2018-02-03-12-51-52

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் தை உத்திர வருசாபிஷேகம் ஞாயிறு அன்று (4.2.2018) நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இக்கோயிலின் மூலவரான சுப்பிரமணிய சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது தை மாதம் உத்திர நட்சத்திரத்தில்தான். எனவே, ஒவ்வொரு வருடமும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று வருசாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தை உத்திர வருசாபிஷேகம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது. வருசாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, கும்பகலச பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கும்ப கலசங்கள் விமானதளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேளதாளம் முழங்க விமானக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மூலவர் சுவாமி சுப்பிரமணியருக்கு 21 வகை அபிஷேகங்கள் மற்றும் கும்ப கலச அபிஷேகங்கள் நடக்கின்றன. பின்னர், விஷேச அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.வருசாபிசேகத்தை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்குப் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. தொடர்ந்து, உற்சவமூர்த்தியான சுவாமி குமரவிடங்கப் பெருமாள் தெய்வயானை அம்பாளுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வருதல் நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *