Dyanam

மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. ஆழ்ந்த தியானம் செய்யும் போது அதன் பலனை நாம் உணர முடியும். சரி தியானம் செய்வது எப்படி என்பது பலரின் கேள்வி? தியானம் செய்ய எளிய வழிகளை தற்போது பார்க்கலாம். 

முதலில் உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தை தேர்தெடுக்கின்றோமோ அதே நேரத்தில் தொடர்ந்து தியானம் செய்ய அமர வேண்டும். வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். 

அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமர்ந்து தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடி சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும். 

இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும். பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும். இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *