Tag: Thiruppavai

  • Thiruppavai Padal 21

    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
    ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
    ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

    பொருள்:

    கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

    விளக்கம்:

    “மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்…ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.
     

  • Thiruppavai Padal 20

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
    செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

    பொருள்:

    முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

    விளக்கம்:

    கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!
     

  • Thiruppavai padal

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    “”குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

    விளக்கம்:

    பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.”நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து “நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் “நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
     

  • Thiruppavai 18

    உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
    நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
    கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
    வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
    பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
    செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

    விளக்கம்:

    பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் “எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
     

  • Thiruppavai – 17

    அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
    எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
    அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
    உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
    செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

    பொருள்:

    ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

    விளக்கம்:

    திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் “தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
     

  • Thiruppavai – 16

    நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
    கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
    ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
    நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

    பொருள்:

    எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

    விளக்கம்:

    ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, “”இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. “அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், “இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.
     

  • Thiruppavai padal 15

    எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
    சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
    வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
    வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
    ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
    எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
    வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

    பொருள்:

    “”ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, “”கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.
    உடனே தோழிகள், “”உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், “”சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.””அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். “”என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், “”நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.

    விளக்கம்:

    ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.

  • Thiruppavai Padal 14

    உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
    செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

    பொருள்:

    எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

    விளக்கம்:

    கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.