somavara-siva-pooja-sangabishegam

மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது.

பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர்.

சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள்.

இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும்.

அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள்.

தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் யாருக்கும் தெரியாமல் இப்படி மழுவியது.

சங்கின் குணம் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள்.

இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.

இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருகுவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.

மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது.

வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும்.

பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.

இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள்.

இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.

அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார்.

அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *