Vallalar Thai poosam kodiyetram

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 150வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

‘‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன்’’ என்று பாடி ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வடலூர் வருவர்.

நிகழாண்டு, 150-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சத்தியஞானசபையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. பின்னர் 7.30 மணிக்கு தர்மசாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி ஆகிய இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

அதன்பின், சத்தியஞானசபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களை கையில் ஏந்தியபடியும், வள்ளலார் பயன்படுத்திய பொருட்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுமந்த படி ஊர்வலமாக ஞானசபை கொடிமரம் அருகே வந்தனர்.

இதையடுத்து 10 மணிக்கு ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்கிற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர். பின்னர் வள்ளலார் எழுதிய கொடி பாடல்களை பாடியபடி கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது அங்குதிரண்டிருந்த ஏராளமான மக்கள் அனைவரும் வள்ளலாரை போற்றி கை கூப்பி வணங்கினர். கொடி ஏற்ற நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் எடுத்துவந்த பழங்கள் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *