mandala-poojaikaga-sabari-nadai-thirappu

சபரிமலை,மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை திறக்கப்பட்டுள்ளது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.

அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை – வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைப்புறம் -நாராயணன் நம்பூதிரி இருமுடி கட்டு ஏந்தி கோயில் முன்புறம் வந்தார். புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து கோயிலுக்கு அழைத்து சென்றார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்ற அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்ததை அடுத்து இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய் அபிஷேகம் தொடங்கியது. . இன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும்.

மண்டல காலத்தில் வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது. பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும். கடந்த 15 நாட்களாக அப்பம் – அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் டின் அரவணை ஸ்டாக்செய்யப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *