Tag: hanuman

  • Thirumalai Hanuman Jayanthi Festival

    திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்.. விழாவில்  கலந்துகொண்டு அனுமனை தரிசித்த திரளான பக்தர்கள்.

    திருமலையில் ஹனுமத் ஜெயந்தி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமலையில் பாபநாசம் ஆகாச கங்கா செல்லும் வழியில்  ஜாபாலி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயம் அமைந்துள்ளது . இங்கு ஆஞ்சநேயர் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

    ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் பலர் இந்த  ஆலயத்திற்கு வந்து அனுமானை தரிசிப்பது வழக்கம் இன்று ஹனுமத்ஜெயந்தி விழா ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜாபாலியில் ஆலயத்தில் கொலுவீற்றி ருக்கும்  அனுமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இருந்து பட்டு வஸ்திரத்தை ஜாபாலி ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்தார் . திருத்தல வரலாற்றின்படி  ஜாபாலி என்ற முனிவர் தனது சீடர்களுடன் இப்பகுதியில் இருந்து கொண்டு ஏழுமலையானுக்கு தொண்டு புரிந்து வந்ததாகவும் ராம பக்த ஹனுமானை தியானித்து அவரை வழிபட அனுமான் ஜாபாலி  முனிவருக்காக பிரதிக்ஷமாக தோன்றி அருள் பாலித்ததால்   ஜாபாலி அனுமான் என்று பெயர் பெற்று விளங்குகிறார்.

  • Hanuman betel leaf

    சனிக்கிழமை நாளில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை அணிவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் எல்லாக் காரியங்களிலும் ஜெயம் உண்டாக்கித் தந்தருள்வார் அனுமன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    அனுமனுக்கு உரிய சனிக்கிழமை நாளில், அனுமனைத் துதிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வது மிகவும் விசேஷம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இந்த நாளில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும். தடைப் பட்ட காரியங்கள் யாவும் நிறைவேறும். மனதில் உள்ள குழப்பம் விலகும். சங்கடங்கள் யாவும் தீரும்.

    வியாபாரத்தில் ஏற்றம் இல்லையே என வருந்துபவர்கள், தொழிலில் தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டு வருகிறது எனக் கலங்குபவர்கள், அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி, வேண்டிக் கொண்டால், விரைவில் தொழிலில் ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் வெற்றியைத் தந்தருள்வார் ஆஞ்சநேயர் என்கிறார் திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.

    அனுமன் சாலீசா பாராயணம் செய்வது, மனோதிடத்தையும் மன வலிமையையும் வழங்கும் என்கிறார்கள். மேலும் வெண்ணெய்க் காப்பு சார்த்தி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.

  • January 11 2024 Hanuman Jayanthi

    ஜனவரி 11 – அனுமன் ஜெயந்தி
    சோபகிருது வருடம் – மார்கழி 26
    அமாவாசை
    11-ஜன-2024 வியாழன்
    அனுமன் ஜெயந்தி
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அமாவாசை
    திதி நேரம் : அமாவாசை மா 6.31
    நட்சத்திரம் : பூராடம் மா 6.52
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • hanuman jayanthi special

    மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று  கருதப்படும் புண்ணிய மாதம்.  

    ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும்.  நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்.

    சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக  அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.   ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி,  வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.

  • December 23 2022 Hanuman jayanthi

    டிசம்பர் 23 – அனுமன் ஜெயந்தி
    சுபகிருது வருடம் – மார்கழி 8   
    23-டிச-2022 வெள்ளி  
    அமாவாசை
    அனுமன் ஜெயந்தி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30     
    திதி : அமாவாசை     
    திதி நேரம் : அமாவாசை மா 4.27
    நட்சத்திரம் : மூலம் ந.இ 2.49
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • vettri tharum hanuman mandiram

    வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிப்பெறும்.

     அச்சம் விலக:-

     ஸர்வ கல்யாண தாதாரம்

    ஸர்வ வாபத்கந வாரகம்

    அபார கருணா மூர்த்திம்

    ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

     தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.

     அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்:-

     ஸ்ரீராம தூத மஹாதீர

    ருத்ர வீர்ய ஸமத் பவ

    ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத

    வாயு புத்திர நமோஸ்துதே.
     

  • Hanuman kavasam

    ஹனுமான் பூர்வத: பாது தஷிணே பவனாத்மஜ: 
    ப்ரதீச்யாம் பாதுரக்ஷோக்ன: சௌம்யாம் சாகரதாரண: 

    அனுமன் என்னை கிழக்கு திக்கில் காக் கட்டும். தெற்கு திசையில் வாயு புத்ரன் ரட்சிக்கட்டும். மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும். சமுத்தி ரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்.

    ஊர்த்வம் மே கேஸரிபாது விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத: 
    லங்காவிதாஹக: பாதுஸர்வாபத்ப்யோ நிரந்தரம் 

    கேசரியின் மைந்தன் என்னை ஆகாயத் தில் காக்கட்டும். விஷ்ணு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும். இலங் கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்பொழுதும் காக்கட்டும்.

    ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயு நந்தன
    பாலம் பாது மஹாவீரா: ப்ருவோர் மத்யே நிரந்தரம் 

    சுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும். வாயு புத்ரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும். மகா வீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்.

    நேத்ரோ சாயாபஹாரிச பாதுமாம் ப்லவகேஸ்வர: 
    கபோலௌ கர்ணமூலேது பாதுமே ராமகிங்கர: 

    சாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களை காக்கட்டும். வானரங்களின் தலைவர் என்து கன்னங்களைக் காக்கட்டும். ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்.

    நாஸாயாம் அஞ்சனாஸுனு: பாதுவக்தரம் ஹரீச்வர: 
    பாது கண்டஞ்ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாதுஸுரார்சித: 

    ஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட் டும். வானராதிபர் எனது முகத்தைக் காக்கட் டும். அசுரர்களின் பகைவர் எனது கழுத்தை ரட்சிக்கட்டும். தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்.

    புஜௌ பாது மஹா தேஜா: கரௌது சரணாயுத: 
    நகான் நகாயுத: பாதுகுசெஷள பாது கபீஸ்வர: 

    ஒளிபொருந்திய தேகத்தை உடையவர் எனது தோள்களைக் காக்கட்டும். கால்களை ஆதாரமாகக் கொண்டவர் எனது கால்களைக் காக்கட்டும். நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும். வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்.

    வக்ஷௌமுத்ராபஹாரிச பாது பார்ச்வே மஹாபுஜ: 
    ஸீதாசோகப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் 

    ராமனின் கணையாழியை (மோதிரம்) எடுத்துச் சென்றவர் எனது மார்பைக் காக்கட்டும். பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங் களையும் காக்கட்டும். சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்பொழுதும் காக்கட்டும்.
     

  • Hanuman vaal mani

    நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

    தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

    சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.    

    போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.

    போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.

    கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது. 

    திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

    ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது 

    " சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம்  " ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன.

    இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.

    " முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

    கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா" 

    " பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன்.

    " இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன். 

    ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். " தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை. அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன் 

    அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.

    திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார். " அனுமா! அங்கே பார்.ஒரு பெரிய மணி தெரிகிறது."

    ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு . அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!

    அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர். 

     "பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.

    அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு. அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்

    " அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் "என்று வாழ்த்தினார்.
     

  • January 02 2022 Hanuman jayanthi

    ஜனவரி 2 அனுமன் ஜெயந்தி 
    பிலவ வருடம் – மார்கழி 18
     அமாவாசை 
    அனுமன் ஜெயந்தி
    02-ஜன-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    ந.இ    12.43
    நட்சத்திரம்    :    மூலம்    மா    4.49
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Sri Dhanvantri Hanuman Jayanthi Vizha

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி வருகிற 02.01.2022, ஞாயிற்றுக்கிழமை அமாவாசை மற்றும் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற உள்ளது. மேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் விசேஷ அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழ மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.

     மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல  புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் இவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.  எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

    சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா” என  சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.

     ஹனுமான் அவதார நாளில் தன்வந்திரி பீடத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடைபெற உள்ளது. ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்தி கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சார்த்தி, ஆராதிக்க வேண்டும். இதில் அனைவரும் பங்கேற்று பயன் பெற பிரார்த்திக்கிறோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

    மேலும் விவரங்களுக்கு

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

    தொலைபேசி : 04172 – 294022, செல் – 94433 30203