Tag: Rameswaram

  • Amavasai Rameswaram Nadai Thirappu

    தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 24 ஆம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் பகல் முழுவதும் நடைதிறந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு அன்று அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும். காலை 7 மணிக்கு ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெறுவதைத் தொடர்ந்து கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். 

    அமாவாசையையொட்டி பகல் முழுவதும் கோயில் நடை திறந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் இடைவிடாமல் அபிஷேக ஆராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் ஸ்ரீராமர் வெள்ளி ரதத்தில் வீதியுலா நடைபெறும். அமாவாசையை முன்னிட்டு தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்வதற்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 

    அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்பதால் அன்று பகல் முழுவதும் இடைவிடாமல் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும் அனுமதிக்கடுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

  • Rameswaram Ramanadha swamy

    மூலவர் ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர் என்றும் அம்பிகை பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி என்றும் திருவருள் புரியும் திருத்தலம் ராமேஸ்வரம். கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.) தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 8வது. இத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கத்தலம் இது. 

    ராமருக்கு உதவி செய்த தன் மூலம் ராவணனின் அழிவிற்கு விபீஷணனும் ஒரு காரணமாக இருந்தான். அந்தப் பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதிரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, ‘ஜோதிர்லிங்கம்’ ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சந்நதி பிராகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது. மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக 

    லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.

  • Rameswaram Masi siva rathiri

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது.  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தவகையில் இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    விழாவின் ஐந்தாம் நாளான நேற்று ராமநாத சாமிக்கும், பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாளும் சுவாமியும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா வந்தனர். 

    திருவிழாவின் முக்கிய நாளான மார்ச் 4ம் தேதி அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், இரவு சுவாமி – அம்பாள் வெள்ளிரத வீதி உலாவும் நடைபெற உள்ளது. மறுநாள் காலை தேரோட்டத்தையொட்டி அலங்கரித்த திருத்தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் ரதவீதியில் உலா வருவர். தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.