Author: cmsadmin

  • காரைக்கால் அம்மையார் கோவில்( மாங்கனி திருவிழா)

     

     காரைக்கால்  அம்மையார்

    இம்மாத பவுர்ணமியன்று சிவன், பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர். மறுநாள் காலை 5 மணிக்கு அம்மையார், எலும்பு வடிவில் கைலாயம் சென்ற வைபவம் நடக்கிறது. அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருப்பார். அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்படும்.

    பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்படும்.

    அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சேர்ப்பர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள்.

    பங்குனியிலும் அம்மையார் ஐக்கிய விழா கொண்டாடப்படுகிறது.

     

     

    காரைக்கால் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மாங்கனி திருவிழா நடக்கும்.
    இத்திருவிழா கடந்த 6ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.மறுநாள் காரைக்கால் அம்மையார் அன்று அழைக்கப்படும் புனிதவதியார் பரமதத்தர் திருக்கல்யாணமும், முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல் நடந்தது.

    பரமதத்தர் தனது பணியாளர்களிடம் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல்,சிவபெருமான் காவியுடை,ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதி உலா வரும் போது பக்தர்கள் தன் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சியில் காரைக்கால் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஒரு மாதம் தொடர்ந்து நடக்கும் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் இறுதிநாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது.இதற்காக பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது.பஞ்சமூர்த்திகள் என அழைக்கப்படும் பிச்சாண்டவர்,அம்பாள், வள்ளி தெய்வாணை,சமேதராக முருகன்,விநாயகர், சண்டிகேஸ்வரர்,சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது.பின் சந்தனம்,மஞ்சள்,பால்,தேன்,பன்னீர், அண்ணம்,பழரசங்கள்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     

     

  • சங்கடஹர சதுர்த்தி பிறந்த கதை

     

    சிவபெருமான்,தனது பூத கணங்களுக்கு  கணேசனை தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார். பிரம்மதேவன் அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்ட ஸித்திகளையும், மனைவிகளாக அளித்து பலவாறு துதி செய்தார்.

    கணபதியும் மனம் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற

    பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூறின்றி நிறைவேற வேண்டும்‘ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

    பூஜையின் போது பிரம்மன் தனக்களித்த மோதகங்களை கையில் எடுத்துக் கொண்டு,

    உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்ததுடன் பரிகசிக்கவும் செய்தான்.

    அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, “ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய்.இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது.

    அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக” என்று சபித்தார்.சந்திரனும் ஒலி மங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.

    சந்திரன் அழிந்ததைக் கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில்,பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும், கணபதியைச் சரணடைவது தான் ஒரே வழி என்றும் கூறினார்.

     மேலும் ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும்  அதாவது பௌர்ணமிக்குப் பின் வருவது ,விரதம் ஏற்று பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவற்றுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து,அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தட்சணைகளை அளித்தால் கேட்ட வரங்களை அளிப்பார் என்று பிரம்மா தெரிவித்தார். பிறகு தேவர்கள் குரு பிரகஸ்பதியைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர்.

    சந்திரனும் இந்த பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனும் களிப்புற்று, அவரை நமஸ்கரித்தார் என்கிறது புராணம்!

     “தவம் காரணம் காரண காரணாநாம் க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்“ என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார் சந்திரன்.

     பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர்.

    கணபதியும் சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி’யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூஜிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்’ என்று விநாயகரே அருளினார். இதையே சங்கடஹர சதுர்த்தி என போற்றப்படுகிறது.

    பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஒருவருடம் வரை தெடர்ந்து வீண் பிரச்னைகள் சிக்கல்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்! எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை அமைத்து பூக்களால் பூஜித்த பின், இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் துவங்கிய காரியத்தில் வெற்றியையும், சகல சௌபாக்கியங்களையும் தருவேன்’ என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

     சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளான ஸ்ரீகிருஷ்ணனுக்கு, நாரதர் இந்த சரிதத்தை விளக்கிச் சொல்ல, ஸ்ரீகிருஷ்ணனே சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று தெரிவிக்கிறது ஸ்காந்தபுராணம்!

     நாமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து  சங்கடங்களை போக்கிக்கொள்வோம் .

  • சந்திர கிரஹணம் – செய்ய கூடாதவை என்னென்ன ?

     

    ஆரம்பம் இரவு- 7.8.17 – 10:52PM

    முடிவு-8.8.17 00:48AM

     திங்கட்கிழமை ‘பகுதி’ (Partial) சந்திர கிரஹணம் நம் இந்திய நாட்டில் தெரியும். இதன் பொருட்டு சில ராசியினர் தோஷ பரிகாரம் செய்து கொள்வது அவசியம். இந்த பதிவு இட முக்கிய காரணமே, சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும், இதை மிகைப்படுத்தி, மிகப்பெரும் தனி மனித சேதம் நிகழப்போவதை போன்று பல பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. அச்சம் வேண்டாம். அது போன்ற பதிவுகளில் அவர்கள் மேற்கோள் காட்டியிருப்பது, பாதிப்பை பற்றி கூறியிருப்பது, முழு சந்திர கிரகணம் எனில் மட்டுமே சாத்தியம். முக்கியமாக தோஷ பரிகாரம், மகரம், கும்பம் , கடகம், சிம்மம் ராசி-லக்கினத்தினர் கண்டிப்பாக செய்வது அவசியம். மேஷம் மற்றும் விருச்சிகம் ராசி லக்கினத்தினர் செய்து கொள்வதும் நலம் தரும். பொதுவாகவே, சந்திர கிரகணத்தின் மூலம் பாதிப்பில் இருந்து தப்ப, அந்த நேரங்களில் தூங்காமல் ‘நமசிவய’ மந்திரத்தை ஜெபித்து வருவதோ அல்லது மிருத்தியுஞ்சய மந்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், அல்லது ராம நாமம் ஜெபித்து வரின், மிகப்பெரிய பலன் கிட்டும். உணவு உண்பதை மாலை ஆறு மணிக்குள் செய்து விடுவது நன்று. திரவ உணவுகளின் மீதும், நீரிலும் தர்ப்பை புல் போட்டு வைக்கவும். கண்டிப்பாக இந்த நேரத்தில் உணவு அருந்துவது தவிர்க்கவேண்டும். இந்த நாள் முழுதுமே அசைவ உணவு மற்றும் வெளியிடங்களில் உணவு அருந்துவது கூடாது. நீர் நிலைகளில் நீச்சலடித்து விளையாடுவதை செவ்வாய் 8.8.17 மதியம் வரை தவிர்க்கவும்.

    சமுத்திரத்தில் கிரகண காலம் முடிந்ததும் குளிக்க இருப்போர், ஏதேனும் பாத்திரத்தில் மொண்டு, கரையில் நின்று குளிக்கவும். கிரகண காலம் முடிந்து அடுத்து வரும் பதினைந்து நாட்களுக்கு மேற்கூறிய ராசியினர் குடும்பத்தாரிடம் வாக்கு வாதம் தவிர்த்து வரவும். கர்பிணி பெண்கள் வெளியே வருவதை அவசியம் தவிர்க்கவும். தோஷ பரிகாரம், மேற்கூறியபடி மந்திரம் ஜெபிப்பதும், கிரகண காலம் முடிந்ததும் குளித்து, சந்திரனை பார்த்துவிட்டு, பின் வீட்டின் பூஜையறையில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு, பின்னர் புதிதாக சமைத்த உணவை உண்ணவும்(தேவைப்படின்) . 

    மேற்கூறிய ராசியினர் செவ்வாயன்று 8.8.17 காலை ஒரு வெள்ளை ஜாக்கெட் துணி அல்லது அங்கவஸ்திரத்துடன், சிறிது நெல், அரிசி பாக்கெட், மட்டை தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம்,பூவுடன் சிறிது தட்சிணையும் வைத்து எவருக்கேனும் (பிச்சை புகுவோருக்கு கொடுக்கலாகாது) தானமளிக்கவும்.

    முக்கிய குறிப்பு : கிரகண காலம் முடிந்ததும் குளித்து தர்ப்பணம் 
    செய்வது அவசியம்.

    கீழ்கண்ட மந்திரத்தை கூறிவருவது அளவற்ற நற்பயனை தரும்- இந்த கிரகண நேரத்தில். (6000 முறை கூறுவது உசிதம்)

    “ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரோம் சஹ் சந்த்ராய நமஹ”

     

     

  • சனி பிரதோஷப் பலன்கள்

     

    சிவனுக்குரிய வழிபாடுகளில்  மிகவும் முக்கியமானது சிவராத்திரியும், பிரதோஷமும். பாற்கடலை கடைந்த போது தோன்றிய  ஆலகால விஷத்தை சிவன் உண்டு, தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்த வேளையே  பிரதோஷ வேளை.ஆகவேதான் பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது.

                                                                     

    சனி பிரதோஷம் அன்று ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு இன்னும் கூடுதல் சிறப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று ,நாள் முழுக்க விரதம் இருந்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பிரதோஷ வேளையான  மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலத்தில் , சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.

    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும் என்பது நம்பிக்கை.

    பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    பிரதோஷத்தின் போது ,முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்பது ஈசனின் அருளை பெற உதவும்.

    பிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம், நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகளின் எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்.

     

    பிரதோஷ பூஜையின் போது  அபிஷேகத்திற்காக  நாம் தரும் ஒவ்வொரு  பொருட்களுக்கும் ஒரு  பலன் உண்டு.

     

     பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்

     தயிர் – பல வளங்களும் உண்டாகும்

     தேன் – இனிய சாரீரம் கிட்டும்

     பழங்கள் – விளைச்சல் பெருகும்

     பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்

     நெய் – முக்தி பேறு கிட்டும்

     இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்

     சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்

     எண்ணெய் – சுகவாழ்வு

     சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்

     மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்

     

    இன்று சனி பிரதோஷம் .நோய் நொடிகளின்றி, செல்வ சிறப்புடன் வாழ இந்த பிரேதாஷ நாளில் நந்திதேவரையும், எம்பெருமான் சசிசேகரனையும்  வழிபட்டு மகிழ்வோம்!…

                                                                       

    திருச்சிற்றம்பலம்……..

  • விநாயகப் பெருமானுக்கு யானைமுகம் வந்த வரலாறு: நாக சதூர்த்தி

     

    கயமுகாசுரன் தேவர்களாலும் பூதங்களாலும் மனிதர்களாலும் மிருகங்களாலும் ஆயுதங்களாலும் இறவாதிருக்கச் சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தான்.

    அப் பேற்றால் அகந்தை கொண்டு அவன் தேவர்களைப் பெரிதும் துன்புறுத்துவானாயினான். அதனைப் பொறுக்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்து தமது துன்பத்தையெல்லாஞ் சொல்லி முறையிட்டனர்.

    அடைந் தாரைப் புரந்தருளும் அருட்பெருந்தகையாளராகிய சிவபெருமான் தேவர்களுக்குத் தேறுதல் கூறி அவர்களை அனுப்பிவிட்டுத் தாம் பார்வதிதேவியாருடன் கைலை மலைச் சாரலில் அணிமலர்ச் சோலையகத்த தாயதொரு திருமணி மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

    ஆண்டொரு சித்திரச் சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களை அண்ணலுந் தேவியுங் கண்ணுற்றுச் செல்லுங்காலைப் பிரணவமந்திரம் ஒரு சித்திரமாய் வரையப்பட்டிருக்கக் கண்ட சிவபெருமான் யானைமுக வடிவிற்றாய அவ்வோங்காரத்தைக் கயமுகாசுரனைக் கொன்று தேவர்களைக் காத்தருளும் திருக்குறிப்புடன் நோக்குவாராயினர்.

    அவ்வளவிலே அவ் வோங்காரம் களிறும் பிடியுமாய்ப் பிரிந்துகூட அக் கூட்டத்தின் விளைவாக விநாயகப் பெருமான் யானைமுகத்துடன் தோன்றிக் கணங்களுக்குத் தலைமை பூண்டு கணபதியாய்க் கைலாயத்தில் அமர்ந்தருளித் தேவர்கள் குறைதீர்க்கக் கயமுகாசுரனோடு போர்புரிந்து, ஆயுதங்களால் அவன இறவானென்பதை உணர்ந்து தமது திருமுகத் திருகோட்டில் வலக்கோட்டை ஒடித்து வீசு அதனால் அவ்வசுரனைக் கொன்றனர்.

    சிந்துரன் என்னும் அசுரனை அழித்தற்பொருட்டுக் கருவுருக் கொண்டிருக்கையில் அவ்வசுரனால் சிரங் கொய்யப்பட்டு ஆவணி மாதச் சதுர்த்தியில் சிரமின்றித் திருவவதாரஞ்செய்து பின்னர்க் கயாசுரன் சிரத்தைக்கொண்டு திருவுரு முற்றுப் பெற்றதாகக் கூறும் விநாயகபுராணம். ‘கசானனர் திருவவதாரப்படலம்’ காண்க.

    வேறு பிற புராணங்கள் பல, வேறு பலவாறாகக் கூறுவதுமுண்டு. பிரணவ சொரூபம் விளக்கவந்த திருவுருவென்று கோடலே சாலும்.
    ஒவ்வொரு கற்ப காலத்திற்கு சில வேறுபாடுகள் வரும்.

    ஆன கருவைப் பதிற்றுப்பத்
    தந்தா திச்சொல் அலங்கல்முற்றும்
    ஞான உருவாம் களவீசன்
    நளின சரண மிசைச்சாத்தத்
    தான அருவி பொழி தடக்கைத்
    தறுகட் சிறுகட் புகர்முகத்துக்
    கூனல் இளவெண் பிறைக்கோட்டுக்
    குணகுஞ் சரத்தின் அடிதொழுவாம்.

    திருமேனி முற்றும் ஞானவடிவாம் களவீசனது தாமரைமலர்போன்ற திருவடிமீது திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதியான சொல்மாலையைச் சாத்த, மதத்தை அருவிபோலச் சொரியும் நீண்ட துதிக்கையையும்,

    அஞ்சாமையையும், சிறிய கண்களையும், புள்ளிவாய்ந்த முகத்தையும் வளைந்த இளமையான வெள்ளிய பிறைபோன்ற தந்தங்களையும் உடைய குணவிநாயகருடைய திருவடிகளை வணங்குவாம்.

    குட்டித்திருவாசகம் எனும் திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி எனும் அருள் நூல்லிருந்து.

  • துன்பம் போக்கும் அழியா நிலை ஆஞ்சநேயர்

    அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலை அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆஞ்சநேயரை வேண்டி வணங்கினால் துன்பம் பறந்தோடும்.

    அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில் அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது.

    இரண்டு அடிபீடத்தில், ஒன்பது அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இவர். அவருக்கு அருகில் செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அசோக வனத்தில் வேதனையில் தவித்த சீதாப்பிராட்டியின் முன் தோன்றிய ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து ஆறுதல் கூறினார்.

    அதே விஸ்வரூபத்தில் இங்கே எழுந்தருளி இருப்பது இப்பகுதி மக்கள் செய்த தவப்பயன். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு, வெண்ணெய், மலர், பழங்கள், செந்தூரம் மற்றும் பலவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதை பக்தர்கள் பார்த்து ஆனந்தம் அடைகின்றனர்.

    ஆலயத்தின் அருகில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அதன் முன்பாக 23 அடி உயர கதாயுதம் நிறுவப்பட்டிருக்கிறது. மூலஸ்தானத்திற்கு முன்னால் செல்வவிநாயகர் தனி மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.

    அவரை வணங்கியபின் ஆஞ்சநேயரின் முன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் அனுமனின் வெற்றிக் கொடிமரத்தைச் சுற்றி விட்டு மூலஸ்தானத்திற்குச் சென்று ஆஞ்சநேயரின் அருள் பெற வேண்டும். ஆஞ்சநேயரின் பேராற்றல் மிக்க கதாயுதத்தை வணங்கிய பின் அதை வலம் வரவேண்டும்.

     

  • நாராயணா என்ற திருநாமத்தின் பெருமை

     

    அண்ட சராசரத்தில் உலவிக்கொண்டு, சதா சர்வ காலமும் நாராயணா என்று கூறிக்கொண்டிருந்த நாரதருக்கு திடீரென்று ஒரு சந்தேகம். இப்படி மூச்சுக்கு முந்நூறு தடவை நாராயணா என்று சொல்கிறோமே , அப்படி என்றால் என்ன?. கேள்வி மண்டையை குடைய ,ஒரு முனிவரிடம் கேட்டார். “நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?”

     அதற்கு முனிவர் தனக்கு தெரிந்த அளவில்,“ரொம்ப சுலபம்…”நாரம்’ என்றால் “தண்ணீர்’. “அயனன்’ என்றால் “சயனித்திருப்பவன்’. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.ஆனால் நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. அதனால் நாராயணனிடமே ஓடினார்.

    “ஐயனே! உம்மை நான் நாராயணா…நாராயணா என்று சதாசர்வகாலமும் துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!”என்று நாரதர் குறும்பாக கேட்க, நாராயணனும் “அடடா…எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்”என்றார் .  இது போதாதா நாரதருக்கு,வண்டிடம் ஓடினார்.

    “வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?” என்ற கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்து போனது.

    நாரதர் நாராயணனிடம் திரும்பினார். “நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள் என்று தானே அர்த்தம்,” என்றார்.

    “அப்படியா , எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்,” என்று ஒரு மரத்தை நோக்கி கைநீட்டினார் பகவான்.

    கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது. நாரதர் பயந்து போய்  விட்டார். மூச்சுக்கு முன்னூறு தடவை “நாராயணா’ என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா!” பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.

    “பெருமாளே! அதற்கு அர்த்தம் ‘அது’தான்…உறுதியாகி விட்டது.

    “நாரதா! அவையெல்லாம் விதி முடிந்து இறந்து விட்டது . எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்” என்றார்.  “அய்யோ … இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடியபாவம் என்னை அணுக வேண்டுமா முடியாது” என்றார் நாரதர்.

    “அப்படி ஏதும் ஆகாது. தைரியமாக போ ”என்று உசுப்பிவிட்டார் பெருமாள். நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதை முடிந்தது.

    “நாராயணா! எல்லாம் போச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்!” எனக் கிளம்பியவரை, பெருமாள் தடுத்தார்.

    “நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள், அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது!” என்ற நாராயணனை,”அய்யா! என்னை அரசதண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது” என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாகப் பதில் சொன்னான். “நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் “நாராயணா’ என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி. அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்!” என்றான்.

    இப்போது தான் நாரதருக்கு புரிந்தது.“ஆகா! “நாராயணன்’ என்றால் “வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்’, “வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்’ என்றல்லவா அர்த்தம் என இறைவனை மனதார  துதித்தார்.

    ஓம் நமோ நாராயணா …..

  • நான்கு நிலைகளில் உள்ள பெருமாளைத் தரிசிக்க ஏற்ற திருநீர்மலை பெருமாள்!

     திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது. இந்தத்தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன. 

     

    மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன.அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.

     

    சென்னை பல்லாவரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே சிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை இங்கே ஓரிடத்தில் காணலாம். இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார். இனி ஆலயத்தின் தல வரலாறு பார்ப்போம். 

     

    ராம கதையை எழுதிய வால்மீகி முனிவர் இத்தலத்தில் சயனித்திருந்த அரங்கநாதரையும், இருந்த கோலத்தில் சாந்த ரூபியாக இருகரங்களுடனிருந்த நரசிம்மரையும், நடந்த கோலத்தில் திருவிக்ரமனையும் பார்த்தார். ஆமாம் அவருடைய ராமன் எங்கே? மலையை விட்டுத் துயரத்துடன் இறங்கினார். முனிவரின் துயரைத் துடைக்க இத்தலத்து எம்பிரான்களே வால்மீகியின் சக்கரவர்த்தித் திருமகனாகக் காட்சியளித்தனர். ரங்கநாதரே ராமனாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், லட்சுமிதேவி ஜானகியாகவும் கருடன் அனுமான் என்று ரம்மியமான நீர் வண்ணப் பெருமாள் ரூபத்தில் காட்சி கொடுத்தனர். மூவர் நால்வராயினர். தம்முடைய திருவாலியில் உள்ள உருவத்திலேயே சாந்தமூர்த்தி நரசிம்மரை திருமங்கையாழ்வார் கண்டாராம்

     

     

    நீர்’ பெருமாள்: ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார்.

     

    பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு “நீலவண்ணப்பெருமாள்’ என்ற பெயரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.

     

    ஒரே தலத்தில் நான்கு பெருமாள்: இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார்.

    தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.

     

    குழந்தை நரசிம்மர்: நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். 

     

    இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

     

    கோபுரம் ராமருக்கு… கொடிமரம் நீர்வண்ணருக்கு…: கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, “அணிமாமலர்மங்கை’ எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

     

    இரட்டை திருவிழா: மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. 

    குளம் ஒன்று; தீர்த்தம் நான்கு: கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. 

    நாராயணனின் சிலை வடிவத்தை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று குறிப்பிடுவார்கள். இங்கு, நான்கு நிலைகளிலும் பெருமாளைத் தரிசிக்கலாம்.
     

    நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), அணிமாமலர் மங்கை – நின்ற திருக்கோலம்.

    சாந்த நரசிம்மன் – வீற்று இருந்த திருக்கோலம்.

    ரங்கநாதன், ஸ்ரீதேவி, பூதேவி – கிடந்த திருக்கோலம்.

    உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) – நடந்த திருக்கோலம்.

     

  • இன்று வரலட்சுமி விரதம்! சுமங்கலி பாக்கியம் நிலைக்கட்டும்

     

    திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு வரங்களை அள்ளித் தருவதால் ‘வரலட்சுமி’ என பெயர் பெற்றாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை, நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் இன்று.

    துறவியான ஆதிசங்கரர் கூட தனக்கு நெல்லிக்கனியை பிட்சை அளித்த பெண்மணிக்காக ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடி லட்சுமியருளால் தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழியச் செய்தார்.கிருஷ்ணரைக் காண ஏழை குசேலர் வந்த போது, மகாலட்சுமி தன் கடைக்கண் பார்வையை அவர் வசித்த ஊரை இருந்த திசை நோக்கி திரும்பினாள். அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.

    பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாகப் பிறந்த போது தன் கணவருடன் காட்டிற்குச் சென்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என ராமரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்திற்கு லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்தில் குடியிருப்பதாக ஐதீகம்.

    லட்சுமி தாயார் திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருப்பது போல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர்.இந்த நல்ல நாளில் அனைவருக்கும் சுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தாயாரை வழிபடுவோம்.

  • கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!

     கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

    நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே… தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

    அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ‘ருணம்’ எனும் கடன் தீரும்!

    யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
    சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

    சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
    அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
    அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
    ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
    மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

    தோரண கணபதியை வழிபடும்முறை:
    மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
    செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்… குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். 

    ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
    ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

     

    அத்துடன் கணபதியின் மேகலை – பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.