putlur amman temple

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூரில் உள்ளது பூங்காவனத்தம்மன் கோயில். நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக மட்டுமின்றி, எல்லா விதமான வேண்டுதல்களுக்கும் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள் மக்கள்.

கோயிலின் சிறப்புகள் ….. 

புட்லூர் அம்மன் கோயிலில் மூலவராக அங்களபரமேஸ்வரி அம்மனும் விநாயகர் மற்றும் தாண்டவராயன் ஆகியோர் திகழ்கிறார்கள். இங்கு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் பூங்காவனத்தம்மன். தல விருக்ஷமாக வேப்பமரம் உள்ளது .

ராமபுரம் எனும் கிராமம், பசுமை நிறைந்த வயல் வெளியாக இருந்தது. மேல்மலையனூரில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை அழைத்துக் கொண்டு காடு-மேடுகளைக் கடந்து நடந்து வந்தார் ஒருவர். 

இடுப்பில் கூடையை ஏந்தி, சூலத்தை ஊன்றுகோலாக பயன்படுத்தி மெள்ள நடந்து வந்த அந்தப் பெண்ணுக்கு, கடும் தாகம்! நா வறண்டு, நடக்க இயலாமல், அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தாள். ”அப்படியே படுத்துக் கொள்ள தண்ணீர் எடுத்து வருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லி விட்டு, கணவர் தண்ணீரைத் தேடி ஓடினார்.

வறண்டு கிடந்த குசஸ்தலை ஆற்றுப் படுகையைக் கடந்து, ஓரிடத்தில் தண்ணீரை சேகரித்துக் கொண்டு திரும்பினார். என்ன அதிசயம்! ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம்.

நேரம் ஆக ஆக நீர் வரத்து மெள்ள குறைந்தது கரை கடக்க வழியும் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், தண்ணீருடன் கரையைக் கடந்து மனைவி அமர்ந்திருந்த மரத்தடிக்கு ஓடினார். அங்கே… அந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போனார். அவரின் நிறைமாத கர்ப்பிணி, புற்றுருவமாகக் கிடந்தாள்.

அங்காள பரமேஸ்வரி, மனித உருவில் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து மெய்சிலிர்த்தனர் ஊர்மக்கள் புற்றுருவாக தோன்றியவளுக்கு அங்கு கோயில் எழுப்பினர்.

மரம், செடி, கொடிகளுடன் பூக்கள் பூத்துக் குலுங்கிய வயலில் கண்டெடுத்ததால், பூங்காவனத்தம்மன் எனப் பெயரிட்டு வழிபடத் துவங்கினர். அங்காள பரமேஸ்வரி  என்ற பழைய பெயரும் இவளுக்கு உண்டு!

புட்லூர் அம்மன் கோயில்  பிராத்தனை

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலும்  திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம் . 

திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் ரயில் நிலையம் அருகில் இருக்கிறது இந்த கோயில். சென்னையில் இருந்து ரயில் மூலமாக இந்த கோயிலுக்கு செல்லலாம். அதேபோல ராமாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த கோயிலுக்கு செல்ல முடியும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *