Author: cmsadmin

  • “என் அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை?” – சீரடி சாயி

     

    பூர்வ ஜென்மப் பாவ புண்ணியங்களில் நம் எல்லோருக்கும் நிறைய நம்பிக்கை இருக்கிறது  .  நல்லது நடந்தால் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்றும் , விரும்பத்தகாதது நடத்தால் பாவத்தின் பலன் என்றும் நம்மை நாம் தேற்றிக் கொள்கிறோம் . சாதாரண லௌகீக வாழ்க்கையிலேயே  பாவ புண்ணிய பலன்களின் ஆதிக்கம் அதிகம் இருக்க முடியும் என்கிறபோது சுவர்க்க லோக  வாழ்க்கைக்கு சொல்லவா வேண்டும் .மண்ணில் பிறந்த எல்லோருக்கும் பாபாவைச் சரணடையும் பாக்கியம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை.

     

     சத்குருவின் பெயர் நம் காதுகளில் விழவும் , அவரின் திரு உருவத்தை  நம் கண்கள் தரிசிக்கவும் , அவரின்  அமுதமொழிகளை கேட்கவும் நாம் கடுகளவாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  பாபாவின் பெருங்கருணை நம் மீது விழுந்தால் மட்டும்  இந்தப் பிறவியில் இதெல்லாம் நமக்கு சாத்தியம். அவரை நினைப்பதற்கே அவரின் கருணை வேண்டும் என்னும் போது அந்த சீரடி வாசன் வாழ்ந்த புண்ணிய தலமான சீரடி மண்ணை மிதிக்க  அவரின் அனுமதி வேண்டாமா ? அந்த மகானின் அருளும் , அனுமதியும் இன்றி அங்கு யாரால் தான் செல்லமுடியும். அது மட்டும் இல்லாமல் அங்கே எத்தனை நாள் நாம் தங்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பமோ  ,அத்தனை நாள் மட்டுமே தங்க முடியும் என்பதும் இன்றளவும் சத்தியம். 

     

     

    காகா மகாஜனி என்ற  பாபாவின் தீவிர அன்பர் , கண்ணனின் அவதார தினத்தை ஒட்டி சீரடியில்  கோலாகலமாக கொண்டாட்டப் படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்க  மும்பையில் இருந்து சீரடி செல்ல விரும்பினார் .  ஒருவாரம் அங்கே  தங்கி இருந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அனுபவிக்க  முடிவுசெய்த அவர், தம் முதலாளியிடம் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு , அலுவலகத்தில், இருந்தஇன்னொருவரிடம் தாம் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். அவர்  விருப்பப்படி சீரடி செல்லலாம், ஆனால் பாபா எத்தனை நாள் விரும்புகிறாரோ அத்தனை நாள் தானே அங்கு தங்க முடியும்? அவராக சீரடியில் ஒருவாரம் தங்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்யலாம்?

     

    பாபாவை அவர் தரிசித்த மறுகணமே, பாபா அவரிடம், அதுசரி. நீ எப்போது மும்பை திரும்பப் போகிறாய்? என்று விசாரித்தார்! பாபாவின் இந்த கேள்வியால் சற்று ஏமாற்றம் அடைந்த காகா , மறுத்து எதுவும் பேசாமல் பணிவோடு, தாம் ஒருவாரம் சீரடியில் தங்கும் உத்தேசத்தில் வந்ததாகவும், ஆனால் பாபா எத்தனை நாள் தங்க உத்தரவு கொடுக்கிறாரோ அத்தனை நாள் மட்டுமே தங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். காகாவின்  இந்த பணிவான பதிலால் பாபாவின் மனம் நிறைவடைந்தது. திரிகாலமும் உணர்ந்த பாபா  , “நீ ஒரே ஒருநாள் இங்கு தங்கினால் போதும். நாளையே புறப்பட்டு பம்பாய் போ. நாளையே மறக்காமல் அலுவலகத்திற்கும் போய்விடு! ” என்று உத்தரவிட்டார் . ஏன் இந்த உத்தரவு என்றறியாமல் வியப்பும் வருத்தமும் அடைந்தார் காகா மகாஜனி. மனிதனல்லவா …..அந்த தெய்வத்தின் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை . ஆனாலும்  மறுபேச்சுப் பேசாமல் அவரது உத்தரவுக்குக் கீழ்படிந்தார். மறுநாளே மும்பை சென்றார். பாபாவின் கட்டளைப்படி அன்றே அலுவலகத்திற்கும் சென்றார்.

     

    அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். காகாவைப் பார்த்ததும் , அவருக்காகவே காத்திருந்தவர் போல  ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். “என் கடிதம் கிடைத்ததா? ”என்று கேட்டார். “எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே! ”என்றார் காகா. “உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்! ”என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி. அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டதால் ,  மானேஜர் செய்து வந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை. மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா. அவசர காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வும் தரப்பட்டது. இப்போது தான் அந்த நடமாடும் தெய்வத்தின்  எண்ணம் புரிந்தது காகா மகாஜனிக்கு . பாபாவின் அருளால் தான்  இந்த பதவி உயர்வு கிட்டியது  என நெகிழ்ந்தார் .

     

    பதவி உயர்வு கிடைத்த பின், காகா சீரடி வந்து, பாபாவின் தாமரைப் பாதங்களைக் தனது ஆனந்த கண்ணீரால் கழுவினார். பாபா சிரித்துக் கொண்டே அவரது தெய்வீக கரத்தால் கன்னங்களைத் துடைத்து விட்டார். அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? என்று பரிவோடு கேட்காமல் கேட்தது போல் இருந்தது  பாபாவின் அருள்பொங்கும் விழிகள். நாளெல்லாம் பொழுதெல்லாம் நம்மை வழி நடத்தும் பாபாவின் கருணையை போற்றுவோம்.

     

    ஓம் சாய் ராம் . சாய் சரிதம் தொடரும்…..

     

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

    விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

  • சபரிமலையில் புதிய கொடிமரம்….

    சபரிமலையில் நிறுவப்பட உள்ள புதிய கொடிமரத்தை 2,000 பேர் பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு 22-ம் தேதி தோளில் சுமந்து சென்றனர்.

    சபரிமலையில் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த கொடிமரத் தின் கீ்ழ்பகுதியில் சேதம் அடைந் துள்ளது. எனவே, அதற்குப் பதிலாக ரூ.3.50 கோடியில் புதிதாக தேக்கு மரத்தில் கொடிமரம் நிறுவுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதற்காக கோந்தி வயக்கரை வனப்பகுதியில் இருந்து 45 அடி நீளம், 135 செ.மீ. சுற்றளவு கொண்ட 64 வயதுடைய தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மரம் பம்பைக்கு கடந்த ஆண்டு செப் டம்பரில் கொண்டுவரப்பட்டது.
    இதனிடையே, புதிய கொடி மரத்தை நிறுவுவதற்காக பழைய கொடிமரம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பீடம் அமைக்கப்பட் டுள்ளது. ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்நிலையில், பம்பையில் எண்ணெய்க் காப்பில் உள்ள கொடிமரத்தை சந்நிதானம் வரை தோளில் சுமந்து வரும் பொறுப்பு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    ஐயப்ப சேவா சங்கத் தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் சேர்ந்து மே 22-ம் தேதி புதிய கொடிமரத்தை பம்பையில் இருந்து சந்நிதானம் வரை தோளில் சுமந்து செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மே 22-ம் தேதி புதிய கொடிமரம் பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம் வழியாக சந்நிதானத்துக்குக் கொண்டுசெல் லப்படும். இதற்காக ஐயப்ப சேவா சங்கத்தினர் மே 21-ம் தேதி பம்பை வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    22-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் சந்நிதானத்துக்கு கொடிமரத்தைக் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடிமரம் முழுவதும் தங்கத் தகடு வேயப்பட்டு பீடத்தில் நிறுத்தப்படும். கொடிமரத்தைச் சுமக்க வரும் பக்தர்கள் 20 நாட்கள் விரதமிருந்து வர வேண்டும். கொடிமரத்தை சுமக்க வரும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த பக்தர் களின் வசதிக்காக கோட்டயம், செங் கானூர், பத்தனம்திட்டா பகுதியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கவும், போதுமான கழிப்பறை வசதிகளைச் செய்யவும், மருத்துவ முகாம்கள் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா…..

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருகனின் 3-ம் படை வீடாக விளங்கும் பழனியில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த வைகாசி விசாக திருவிழா ‘வசந்த உற்சவம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. முருகன், பரமசிவனின் நெற்றி கண்ணில் இருந்து ஒளி பிளம்பாய் தோன்றிய நாள் வைகாசி விசாக திருநாளாகும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 31-ந் தேதி இரவு பெரிய நாயகி அம்மன் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை, புனித மண்ணெடுத்தல், அஸ்தர தேவர் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    1-ந் தேதியன்று காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜைகளும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் சுற்றி வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
    10 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம், வெள்ளியானை, வெள்ளி காமதேனு, தங்க குதிரை, பெரிய தங்க மயில் வாகனம் போன்றவற்றில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் திருஉலா காட்சி நடைபெறுகிற்து. 6-ந் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    7-ந் தேதி தோளுக்கினியான் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி காலை 10.45 மணிக்கு மேல் 11,45 மணிக்குள் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  • காத்து நிற்கும் காஞ்சி கருணை

     கண் கண்ட தெய்வம் காஞ்சி கருணை மகாப் பெரியவா ஒவ்வொரு நொடிப் பொழுதும் தனது அளவற்ற கருணையினால் தன் அடியார்களை கண்ணின் இமைப் போல காத்து ரட்சித்து வருகிறார். நினைத்த நொடியில் , பெரியவாள் கருணை கிடைக்கப் பெறுவதை உணரும் பக்தர்கள் ஏராளம். மகாப் பெரியவாள் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய நல்ல தாக்கங்களை பலரும் பதிவு செய்துள்ளனர்.

     சமீபகாலமாக இணைய உலகிலும் மகாப் பெரியவாளின்  கருணை சம்பவங்கள் அதிகம் எழுதப்பட்டும் , பேசப்பட்டும் வருகின்றது. அதில் சில  அற்புதங்கள் நமது சக்தி ஆன்லை வாசகர்களுக்காக பெரியவாளை வணங்கி சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த சம்பவங்களை எழுத்து வடிவில் பதிவு செய்த பல பெரியவா ஆடியார்களின் பக்தி உணர்வை சக்தி ஆன்லைன் சிரம் தாழ்த்தி வணங்குகிறது.

     மகாப் பெரியவாளைப் பார்க்க வரும் கூட்டம் பெரும்பாலும் நிரந்தரமானது. யார் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் பெரியவா நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

     அன்று கூட்டத்தில் ஒரு மூதாட்டி, பகவானின் அருட்கடாட்சத்துக்காக நின்று கொண்டிருந்தார் . சேவை முடிந்ததும் ஒரு தட்டில் சில பழங்களை வைத்து, அம்மையாரை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்.

     மிகவும் திருப்தியாகப் பழங்களை எடுத்துக்கொண்ட அந்த அம்மையார் பழத்தோடு சேர்ந்து வந்த மெல்லிய மரிக்கொழுந்து காம்பு ஒன்றை எடுத்துக் கீழே போட்டு விட்டு பழங்களை மட்டும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்!

     “அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்.எடுத்துக்கோ!” என்றார் மகான் சிரித்தவாறே. பெரியவா சொல்லிவிட்டாரே என்பதற்காக,அந்த அம்மையாரும் மரிக்கொழுந்துக் காம்பை எடுத்துத் தனது பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

     “ஏன் இதை பத்திரமாக எடுத்துக்கொண்டு போகச்சொன்னார்?” என்றெல்லாம் அந்த அம்மாள் அப்போது யோசிக்கவில்லை. மகானிடம் கேட்கவும் இல்லை.

     தன் ஊருக்குப் போக அம்மையார் பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டார். பஸ் புறப்பட்டதும் அப்படியொரு தூக்கம். அருகில் அமர்ந்து இருந்த பெண், தூங்கும் அம்மையாரின் பையிலிருந்த பணப்பையைத் திருடிக் கொண்டாள்.

     கண்டக்டர் வந்தார்.டிக்கெட் எடுக்க வேண்டுமல்லவா? . குரல் கேட்டு விழித்தெழுந்த அம்மையார்,பையில் பணப்பையைத் தேடினார். அது அங்கே இல்லை!

     ஆனால் அந்த பர்ஸ் பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் இருந்தது. “அது என் பர்ஸ்!” என்று இந்த அம்மையார் பதற்றத்தில்கதற…”இல்லை, இல்லை…இது என்னுடையதுதான்!” என்று பக்கத்திலிருந்த பெண் சொல்ல, அங்கே களேபரம் ஆகிவிட்டது!

     பர்ஸில் இவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கச்சிதமாகச் சொல்கிறாள் எடுத்தவள். எண்ணியும் வைத்திருக்கிறாள் என்பது பர்ஸின் நிஜ சொந்தக்காரிக்கு மட்டுமே தெரியும்!.

     கண்டக்டரோ, யாரை நம்புவது என்று தெரியாமல் தத்தளிக்கிறார். அப்போதுதான் அந்த அம்மையாருக்குப் பெரியவா ,மரிக்கொழுந்து காம்பைப் பத்திரமா எடுத்துக்கொண்டு போகச் சொன்னது ‘பளிச்’சென்று ஞாபகத்துக்கு வந்தது.

     “கண்டக்டர் சார்…அந்த பர்ஸில் வேறொரு வஸ்து இருக்கிறது.அது என்னவென்று இந்தப் பெண்ணைச் சொல்லச் சொல்லுங்கள்.

     திருடியவளிடமிருந்து இதற்கு எப்படிப் பதில் வரும்?. “நான் சொல்கிறேன்….மரிக்கொழுந்தின்  சிறிய காம்பு ஒன்று உள்ளே இருக்கிறது. வாசனை உள்ளது . வேண்டுமானால் அந்த பர்ஸைத் திறந்து பாருங்கள்..தெரியும்!” என்றார் அம்மையார்.

     கண்டக்டர் புதியவளிடமிருந்து பர்ஸை வாங்கிப் பார்க்க..உள்ளே,அந்த மரிக்கொழுந்து காம்பு பத்திரமா இருந்திருக்கிறது.

     பிறகென்ன -திருடியவள் தன் தவறை ஒப்புக்கொண்டாள். அம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க அவள் மன்னித்து விடப்பட்டாள்.

     காஞ்சி பெருங்கருணா மூர்த்தி , தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்தவர். இடர் தீர்க்கும் உபாயத்தை குறிப்பால் உணர்த்தி கவலை தீர்த்தவர் காஞ்சி மகாப் பெரியவா.. அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்

     மனம் கலங்காது மகாப்பெரியவாவை மனதில் நினைத்தாலே போது பெருந்துயரமும்  சுவடு தெரியாமல் காணமால் போய்விடும் . இது காஞ்சி தெய்வத்தின் கருணை. பலரின் அனுபவ சத்தியம் இது.

     

    ஜயஜய சங்கர ஹரஹர சங்கர…

    பெரியவா போற்றி…..

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (ஆகாச தலம் – ஆகாயம்)

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     ஆகாச தலம் – ஆகாயம்

     

    பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலமாவது ‘தரிசிக்க முக்தி தரும்’ என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள நடராசர் சிவகாமியம்மை திருக்கோயில் ஆகும் .  பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் இத் தலம் சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலமாகும் . நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலமாதலால் இறைவனின்  திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்).

    நடராஜர் கோலத்தில் உலகில் ஐந்தொழில் செய்யும் திருக்கோலத்தில் சிவபெருமான் இருக்கிறார். மேலும் மாணிக்கவாசரின் பாடலை எழுதி சிற்றம்பலத்தான் என இறைவனே கையெழுத்து இட்டு அருள் செய்த  அற்புத தலம்.

    இத்திருத்தலம் சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகப்  போற்றப்படும் திருசித்திரக்கூடம் என்ற பெயருடைய கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருப்பது சிறப்பு .  நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம்.

    சிதம்பரத்தில் மிக முக்கியமான மற்றொன்று சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலின் திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டபடும் . இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லாமல் தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.

     

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (வாயு தலம் – காற்று)

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     

    வாயு தலம் – காற்று

     

    ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை திருக்கோயில் வாயுதலமாகும். தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிவேசிப்பதே முக்தி எனப்படுகிறது. சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம்.

     

    சிலந்தி ஒன்று, சிவனை வழிபட நினைத்தது. தன்னிடம் சுரக்கும் நூல் போன்ற திரவத்தால், மதில், கோபுரம், மண்டபம், மாளிகை, கருவறை, கலசம் என, கோவில் அமைத்தது. யாராவது அதை அறுத்து விட்டால், விடாமல் புதுப்பித்தது.

    சிலந்தியின் அன்பை சோதிக்க விரும்பிய சிவன், தன் சன்னிதியில் இருந்த விளக்கை, சுடர்விட்டு எரியும்படி செய்தார். ஒரு நொடியில் சிலந்தி அமைத்த கோவில் எரிந்தது. மனம் வருந்திய சிலந்தி, உயிர்விடத் துணிந்து, விளக்கில் விழ முயன்ற போது, தடுத்தார் சிவன். சிலந்திக்கு காட்சி தந்து, “வேண்டும் வரம் கேள்!’ என்றார்.

    உலகப்பொருட்கள் மீது ஆசையில்லாத சிலந்தி, “பெருமானே… உன் திருவடியின் கீழ் அமரும் பாக்கியத்தை தர வேண்டும்…’ என்றது. சிவனும் அவ்வாறே அருள்புரிந்தார். காளன் என்னும் பாம்பு, அரிய வகை ரத்தினக்கற்களை சிவனின் திருமுடியில் வைத்து பூஜித்து வந்தது. அத்தி எனும் யானை, அந்த ரத்தினங்களை தள்ளிவிட்டு, ஆற்றிலிருந்து நீர் எடுத்துவந்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளை வைத்துச் சென்றது. மறுநாள் வந்த பாம்பு, “ரத்தினக் கற்களை சிதறடித்து, ஏதோ இலையை குப்பை போல் போட்டிருக்கின்றனரே…’ என்று புலம்பியவாறே, அதைச் சுத்தப்படுத்தி, மீண்டும் ரத்தினக் கற்களை இறைவன் திருமுடியில் சூட்டி, பூஜித்து சென்றது.

    யானை வழக்கம் போல் வந்து மணிகளைத் தட்டிவிட்டு, வில்வத்தைச் சூட்டிச் சென்றது. பல நாட்கள் இதே நிலை தொடர்ந்தது. ஒருநாள், யார் இப்படி செய்கின்றனர் என அறிய, சன்னிதிக்குள் மறைந்திருந்தது பாம்பு. அப்போது யானை, அங்கு வந்து மணிகளைத் தட்டி விடவே, ஒளிந்திருந்த பாம்பு சீறியெழுந்து, யானையின் துதிக்கையில் உள்ள துளைக்குள் புகுந்து, மத்தகத்தை அடைந்து குடையத் தொடங்கியது.

    யானை அதைத் தாங்க முடியாமல், நிலத்தில் தும்பிக்கையை அடித்தும், ரத்தம் வரும் அளவு மத்தகத்தை தரையில் தேய்த்தும் பார்த்தது; குடைச்சல் தீரவில்லை. இதனால், “உடலில் புகுந்த பாம்பைக் கொன்று, நாமும் இறப்போம்…’ என்று கருதி, கோபத்துடன் அங்குள்ள மலைமேல் மோதியது.

    இந்த முழக்கத்தைக் கேட்ட தேவர்கள் நடுங்கினர். குகைகளில் தங்கியிருந்த முனிவர்கள் பயந்தனர். யானை தலை பிளந்து மயங்கி விழுந்தது. பாம்பு வெளியே வர முடியாமல் தவித்தது. அப்போது சிவபெருமான் உமையம்மையோடு காளை வாகனத்தில் தோன்றி, யானையை எழுப்பினார். உள்ளிருந்த பாம்பு வெளியே வந்தது. இரண்டிற்கும் தரிசனம் தந்த சிவன், அவற்றிற்கு முக்தியளித்தார்.

    “சீ’ என்றால் சிலந்தி. காளம் என்றால் பாம்பு. ஹஸ்தி (அத்தி) என்றால் யானை. சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததால் இத்தலத்தை, “சீகாளத்தி’ என்றும், காளஹஸ்தி என்றும் அழைத்தனர்.

    தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடைய இத்தலத்தில் இறைவன் வாயுலிங்கமாக காட்சி தருகிறார் . சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ளது இத்திருத் தலம். வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் இவ்வாறு  உத்தரவாகினி  என அழைக்கப்படுகிறது . இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாக கருதப்படுகிறது .

    மூலவர், சுயம்பு – தீண்டாத் திருமேனி. இங்குள்ள ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது.

     

    சுவாமி மீது தங்கக் கவசம் சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ள இக்கவசத்தில் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன.  மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு , வாயுத்தலம் என்பதற்கு சாட்சியாக  இருக்கிறது .

    சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

    இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (தேயு தலம் – நெருப்பு )

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     

    தேயு தலம் நெருப்பு

     

    அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் சிறப்பாக பாடியுள்ள சிறந்த பாடல் பெற்ற தலமாக தமிழ்நாட்டின்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மை திருக்கோயில் விளங்குகிறது . இது தேயு தலமாகும். ‘தேயு’ என்றால் நெருப்பு என்று பொருள்படும் . ஒரு முறை  பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவன் என்று நிகழந்த போரில்  , அடிமுடி காணமுடியாத நெருப்பு பிரளயமாக உயர்ந்து , தானே பெரியவன் என்று சிவபெருமான் உணர்த்தினார். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன் நெருப்பாக தோன்றி அருள் செய்த தலம் இது.

     

    கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில்  மலையின் உச்சியில் ஏற்றப்படும் மஹா தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணகில் பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம் .  திருவண்ணாமலையில்  ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது புண்ணியமாக கருதப்படுகிறது. லட்சக் கணக்கான சிவ பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.

    அருணாச்சலேஸ்வரர் கோயிலில்  அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், எனப்படும்  எட்டு வித லிங்கங்கள் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது . 

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (அப்பு தலம் – நீர்)

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     

    அப்பு தலம் –  நீர்

     

    தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருவானைக்காவல் என்று அழைக்கப்பெறும் ஐம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ,அப்பு தலமாகும். ‘அப்பு’ என்றால் நீர் என்று பொருள்படும் .  புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

    சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும் சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.

    சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

    உமையம்மை ஈசனை வணங்க நீரைக் கொண்டு லிங்கம் செய்ததால் , இந்த லிங்கம் அப்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

    மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால்  எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடியும் கோடையில், காவேரி வற்றிப் போகும்  நேரங்களிலும், கூட இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

     

    திருவானைக்காவில் ஆட்சி செய்யும் அன்னையின் திருநாமம்  அகிலாண்டேஸ்வரி. மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக காட்சியளித்த  அம்பாளை சாந்தம் செய்ய ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமாக  காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

     

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள்

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     பிருத்வி தலம் நிலம்

     

    பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்று புகழப்படும் சிறப்பினை உடையது இத்திருத்தலம் .  மிகவும் பிரம்மாண்டமாக  33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள  இக்கோயில்,  9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் , 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் கொண்டு புகழ்பெற்று விளங்குகிறது  . ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

     

    நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம் மற்றும்  நட்பின் முக்கியத்தை உணர்த்த , சுந்தரருக்காக , சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம் என ஏகப்பட்ட சிறப்புகளுக்கு சொந்தமான இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. வான்மீகிநாதர் ,மற்றும் தியாகராஜர் என சிவபெருமானுக்கு இரண்டு திருநாமங்கள். மிகவும் பழமையான வான்மீகி நாதர் சந்நிதியில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.

    இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலும் பஞ்ச பூத தலங்களில் நிலத்துக்கான ஒன்றாக கருதப்படுகிறது .