sai-viratham

 

ஆன்மீகத்தோடு ஒன்று கலந்தது பிராத்தனைகளும்,விரதங்களும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான பிரத்தனைகளை, பக்தர்கள் அவர்தம் வசதிக்கேற்ப செலுத்துவதுண்டு. ஆனால் அதனை முறைப்படி பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டு,அர்ப்பணிப்போடு செய்யும் போது அதன் பலன்கள் அனேகம்.

நமது சீரடி மகானிடமும், பக்தர்கள் தங்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல விதமான விரதங்களை கடைப்பிடிப்பதுண்டு . சீரடி பாபா விரத முறைகளில் எல்லோருக்கும் நன்றாக தெரிந்தது வியாழக்கிழமை விரதம் தான். ஆனால் அது போல் இன்னும் பல வகையான விரதங்களும் உள்ளன. அவற்றில்  சிலவற்றை இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.  

 சாய் சத்யவிரத பூஜையில்,வழக்கமான சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி உள்ளன்புடன் அவரை வணங்க வேண்டும் .

 பாபாவின் வழிபாட்டு முறையில் ,சர்க்கரையில் அக்கறை இல்லா லீலையும் ஒன்று. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருந்தால் ,மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.

 பாபா சத்சரித்திரத்தில், ‘டெண்டுல்கர் அத்தியாயம்’ என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாயத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என்பது சாய் அடியார்களின்  நம்பிக்கை.

 திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது என்பது பலனடைந்தவர்களின் வாக்குமூலம்.

 கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று,  அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ என்னும் அணையா நெருப்பு முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு படைக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்.

 நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21,  48,  54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம். பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் தேங்காய் துருவல், அவல், சர்க்கரை கலந்த இனிப்பை நைவேத்தியமாக  படைக்க வேண்டும். 9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.

 இந்த வழிபாட்டு முறைகளில் யாருக்கு எந்த வேண்டுதல் உண்டோ, அதற்கேற்ப அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை, இன்ன தேதிக்குள் முடிய வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், அவர் மீது முழு நம்பிக்கை வைத்து செய்தால் அவர் நமக்கு எல்லா செல்வங்களையும் அருள்வார்.

 சாய் பிராத்தனை   இருளகற்றி நம் வாழ்வில் ஒளியேற்றும் . ஜெய் சாய்ராம் 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *