karmavinayai-neekum-aja-yegaadasi-viradham

அஜா ஏகாதசியை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.

பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.

அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார். அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், ஓ பாண்டு புத்ரா, நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள், எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார். இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *