Prinaya Urchavam Kolagalam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் கோலாகலத்துடன் தொடங்கியது. திருமலையில் உள்ள ஸ்ரீ நாராயணகிரி பூங்காவில் ஸ்ரீ பத்மாவதி-சீனிவாசர் பரிணயம் எனப்படும் திருக்கல்யாண உற்சவம்  தொடங்கியது. 

மூன்று நாட்கள் நடைபெற உள்ள உற்சவத்தில் முதல் நாளான இன்று மலையப்ப சுவாமி வாகன மண்டபத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு நாராயணகிரி பூங்காவை வந்து அடைந்தார். உடன் ஸ்ரீ தேவி, பூதேவி உற்சவ மூர்த்திகள் தங்கப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். 

இதனையடுத்து பூங்காவில் மணப்பெண்களை பார்த்து பெருமாள் முதலில் மாலை மாற்றினார். பின்னர் சம்பிரதாயப்படி பட்டுப்புடவைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி,வேத மந்திரங்கள் முழங்க திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மல்லிகை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசி திருக்கல்யாண சம்மதத்தை தெரிவித்துக்கொண்டனர்.

அப்போது இறைவனது திருக்கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட மகிழ்ச்சியால் பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என கோஷம் எழுப்பினர். இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஊஞ்சல் சேவை நடைபெற்றது அப்பொழுது நான்கு வேதங்கள் ஓதப்பட்டு அன்னமய்யா கீர்த்தனையில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டது. 

இதில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் , இணை செயல் அலுவலர் லக்ஷ்மீ காந்தம், துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருணனை உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை செவ்வாய்க்கிழமை மலையப்ப சுவாமி குதிரை வாகனத்திலும் பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் பரிணயம் மண்டபத்திற்கு எழுந்தருள உள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *