Tag: Vazhipadu

  • Narashimar viradha vazhipadu

    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார்.

    அவரது படத்தை பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு விரதமிருந்து நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    ‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்’.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது.

    இதை முறையாக விரதமிருந்த கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.

  • Bharani Deepa vazhipadu

    மனதால் கூட பாவம் செய்யக் கூடாது, பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய, ஆலயங்களை நோக்கியும் அடியெடுத்து வைக்கின்றனர்.

    தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று மாலையில், இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    அன்றைய தினம் வீட்டில் உள்ள அனைத்து வாசல்படிகளிலும் படிக்கு மூன்று வீதம் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணையிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்ட லட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள், ஐஸ்வரியம் பெருகும்.
     

  • Kuladeiva Vazhipadu En

    குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

    இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

    குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.

  • Garuda vazhipadu

    அணைத்து ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.

    மேஷம் – புதன், சனி
    ரிஷபம் – செவ்வாய், வியாழன்
    மிதுனம் – திங்கள், செவ்வாய், வியாழன்
    கடகம் – புதன், வெள்ளி
    சிம்மம் – திங்கள், வெள்ளி
    கன்னி – திங்கள், செவ்வாய், வியாழன்
    துலாம் – வியாழன், வெள்ளி
    தனுசு – திங்கள், செவ்வாய்
    மகரம்  – திங்கள், வியாழன்
    கும்பம்  – புதன், வியாழன்
    மீனம் – வெள்ளி, சனி
     

  • Selva valam tharum puratasi vazhipadu

    புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் மகத்துவமே தனித்துவமானது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தூய்மையான பக்தியோடு பெருமாளை, திருப்பதி ஏழுமலையானை வணங்கினால் ஏழையாக இருந்தாலும் வைகுண்ட பிராப்தியை அளிப்பார்.  

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை போட்டு வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    பெருமாளுக்கு தூய பச்சரிசி மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
     

  • Selvam kozhika puratasi vazhipadu

    தமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக் கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.

    சனிக்கிழமை விரதம்
    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். 

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
     

  • pavangalai vilakkum gokulastami vazhipadu

    கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபட்டால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். கோகுலத்தில் வாழ்ந்ததால், கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

    கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்-சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

  • Garuda Bagavan Vazhipadu

    கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

    ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.

    புதனின் நக்ஷத்திரங்களான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்கள் கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். முக்கியமாக நாகர்கள் எனப்படும் ஸர்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் கருடனை வணங்கி வர ஆயில்ய நக்ஷத்திரத்தின் தீய குணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.

    ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புன்னியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு –  கேது அமைய பெற்றவர்கள்.

    ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்,  சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு – கேது சேர்க்கை பெற்றவர்கள்.

    கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள், பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.

    கோசார ராகு – கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்.

    ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள் கருட பகவானை வணங்க வேண்டும். 
     

  • Narasimar Vazhipadu

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.
     

  • Anjaneeyar Vazhipadu

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ள கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. சதுரபலகை வடிவ கல்லில் தேவர்களுடன் சக்கரத்தாழ்வார் இருப்பது சிறப்பாகும்.

    கோர்ட்டு வழக்கு, வாகனத்தினால் வரும் விபத்து ஆகிய வற்றில் இருந்து பக்தர்களை காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியின் பின்புறத்தில் நரசிம்மர் உள்ளார். நரசிம்மரை வழிபட்டால் எதிரியின் பலம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமைதோறும் மஞ்சள்பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

    மூலஸ்தானத்தின் கருவறையில் கமலவல்லி தாயார், லட்சுமி சமேத கதிர்நரசிங்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை தன்வசப்படுத்தி, அவர்கள் கேட்ட வரங்களை பெருமாள் நிறைவேற்றி கொடுக்கிறார். அக்னி மூலைப் பகுதியில் வீரமகா ஆஞ்சநேயர் இருப்பது இங்குதான். பெருமாளை விட 6 மடங்கு பலம் கொண்டவராக ஆஞ்சநேயர் கருதப்படுகிறார். ஆஞ்சநேயரின் உடல்பகுதி கிழக்கு நோக்கியும், தலை வடக்கு நோக்கியும் உள்ளது.

    என்னிடம் வாருங்கள், அனைத்து காரியத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் வகையில் வீர நடைபோட்டபடி ஆஞ்ச நேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை தோறும் 9 வாரங்கள், 9 முறை தொடர்ச்சியாக ஆஞ்சநேயரை சுற்றி வலம் வந்தால், தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருமணமாகாத பெண்கள், ஆஞ்சநேயர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் காப்பு, புஷ்ப அலங்காரம், காய்கறி அலங்காரம், பழவகைகள் அலங்காரம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். வாகனங்களுடன் கூடிய பைரவர் சன்னிதி இங்கு தான் உள்ளது. தொழில் ரீதியாக வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும், பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் 12 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு பூசணிக்காய் படைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அனைத்து தொழில்களும் சிறந்தோங்கும். வாகன விபத்து, நான்கு கால் ஜீவன்களால் ஏற்படும் ஆபத்து ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின்நம்பிக்கை.