Blog

  • கன்னி- ஜூலை மாத ராசிபலன்

    கிரகநிலை

    பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், குரு – லாப ஸ்தானத்தில் புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் செவ், கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

    கிரகமாற்றம்:

    02.07.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    03.07.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    17.07.2025  அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.07.2025 அன்று புதன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26.07.2025  அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    29.07.2025  அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   ராசிக்கு  மாறுகிறார்.

    பலன்:

    அம்மான்காரனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். சில அன்பர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். 

    குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். 

    தொழில் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். 

    உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். 

    அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். 

    கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். 

    பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள்.  

    மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். 

    பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். பொருளாதார சிக்கல்கள் அகலும்.  

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 18, 19

    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 07, 08

  • சிம்மம் – ஜூலை மாத ராசிபலன்

    கிரகநிலை:

    தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சூர்யன், குரு – அயன சயன போக ஸ்தானத்தில் புதன் – ராசியில் செவ், கேது – களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

    கிரகமாற்றம்:

    02.07.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    03.07.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    17.07.2025  அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.07.2025 அன்று புதன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26.07.2025  அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    29.07.2025  அன்று  ராசியில்  இருந்து  செவ்வாய்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி இந்த மாதம் இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். 

    குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். 

    தொழில் செய்பவர்கள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். 

    உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்.

    அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும். 

    கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

    பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். 

    மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். 

    பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள்.  

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 16, 17

    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 04, 05, 06

  • கடகம் – ஜூலை மாத ராசிபலன்

    கிரகநிலை:

    லாப ஸ்தானத்தில் சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், குரு – ராசியில் புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ், கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

    கிரகமாற்றம்:

    02.07.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    03.07.2025 அன்று  ராசியில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    17.07.2025  அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   ராசிக்கு  மாறுகிறார்.

    17.07.2025 அன்று புதன் பகவான் ராசியில்  இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26.07.2025  அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    29.07.2025  அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    மனசாட்சிகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். 

    குடும்பத்துடன் தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். 

    தொழில் செய்பவர்களுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன. 

    உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

    அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். 

    கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

    பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும். 

    மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். 

    பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வர பொருளாதார தேக்கநிலை மாறும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன் 

    சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 17, 18, ஜூலை 14, 15

    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 02, 03, 29, 30, 31

  • மிதுனம் – ஜூலை மாத ராசிபலன்

    கிரகநிலை:

    அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் – ராசியில் சூர்யன், குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ், கேது – பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

    கிரகமாற்றம்:

    02.07.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.  

    03.07.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    17.07.2025  அன்று  ராசியில்  இருந்து  சூரியன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.07.2025 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    26.07.2025  அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   ராசிக்கு  மாறுகிறார்.

    29.07.2025  அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    வித்யாகாரகன் புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். 

    குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும்

    தொழில் செய்பவர்களுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம். 

    உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். 

    அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். 

    கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. 

    பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 

    மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள். 

    பரிகாரம்: புதன்கிழமைதோறும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று கருடாழ்வாரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 15, 16, ஜூலை 12, 13

    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 01, 27, 28

  • ரிஷபம் – ஜூலை மாத ராசிபலன்

    கிரகநிலை:

    ராசியில் சுக்கிரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் – சுக ஸ்தானத்தில் செவ், கேது – தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

    கிரகமாற்றம்:

    02.07.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    03.07.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.

    17.07.2025  அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.07.2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26.07.2025  அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    29.07.2025  அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    கவர்ச்சிகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். 

    குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

    தொழில் செய்பவர்களின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். 

    உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். 

    அரசியல்துறையினரைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். 

    கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். 

    பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். 

    மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

    பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் இருக்கும் ஆண்டாளை வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். தொழில் மாற்றம் ஏற்படும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 09, 10, 11

    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 25, 26

  • மேஷம் – ஜூலை மாத ராசிபலன்

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், குரு – சுக ஸ்தானத்தில் புதன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ், கேது – லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

    கிரகமாற்றம்:

    02.07.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    03.07.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    17.07.2025  அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.07.2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26.07.2025  அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    29.07.2025  அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    ரத்தகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். 

    குடும்பத்தில் பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். 

    தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். 

    உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். 

    அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். 

    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். 

    பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. 

    மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள். 

    பரிகாரம்: தினமும் முருகன் ஆலயத்திற்குச் சென்று கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனதில் அமைதி மேலோங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 07, 08

    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 22, 23, 24

  • “பஞ்சாட்சர மந்திரம்: ஓம் நமச்சிவாய உச்சரிப்பு விதிமுறைகள்”

    ‘ஓம் நமச்சிவாய’ மந்திரம், பஞ்சாட்சரமாக வேதத்தில் இடம்பெற்று, சிவ உபாசனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பக்தி மற்றும் யோக மார்க்கத்தில் செல்பவர்கள் இதனை ஜபித்து தியானிக்கின்றனர். யோக மார்க்கத்தில், இம்மந்திரம் ஸ்தூல பஞ்சாட்சரம் (ஓம் நமச்சிவாய) மற்றும் சூக்கும பஞ்சாட்சரம் (நமசிவாய, சிவாயநம, சிவா, வசி) என பிரிக்கப்படுகிறது. மாத்திரைகளை சுருக்கி உச்சரிக்கும்போது அது சூக்குமமாகிறது என புரோகிதர்கள் விளக்குகின்றனர்.

    பிராணாயாமத்தில் பூரகம், கும்பகம், ரேசகம் ஆகியவற்றுக்கு மந்திர உச்சரிப்பு கால அளவை தீர்மானிக்க உதவுகிறது. இது பயிற்சியில் மிகுந்த பலன் தருவதாக ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். குரு உபதேசம் இன்றி பஞ்சாட்சரத்தை ஜபித்து பலர் முக்தி பெற்றுள்ளனர். நள்ளிரவில் தூக்கமின்மையின்போது இம்மந்திரத்தை உச்சரிப்பது மன அமைதியை அளிக்கும்.

    ‘ஓம்’ என்பது அ, உ, ம, ம் மற்றும் அதன் நாதம் என ஐந்து ஒலிகளைக் கொண்டது, பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், சக்தி, சிவனைக் குறிக்கிறது. இவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை மேற்கொள்கின்றன. ‘ஓம்’ உலக இயக்கத்தையும், கலைஞானம், மெய்ஞானத்திற்கு வாசலாகவும் அமைகிறது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

    எனவே, எல்லா மந்திரங்களும் ‘ஓம்’ என தொடங்குகின்றன. ‘பிரணவம்’ என்றால் ‘என்றும் புதியது’ எனப் பொருள். இஷ்ட தெய்வங்களை ‘ஓம்’ எனக் கூறி வணங்குவது ஆன்மிக முன்னேற்றத்தை அளிக்கும்.

  • வீட்டில் பூஜை செய்யும் முறைகள்: ஆன்மிக வழிகாட்டுதல்கள்

    பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளை நோக்கி அமரக் கூடாது. தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்; முடியாவிட்டால், தெற்கு தவிர பிற திசைகளைப் பயன்படுத்தலாம். வணங்குபவர் வடக்கு நோக்கி அமரலாம்.

    பூஜை அறையில் தெய்வச் சிலைகளை நெருக்கமாக வைக்காமல், போதிய இடைவெளி விட வேண்டும். நிவேதனம் செய்த தேங்காயை மறுபடியும் சமையலில் பயன்படுத்தி சாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது. உணவை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைப்பதற்கு பதிலாக, இலையில் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

    வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் கோவிலுக்கு செல்லக் கூடாது. எரியும் விளக்கின் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொட்டு தலையில் தடவுவது தவறு. விஷ்ணு கோவிலில் இருந்து திரும்பும்போது அங்கு உட்காராமல் நேரடியாக வீடு திரும்ப வேண்டும், ஏனெனில் லட்சுமி தேவி உடன் வருவதாக ஐதீகம்.

    வாசலில் ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம், திரிசூலம் சின்னங்களை வைப்பது பாதுகாப்பையும் அதிர்ஷ்டத்தையும் தரும். உலர்ந்த பூக்களை சாமி படங்களில் வைக்கக் கூடாது. வாசலுக்கு நேர் எதிரே சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பது வளமையையும் வெற்றியையும் அளிக்கும்.

  • பெண்களுக்கான ஆன்மிக வாஸ்து விதிகள்: மங்களமும் தெய்வீகமும்!

    பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக வாஸ்து விதிகள், சுப மங்களங்களையும் தெய்வீகப் பண்புகளையும் பெற உதவும். பெண்கள் எப்போதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும்: மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு. இது உடல் ஆரோக்கியத்தையும், ஆன்மிக சக்தியையும் தரும். தாலியை நூல் சரட்டில் கோர்த்து அணிவது சிறப்பு, ஏனெனில் நூலில் பஞ்ச பூத சக்திகள் உள்ளன. தேவையான சங்கிலியை அணியலாம், ஆனால் தாலியை தினமும் கழற்றி அணிவது தவறு; அது எப்போதும் கழுத்தில் இருக்க வேண்டும்.

    காலையில் அடுப்பு பற்றவைக்கும் முன், அக்கினியை வணங்கி, “சமைத்த உணவை உண்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கட்டும்” என பிரார்த்திக்கவும். மாலையில் அரசமரத்தை வலம் வருவது தவிர்க்கப்பட வேண்டும். கோயிலுக்கு எடுத்துச் செல்லும் எண்ணெயை, கோயில் விளக்கில் மட்டுமே ஊற்ற வேண்டும்; பிறர் ஏற்றிய விளக்கில் ஊற்றக் கூடாது. முந்தானையைத் தொங்கவிடாமல், இழுத்து சொருகி நடக்கவும், இல்லையேல் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    குத்து விளக்கு ஏற்றும்போது, ஒரு திரி மட்டும் பயன்படுத்தக் கூடாது; இரு திரிகளுடன் ஒரு முகமாக ஏற்றவும். கோலம் போடும்போது தெற்கு நோக்கி நிற்கக் கூடாது; கோடு தெற்கில் முடியாமல் இருக்க வேண்டும். கோயிலில் வணங்கும்போது, பின்னங்கால்களைச் சேர்த்து, நெற்றி தரையில் படுமாறு முழு உடலுடன் விழுந்து கும்பிட வேண்டும். பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது, முந்தானையை இடது, வலது கைகளுக்கு நடுவில் வைத்து பெறவும்.

    சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது, தெற்கு முகமாக உட்கார்ந்து, மஞ்சள் தேய்த்து முகத்தில் பூசி குளிக்க வேண்டும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய், மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். இவ்விதிகளைப் பின்பற்றுவது ஆன்மிகப் பலன்களையும், குடும்ப நலனையும் உறுதி செய்யும்.

  • இறந்தவர்கள் கனவில் வருவதன் மர்மம்: ஆன்மிக அர்த்தங்களும் விளக்கங்களும்!

    மனித மனதின் ஆழத்தில் உறைந்த எண்ணங்கள், உறக்கத்தில் கனவுகளாக வெளிப்படுகின்றன. ஒவ்வொரு கனவுக்கும் ஒரு தனித்த அர்த்தம் உள்ளது. சிலர் கனவுகளை நினைவுகளின் கற்பனை வடிவமாகக் கருதினாலும், இறந்தவர்கள் அடிக்கடி கனவில் தோன்றுவது ஆன்மிக மற்றும் உளவியல் அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். இறந்தவர்கள் கனவில் வருவதற்கான பொருளை இந்தப் பதிவு விளக்குகிறது.

    1. நெருக்கமானவர்கள் கனவில் தோன்றுதல்: உங்களுக்கு அறிமுகமானவரோ, நெருக்கமானவரோ இறந்து, அவர்கள் கனவில் வந்தால், பயப்பட வேண்டாம். இது அபசகுணமல்ல; மாறாக, நல்ல செய்தி வரவிருப்பதையும், நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள் என்பதையும் குறிக்கிறது. இறந்தவர்கள் உங்களை ஆசிர்வதிக்க வருவதாக நம்பப்படுகிறது.

    2. இறந்தவர்கள் அழுதல் அல்லது பேசுதல்: இறந்த ஆத்மாக்கள் கனவில் அழுவது நல்லதல்ல; உடனே கோயிலில் அர்ச்சனை செய்வது நற்பலன் தரும். அவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால், உங்களுக்கு புகழும், மரியாதையும் கிடைக்கும் என்பது பொருள்.

    3. வீட்டில் உறங்குதல் அல்லது சவப்பெட்டி: இறந்தவர்கள் உங்கள் வீட்டில் உறங்குவது போல் கனவு வந்தால், பெரிய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள். ஆனால், சவப்பெட்டி கனவில் தோன்றினால், நெருக்கமானவரின் இழப்பைக் குறிக்கலாம், இது எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

    4. ஒன்றாக உணவு உண்ணுதல்: இறந்தவர்கள் உங்களுடன் உணவு உண்பது போல் கனவு கண்டால், செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள் என்பது அர்த்தம். நீங்கள் இறந்தது போல் கனவு வந்தால், ஆயுள் கூடும்; தீர்க்க முடியாத பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.

    5. தாய் அல்லது நெருக்கமானவர்கள்: இறந்த தாய் கனவில் வந்தால், பெண் குழந்தை பிறக்கும் என்பது பொருள். நெருக்கமானவரின் இறப்பு போல் கனவு கண்டால், உங்களை வாட்டிய துன்பங்கள் விலகி, நிம்மதி கிடைக்கும்.