indru-ayya-vaigundasami-therottam

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து, கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. பதினொன்றாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்ட சாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. தலைப்பாகை அணிந்து காவியுடை தரித்த அய்யா வழி பக்தர்கள் ‘அய்யா சிவசிவா அரகரா‘ என்ற பக்தி கோ‌ஷத்திற்கிடையே தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தது. இரவு 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அய்யா தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *