Blog

  • பதினெட்டு படி தரிசனத்திற்கான 41 நாள் விரத வழிமுறைகள்

    41 நாள் விரதம்

    கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது மரபாகும். அந்த நாளில் மாலை அணிய முடியாவிட்டால், அடுத்த சனிக்கிழமை அல்லது உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை அணியலாம். அர்ச்சகர் அல்லது குருநாதர் கையால் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மாலை அணிந்து, கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது மூலம் விரதம் தொடங்கப்படுகிறது.

    சபரிமலையின் பதினெட்டு படிகள் வழியாக ஏறி ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு 41 நாள் விரதம் அவசியமானதாகும். விரதக் காலத்தில் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மையுடன் இருப்பதே திரிகரண சுத்தி. அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, பக்தியுடன் சரண கோஷம் சொல்ல வேண்டும்.

    தூங்கும்போது பாய் மட்டும் பயன்படுத்தி, தலையணையைத் தவிர்க்க வேண்டும். பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப் பகுதிகளில் பனிக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய யாத்திரைக்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய ஒழுக்கங்கள் விதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

  • குருசுவாமி என்றால் யார்? கன்னி பூஜை எப்படி செய்ய வேண்டும்?

    குருசுவாமியின் தகுதி

    சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து சென்று வந்தவர்களே குருசுவாமி என அழைக்கப்படுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றால் குருசுவாமி ஆக முடியாது.

    ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை அல்லது மகர விளக்குக் காலத்தில் இருமுடி கட்டி, 41 முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சபரிமலைக்கு ஏறியவர்களே இந்த உயர்ந்த பதவியைப் பெறுவர்.

    குருசுவாமிகள், பிற பக்தர்களுக்கு மாலை அணிவிக்கவும், வழிகாட்டவும் தகுதியுடையவர்கள். மேலும், சபரிமலை சீசன் அல்லாத நாட்களிலும், அவர்கள் ஐயப்பனுக்கு நித்யபூஜை செய்து வருவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

     

    கன்னி பூஜை

    சபரிமலைக்கு முதல் முறையாக செல்பவர்கள் நடத்தும் முக்கியமான சடங்குதான் கன்னி பூஜை. இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்றும் அழைக்கின்றனர்.கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி மாதம் வரை, வீட்டில் ஒரு சிறப்பு நாளைத் தேர்ந்தெடுத்து இந்த பூஜை நடைபெறும். இதற்காக பந்தல் அமைத்து, அதன் நடுவில் மண்டபம் அமைத்து, அதில் ஐயப்பன் படத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    அவரைச் சுற்றிலும்

    • கணபதி

    • மாளிகைப்புறத்தம்மன்

    • கருப்பசுவாமி

    • கடுத்தசுவாமி

    • ஆழி

    ஆகிய தெய்வங்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட்டு விளக்கேற்ற வேண்டும்.

    எல்லா தெய்வங்களுக்கும் வல், பொரி, பாக்கு, சித்ரான்னம் போன்ற நைவேத்யங்கள் படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

    இந்நாளில் அன்னதானம் செய்வதும் மிக முக்கியமானது.

  • ஹரிஹர புத்திரன் முதல் சபரிமலை வரை: வரலாறும் வழிபாட்டு முறைகளும்

    ஹரிஹர புத்திரன்

    ஹரியான மகாவிஷ்ணுவும், ஹரனான சிவபெருமானும் இணைந்து அருளிய தெய்வக் குழந்தையாக ஹரிஹர புத்திரன் அவதரித்தார். மனித அவதாரத்தில் பந்தள மன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டன் என்ற பெயரில் வளர்ந்தார்.

    புலிப்பாலை எடுத்து வருவதற்காகக் காட்டுக்குச் சென்ற மணிகண்டன், அங்கு மஹிஷியை வதம் செய்து தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றினார். பின்னர் சபரிமலையில் தங்கியிருந்து பக்தர்களுக்காக கோயில் அமைந்தது. இது ஐயப்பன் பற்றிய பரிச்சயமான வரலாறு.

    ஆனால் பூதநாதோபாக்கியானம் என்னும் நூலில் இந்த வரலாறு சற்று மாறுபட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஐயப்பன் பாண்டிய மன்னரின் சேவகனாக இருந்தார் என்றும், மன்னரின் ஆணைப்படி புலிப்பாலை கொண்டு வரக் காட்டுக்கு சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கவனிக்க…

    மாலையணிந்த பின் கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிய வேண்டும்.

    செருப்பு அணியக் கூடாது.

    கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்தக் கூடாது.

    மது, மாமிசம், தாம்பத்யம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    பொய் உரைக்கக் கூடாது.

    உறவினரின் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அங்கு செல்வதும் கூடாது. இதை மீறினால் மாலையை அகற்றி மலைப் பயணத்தையும் நிறுத்த வேண்டும்.

    சவ ஊர்வலத்தைப் பார்த்தால், வீட்டில் கோமியம் தெளித்து நீராட்டு எடுத்த பின் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.

  • கார்த்திகை மாதத்தில் பூஜை அறையில் ஏற்ற வேண்டிய தீபம்

    கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும்தான்  மண் அகல் விளக்குகளை ஏற்றி, வீட்டில் இருக்கும் இருளை நீக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. கார்த்திகை மாதம் முழுவதுமே விளக்கு வழிபாட்டிற்கு மிக மிக சிறப்பு வாய்ந்த மாதம். இந்த கார்த்திகை மாதம் 30 நாளும், ஒரு நாள் கூட வீட்டில் விளக்கு ஏற்றாமல் பெண்கள் இருக்கவே கூடாது. மாதவிடாய் நாட்கள் வந்த போதிலும், வீட்டில் அடுத்தவர்களை விட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறை தவிர்த்து மற்ற இடங்களில் வீட்டில் இருக்கும் பெண்கள் தாராளமாக விளக்கு ஏற்றலாம். கார்த்திகை மாதம் விளக்கு ஏற்றாமல் வீட்டை இருளில் மூழ்கடிக்க கூடாது. முதலில் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

     

    கார்த்திகை மாதம் தீப வழிபாடு சரி இப்போது கார்த்திகை மாதம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம். கார்த்திகை மாதம் முழுவதும் பூஜையறையில் ஏற்ற வேண்டிய விளக்கு குத்துவிளக்கு. குத்துவிளக்கில் 5 திரிகளும் ஏற்றப்பட வேண்டும். உங்கள் பூஜை அறை பிரகாசமாக இருக்கும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வைத்து, குலதெய்வத்தையும் மற்ற தெய்வங்களையும் மனதார நினைத்து வேண்டுதல் வைக்கும் போது, நிச்சயம் உங்கள் வாழ்வில் தீராத இருக்கும் கஷ்டம் தீரும். கார்த்திகை மாதம் 30 நாளும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர உங்களுடைய வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, இப்படி எத்தனை அறைகள் இருக்கிறதோ அந்த அறையில் எல்லாம் கார்த்திகை மாதம் முழுவதும் மாலை ஆறு மணிக்கு ஒரு அகல் விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி வைக்க வேண்டும்.

     

    இது தவிர கட்டாயம் நிலை வாசல் படியில் இரண்டு விளக்கு, கார்த்திகை மாதம் முழுவதும் மாலை 6மணிக்கு ஏற்றப்பட வேண்டும். இந்த விளக்கு மாலை ஒரு மணி நேரம் எரிந்தால் போதும். மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை அந்த எண்ணெய் தீரும் வரைக்கும் எரியட்டும். அப்படியே விட்டுவிடுங்கள். கார்த்திகை மாதம் முழுவதும் மேல் சொன்ன இந்த எளிமையான தீப வழிபாட்டை எவர் ஒருவர் செய்கிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் எல்லாம் விலகி உங்கள் வாழ்க்கை பிரகாசமாவதற்கு. தேவையான அத்தனை நன்மைகளையும் அந்த தெய்வம் நடத்திக் கொடுக்கும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் நம்பிக்கை.

     

  • மேஷம் முதல் மீனம் வரை | அக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – லாப ஸ்தானத்தில் சூரியன் – விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   ராசிக்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.  

    தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய  ஆர்டர்கள்  பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். 

    குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின்  நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.   மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். 
    பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
    கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

    அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். 
    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். 

    விசாகம் 4ம் பாதம்:

    இந்த மாதம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.

    அனுஷம்:

    இந்த மாதம் என்பது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மிக அருமையான நேரத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.

    கேட்டை:

    இந்த மாதம் பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

    பரிகாரம்: பழனி முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும். 

    சந்திராஷ்டம தினங்கள்:     அக் 13, 14

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 22, 23
     

  • கார்த்திகை தீபத்தின் நன்மைகள் மற்றும் அதன் பலன்கள்!

    கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு வந்து தவமிருந்த அம்பிகை, மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது, தவறுதலாக ஒரு சிவலிங்கத்தை உடைத்துவிட்டாள். அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்குவதற்காக கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றி விரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் தவறாமல் கடைப்பிடித்த நாரத முனிவர், அதன் பலனாக சப்தரிஷிகளையும் மேம்பட்ட நிலையில் இருப்பதற்கு அருளைப் பெற்றார்.

    கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து, மூன்று முறஜோதி பரப்பிரம்மம்! தீபம் சர்வ தமோபஹம்! தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே!
    என்ற மந்திரத்தைச் சொல்வது மிகுந்த விசேஷபலனை தரும்.

    திருக்கார்த்திகை நாளில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

    கார்த்திகை திருநாளில், நெல் பொரியுடன் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பொரி உருண்டை தயாரித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.
    வெள்ளை நிறப் பொரி திருநீறு பூசிய சிவனை குறிக்கிறது; தேங்காய் துருவல் கொடைத் தன்மையின் அடையாளமான மாவலியை குறிக்கிறது; வெல்லம் பக்தர்களின் மனப்பக்தியைச் சுட்டிக்காட்டுகிறது.

    ஆத்மார்த்தமான பக்தியால் மகிழும் சிவன், நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால், இந்நாளில் பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

  • கடன் தீர எளிய ஆன்மீக பரிகாரங்கள்!

    கடன் நெருக்கடியால் அவதிப்படுகிறீர்களா? எளிய ஆன்மீக பரிகாரங்கள் மூலம் இதிலிருந்து விடுபடலாம். நம்பிக்கையுடன் பின்பற்றினால், செல்வ வளம் பெருகும்.

    1. பசுவுக்கு பாசிப்பருப்பு தானம்: பாசிப்பருப்பையும் வெல்லத்தையும் கலந்து, முந்தைய நாள் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பசுவுக்கு (கோமாதா) அளிக்கவும். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்வதாக ஐதீகம். வாரம் ஒருமுறை இதை செய்தால், கடன் படிப்படியாகக் குறையும்.

    2. புதன் கிழமை தானம்: புதன்கிழமை புதன் ஹோரையில் பாசிப்பருப்பை அருகிலுள்ள கோவிலில் அல்லது ஏழைகளுக்கு தானமாக வழங்கவும். இது செல்வத்தை பெருக்கி, கடனை அகற்றும்.

    3. பாசிப்பருப்பு பிரசாதம்: பாசிப்பருப்பு சுண்டல் செய்து, கோவிலில் கடவுளுக்கு நைவேத்யமாக படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கவும். பிரதோஷ நாளில் இதை செய்வது சிறப்பு. இதனால் பணம் தேடி வரும்.

    4. குலதெய்வ வழிபாடு: குலதெய்வத்தை வணங்குவது மிக முக்கியம். பௌர்ணமி அன்று கோவிலில் பாசிப்பருப்பு பிரசாதம் படைத்து, கடன் தீர வேண்டவும். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் வழிபாடு செய்யலாம். பிரசாதத்தை காகத்திற்கு சிறிது வைத்து, பின்னர் குடும்பத்தினருக்கு வழங்கவும்.

    இந்த நான்கு எளிய பரிகாரங்களையும் அல்லது இயன்றவற்றை முழு நம்பிக்கையுடன் செய்யவும். கடன் தொல்லை நீங்கி, செல்வ செழிப்புடன் வாழலாம்.

  • போகரின் நவபாஷாண மர்மம் – பூம்பாறை குழந்தை வேலப்பர்

    நவபாஷாணத்தின் மறைக்கப்பட்ட மர்மம்

    உலகில் நவபாஷாண சிலைகளை முதலில் உருவாக்கியவர் போகர் சித்தர். பலர் பழனி தண்டாயுதபாணியை மட்டுமே போகரின் படைப்பு என நினைக்கின்றனர். ஆனால் அதே போகரே கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பரையும் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது பெரும்பாலும் அறியப்படாத உண்மை.

    பூம்பாறை – முருகன் அழைத்தால்தான் செல்ல முடியும்

    கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூம்பாறை கிராமம். “முருகன் நினைத்தால்தான் இங்கு வர முடியும்” என்பது அப்பகுதி மக்களின் உறுதியான நம்பிக்கை. பாண்டவர்கள் வனவாச காலத்தில் இறுதியாகத் தங்கிய பகுதி இதே பழனி-கொடைக்கானல் மலைத்தொடர்தான். அங்குள்ள யானைமுட்டி குகையில் போகர் ஞான சக்தியும் மூலிகை ரசாயனமும் கொண்டு நவபாஷாண சிலைகளை உருவாக்கினார்.

    முதலில் தண்டாயுதபாணி வடிவில் பழனியில் பிரதிஷ்டை செய்தார். பின்னர் பஞ்சபூத சக்திகளை ஒருங்கிணைத்து, பூம்பாறை திருமண மண்டபத்தில் குழந்தை வடிவ முருகனைப் பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்தக் குழந்தை வேலப்பர் அபரிமிதமான அருள் புரிகிறார்.

    அருணகிரிநாதரின் தெய்வீக அனுபவம்

    ஒரு முறை அருணகிரிநாதர் பூம்பாறை வந்து தரிசிக்க வேண்டி இரவில் கோவில் மண்டபத்தில் தங்கினார். அப்போது ஒரு ராட்சசி அவரைக் கொல்ல வந்தது. உடனே முருகன் குழந்தை வடிவம் எடுத்து அருணகிரிநாதரின் மார்பில் ஏறி விளையாடினார். இதைக் கண்ட ராட்சசி, “தாயுடன் குழந்தை தூங்குகிறது” என எண்ணி விலகிச் சென்றது. அந்த அற்புத அனுபவத்தால் பேரருள் பெற்ற அருணகிரிநாதர் இத்தல முருகனை “குழந்தை வேலர்” எனப் பாடினார். அந்தப் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. இங்கு அருணகிரிநாதருக்கும் தனிச் சிலை உள்ளது.

    பழனி தண்டாயுதபாணியும் பூம்பாறை குழந்தை வேலப்பரும் உலகில் அரிய நவபாஷாண தெய்வங்கள். இவர்களைத் தரிசித்தால் பாவ வினைகள் தீர்ந்து, வாழ்வில் செல்வமும் ஆனந்தமும் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    வேலும் மயிலும் துணை!

  • சபரிமலை மண்டல விரதம்: ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!

     

    கார்த்திகை மாதத்துடன் ஆரம்பமான சபரிமலை மண்டல காலத்தில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை அணிவது முதல் இருமுட்டி கட்டி பாதயாத்திரை செல்லும் வரை, ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக முறைகள் மற்றும் நெறிகள் பற்றிய முழு தகவல் இங்கே… ச்வாமியே சரணம் ஐயப்பா!

     

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் “சாமியே சரணம் ஐயப்பா” எனும் கோஷங்கள் வீதியெங்கிலும் ஒலிக்கத் தொடங்கும்.

    இந்த மாதத்தின் முதல் நாளிலேயே அதிகாலை புனித நீராடி, கோவிலில் அல்லது வீட்டில் வழிபாடு செய்து ஐயப்பனுக்கான மாலை அணிந்து விரதத்தை ஆரம்பிப்பார்கள். பல பக்தர்கள் ஏற்கனவே மாலை அணிந்து விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுவாக 41 நாட்கள் (மண்டலம்) விரதம் இருப்பார்கள். சிலர் 45 அல்லது 48 நாட்கள் கடைப்பிடிப்பதும் வழக்கம். துளசி அல்லது ருத்ராட்ச மாலை 108 அல்லது 54 மணிகளுடன் அணிய வேண்டும். விரத காலத்தில் நீலம், கருப்பு, காவி, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

    தினமும் காலை, மாலை குளித்து பூஜை செய்ய வேண்டும். கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். படுக்கும் போது பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து தரையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், போதைப் பொருள், உல்லாச சுற்றுலா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    முதல் முறையாக மாலை அணியும் கன்னிச் சாமிகள் வீட்டில் பூஜை செய்து, ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்ய வேண்டும். இருமுட்டிக்கட்டு தேங்காயை சன்னிதானத்தில் நெய் அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவது சிறந்தது. பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்களை எந்த விரதச் செயலிலும் ஈடுபடுத்த வேண்டாம்.

    கார்த்திகை மாதத்தில் வீடுகளில் தினமும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முடிந்தவரை இருவேளைகளில் விரதம் இருந்து, இரவில் வாழைஇலை சாப்பாடு அருந்தலாம். முடியாதவர்கள் அன்னதானம் செய்வது சிறப்பாகும்.

    இந்த முறைகளை பின்பற்றிக், 41 அல்லது 48 நாள் விரதத்தில் ஈடுபட்டால், ஐயப்பனின் அருள் பெற்று வாழ்வு வளம் பெருகும் என நம்பப்படுகிறது. ச்வாமியே சரணம் ஐயப்பா!

  • மேஷம் முதல் மீனம் வரை | அக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – களத்திர ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன் – லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் பேச்சு திறமை கை கொடுக்கும்.
    தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..
    கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணீகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். 

    அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

    மூலம்:

    இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம்.

    பூராடம்:

    இந்த மாதம் சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

    பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

    சந்திராஷ்டம தினங்கள்:     அக் 15, 16

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 24, 25, 26