Sri Rangam Temple Vasthira mariyadai

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை புறப்பட்டது – கோவில் இணைஆணையர் சிவராம் குமார், தலைமையில் பட்டாச்சாரியார்கள்  அடங்கிய குழுவினர் எடுத்துச்சென்றனர்.

13 ஆம் நூற்றாண்டில் முகம்மதியர் படையெடுப்பின்போது 1320 ஆம் வருடத்திலிருந்து 1360 ஆம்  வருடம் வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய உற்சவர் நம் பெருமாள் 40 ஆண்டுகள் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வைத்து காப்பாற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில்,

 108 வைணவ திரு ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி மூலவர் ஸ்ரீவேங்கடமுடையானுக்கு மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் முதலாம் நாள் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

அதன்படி நேற்று மாலை வஸ்திரமரியாதை திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்த வஸ்திரங்கள் யாவும் திங்கள் கிழமை (நாளை)  17 ஆம் தேதியன்று காலையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஸ்ரீவேங்கடமுடையான், ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஸ்ரீபத்மாவதி தாயார், ஸ்ரீதேவி தாயாருக்கு மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் யாவும் கோவில் ரெங்க விலாச மண்டபத்தில் இருந்து மேளம் தாளங்கள் முழங்க கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து உள் பிரகாரங்களில்  சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.


பின்னர் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், தலைமையில் பட்டாச்சார்யார் மற்றும் கோவில் நிர்வாகிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதனை கொண்டுச் சென்றனர்.

நாளை மறுதினம் காலை திருப்பதி திருமலையில் உள்ள ஜீயர் மடத்து மண்டபத்திலிருந்து மேளம் தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் ஸ்ரீரங்கம் வஸ்திர மரியாதையை அணிந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த வஸ்திர மரியாதை வைபவம் நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *