TV malai deepam niraivu

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம், நாளை இரவுடன் நிறைவடைகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலை மீது ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10-ந் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
 
மகாதீபத்தன்று நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள், மகாதீபம் ஏற்றப்படும் 11 நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து தீபத்தை தரிசிப்பது வழக்கம். அதன்படி, கடந்த ஒரு வாரமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம், நாளை இரவுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, நாளை மறுதினம் காலை மகாதீப கொப்பரை, மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவரப்படும். பின்னர், அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீபச்சுடர் பிரசாதம், அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு அணிவிக்கப்படும்.

பின்னர், நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீபமை பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *