Thai Amavasya: Devotees Take a Holy Dip in Rivers!

ல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரக்கூடிய அமாவாசை, ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. முன்னோர்களின் சாபங்கள், தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய தலைமுறை துன்பம் இல்லாத வாழக்கையை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தை அமாவாசை கருதப்படுகிறது. இந்த நாளன்று புனித நதிகளில் நீராடுவதும், தானங்கள் அளிப்பதும், வழிபாடு செய்வதும் மிக சிறந்த பலன்களை தரும் என்பது மக்களின் நம்பிக்கை.

அதன்படி தை அமாவாசையான இன்று கடல் மற்றும் நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சூரிய உதயம் தொடங்கியதும் புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதையடுத்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள மகாலட்சுமி தீர்த்தம் முதல் கோடி தீர்த்தம் வரை புனித நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். முன்னதாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளில் கால பூஜைகள் நடைபெற்றன. இதேபோல கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து வடக்கு நந்தவனத்தில் பக்தர்களுக்கு பால், பிஸ்கட், குடிநீர் வழங்கினர். ராமநாதசுவாமி கோயில் தெற்கு திருக்கல்யாண மண்டபத்தில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்கள், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களிலும் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கன்னியாகுமரியில் புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கடலில் புனித நீராடி, கடற்கரையில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.  

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களின் பெயர்களை கூறி புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு வைத்து வழிபட்டனர். நாகை மாவட்டத்தில் புதிய கடற்கரை, வேளாங்கண்ணி காமேஸ்வரம் கடற்கரை, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலய குளக்கரை, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் திரளான மக்கள் திரண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கல்லணை, பாபநாசம், கும்பகோணத்தில் உள்ள காவிரி படித்துறை, கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி காவிரி மற்றும் அமராவதி ஆறுகள், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு மக்கள் சென்று நீராடினர். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *