும் போது அந்த சீரடி வாசன் வாழ்ந்த புண்ணிய தலமான சீரடி மண்ணை மிதிக்க  அவரின் அனுமதி வேண்டாமா ? அந்த மகானின் அருளும் , அனுமதியும் இன்றி அங்கு யாரால் தான் செல்லமுடியும். அது மட்டும் இல்லாமல் அங்கே எத்தனை நாள் நாம் தங்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பமோ  ,அத்தனை நாள் மட்டுமே தங்க முடியும் என்பதும் இன்றளவும் சத்தியம். 

     

     

    காகா மகாஜனி என்ற  பாபாவின் தீவிர அன்பர் , கண்ணனின் அவதார தினத்தை ஒட்டி சீரடியில்  கோலாகலமாக கொண்டாட்டப் படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்க  மும்பையில் இருந்து சீரடி செல்ல விரும்பினார் .  ஒருவாரம் அங்கே  தங்கி இருந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அனுபவிக்க  முடிவுசெய்த அவர், தம் முதலாளியிடம் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு , அலுவலகத்தில், இருந்தஇன்னொருவரிடம் தாம் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். அவர்  விருப்பப்படி சீரடி செல்லலாம், ஆனால் பாபா எத்தனை நாள் விரும்புகிறாரோ அத்தனை நாள் தானே அங்கு தங்க முடியும்? அவராக சீரடியில் ஒருவாரம் தங்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்யலாம்?

     

    பாபாவை அவர் தரிசித்த மறுகணமே, பாபா அவரிடம், அதுசரி. நீ எப்போது மும்பை திரும்பப் போகிறாய்? என்று விசாரித்தார்! பாபாவின் இந்த கேள்வியால் சற்று ஏமாற்றம் அடைந்த காகா , மறுத்து எதுவும் பேசாமல் பணிவோடு, தாம் ஒருவாரம் சீரடியில் தங்கும் உத்தேசத்தில் வந்ததாகவும், ஆனால் பாபா எத்தனை நாள் தங்க உத்தரவு கொடுக்கிறாரோ அத்தனை நாள் மட்டுமே தங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். காகாவின்  இந்த பணிவான பதிலால் பாபாவின் மனம் நிறைவடைந்தது. திரிகாலமும் உணர்ந்த பாபா  , “நீ ஒரே ஒருநாள் இங்கு தங்கினால் போதும். நாளையே புறப்பட்டு பம்பாய் போ. நாளையே மறக்காமல் அலுவலகத்திற்கும் போய்விடு! ” என்று உத்தரவிட்டார் . ஏன் இந்த உத்தரவு என்றறியாமல் வியப்பும் வருத்தமும் அடைந்தார் காகா மகாஜனி. மனிதனல்லவா …..அந்த தெய்வத்தின் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை . ஆனாலும்  மறுபேச்சுப் பேசாமல் அவரது உத்தரவுக்குக் கீழ்படிந்தார். மறுநாளே மும்பை சென்றார். பாபாவின் கட்டளைப்படி அன்றே அலுவலகத்திற்கும் சென்றார்.

     

    அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். காகாவைப் பார்த்ததும் , அவருக்காகவே காத்திருந்தவர் போல  ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். “என் கடிதம் கிடைத்ததா? ”என்று கேட்டார். “எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே! ”என்றார் காகா. “உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்! ”என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி. அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டதால் ,  மானேஜர் செய்து வந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை. மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா. அவசர காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வும் தரப்பட்டது. இப்போது தான் அந்த நடமாடும் தெய்வத்தின்  எண்ணம் புரிந்தது காகா மகாஜனிக்கு . பாபாவின் அருளால் தான்  இந்த பதவி உயர்வு கிட்டியது  என நெகிழ்ந்தார் .

     

    பதவி உயர்வு கிடைத்த பின், காகா சீரடி வந்து, பாபாவின் தாமரைப் பாதங்களைக் தனது ஆனந்த கண்ணீரால் கழுவினார். பாபா சிரித்துக் கொண்டே அவரது தெய்வீக கரத்தால் கன்னங்களைத் துடைத்து விட்டார். அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? என்று பரிவோடு கேட்காமல் கேட்தது போல் இருந்தது  பாபாவின் அருள்பொங்கும் விழிகள். நாளெல்லாம் பொழுதெல்லாம் நம்மை வழி நடத்தும் பாபாவின் கருணையை போற்றுவோம்.

     

    ஓம் சாய் ராம் . சாய் சரிதம் தொடரும்…..

     

  • 2017-05-24-15-05-38

    விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

  • new-kodi-maram-at-sabarimala

    சபரிமலையில் நிறுவப்பட உள்ள புதிய கொடிமரத்தை 2,000 பேர் பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு 22-ம் தேதி தோளில் சுமந்து சென்றனர்.

    சபரிமலையில் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த கொடிமரத் தின் கீ்ழ்பகுதியில் சேதம் அடைந் துள்ளது. எனவே, அதற்குப் பதிலாக ரூ.3.50 கோடியில் புதிதாக தேக்கு மரத்தில் கொடிமரம் நிறுவுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதற்காக கோந்தி வயக்கரை வனப்பகுதியில் இருந்து 45 அடி நீளம், 135 செ.மீ. சுற்றளவு கொண்ட 64 வயதுடைய தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மரம் பம்பைக்கு கடந்த ஆண்டு செப் டம்பரில் கொண்டுவரப்பட்டது.
    இதனிடையே, புதிய கொடி மரத்தை நிறுவுவதற்காக பழைய கொடிமரம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பீடம் அமைக்கப்பட் டுள்ளது. ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்நிலையில், பம்பையில் எண்ணெய்க் காப்பில் உள்ள கொடிமரத்தை சந்நிதானம் வரை தோளில் சுமந்து வரும் பொறுப்பு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    ஐயப்ப சேவா சங்கத் தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் சேர்ந்து மே 22-ம் தேதி புதிய கொடிமரத்தை பம்பையில் இருந்து சந்நிதானம் வரை தோளில் சுமந்து செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மே 22-ம் தேதி புதிய கொடிமரம் பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம் வழியாக சந்நிதானத்துக்குக் கொண்டுசெல் லப்படும். இதற்காக ஐயப்ப சேவா சங்கத்தினர் மே 21-ம் தேதி பம்பை வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    22-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் சந்நிதானத்துக்கு கொடிமரத்தைக் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடிமரம் முழுவதும் தங்கத் தகடு வேயப்பட்டு பீடத்தில் நிறுத்தப்படும். கொடிமரத்தைச் சுமக்க வரும் பக்தர்கள் 20 நாட்கள் விரதமிருந்து வர வேண்டும். கொடிமரத்தை சுமக்க வரும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த பக்தர் களின் வசதிக்காக கோட்டயம், செங் கானூர், பத்தனம்திட்டா பகுதியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கவும், போதுமான கழிப்பறை வசதிகளைச் செய்யவும், மருத்துவ முகாம்கள் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.