Thai Poosam Sirappu Thagavalgal

தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.

தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.

 முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.

சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

 பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.

சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.

தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.

தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.

சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.

தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *