Author: cmsadmin

  • கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!

     

    கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
    நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே… தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

    அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ‘ருணம்’ எனும் கடன் தீரும்!
    யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
    சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

    சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
    அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
    அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
    ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
    மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

    தோரண கணபதியை வழிபடும்முறை:
    மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
    செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்… குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். 

    ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
    ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

     

    அத்துடன் கணபதியின் மேகலை – பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

  • வேலூர் லட்சுமி நாராயணி (தங்கக்கோயில்)

    இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

    வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது. இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும், இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்.

     

    பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி செல்போன், கேமரா, தின்பண்டங்களை வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழியெங்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

     கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல் விளக்குகளும் சேர்ந்து இரவை பகலாக்குகின்றன. கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் பச்சைப்பசேல் என்றுகாட்சியளிக்கின்றன

    தென்றல் காற்று இதமாக வீசுகிறது மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது. கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.  பக்தர்கள் அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும் தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் ஜொலிக்கிறது.

    அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பிரமாண்டமான 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில் ஆயிரம் திரிகள் போட்டு விளக்கு ஏற்றலாம். கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும், புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன. கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள். லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, இத்தகைய சுயம்பு கோலத்தை காண்பது அரிதிலும் அரிது.

    திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணிபீடத்தையும் தரிசிப்பது சிறப்பு.மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. மூலஸ்தானத்தில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அவள் அருளுகிறாள்.

    தங்கத்தில் ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது

  • சீரடி செல்வோம் வாருங்கள் …….

     

    சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.

    தம் வாழ் நாளில் எளிமையைக் கடைபிடித்த பாபாவின்  கோவிலுக்கு மொத்தம் நான்கு  நுழைவாயில்கள் இருக்கிறது.

    கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. சீரடியில் சாதாரண நாட்களை விட வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பு மடங்கு இருக்கும்.

    சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நாம்  எங்கு நின்றாலும் பாபா நம்மை  பார்ப்பது போலவே இருக்கும். மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக் குடையின் நிழலில் இருக்கிறது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான இந்தத்  திருவுருவச் சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது.

    பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாங்கு  வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும்.

    மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம்.

    சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம். . பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.

    சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியமாக கருதப்படுகிறது.

    பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவுக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாக தருகிறார்கள்.

    கோயிலுக்குள் நடக்கும் சாயிபஜன், கோயில் முழுக்க ஒலிக்கும்  வண்ணம்  ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.

    விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை. சிறப்பு தரிசனமும் கிடையாது.

    ஆலயத்திற்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த வசதி உள்ளது.

     சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்திற்கு பணம் கொடுக்கலாம்.

    பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்திற்குள் தனி இடம் உள்ளது.

    கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழந்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள்.

    சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

    கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.

    எனவே சர்வம் சாயி என்று சாயி நாமம் ஸ்மரிப்போம்….அவர் பாதம் பணிவோம் …

    ஓம் சாய்ராம்..!

  • ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள் !

    ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன.

    கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம். .

    *1, திங்களூர் (சந்திரன்):*
    *தரிசனம் நேரம் :1மணி நேரம்*
    *காலை 6மணி*

    ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும்.

    இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும்.

    பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.

    *2, ஆலங்குடி (குரு)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *காலை 7.30மணி*

    ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

    காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

    *3, திருநாகேஸ்வரம் (ராகு)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *காலை 9.30*

    கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும்.

    நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

    *4, சூரியனார் கோவில் (சூரியன்)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *மதியம் 11.00மணி*

    . நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

    *5, கஞ்சனூர் (சுக்கிரன்)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *மதியம் 12.15*

    சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும்.

    அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

    *6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்)
    *தரிசனம் நேரம் :1மணி நேரம்*
    *மாலை 4மணி*

    நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும்.

    எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும்.

    பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

    *7, திருவெண்காடு (புதன்)
    *தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
    *மாலை 5.15மணி*

    வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும்.

    பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

    *8, கீழ்பெரும்பள்ளம் (கேது)
    *தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
    *மாலை 6.15மணி*

    திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

    *9, திருநள்ளாறு (சனி)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *இரவு 8.00மணி*

    நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம்.

    கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.

    9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்

    (இது காரில் செல்பவர்களுக்கு எளிதானது.
    பஸ்ஸில் செல்பவர்களுக்கு சிரமமானது..
    காரணம். சரியான கால அளவில் அனைத்து இடங்களிலும் பஸ் கிடைக்க வேண்டும்,)

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (திண்ணன் கண்ணப்பன் ஆன கதை)

     

    வழக்கமாக நாம் இறைவனை ,பல நாமங்களை சொல்லி உரிமையுடன் கூப்பிட்டு கொண்டாடுவோம். ஆனால் இறைவனே தனது பக்தன் ஒருவனை அப்பா என்று அன்புடன் கூப்பிட்ட கதை ஒன்று உள்ளது.அந்த அற்புதத்தை இப்போது தெரிந்துக் கொள்வோம்.

    உடுப்பூர் என்னும் வனப் பகுதியில் நாகன் என்ற வேடுவ தலைவனுக்கும் ,அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் நீண்டகாலமாக பிள்ளை பாக்கியம் இல்லாததால் குல தெய்வமான முருகக் கடவுளை வேண்டி விரதம் இருந்தார்கள்.

    முருகப்பெருமானின் அருளால்  நாகனுக்கும் தத்தைக்கும் தை மாதம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் ஒரு பிள்ளை பிறந்தான். பிறக்கும் போதே நன்றாக கனமாக இருந்த காரணத்தால் குழந்தைக்கு‘திண்ணன்’ என்று பெயர் சூட்டினார்கள்.

    திண்ணன் வளர்ந்து, காட்டு விலங்குகளின் இயல்புகளை நன்கறிந்து கொண்டு வேட்டையாடும் பயிற்சியையும் மேற்கொண்டான். பயிற்சியின் தொடர்ச்சியாக  வேட்டைக்குச் சென்றான். திண்ணனுக்கு உதவி புரிவதற்காக, சில வேடுவர்களும் அவனுடன் சென்றார்கள். ஒரு பன்றியை வேட்டையாட, அதனைத் தொடர்ந்து வெகுதூரம் சென்று, ஒரு மலையின் அடிவாரத்தில் பன்றியை, திண்ணன் வில்லால் அடித்து வீழ்த்தினான்.

    திண்ணன், உயர்ந்து நின்ற மலையை மிகுந்த ஆர்வத்துடன் நோக்கி, உடன் வந்தவர்களிடம் அதைப்பற்றிக் கேட்டான். “இந்த மலையின் பெயர் திருக்காளத்தி,  இதன் உச்சியில் குடுமித்தேவர் எழுந்தருளியிருக்கிறார்.” என்று அவர்கள் கூறியதும், ஏதோ ஒன்று அவனை ஈர்த்து, திண்ணன் மலைமீது ஏறத் தொடங்கினான். மலை உச்சியிலே ஏகாந்தமாக, வீற்றிருந்த காளத்தியப்பரைத் பார்த்த நொடி பரவசமாகி , திண்ணன் ,ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

     

                                                                      

    உடன் வந்தவர்களைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிட்டு, காளத்தியப்பரை விட்டுப் பிரிய மனமின்றி அங்கேயே இருக்கலானான் திண்ணன்.“காளத்தியப்பா! உனக்குப் பசிக்குமே!” என்று நெக்குருகி மலையிறங்கி வந்தான். சற்று நேரத்திற்கு முன் கொன்று போட்ட பன்றியின் இறைச்சியைப் பக்குவம் செய்து எடுத்துக் கொண்டான். அபிஷேகம் செய்ய வேண்டும் அல்லவா ?அதற்காக  ஆற்றுநீரை வாயிலே தேக்கிக் கொண்டு, காட்டுப் பூக்களையும் பறித்துக் கொண்டு மலைமேலை ஏறினான். வாயிலிருந்த நீரால் குடுமித்தேவரை நீராட்டினான். மலர்களை அவருக்கு அர்ச்சனை செய்வித்து, பன்றி இறைச்சியை நிவேதனம் செய்தான்.திண்ணன்  உள்ளன்போடு செய்ததினால் ஈசனுக்கு எச்சில் நீர் பன்னீராக  இருந்தது.  ஐந்து நாட்களாகத் தொடர்ந்து,காளத்தியப்பரைப் பிரிய மனமின்றி அங்கேயே இருந்த திண்ணன். அவரைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து தனது பக்தியால் இறைவனை திக்குமுக்காட வைத்தான்.

    இது இப்படி இருக்க ,காளத்தியப்பருக்கு வழக்கமாக பூஜை செய்ய வருகின்ற அந்தணர்,காளத்தியப்பருக்கு அருகிலே வேடுவனையும், முன்னால் சிதறிக் கிடந்த இறைச்சித் துண்டுகளையும் கண்டு முகம் சுளித்து விட்டு பூஜை செய்யாமலே சென்று விட்டார். அன்று இரவு அவர் கனவிலே சிவபெருமான் தோன்றி, “நாளை மலைக்கு வந்து, திண்ணன் அறியாதபடி மறைந்திருந்து பார்.” என்று உத்தரவிட்டார்.

    மறுநாள் கண் விழித்த திண்ணன் , காளத்தியப்பரின் ஒரு கண்ணிலிருந்து உதிரம் வழிந்ததைக் கண்டதும் பதறினான். உடனே சிறிதும் யோசிக்காமல் வேலால் தன்னுடைய கண்ணைத் தோண்டி,அப்பனின் கண்ணில் அப்பியதும் உதிரம் நின்றது. திண்ணன் ஆனந்தமடைந்தான். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் மற்றொரு கண்ணில் உதிரம் வடிந்தது கண்டு அரண்டான். வேலை எடுத்து  மற்றொரு கண்ணையும் தோண்ட தயாரானான். ஆனால் காளத்தியப்பரின் உதிரம் வழியும் கண் இருக்கும் இடம் தெரியாதே என்று, தனது செருப்பணிந்த காலை, அவர் கண்ணருகே வைத்தான். திண்ணன் தனது  இரண்டாவது கண்ணைத் தோண்டும்போது சிவபெருமான் அங்கே தோன்றி,“கண்ணப்பா நில்!” என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.

    இவை அனைத்தையும் மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்தணர், திண்ணனின் பக்தியை பார்த்து மெய் சிலிர்த்தார். காளத்தியப்பரின் வாய்மொழியால் ‘கண்ணப்பா’ என்று அழைக்கப்பட்டவர்  ஆதலால் , வேடுவராக இருந்தபோதிலும்  அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

     

    ஓம் நமச்சிவாயா !

     

  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்! நினைத்தது கைகூடும்

    வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து வழிபடுவது சிறந்தது.

    திங்கள்

    திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைக்க வேண்டும்.

    செவ்வாய்

    செவ்வாய் கிழமை அனுமன் மற்றும் துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால், வாழ்க்கை வளம் பெரும்.

    புதன்

    புதன் கிழமை விநாய பெருமானுக்கு உகந்தது. எனவே புதன் கிழமை அன்று விநாயகர் கடவுளுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்.

    வியாழன்

    வியாழன் கிழமை தட்சணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்தது. எனவே வியாழக்கிழமை அன்று இந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும்.

    வெள்ளி

    துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

    சனி

    சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபட்டால், வாழ்கை சிறப்பாக இருக்கும்.

    ஞாயிறு

    நவகிரகத்தின் முதன்மைக் கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. இதனால் சூரிய தோஷம் மற்றும் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் தீரும்.

     

  • பதினாறு பேற்றையும் அள்ளித்தரும் வரலக்ஷ்மி விரதம்

     

    ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிகள் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள்.இதனால் மங்களமும் ,சௌபாக்கியமும் அடையலாம். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். சுமங்கலிப் பெண்களுக்கு ,மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.வரலக்ஷ்மி பூஜையை முறைப்படி தவறாமல் செய்தால்  செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் அன்று ,அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள். இம்மாதம்  வெள்ளிக்கிழமை (04.08.2017) இந்த விரதத்தை பெண்கள் கொண்டாட உள்ள நிலையில்,லக்ஷ்மி தேவியின் வரலாற்றை பற்றி நாம் அறிந்துக்கொள்வோம்.

     

                                                                       

    ஸ்ரீவைகுண்டத்தில், சவுந்தர்யமே வடிவான லட்சுமியின் அழகையும், கீர்த்தியையும் யாழிசைத்தபடி பாடிய  கந்தர்வப் பெண் ஒருத்திக்கு லட்சுமி, மனம் மகிழ்ந்து, தன் கூந்தலில் சூடியிருந்த நறுமணம் மிக்க மலர் சரத்தை  பரிசாக கொடுத்தாள். அதை பிரசாதமாக நினைத்த அந்தப் பெண், தன் யாழில் சுற்றிக் கொண்டாள். வானவெளியில் துர்வாசர் என்ற முனிவர் அவளைச் சந்தித்துப் பேசினார்.

     அப்போது அதுவரை உணராத நறுமணம் கமழவே, அதற்கான காரணத்தை அந்த பெண்ணிடம்  கேட்டார். லட்சுமி தனக்கு பிராசதமாக  தந்த சரத்தில் இருந்தே அந்த மணம் கமழ்வதாக சொன்னதோடு,“உங்களைப் போன்ற மகாமுனிவர்களே மகாலட்சுமியின் இந்த பிரசாதத்தை பெறத் தக்கவர்கள்…’ என்று அதை முனிவரிடம் கொடுத்தும் விட்டாள்.

     அதை சாட்சாத் மகாலட்சுமியே தனக்கு தந்ததாகக் கருதிய துர்வாசர், அந்த மலர்ச்சரத்துடன் வானவெளிக்கு சென்றார். அச்சமயம் ஐராவதம் எனும் யானையின் மீது பவனி வந்த இந்திரனுக்கு, மலர் பிரசாதத்தின் அருமையைக் கூறி, அதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அவனோ  அதை அலட்சியமாக வாங்கி, யானையின் மத்தகத்தில் வைக்க , அதில் இருந்த வண்டுகள், யானையை மொய்க்கவே, அது எரிச்சலடைந்து மலரை இழுத்து போட்டு மிதித்தது.

     இதைக்கண்டு கோபமடைந்த துர்வாசர், “இந்திரா… உனக்கு கற்பக விருட்சம், காமதேனு,ஐராவதம் போன்ற கேட்பதைத் தருபவை இருப்பதால் தானே, லட்சுமி தாயாரின் தயவு தேவையில்லை என நினைத்து இவ்வாறு செய்தாய். அவை எதுவும் உனக்கு இல்லாமல் போகட்டும்…’ என்றார்.

    அவை, பாற்கடலில் சென்று மூழ்கி விட்டன. திருமாலின் பொறுமையை பரிசோதிப்பதற்காக, பிருகு மகரிஷி,  அவரது மார்பில் எட்டி உதைத்தார். இதனால், திருமாலின் மார்பில் வசித்த லட்சுமியும்,கோபத்தில்  பாற்கடலில் சென்று மறைந்தாள்.

     லட்சுமி கடாட்சத்தையும், செல்வத்தையும் இழந்த இந்திரன், மீண்டும் அதைப் பெறுவதற்காக பிரம்மனை வேண்டினான். அவர்கள் திருமாலின் உதவியை நாடி  பாற்கடலைக் கடைந்த போது, ஒவ்வொரு பொருளாக வெளியே வந்தது. லட்சுமி தாயாரும் வெளிப்பட்டாள். அவள் வெளியே வரும் போதே, முத்துமாலைகள் அணிந்தும், கையில் மணமாலையை ஏந்தியும் காட்சி தந்தாள். நவரத்தினங்கள் இழைத்த பொற்கலசங்களில் தீர்த்தமேந்தி வந்த யானைகள் அவளுக்கு அபிஷேகம் செய்தன. பிரம்மா  பல ஆபரணங்களை வழங்கினார். சரஸ்வதி,நட்சத்திரங்களை மாலையாகக் கோர்த்து கொடுத்தாள். வானம் பட்டாடைகளை அளித்தது. வைஜெயந்தி என்ற மாலையை வருணன் அளித்தான். நாகலோகத்தினர் நெற்றிச் சுட்டியும், மகர குண்டலமும் அளித்தனர்.

     அவளுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்ளலாம் என பிரம்மா கூறவே, அவள் தன் கையில் இருந்த மணமாலையை திருமால் கழுத்தில் அணிவித்தாள்; வரலட்சுமி விரத நன்னாளில், லட்சுமியின் வரலாற்றைப் படித்து, பூஜை செய்பவர்கள் செல்வ வளம், மாங்கல்ய பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழ்வர்.

     

     

  • அதிசயத்திலும் அதிசயம் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோவில்கள்  

     

    இந்தியாவில் உள்ள பிரபல எட்டு சிவன் கோவில்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டன. இந்த எட்டு கோவில்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த எட்டு கோவில்களும் மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தான் ஆச்சரியம்

    இந்தியாவில் உள்ள பிரபல எட்டு சிவன் கோவில்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டன. இந்த எட்டு கோவில்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த எட்டு கோவில்களும் மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தான் ஆச்சரியம் அளிக்க கூடிய விடயமாகும்.

    ஏன் ஆச்சரியம்? அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை (latitude and longitude) யை அளந்து தான் இப்படி ஒரே மாதிரி இருக்கும் வகையில் வடிவமைக்க முடியும்.

    ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த விதமான அறிவியல் சார்ந்த செயற்கை கோள் தொழில்நுட்பங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை!
    பின்னர் இது எப்படி சாத்தியமானது என்பது மர்மமாகவே உள்ளது.

     இங்குள்ள பாரம்பரிய கலை ச்சின்னங்களை, ஐக்கிய நாடுகள்சபை கலாசாரக்குழு, சர்வதேச பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரித்துள்ளது
    அதுவும் இதில் எல்லா கோவில்களும் வேறு வேறு திசையில் அமைந்துள்ளது. எடுத்துகாட்டுக்கு கேதாரிநாத் கோவிலுக்கும், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கும் இடையேயான இடைவெளி 2383 கிலோ மீட்டர் ஆகும்.

    இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் ஒரே மாதிரி நேர்கோட்டில் அமைந்திருப்பது பெரிய ஆச்சரியம் தான்.
    அது மட்டுமா! இந்த கோவில்களில் ஐந்து கோவில்கள் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது. 

    அதாவது, திருவனைகாவலில் இருக்கும் ஜம்புகேஷ்வரா கோவில் நீரையும், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் நெருப்பையும், காலேஷ்வரத்தில் அமைந்துள்ள காலேஷ்வர முக்தீஷ்வர கோவில் காற்றையும்,காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஷ்வரர் கோவிலானது நிலத்தையும், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலானது ஆகாயத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வளவு பெரிய விஷயங்கள் நிச்சயம் எதிர்பாராமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் பெரிய சம்பவங்கள் இதன் பின்னர் இருக்கும் என்பது தான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

  • திருமண தடை நீக்கும் 10 டிப்ஸ்…

    1. துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.
    2. ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
    3. சென்னை – திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது.
      பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.
    4. வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.
    5. காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமைமற்றும்பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.
    6. தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.
    7. திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    8. வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.
    9. புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
    10. ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையை மனம் உருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.

  • ஆடிபெருக்கு விழாவின் சிலமுக்கியத்துவங்கள்;

    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று சுமங்கலிபூஜை நடத்துவர்.

    திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலிபூஜை நடத்துவர். இந்த மங்கல திருவிழா வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

     

    தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர்.

    ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’ என்பது பழமொழி. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் திருமண யோகம் கூடிவரும்.

    இவை தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்ற பல முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது.

    “ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி
    வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
    எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக”

    என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

     

    ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி, காவிரிப்பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலகரமான விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் அன்று அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, நீராடி காவிரியை வணங்கி சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.

     

    பெண்கள் குளித்து முடித்துவிட்டு ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்கின்றனர். ஒரு இடத்தில் வாழை இலையை போட்டு அதில் பிள்ளையார்சிலை வைத்து அதன்முன் அகல் விளக்கு ஏற்றுகின்றனர். மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனைஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜைசெய்வர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கருகமணி, காப்பரிசி வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

     

    ஈரோடு பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி விரதம்:வரலட்சுமி விரதம் ஆடிமாதம் சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமையில் வரும். இந்த ஆண்டு வருகிற (வெள்ளிக்கிழமை) வருகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என பெயர் பெற்றது.
    திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவன் அமைவர். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்யவேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்ம நோய்கள் நீங்கும், திருமணத்தடை அகலும்.