kuzhandhaigalai-kaakum-karupaasamy

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழ ரதவீதியில் கோவில் கொண்டிருக்கிறார் கருப்பசாமி. தன்னை நாடிவரும் பக்தர்களின் தீராத நோய்களையும் தீர்த்து அருள்பாலிக்கிறார்.மேலும் இவரின் சன்னதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டால் எல்லா பிரச்சனைகளும் நீங்கி விடும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக இக்கோவிலுக்கு வருகின்றனர்.

உருட்டு விழியும், முரட்டு மீசையும் கையில் அரிவாளும் கொண்டு ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார் கருப்பசாமி. இருப்பினும் குழந்தைகளின் பயத்தைப் போக்கி அவர்களைக் காத்து-கருப்பு அண்டாதபடி காத்து வருகிறார்.

ஒவ்வாமை, காரணமாக குழந்தைகள் சரிவர சாப்பிட முடியாமல் திடீர், திடீரென பயத்தால் அழுது கொண்டேயிருப்பார்கள். இந்த குழந்தைகளுடன் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் இங்கு வந்து கருப்பசாமியை மனமுருக பிரார்த்தித்து கோவிலில் தரும் விபூதியை குழந்தைகளுக்கு பூச வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கருப்பு மை வைக்கப்பட்டு கருப்பசாமி அருள் பெற்ற தீர்த்தம் முகத்தில் தெளிக்கப்படும்.

இதன் மூலம் குழந்தைகளின் பயம் நீங்கி அவர்கள் வழக்கம் போல் விளையாடத் தொடங்குவார்கள் என்பது ஐதீகம். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் கருப்பசாமியை வணங்கி மை பூசிக்கொண்டால் தங்களது பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பெறலாம்.

கருப்பசாமி கோவிலில் கருப்பாயி அம்மன் சிலையும் உள்ளது. இவரையும் வணங்கி அருள்பெற்றால் தீராத பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள். மேலும் இக்கோவிலுக்கு வந்து கருப்பசாமியை மனதார பிரார்த்தித்து விட்டு புதிய தொழிலைத் தொடங்கினால் லாபம் கொழிக்கும், வியாபாரம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *