Tag: Aadi

  • Amirtahmagum Aadi Koozh

    ஆடி மாதத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புண்டு. வெப்பம் குறைவான நாள்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவு கூழ். இயற்கையாகவே அதிக அளவு எதிர்ப்புச் சக்தியையும், வலிமையையும் உடலுக்கு வழங்கக்கூடியது. மேலும் வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன.   

    புராணக்கதை…..

    கேட்பவை அனைத்தையும் அளிக்கும் காமதேனு பசுவை, ஜமதக்னி முனிவரிடமிருந்து அபகரிக்க கார்த்தவீர்யார்ஜுனரின் மகன்கள் திட்டம் போடுகிறார்கள். ஒருதருணத்தில், முனிவரைக் கொன்று காமதேனுவைக் கவர்ந்துசென்றுவிடுகிறார்கள். கணவர் இறந்ததும் தானும் அக்னிப்பிரவேசம் செய்கிறாள் ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி. ஆனால், `தெய்வாம்சம் பொருந்திய ரேணுகா தேவியினால் உலகத்துக்கு நன்மை ஏற்படவேண்டும்' என்று நினைத்த இந்திரன், வருண பகவானிடம் மழையைப் பொழியும்படி உத்தரவிடுகிறார். மழை பெய்து தீயை அணைத்துவிடுகிறது. ஆனாலும், ரேணுகாதேவியின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  

    தீக்காயத்தின் வெம்மையைத் தணிக்கவேண்டி, வேப்பிலையைச் சுற்றிக்கொள்கிறார் ரேணுகாதேவி. தீக்காயங்களுடன் போராடிய ரேணுகா தேவிக்குக் கிராமத்து மக்கள் கூழ் காய்ச்சிக் கொடுக்கிறார்கள். அத்துடன் வெல்லம், இளநீர் ஆகியவற்றையும் கொடுத்து உதவுகிறார்கள். உடல் முழுவதும் கொப்புளங்களுடன் போராடிக்கொண்டிருந்த ரேணுகா தேவியிடம் சிவபெருமான், “பராசக்தியின் அம்சமான நீ மக்களை நோயிலிருந்து காக்க வேண்டும்" என்று அருள்புரிகிறார். எனவேதான் அம்மை நோயைக் குணமாக்கும் வேப்பிலைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் கூழுக்கும் அம்மன் வழிபாட்டில் முக்கியப் பங்கு வழங்கப்படுகிறது. 

    ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் நீண்ட ஆயுள் பெறவும், குழந்தை வரம் கிட்டவும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நடைபெறவும் ஆடி மாத விரதம் நலம் பயக்கும்.
     

  • Thiruthani Aadi kiruthigai

    திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில்  ஆடிக்கிருத்திகை, தெப்பல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து காவடிகளுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதில் பல பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்வர். விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். 

    லட்ச கணக்கான பக்தர்கள் கூடும், இத்திருவிழாவில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளிலும், கோயிலைச் சுற்றியும் தாற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதி, நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடையில்லா மின்சாரம் வழங்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன. 

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மேலும், சரவணப்பொய்கை குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் விழாவில் அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் அதிக அளவில் அமருவதால் ஏற்படும் இடையூறைக் கட்டுப்படுத்த, இந்த ஆண்டு முதல் இசைக் கலைஞர்கள், கோயில் குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் யாரும் தெப்பலில் ஏற அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     

  • Aadi Amman Special

    ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

    ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

    ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

    கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

    ஆடி மாதம் ஏகாதசி துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

    ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம் சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

    ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவு கொடுத்து ரவிக்கை சீப்பு குங்குமச்சிமிழ் கண்ணாடி வளையல் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை நாச்சியார் திருமொழி திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் சகல நலன்களையும் நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து தூய ஆடை அணிந்து சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து செவ்வரளி செம்பருத்தி அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில் “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து கருப்புப் பட்டாடை நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை கருஊமத்தம் பூமாலை அணிவித்து மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

  • Aadi Friday Amman Koil Celebration

    ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. 

    இந்த ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். 

    பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். 

    ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அதேபோல ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. 

    இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இப்படி அனைத்து விசேஷங்களையும் கொண்ட ஆடி மாதத்தில் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தர்களில் கூட்டம் அலைமோதுகிறது.

  • Aadi Viradhangal Sirappugal

    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆடி மாதம்…. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு எப்போது வருகிறாரோ அந்தநாள் ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். 

    ஆடி மாதத்தின் சிறப்புகள்: 
    ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.

    ஆடி மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.

    ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வழிபட வேண்டும். 

    ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய பல முக்கியமான தினங்கள் இருக்கின்றன. 

    ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

    ஆடி கிருத்திகை: இந்த வருடத்திற்கான ஆடி கிருத்திகை, ஆடி மாதம் 10-ம் தேதி ( 26 ஜூலை 2019) அன்று வருகிறது. இது முருகனுக்கு உகந்த தினம். 

    ஆடி வாஸ்து பூஜை: ஆடி மாதம் 11-ம் தேதி ( 27 ஜூலை 2019) அன்று வாஸ்து பூஜை வருகிறது. 

    ஆடி அமாவாசை: ஆடி மாதம் 15-ம் தேதி ( 31 ஜூலை 2019) அன்று ஆடி அமாவாசை நிகழ்கிறது. இந்த நாள் நம் முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். 

    ஆடி பதினெட்டு: ஆடி மாதம் 18-ம் தேதி (03 ஆகஸ்டு 2019) அன்று ஆடி 18 வருகிறது. ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள்.

    கருட ஜெயந்தி: ஆடி மாதம் 20-ம் நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி ஆடி மாத வளர்பிறையில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. 

    வரலட்சுமி விரதம்: ஆடி மாதம் 24-ம் தேதி (9-ம் ஆகஸ்ட் 2019) அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. 

    ஆடி அறுதி: ஆடி மாதம் 32- ம் தேதி ( 17 ஆகஸ்ட் 2019) அன்று ஆடி அறுதி. ஆடி மாதத்தின் கடைசி நாளாகும். அன்றைய தினம்தான் விவசாயிகள் நாற்று நடுவார்கள்.