Tag: Dasara

  • Kulasekarpattinam Dasara

    உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 29-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. காலை 7.45 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.

     
    கொடியேற்றம் முடிந்ததும் விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது கையில் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கட்டுவார்கள். அதன் பின் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

    திருவிழா தொடங்கியதையொட்டி தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு வழி பாடுகள் நடக்கிறது. தினசரி மாலை 6 மணிக்கு இன்னிசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் இரவு 9 மணிக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நாளான அக்டோபர் 8-ந் தேதி  சூரசம்ஹாரம் நடக்கிறது. வேடம் அணிந்த பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வரத்தொடங்குவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.

    9-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெரு வீதி உலா சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க் கப்படும்.

    அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது கைகளில் உள்ள காப்புகளை அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.
     

  • Kulasekara pattinam Dasara

    உலகப்பிரசித்தி பெற்ற  குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா செப்டம்பர் -29 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் வரும் அக்டோபர் 8 அன்று நடைபெறவுள்ளது.

    திருச்செந்தூர் அருகிலுள்ள  குலசேகரன்பட்டிணம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில்  உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா ஆண்டுதோறும்  கோலாகலாமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழாவிற்கு புகழ்பெற்றழ்பெற்ற கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில்  கோலாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும்  தசரா திருவிழா வரும் செப்டம்பர் -29 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் வரும் அக்டோபர் 8 அன்று நடைபெறவுள்ளது.

    இதனை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள குலசேகரன்பட்டினத்தில் வைத்து திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பக்தர்கள் , தசரா குழு நிர்வாகிகள் கோவில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரத் கூறியதாவது, தசரா திருவிழாவில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் பெயர் மற்றும் முகவரி கொண்ட அடையாள அட்டை காவல்துறை சார்பில் வழங்கப்படும்.இதன்மூலம் காணமல் போன குழந்தைகளை அடையாளம் காண்பது எளிதாகும் என்றார்.

     வாகனங்கள் வந்து செல்ல ஒருவழிபாதை ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 3 புறக்காவல் நிலையம் அமைக்கபடுவதோடு காவல் உதவி மையம் மக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பு போன்ற உலோகங்களினாலான ஆயுதங்கள் எடுத்து வர அனுமதியில்லை மற்றும் சாதி மற்றும் கட்சி கொடிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.