Tag: Muruga

  • Murugan who removes endless suffering…

    தீராத துன்பத்தை போக்கும் முருகன் …

    முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு எப்பேற்பட்ட கஷ்ட சூழ்நிலையும் படிப்படியாக விலகி ஓடும்.

    முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மிக அதிகம். வழிபாடுகளிலும் வழிபாட்டு முறைகளிலும் முருகப்பெருமானுக்குத்தான் பலவிதமான வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் இருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    முருகப்பெருமானுக்கு எல்லா சிவாலயங்களிலும் சந்நிதி அமைந்திருக்கும். பெரும்பாலான சிவன் கோயில்களில் முருகக் கடவுளும் சாந்நித்தியம் கொண்டவராகத் திகழ்வார். ஆறுபடை வீடுடையோன் என்று முருகக் கடவுளைச் சொன்னாலும் ஆறு படைவீடுகள் என்று சொல்லப்படும் கோயில்களையும் தாண்டி ,ஏராளமான முருகன் கோயில்கள் இருக்கின்றன. அதுவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன.

    அதேபோல், பல அம்மன் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. அம்மையப்பன் என்று சிவபார்வதியைச் சொல்வோம். அம்மை குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் அப்பன் சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் மைந்தன் கந்தனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

    ஆறுபடை வீடுகள் எனும் பட்டியலுக்குள் வராத, வடபழநி, வயலூர், குமரன் குன்றம், குன்றத்தூர் விராலிமலை முதலான ஏராளமான கோயில்களில் இருந்துகொண்டே தன் பக்தர்களின் குறைகளைப் போக்கி அருளிக்கொண்டிருக்கிறான் அழகன் முருகன்.

    வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வேலவனுக்கு ஏராளம். காவடி எடுத்து வழிபடுவார்கள். வேல் எடுத்து வந்து பூஜிப்பார்கள். பால் குடம் ஏந்தி வருவார்கள். பாத யாத்திரை மேற்கொள்வார்கள். பாலபிஷேகம் செய்வார்கள்.. முடிகாணிக்கை செலுத்துவார்கள். சேவல் வழங்குவார்கள்.

    முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். அடைந்த துன்பங்களில் இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றித் தந்திடுவான் கந்தன்.

    ஓம் செளம் சரவணபவ
    ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ

    எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை 21 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை சொல்லி வாருங்கள். அதேபோல், செவ்வாய்க்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் சொல்லி வழிபடுங்கள். தினமும் சொல்லி வழிபடுங்கள். நம் வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வேலவன். சிக்கல்களையெல்லாம் போக்கி அருளுவான் சிங்காரவேலன்.

     

  • Muruga nayanar history

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    காவிரிசூழ் நாடான
    சோழ நாட்டில் திருப்பூம்புகலூர் என்ற திருத்தலம்.

    இச் சிவதலத்திற்கு திருப்புகலூர் என்ற பெயரும் உண்டு.

    மூவர் தேவாரம் 
    பெற்ற இடம். 
    அப்பர் சுவாமிகள் 
    முக்தி பெற்ற தலம். சுந்தரமூர்த்தியாருக்கு இறையனார் செங்கல்லைப் பொன்னாக்கிக்குத்
    தந்த தலம் 
    எனப் பற்பல
     பெருமைகளை கொண்ட
    தெய்வாம்சம் நிறைந்த சிவத் தலமே திருப்புகலூர்.

    திருப்புகலூரின் திருப்புகழைச் சேர்க்க 
    தனி கோயில் கொண்டிருக்கும் 
    சிவனின் திருநாமம் வர்த்தமானீஸ்வரர்.

    சோழ நாட்டைப் போலவே இக்கோயிலும் 
    நீர் சூழ்ந்திருக்கும் பெருமை கொண்டது.

    அங்கு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் சிவனடியார் கூட்டம் ஏராளம்….  ஏராளம். அவர்கள் 
    நெற்றிமுதல் 
    உடலெங்கும் பூசும் திருநீறு 
    தாராளம்….  தாராளம். 

    திருப்புகலூரில் வாழ்வாங்கு வாழ்ந்த சிவனடியார்களில் முதன்மையானவர் 
    முருக நாயனார்.

    அவர்
    அவதரித்தது மறையோதும் 
    மறையோர் குலம்.

    சிவத் தொண்டில்
    குறிப்பாக சிவபூசையில்
    லிங்கத் திருமேனியைத் தொட்டுத் தொடும்
    அர்ப்பணிப்பு கொண்ட அந்தணர் குலம்.

    முருகநாயனார் நான்மறைகளை 
    நன்குணர்ந்தவர்.

    ஞான மார்க்கத்தில் எல்லை கண்டவர்.
    எல்லையில்லாதவன்
    ஞான எல்லைக்குள் தியானிப்பவர்.

    அவரது சிவப்பணி அருமையானது.
    நறுமணங் கமழும் 
    பெருமை கொண்டது.

    இறையனாருக்குப் 
    பல வண்ண மலர்கள் பறித்து காலத்திற்கும் தருணத்திற்கும் ஏற்றபடி மாலை கட்டி 
    உரிய நேரத்தில் 
    உரிய மாலைகளை வழங்குதலே 
    முருக நாயனாரின் 
    ஒரே சிவப்பணி.

    வேறு எதுவும் செய்யார். இறையை 
    வேறு எதுவும் வேண்டார்.

    எதுவும் வேண்டுதலற்ற பிரார்த்தனையே
    அவரது சிவவழிபாடு.

    விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் துயில் எழுவார்.

    சிவ நாமம் 
    கூறியபடியே நீராடுவார். தூய திருநீறு அணிவார். சந்தியாவந்தனம் செய்வார்.

    பலவித பூக்கூடைகளோடு வண்ண மலர்களும் வாசனை பூக்களும் தெய்வீக இலைகளும் புதிதாய் பூத்திருக்கும் 
    நந்தவனம் செல்வார்.

    முத்து கிளத்தல் என்ற சூத்திரப்படி முதலில்
    அழகுப் பூக்களை 
    மனதார ஓதுவார்.

    வண்ண மலர்களை வலிக்காமல் பறித்து தனித்தனி கூடைகளில்  அடிபடாமல் சேர்ப்பார்.

    அலர்ந்தது
    பழமையானது
    உதிர்ந்தது
    காற்றில் அடிபட்டது
    ஆடையிலும் கையிலும் எருக்கு இலையிலும் ஆமணக்கு இலையிலும் பட்டுத் தெறித்தது 
    புழுக்கடி
    சிலந்தி நூல்
    மயிர், எச்சம் பட்டது போன்ற மலர்களில்
    ஒன்றினைக் கூடத் தொட்டுப் பறிக்க மாட்டார்.

    பிறகு 
    பறித்த மலர்களைத் 
    தனி இடத்திற்கு 
    எடுத்துச் சென்று 
    பூமாலை தொடுப்பார்.

    அதன் பின்னர் 
    மாலைகளை எடுத்துக்கொண்டு வர்த்தமானீஸ்வரர் சன்னதி சென்று 
    மனதார பஞ்சாட்சர மந்திரம் சொல்லி மாலைகளை மாயனாருக்குச் சூடி
    சிவ ஆகமங்களில் சொல்லியவாறு அர்ச்சனை செய்து மனமுருகப் பூசிப்பார்.

    முருகநாயனார் மலர்களைப் பறிப்பதும் தனித்தனி கூடைகளில் சேகரிப்பதும்
    பின் 
    மாலைகள் தொடுப்பதும் அவற்றை 
    ஆதி முதல்வனுக்கு முறையாகச் சூட்டி 
    மறை ஓதுவதும்
    சிவபிரானே புறத்தே
    காட்டிக் கொள்ளாது
    அகத்தே கிறங்கிப் போகும்
    சிவநெறிச் செயல்கள்.

    பஞ்சாட்சர மந்திரம் 
    என்னும் 
    மகா மந்திரம் 
    உச்சரித்தபடி 
    முற்றும் உணர்ந்தோனை மூல நாதனைப்
    பூசிப்பது 
    பிறப்பு இறப்புப் பிடியிலிருந்து விடுவிக்கும் 
    மகிமை கொண்டது என்பது மறைகள் சொல்லும் 
    மரணமில்லாப் பெருவாழ்விற்க்கு எளியவழி.

    மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பது 
    சச்சிதானந்த மயமானது என்பர் ஆன்றோர்.

    சத்து என்பது நிறம்.
    சித்து என்பது வடிவு. ஆனந்தம் என்பது மனம். இவையே சச்சிதானந்தம் என்பதே இதன் விளக்கம்.

    பூக்களைக் கொண்டு பரம்பொருளை வேண்டினால் 
    பூவினுள் மகரந்தம் பொருந்துவது போல் சிவனுள்ளே 
    சிவமணம் கமழும் என்பது ஓர் ஆன்மிகக் குறிப்பு.

    முருக நாயனாரின் 
    மலர்த் திருப்பணி மறையோன் முதல்வனின் மனம் நெகிழும் அளவிற்கு மணம் பரப்பி இருக்கும்.

    மந்தாரம் 
    கொன்றை 
    செண்பகம் முதலான
    கோட்டுப் பூக்கள் என்னும் மரத்தில் வளரும் பூக்கள்.

    நந்தியாவட்டம் 
    அலரி 
    வெள்ளெருக்கு 
    கரந்தை 
    தும்பை 
    ஆகிய நிலப் பூக்கள்.

    மல்லிகை 
    முல்லை 
    சம்பங்கி 
    ஜாதி 
    போன்ற கொடிப் பூக்கள்.

    தாமரை 
    நீலோற்பவம் 
    செங்கழுநீர் 
    உள்ளிட்ட நீர்ப் பூக்கள்.

    முதலான 
    நான்கு வகைப் பூக்களை நாசிக் காற்று கூட 
    பட்டு மாசு படாமல்  
    தன் தலைக்கு மேல் 
    உயரப் பிடிக்கும் தண்டின் மேல்முனையில் 
    கட்டப்பட்ட கூடையில் 
    மென்மையாகப் பறித்து விழச் செய்வார்.

    கோவை மாலை 
    இண்டை மாலை 
    பக்தி மாலை 
    கொன்றை மாலை 
    சர மாலை 
    தொங்கல் மாலை 
    என்று ஆறு வகையாக  திருமாலைகள் அமைத்து அந்தந்த காலத்திற்கேற்றபடி தொகுத்துக் கட்டி 
    அதற்குரிய நேரத்தில் இறைக்குச் சாத்தி ஏகாந்தம் கொள்வார்.

    மலர்களை எடுக்கும்போதும் தொடுக்கும்போதும் ஐந்தெழுத்தை உச்சரிப்பார்.
    அர்ச்சனை 
    புரியும் போது 
    தேவாரம் பாடுவார்.

    ஆகம விதிப்படி பூஜிப்பதையும் 
    இடைவிடாது 
    பஞ்சாட்சர ஜெபம் செய்து
    கொண்டிருப்பதையும்   
    அன்றாடம் கண்டு அகமகிழ்ந்த இறையனார்
    முருக நாயனாரை நிரந்தரமாகத் தன்னருகே வைத்துக் கொண்டு
    அழகு பார்க்கத் தீர்மானித்தார்.

    அதற்கு ஏற்ற நாள் அருளாளர் அனுகிரகத்தால் 
    அதி விரைவில் வந்தது.

    தன்னேரில்லா இறைவனை வணங்கி வாழும் அருளாளர்கள் திருப்புகலூர் அடிக்கடி
    வந்து செல்வது உண்டு.

    அவர்களை வணங்கி தனது திருமடம் அழைத்துச் சென்று 
    அமுது படைத்து ஆசீர்வாதம் பெறுவது முருகநாயனாரின் வழக்கம்.
    அவரது பிரதிபலன் எதிர்பாராத
    சிவத்தொண்டு கூட.

    அப்பர் பெருமான் திருநீலநக்கர் சிறுதொண்டர் போன்ற பெரும் அருளாளர்கள் திருப்புகலூர் வந்தபோது முருகநாயனார் அவர்களை 
    உபசரித்த விதம் அடியார்களிடையேயும் நாயன்மார்களிடையேயும் ஏகப் பிரசித்தம்.

    சிவஞானப் பாலுண்ட திருஞானசம்பந்தர் சுவாமிகள் 
    ஒருமுறை 
    திருபுகலூர் எழுந்தருளினார்.

    முருகநாயனார் 
    பிறவிப் பயன் அடைந்ததாக மகிழ்ந்து ஞானசம்பந்தரை அன்பாலும் பண்பாலும் அவரடி தொழுவதிலும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

    மனம் நிறைந்த ஞானசம்பந்தர் 
    அதுநாள் தொட்டு 
    முருக நாயனாரின்
    கெழுதகை நண்பரானார்.

    அந்த இனிய நட்பு 
    திருஞானசம்பந்தர் 
    வெவ்வேறு தலங்கள் சென்றபோதும் குறையாமல் நாளும் வளர்ந்து வந்தது.

    இதற்கு 
    முக்கிய காரணம் 
    முருக நாயனாரின் சிவபூசை பலனே.

    பின்னாளில் 
    ஒரு நற்செய்தி 
    ஞானசம்பந்தரிடமிருந்து 
    முருகநாயனாருக்கு அழைப்பாக வந்தது.

    அது 
    திருஞானசம்பந்தருக்கு நடைபெறவிருந்த 
    ஞாலம் போற்றும் திருமணம்.

    திருஞானசம்பந்தரின் அழைப்பை ஏற்று முருகநாயனார் 
    திருமணம் நடக்கவிருந்த திருநல்லூர் பெருமணம் சென்றடைந்தார்.

    அந்தத் 
    திருமணத்தின் 
    போது தான் 
    ஆன்மிக உலகம் 
    அதற்கு முன்னரும் பின்னரும் 
    இன்று வரை காணாத
    ஓர் அற்புதம் அரங்கேறியது.

    திருமண வேளையில் தோன்றிய
    தென்னாடுடைய
    பார்வதி மணாளன்
    திருமண விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரையும்
    சிவஜோதியில் 
    கலக்கச் செய்து
    முக்தி தந்தார்.

    அன்று அவ்விதம் 
    முக்தி பெற்ற –
    திருமணம் காணவிருந்த மணமகன் திருஞானசம்பந்தரோடும் 
    மணமகளோடும் 
    முருக நாயனாரும் சிவனோடு ஐக்கியமானார்.

    உமையிடம் 
    ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தரும்
    உமையவரிடம்
    மலர்களால் நெருங்கிய
    முருக நாயனாரும் அவர்களிருவரின் தயவால்
    மணவிழா காண வந்திருந்த
    அத்தனை பேரும்
    முக்தி பெற்றதன்
    பின்னணி
    வேறு யாருக்கும் சாத்தியமில்லாதது..

    'யஜுர் வேதத்தின் 
    நடுக் காண்டத்தில் நடுப்பகுதியில் உள்ள 
    திரு ருத்திரத்தின் 
    நடுவில் இடம்பெறும்
    பஞ்சாட்சர மந்திரம் என்னும் மகா மந்திரத்தை இடையறாது 
    துதி செய்பவர் 
    இறை ஜோதியில்  கலப்பர்'
    என்னும் மறைச்சொல் 
    முருக நாயனார் 
    முக்தி பெற்றதால் நிரூபணம் கண்டது.

    'முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும்  அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.

    திருச்சிற்றம்பலம்

  • muruga perumanukku ugandha malargal

    முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும். முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

    பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம். பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

    முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர். பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில், கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

    முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார். சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

    சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கல் ஆகும்.
     

  • Muruga perumanum Karthigayum

    முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. 

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

    கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.

    கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

    கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

    கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

    கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

    கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

    திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.

    கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

    கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.