Tag: Thai Poosam

  • Thai Poosam En Kondada padugiradhu

    தை மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி தினம் ஒரு சிறந்த நாளாகும். இத்தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன. இந்நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே. தில்லை வாழ் அந்தணர்கட்கு, இருக்க இடமும், மேரு மலை போன்ற எழுநிலை மாளிகைகளையும், தேர் வரிசைகள், திருக்கோயில் கோபுரங்கள், கனகசபை முதலிய யாவும் செய்வித்து அந்தணர்கள் மூலம் திருவிழாக்களையும் நடத்தி வைத்தான் இரணியவர்மன் என்னும் மன்னன்.

    “தாது மாமலர் முடியாலே’ என்று தொடங்கும் திருப்புகழில்,

    வீறுசேர் வரையரசாய் மேவிய

    மேரு மால்வரை என நீள் கோபுர

    மேலை வாயிலின் மயில் மீதேறிய பெருமாளே… மேற்கண்ட செய்தி தெரிகிறது. ஒருசமயம் பிரம்மனை முருகன் சந்திக்க நேர்ந்த பொழுது, பிரம்மன் முருகன் சிறுவன்தானே என வணங்காது நிற்க, முருகனும் அவரை யார் என்று கேட்க, நான்முகனும் தான் வேதத்திற்கு அதிபதி என்று சொன்னார். முருகன் உடனே பிரம்மனை வேதம் கூறும்படி பணித்தார். பிரம்மனும் “ஓம் என ஆரம்பித்தார். முருகவேள் உடனே ஓம் என்பதின் பொருளைக் கேட்க நான்முகனும் விழிக்க, அவர் குடுமியில் குட்டு விழுந்தது. அதுமட்டுமன்று தொடக்கமே சரியில்லாதபோது பிரம்மதேவன் எங்ஙனம் உலகத்தைப் படைப்பான் என எண்ணி அவரை கந்த வேள் சிறையில் அடைத்தார். இதைக் கண்ணுற்ற சிவபிரானும் இங்ஙனம் கேட்டார்.

    “ஓமென உறைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ

    போமெனில் அதனையின்னே புகலென இறைவன் சொற்றான்”

    முற்றொருங் குணரும் ஆதி முதல்வ கேள் உலகமெல்லாம்.

    பெற்றிடும் அவட்கு நீ முன் பிறருணராத வாற்றல்

    சொற்றதோர் இனைய மூலத் தொல் பொருள் யாருங்கேட்ப

    இற்றென இயம்பலாமோ மறையினால் இசைப்பதல்லால்

    என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னத்

    தன்றிருச்செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும்

    ஒன்றொறு பதத்தின் உண்மை உரைத்தனன்…(கந்த புராணம்)

    தந்தையார் முருகனிடம் “ உனக்கு அப்பொருள் கூற வருமோ? எனக் கேட்ட போது, தம்மாற் கூற முடியும் என்றும், ஒருமுறை தந்தையான சிவபிரான் ரகசியமாகத் தாய் உமையவளுக்கு உபதேசித்த பொழுது, தாம் தாயின் கூந்தலில் ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகக் கூறினார் வடிவேலன். இதை அறிந்த பார்வதியும் குழந்தையாயினும் ரகசியத்தைக் கேட்டதனால் சாபத்திற்கு உள்ளாவான் எனக் கூறியதன் பேரில், முருகனும் சாபம் தீரத் தவம் இருந்தார். அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே. 

  • Thai Poosam Thodriya varalaru

    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின.

    கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். 

    அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
     

  • Thai poosathin vilakkam

    தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.

    வள்ளல் பெருமான் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள். மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும். 

    அகரம்+உகரம்+மகரம்=ஓம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி 

     
    * சந்திரன் என்பது மனஅறிவு. 
    * சூரியன் என்பது ஜீவ அறிவு. 
    * அக்னி என்பது ஆன்மா அறிவு. 

    சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம். மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

  • Thoranamalai Murugan Koil Thai Poosam

    நெல்லை மாவட்டம் கடையத்திற்கு அருகே தென்றல் தவழும் தென் பொதிகை மலைத்தொடரில் வீற்றிருக்கும் தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வரும் 21-ந் தேதி நடக்க உள்ளது. தோரணம் போல் மலை அமைந்த காரணத்தால் தோரணமலையாக ஸ்தலம் விளங்குகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.

    926 படிகளை ஏறி, மலை உச்சியை அடைந்தால், முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த தலத்தில் முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்தில் குன்றுக்குள் இருக்கும் முருகனை வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

     இத்தகைய சிறப்புக்குரிய தோரணமலை முருகன் கோவில் தைப்பூச விழா வரும் 21-ந் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.

    அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், விவசாயம் தழைக்க அகத்திய பூஜை, மதியம் 2 மணிக்கு ஊட்டி படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனம், இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தோரணமலையானின் ஆவணப்படம், பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன், கே.ஏ.செண்பகராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.