Pilli Sooniyam Patchi Rajan

கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். 

அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தான். ராமாயண காலத்தில் போர்க் களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்த போது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். 

கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார். கருடாழ்வார்: தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. காஷ்யப முனிவருக்கு காத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள். காத்ருவும் ,வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர். 

குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள். யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை.மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர். 

அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின. வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். 

தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான். பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன. பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார். 

விஷ்ணுவை தன் மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை. கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது. 

இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன. அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. 

அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது. பெருமாள் கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிமூலமே என்று கஜேந்திரன் கதறிய போது கருட வாகனத்தில் பறந்து வந்து காத்தவர் பெருமான். ஜோதிடத்தில் கருடன்: ஜோதிடத்தில் பறவைகளுக்கு காரகர் புதபகவானாவார். 

புதனின் அதிதேவதை ஸ்ரீ மஹாவிஷ்னுவாகும். நான் பறவைகளில் பட்சி ராஜனாக கருடனாயிருக்கிறேன் என கீதையில் கூறியுள்ளான் கண்ணன். எனவே கருடாழ்வார் புதனின் அம்சம் பெற்றவர் ஆகும். ஓட்டுனர்களுக்கும் பெரிய வாகனங்களுக்கும் புதனே காரகர் என்கிறது பாரம்பரிய நூல்கள். புதனின் அதிதேவதையான ஸ்ரீ மகாவிஷ்னுவிற்க்கு வாகனம் மற்றும் வாகன ஓட்டுனராகவும் புதன் ஆதிக்கம் பெற்ற கருடபகவான் விளங்கியது குறிப்பிடத்தக்கது. கருடாழ்வார் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மையும் பெற்றிருக்கிறார். ஸ்வாதி நக்ஷத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலாராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலக்ஷமியின் அம்சமாகவும் விளங்குகிறார். சுக்கிர ஸ்தலமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பெரிய திருவடியாகி பெரிய கருடனாகவும் அமிர்த கலச கருடனாகவும் அருள்புரிவது குறிப்பிடத்தக்கது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *