Tag: Sivan Koil

  • Sivan koilil valam varuvadhu eppadi

    கோயிலுக்கு செல்பவர்கள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

    நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.

    சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

    சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

    விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.

    இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

    பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

    கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

    விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

    சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

    ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

    மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.

    நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.

    நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

    பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

    பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

    நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
     

  • Sri Kalahasti Sivan koil Hundiyal Kanikkai

    ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் 32 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 1.55 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள புகழ் பெற்ற சைவத் ஸ்தலமான ஸ்ரீ காளகதீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை  சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் இன்று எண்ணப்பட்டது. 

    இதில் 32 நாட்களுக்கு ஒரு கோடியே 55 லட்சத்து 72 ஆயிரத்து தொள்ளாயிரத்து 39 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 60 கிராம் தங்கம், 660 கிலோ. 150 கிராம் வெள்ளி, வெளிநாட்டு டாலர்கள் 176 காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

    இதில் அமெரிக்க டாலர்கள் 75, மலேசியா 59 , குவைத் 9 , சிங்கப்பூர் 7, இதர நாடுகளை சேர்ந்த டாலர்கள் 26 என 176 வெளிநாட்டு டாலர்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

  • Thalakona Sivan Koil

    தலகோனா, மலைகளின் தலைவன், திருப்பதி ஏழுமலைகளில் முதல் மலை, திருப்பதியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் உள்ளது இந்த தலகோனா மலை. திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. 

    சந்தன மரங்கள் மற்றும் அறிய காட்டு விலங்குகள் இருக்கும் இடம். தலகோனா நீர்வீழ்ச்சி விழும் நீர் எண்ணற்ற மூலிகைகளின் கலவையாகும், காட்டு வழிப்பாதைகள் நிறைந்த இந்த இடம் பக்தியுடன் கோயிலுக்கு செல்பவர்களுக்கு மட்டுமல்ல ட்ரெக்கிங் செல்பவர்களுக்கும் ஏற்றது. திருப்பதியில் இருந்து காரில் சென்றால் எளிதாக சென்றடைய முடியும். இங்கு "அதர்மம்", "காதல் கொண்டேன்" மற்றும் சில திரைப்படங்களின் படங்களும் எடுக்கப்பட்டதாம். தலகோனா நுழையும் முன் செக்போஸ்டில் உங்கள் வாகனங்களை அலசி ஆராய்ந்த பின்னர் தான் உள்ள அனுமதிக்கிறார்கள். 

    காரில் எத்தனை வாட்டர் பாட்டில் இருக்கிறது என்று கேட்டு பாட்டிலுக்கு பத்து ருபாய் வாங்கிக்கொண்டு, திரும்பி வரும்போது காலி பாட்டிலைக் காட்டி காசைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர், பிளாஸ்டிக் குப்பைகளை கையாள இந்த யுக்தி. செக்போஸ்டிற்கு பிறகு சாலை சுமாராகத்தான் இருக்கும். குரங்குகள் தொல்லையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அருவியிலிருந்து வரும் நீரை ஒரு குட்டை போல் தேக்கி வைத்திருந்தனர். மலை ஏற முடியாதவர்கள் இங்கேயே குளித்து விட்டு செல்லலாம். 

    டிரெக்கிங் போல் இல்லாமல் அனைவரும் சிரமமின்றி ஏற சிமென்ட் கற்களாலும் கைப்பிடிகளாலும் வழி அமைத்திருந்தனர். அரைமணி நேர நடை பயணத்திற்க்கு பின்பு அருவி கொட்டும் ஓசை கேட்கும். சுமார் 80 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாக வீழ்ந்துக்கொண்டிருக்கும். வனத்துறை சார்பில் தடுப்புக்கம்பிகள் இருந்ததால் தைரியமாக அருவின் கீழ் செல்லலாம். மேலே இருந்து ஐஸ் கட்டிகளை எறிவது போல் இருக்கும இந்த நீர் வீழ்ச்சி. வருடம் 365 நாட்களும் தண்ணீர் வந்துகொண்டிருகும் என்றார்கள். சீசனில் தண்ணீரின் வீழ்ச்சி பிரம்மாண்டமாய் இருக்குமாம். 

    இன்னும் சற்று மேலே சென்றால் அருவியின் இன்னோரு பகுதியை காணலாம் என்றார்கள். அங்கு செல்ல படிகள் கூட அதிகம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றும் கடினமாகவும் இல்லை. மிக அற்புதமான ஒரு சூழல் அங்கு. வெகு உயர்ந்த செங்குத்தான மலை முகட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது – வேறெந்த பாறையையும் தொடாமல்! தண்ணீர் விழுந்து தெறிக்கும் தரையும் தெரியவில்லை! அருவியில் நின்றால் தண்ணீர் முழுவதும் நேராக நம்மீதுதான் விழுகிறது – மொத்த விசையுடன். ஒவ்வொரு துளியும் தனித்தனி ஊசியாய் உடலில் இறங்குவது போல, வேறெங்கும் உணர முடியாத இன்ப வேதனை அது!
     

  • Uthrakosa Mangai

    அதிசய மரகத நடராஜர் சிலை உள்ள உத்திர கோசமங்கை மங்கள நாதர் கோயில் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என்று நம்பப்படுகிறது.

    ஆதிகாலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது. இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன், அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்தால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.

    பிரம்மனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும் தான். இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது.

    ஒருமுறை நான்முகனுக்கும் திருமாலுக்கும் யார் பெரியவர்? என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும் மற்றொருவர் முடியையும் தேடிச்செல்வது என்றும் யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

    பிரம்மன் முடியைத் தேடியும் விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன் தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தனர்.

    அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும் என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

    ஒரு அதிசயமான மரகதத்தினால் ஆன நடராஜர் சிலை உள்ள மிகவும் பெருமை வாய்ந்த திருத்தலம். மதுரையிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்திர கோசமங்கை என்ற ஊரில் உள்ள பிரசித்திபெற்ற மங்களநாதர் –மங்களாம்பிகை கோவில் ஆகும்.

    இந்த தல வரலாறு பற்றி கூறியது என்னவென்றால் ராவணனுடைய மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்ததாம். அவள், இந்த உலகத்திலேயே சிறந்த சிவபெருமானை வணங்கும் பக்தனையே திருமணம் செய்து கொள்வேன் என்ற கொள்கையில் இருந்தாள். சிவபெருமானை நோக்கி தியானம் செய்தாள் சிவபெருமான் அவரிடமிருந்த வேதநூல் ஒன்றை முனிவர்களிடம் தந்து இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் அவர்களிடம் என்னுடைய பக்தை மண்டோதரி என்னை வணங்கி தியானம் செய்து வருகிறாள். எனவே அவளுக்கு காட்சி தர செல்கிறேன் என்றார். மண்டோதரி முன்னர் ஒரு குழந்தை உருவத்தில் காட்சி தந்தார். அப்பொழுது அங்கு வந்த ராவணன், சிவபெருமான் தான் வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டான். ராவணன் ஆர்வத்தில் குழந்தை உருவில் உள்ள சிவபெருமானை தொட முயன்றான். உடனே சிவபெருமான் அக்னி பிழம்பாக மாறி அனைத்து பொருட்களும் எரிய தொடங்கின. வேத நூல்களை காப்பாற்றும் முயற்சியில் தேவர்கள் முயன்றனர். அதில் தோல்வியடைந்து சிவபெருமானுக்கு அதில் தோல்வியடைந்து சிவபெருமானுக்கு அவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்று, அங்கிருந்த தீர்த்த குளத்தில் விழுந்து மாண்டார். மாணிக்க வாசகர் மட்டும் வருவது வரட்டும் என்று வேத நூல்களை இறுகப்பற்றி நமச்சிவாய நாமம் கூற ஆபத்தின்றி முடிந்தது. வேத நூல்களை காப்பாற்றி சிவபெருமானிடம் ஒப்படைத்தார். மாண்ட தேவர்களையும் இறைவன் உயிர்ப்பித்தார். பின்னர், மண்டோதரிக்கும் ராவணனுக்கும் திருமணம் நடக்க அருள்புரிந்தார்.

    இந்த வேளையில் தைரியமாக தனது மீது பற்று கொண்டு வேத நூலை காத்த, மாணிக்க வாசகருக்கு, கௌரவித்து லிங்க வடிவத்தில் இருத்தி உள்ளார். மேலும் இந்த தலத்தில் மரகத நடராஜர், மாணிக்க வாசகர், இரட்டை பைரவர், சுப்ரமணியர் ஸ்படிக லிங்கம் ஆகியவைகள் உள்ளது சிறப்பானதாகும். சிவபெருமானுக்கு தாழம்பூ சாத்துவது இங்கு மட்டுமே உள்ளது. இறைவன் மங்களநாதர், இறைவி மங்களேஸ்வரியின் திருவருளைப்பெற மூன்று வேளையும் தரிசித்து வழிபட தடைபட்ட திருமணங்கள் நிறை வேறும் என்பதுவும், முன்வினையில் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பதுவும், இப்பிறவியில் செய்த தீயபாவங்களும் அகலும் என்பதுவும் ஐதீகம். காலை, மதியம் , மாலையில் மூன்று வேளையும் தரிசிக்க ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    மரகதச்சிலையின் உயரம் 5 1/2 அடி உயரத்தில் உள்ளது. இதற்கு மார்கழி மாதம் திருவாதிரை அன்று மட்டுமே பூஜை நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் சந்தனக் காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் என்ற விழா அன்று, மரகதச்சிலையின் சந்தன காப்பு நீக்கி, மற்ற அபிஷேகம் அனைத்தும் நடத்தப்படுகிறது.

    இங்குள்ள உட்பிரகாரத்தில் நுழையும் இடத்தில் இரண்டு யாளிகள் வாயில் உள்ள கல்பந்தை கைகளால் உருட்ட முடிவது, சிற்பக்கலையின் நுணுக்கத்தை காண முடிகிறது. திருவாதிரை நோன்பு திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி தினத்தன்று முழுவதும் உபவாசம் இருந்து ஈஸ்வரனை தியானிப்பதுவே திருவாதிரை நோன்பாகும். சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை என்பதால் இந்த பெருமை பெறுகிறது. அன்று தேரில் வீதி உலா வருவதை ஆருத்ரா தரிசனம் என்கின்றனர். இதனால் முக்தி கிடைப்பதாக கூறுகின்றனர்.

    எனவே தான் மார்கழி மாதம், சிறப்புடைய மாதம் என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் உளுந்து மாவினால் செய்த களி, நைவேத்யமாக படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என பெரியவர்கள் கூறுவர்.