Tag: Thiruppavai

  • thiruppavai thiruvempavai

    திருப்பாவை
    இந்தப் பூவுலகத்தாரை, பக்தி மார்க்கத்தில் உய்ய வைக்க ஸ்ரீபூமாதேவியின் அம்சமாக பூமியில் அவதரித்தவர் ஸ்ரீஆண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் திவ்யதேசத்தில் 'பெரியாழ்வார்' என்றழைக்கப்படும் 'ஸ்ரீவிஷ்ணுசித்தரின்' வளர்ப்பு மகளாக, நந்தவனத்திலே… துளசிச் செடிகளின் மத்தியில், அவதரித்தவர்.

    மாலவனின் மீது மாளாத அன்பும் பக்தியும் கொண்டு பூமாலையோடு பாமாலையும் தொடுத்து மூடி, மாலவனுடன் இரண்டறக கலந்தவர். எனவே இறைவனையே ஆட்கொண்டதால் 'ஆண்டாள்' எனவும், கோதை நாச்சியார் என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் பெயர் பெற்றவர்.

    நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் இயற்றிய பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்தான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் மீது ஆண்டாள் இயற்றிய பாடல்கள் 143 ஆகும். 'நாச்சியார் திருமொழி' என்கிற தலைப்பில் ஆண்டாள் அருளிச்செய்த பாடல்களின் ஒரு பகுதியே 'திருப்பாவை'.

    திருப்பாவை முப்பது பாசுரங்களைக் கொண்டது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஸ்ரீமாலவனை தரிசிக்கச் செல்லும் 'ஆண்டாள்', அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருக்கும் தம் தோழியரை எழுப்பி அவர்களுக்கும் அந்த பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை துயில் எழுப்புவது போல் மாலவனின் பெருமைகளைக் கூறுவது போல், ஆண்டாள் உருகி உருகிப் பாடினாள். அதுவே திருப்பாவை!

    'திருப்பாவை' இவ்வுலக சுகபோகங்களில் தம்மை மறந்து மாயை எனும் மயக்கத்தில் உழலும் இவ்வுலக மாந்தர்களை விடுவித்து, இறைவன் திருவடியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தூக்கத்தில் இருந்து துயில் எழுப்பது என்பதன் உட்கருத்து!.

    அதே வேளை, மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதில் வீசும் காற்றில் பிராணவாயு அதிகமாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. எனவே உடலும் உயிரும் ஆன்ம நலத்துடன் வாழ வேண்டி திருப்பாவை நோன்பு நோற்போம். ஸ்ரீஆண்டாளின் திருவாக்குப்படி என்றும் வளமோடு வாழ்வோம்!

    திருவெம்பாவை 
    மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வருகின்றன. கன்னிப் பெண்கள் ஒருவரை மற்றொருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒருங்கு சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சென்று கூட்டமாக நீராடியவாறு தாங்கள் வழிபட்டு வந்த பாவைத் தெய்வத்திடம், தங்களது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டியபடி பாடுவதாக அமைந்த பாடல்கள் இவை. 

    திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.

    திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பத்து பாடல்களையும், மார்கழி மாதத்தில் பாடுவது மரபு. சிறு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலாக பல பாடல்கள் அமைந்துள்ளதையும், ஒத்த வயதினர் பேசும்போது அவர்களுக்குள்ளே எழும் கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதையும் நாம் உணரலாம். 

  • Thiruppavai padal 30

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    பொருள்:

    அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

  • Thiruppavai Paadal 29

    சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை; பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
     

  • Thiruppavai Padal – 28

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
    பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

    விளக்கம்:

    “குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.
     

  • Thiruppavai Padal – 27

    கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
    பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    நெய் பெய்து முழங்கை வழிவார
    கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

    விளக்கம்:

    “கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து “கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். “”கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.
     

  • Thiruppavai Padal 26

    மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

    பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

    விளக்கம்: பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
     

  • Thiruppavai Padal 25

    ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
    தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
    அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

    விளக்கம்:

    பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் “தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
     

  • Thiruppavai Padal 24

    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
    சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
    கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
    கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
    குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

    விளக்கம்:

    இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை “போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
     

  • Thiruppavai Padal 23

    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

    விளக்கம்:

    எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு…என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.
     

  • Thiruppavai Padal 22

    அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
    கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
    செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
    எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்
    களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!

    விளக்கம்:

    இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை… அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.