Blog

  • சித்தர்கள் வாசம் செய்யும் உதய தேவரீஸ்வரர் திருத்தலம்

    சித்தர்கள் வாசம் செய்யும் இந்த திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெருந்தலமாகவே உள்ளது. இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். சித்தர்கள் வழிபடும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் சேலம் அருகே உள்ள அரூர் அடுத்த சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள உதயதேவர் மலை மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். சிறிய குன்று போல் அமைந்திருக்கும் இந்த மலை மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. சிறப்புக்குரியது இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது அரியக் காட்சியாகும். 1131-ம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்தில் பஞ்சந்தாங்கி திருச்சிற்றம்பல வேலைக்காரர் என்பவரால், கோவிலில் கதவு நிலை கொடையாக அளிக்க பெற்றதாக கல்வெட்டு தகவல் உள்ளது. மேலும், இந்தக் கோவில் 7.9.1818-ல் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டு அடையாளங்களும் உள்ளன. ஆரம்ப காலத்தில் இங்கு உதயதேவரீஸ்வரர், விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் மட்டுமே இருந்தன. அதே நேரத்தில் ஊருக்குள் மாரியம்மன் திருத்தலம் ஒன்றும் இருந்தது. சிவனுக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கி உதயதேவரீஸ்வரி அம்மன் சிலையை அமைத்தார்கள். இந்தக் கோவிலில் பவுர்ணமி அன்று இரவு, சிறப்பு பூஜை நடை பெறும். அப்போது விபூதி, மாங்காய் மற்றும் தாழம்பூ வாசம் வீசுவதை அங்கு வந்த பக்தர்கள் இன்றளவும் உணர்ந்து வருகிறார்கள். 3 சித்தர்கள் வருகையின் காரண மாகத்தான், தாழம்பூ, விபூதி, மாங்காய் மணம் அங்கு கமழ்வதாக பக்தர்களிடம் நம்பிக்கை அதிகரித்தது. விநாயகர் சன்னிதியில் தான் பழங்கால கல்வெட்டு அமையபெற்றுள்ளதாக கோவில் பூசாரி கூறுகிறார். இந்த ஆலயத்தில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி பூஜைகள், கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பவுர்ணமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் தொடர்ச்சியாக 3 பவுர்ணமியில் கலந்து கொண்டால், திருமணத் தடை, நவக்கிரக தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைகூடும்.

  • வாழ்வை நெறிப்படுத்தும் மந்திர ஜெபம்

     

    இன்றைய காலகட்டத்தில் , ஆறில் இருந்து அறுபது வயது வரை வயது வித்தியாசம் இன்றி , தவறாமல் புலம்புவது ஸ்ட்ரெஸ்  எனப்படும் மன அழுத்தம் . நம் முன்னோர்கள் வாழ்ந்த எளிமையான  வாழ்வியல் முறைகளில் இருந்து விலகியதால் இன்று இந்த மன அழுத்தத்தில் இருந்து விடு பட , எதை தின்றால் பித்தம் சரியாகும் என்ற அளவிற்கு வந்த விட்டோம்.

     ஆன்மீகத்தை உலகிற்கே எடுத்து சொன்ன நம் நாட்டில் ,அதை  இன்று நம்முடைய   அடுத்த தலைமுறைக்கு முறையாக சொல்லிக் கொடுக்க ஆளில்லை . அதனால் தான் இத்தனை நாள் கண்டுக்கொள்ளாமல் விட்டிருந்த ,நம் நாட்டின் பாரம்பரிய கலைகளான  யோகா மற்றும் தியானக் கலையை , தூசி தட்டி எடுத்து மூலைக்கு மூலை கூவி கூவி வியாபாரம் செய்துக் கொண்டிருக்கிறோம் .

     அமைதி மற்றும் நிம்மதி வெளியே காசு கொடுத்து வாங்கும் விஷயம் இல்லை . அது நமக்குள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய புதையல் . இருந்த இடத்தில் இருந்தே  இறைவனை காணவும் , மனதை நெறிப்படுத்தவும் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த  விஷயம் தான்  மந்திர ஜெபம் . ஆனால் உண்மையில் தியானம் என்றால் என்ன ?. மந்திர ஜெபம் என்றால் என்ன ? .  மந்திர ஜெபம் செய்யும் முறை பற்றி இப்பதிவில் காணலாம் .

     

                                                                              

    மந்திர ஜெபம் செய்ய நல்ல ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலை வேண்டும் . அதை நல்ல குருமார்களின் அறிவுரையோடு தேர்வு செய்துக்கொள்ளலாம் . இதற்காக  108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். இதன் தாத்பரியமாவது ,உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் எனக் கூறப்படுகிறது .

     மந்திர ஜெபம் செய்யும் போது  வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் தான்  மாலையை அழுத்த வேண்டும். நமக்கு வசதியாக இருக்கிறது என்று ஆட்காட்டி விரலில் ஜபம் செய்யக்கூடாது . மந்திர ஜெபம் செய்யும் போது , கிருஷ்ண மணி என்று  அழைக்கப்படும் 109 வது மணியை எப்போதும்  தாண்டக்கூடாது. மேலும் மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும் என்பது நியதி .

     நாம்  அமரும் இடமும் , தேர்ந்து எடுக்கும்  ஆசனமும் கூட மந்திர ஜெபத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில்  தான்  அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் நேர்மறை சக்தி  ஏற்படும் என்பதால் , அவை நமது உடலிலேயே தங்க வேண்டும்.  ஆதலால் வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யவேக்கூடாது. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.

     ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை யார் கண்களுக்கும் வெளியே தெரியாதபடி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.

     குருவிடம்  தீட்சை பெற்றவர்கள் , அந்த  மந்திரத்தை சத்தமாகவோ , உதடுகள் அசையயும் படியோ  சொல்லாமல் ,மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். ஆனால் நாமாவளி மந்திரங்கள் மட்டும் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம்.

    இவ்வளவு மகத்துவம் வாய்ந்த மந்திர ஜெபத்தை எல்லா இடங்களில் இருந்தும் சொல்லலாமா ?. சாதாரணமான ஒரு விஷயத்திற்கே இடம் ,பொருள் , ஏவல் இருக்கும் போது , உன்னதமான மந்திரங்களை பாராயணம் ஏற்ற இடத்தையும் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் . 

     வயோதிகம் காரணமாகவோ , உடல் நிலையின் பொருட்டோ , என்னால் வெளியே செல்ல முடியாது என்பவர்கள்  வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்யலாம் . அதற்கு ஒரு பங்கு பலன் கிடைக்கும் என்றால் ,திருமகள் வாசம் செய்வதாக நம்பப்படும் பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்வதால் 100 மடங்கு பலன் கிடைக்கும். இதுவே ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன் கிடைக்கும் . பர்வதத்தின்  மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

     இடத்தை அவரவர் வசதிக்கேற்ப தேர்வு செய்தாயிற்று , அடுத்து மந்திர ஜெபம் செய்வதற்கான  நேரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வதும் முக்கியம் .  சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்தாலும்  பன்மடங்கு பலன் ஏற்படும்.

     ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை மந்திர  ஜெபத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் என்பதால் ,  தீராத வியாதியஸ்தர்களின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்தால் அவர்கள் உடலில்  நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாகக் காணலாம்.

     இன்னும் எண்ணிலடங்கா  நன்மைகளை கொண்ட இந்த மந்திர ஜெபத்தை முறையாக தெரிந்துக் கொண்டு , பிறர் நன்மைக்காக  ஜெபிக்கும் போது   இந்த பிறவியின் பயனை அடைய முடியும் 

     

  • எங்கும் நிறை பேரறிவான சத்குரு சாய்

     

     

    எங்கும் நிறை பேரறிவான சத்குரு சாய்பாபா , தான் படைத்த அனைத்து ஜீவராசிகளிலும் தன்னை காண முடியும் என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறார் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் . அதேப்போல் தன அடியவர்களுக்கு செய்யும் தொண்டு தன்னை வந்தடையும் என்பதையும் பாபா பல தருணங்களில் நிரூபித்து இருக்கிறார் . அப்படியான ஒரு அற்புதத்தை இப்பதிவில் பார்ப்போம் .

    ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் நாந்தேட் கிராமத்தில் வசித்தது வந்த  பார்சி மில் காண்டிராக்டர் . இறைவன் அளவற்ற எல்லாச் செல்வங்களுடன்  அவரை ஆசீர்வதித்து இருந்தாலும் ,   ஒரு செல்வத்தைத் மட்டும் அவருக்கு அருளவில்லை . மக்கட் செல்வம் தானே  அனைத்திலும் சிறந்தது . வாடியாவிற்கும்  தன் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே  என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. அவர் கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அவரை பெரிதும் மதித்தனர். தர்மசீலரான அவர் ஏழை எளியவர்களுக்கு  தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தியது. ஒரு  சமயம் அவரின் துன்பத்தைக் கண்ட அவரது  நெருங்கிய நண்பரான தாஸ்கணு,கவலைக்கான காரணத்தைக் கேட்டார் .

    உற்ற நண்பரான தாஸ் கணுவிடம் எதையும் மறைக்காமல் , வாடியா  தனக்கு ஒரு குழந்தை  செல்வம் இல்லாத குறையை வெளிப்படுத்தினார் . பாபாவின் தீவிர பக்தரான  தாஸ்கணு,தன் தெய்வம் பாபா நினைத்தால் எந்த அற்புதங்களையும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் ,  அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு கூறி தேற்றினார் . பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தைப் பேறு  கிட்டும் என்று வாடியாவிற்கு  நம்பிக்கையூட்டினார்  தாஸ்கணு. அலைக்கடலில் சிக்கித் தத்தளித்தவனுக்கு  ஒரு பெரிய மரக்கலன் கிடைத்தது போன்று இருந்தது  வாடியாவிற்கு . ஷிர்டி செல்ல முடிவெடுத்த அவர் , சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலையையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சிணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது. பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்ட வாடியா . ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வருவதையும் அவரது பாதங்களில் சரணடைவதையும் பார்த்து வியந்தார்.

     பாபாவை சரணடைந்த அந்த கணமே , தம் பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வேண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார். திடீரென வாடியாவின் பக்கம் திரும்பிய பாபாவின் பார்வை. “எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு!” என்றார் உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்துவந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா. அப்போது , “அந்த ஐந்து ரூபாயில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதியை எடு!”என்றார் பாபா  சற்றே அதட்டலுடன். தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் என்னவென்று தெரியவில்லையே?  என்று வாடியாவுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆனால், பாபா எதுசொன்னாலும்  அதில் ஒரு காரணம் இருக்கும் ஆதலால் , அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என ஏற்கனவே அவருக்கு  தாஸ்கணு அறிவுறுத்தியிருந்தார் . ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணா காணிக்கையை  பாபாவின் பாதத்தில் சமர்ப்பித்தார். தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என பாபாவிடம் விண்ணப்பித்தார். அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதென்று ஆறுதல் கூறினார். மகிழ்ச்சியோடு ஷிர்டியிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா.

    நண்பர் தாஸ்கணுவிடம் சீரடியில்  நடந்த அனைத்தையும் ஒரு வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவாக இருக்குமென்றும் கேட்டார். தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட்டியது. “சில நாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்? அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்! ”என்றார் தாஸ்கணு. வாடியாவுக்கும் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவியானவர். அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா. ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக மூன்று ரூபாய் பதினான்கு அணா இருந்தது! ஓர் அணா கூடக் குறையவுமில்லை. கூடவுமில்லை! மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரிதான் என்பதை பாபா அழகாக அறிவித்துவிட்டார் .

    வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும்  பக்திப் பெருக்கால் பாபாவை நினைத்துக் குவிந்தன. பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    பாபாவின் பாதங்களை உண்மையில்  நம்பிக்கையுடன்  சரணடைந்தவர்களுக்கு குறையொன்றும் இல்லை .

    சாய் சரிதம் தொடரும் …

  • நளனுக்கு நல் வாழ்வு அளித்த திருநள்ளாற்று நாயகன்

    ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். பார்வதி சிவனிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி? சிவன் பார்வதியிடம், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு, என சொல்லிவிட்டு சென்றார். சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன், என்றார். சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன், என்றார்.எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்! என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவத்தை ஒரு  உதாரணமாகக் கொள்ளலாம் .

     

    மூன்றாவது சுற்று

     

    படபடப்பையும், பயத்தையும் தரும்  ஏழரையின் மூன்றாவது சுற்று  ஐம்பது வயதைத்தாண்டி வரும் . இள வட்டங்கள் மத்தியில் ஏளனமாகப் பார்க்கப்படும் போதும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டும் . நம்மிடத்தில் ஒரு கட்டுப்பாடும் , மன முதிர்ச்சியையும் கொண்டு வரும் காலகட்டம் இது .  

    எது நடந்தாலும் நெற்றிக் கண்ணை திறந்து குற்றம் குற்றமே என்று வெறும் குற்றத்தை மட்டுமே கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. மொத்தத்தில் இந்த மூன்றாவது சனியில் நமக்கென்று முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. விட்டு கொடுத்துப் போவதால் கெட்டுப் போகப்போவதில்லை என்று தெளிந்தால் இனி இருக்கப்போகும் வாழ்க்கை தெளிந்த நீரோடை தான் . எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருந்தால் நம்மை  சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்.

    சனி தோஷம் நீங்குவதற்கு சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம்,சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர் என்பதால்  இதன் மூலம்  பயன் பெறலாம் . முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தந்தும் அவர் கருணையைப் பெறலாம் . சனியின் பார்வை நேரிடையாக நம்மீதுபடக்கூடாது  என்பதால் ,சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும் என்பது நியதி .

     

     சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி பட்டப் பாடு நாம் அனைவரும் அறிந்ததே .  ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்த நளன்  மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது. பல துன்பங்களுக்குப் பின் அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தாள்.

    நளமகராஜன் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் அறிகிறோம் .

    “நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன் . நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார் என்கிறது புராணம் .

    நளனும் அவ்வாறே நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானின் அருளால் இழந்த செல்வத்தைப் பெற்று இன்புற்றார் என்பதை அறியும் போது ,  உண்மையில் சனி பகவான் கொடுக்க ,எவர் தடுக்க முடியும் என்ற வழக்கு உண்மை என்பது தெளிவாகிறது .  

     

    சனி பகவான் துதிப்பாடல்

     

    சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

    சச்சரவின்றி சாகா நெறியில்

    இச்சகம் வாழ இன்னருள் தா தா

  • கொடுத்துக் கெடுத்தாலும் , மீண்டும் கொடுப்பவர் சாயா புத்திரன்

    சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர்  தான் தர்ம ராஜனின் அவதாரம் என போற்றப்படும் சனீஸ்வரர் . ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனியின்  தாக்கம் இருந்தே தீரும். அவரின் பார்வையில் இருந்தும் , தீர்ப்பில் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது . சராசரி மானிடரில் இருந்து தேவலோகத்துக்கு அதிபதியான இந்திரனாக இருந்தாலும் அவருக்கு எல்லோருமே ஒன்று தான் .

    ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார்.‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் பாரபட்சம் இல்லாத நீதிமான் என்பதை அறிந்துக் கொள்ளலாம் .

    ஏழரைக்குப் பிறகு  ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவும் நிதானமும் வந்து விடும் . அந்த அளவிற்கு மனிதனை பண்படுத்தும் காலக்கட்டம் என்று கூட சொல்லலாம் . ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ,  புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மை ,தீமைகளையும் தருவார் என்று சொல்லப்பட்டாலும்  , சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று  சொல்லும் அளவிற்கு ஏழரையின்  முடிவில்  அளவில்லாமல் வாரி வழங்கவும் செய்வார் .

     

    இரண்டாவது சுற்று

     

    இருபத்தேழு வயதுக்கு மேல் நடக்கும் ஏழரைச் சனிக்கு  பொங்கு சனி என்று பெயர். பறித்தல்,பறித்ததை காத்தல் , காத்ததை அதன் வீரியம் குறையாமல்  பாதுகாத்தல், பாதுகாத்ததை அதோடு நிற்காமல் பலமடங்காக பெருக்கி , எடுத்தவருக்கே அதை திருப்பி தருதல்  என பொங்கு சனியின் இயல்பை குறிப்பிடலாம் .  இதனால் தான்  கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்று சனி பகவானைக் குறிப்பிடுவதுண்டு .  காசு, பணம், பதவி,கல்யாணம், சொத்து, சுகம் எல்லாம் வந்தாலும் , வந்த வேகத்திலேயே காணாமலும் போகும் . ‘நான்’ என்ற அகந்தையை ஒருவரிடம் இருந்து பிடுங்கவே இந்த அதிரடி நடவடிக்கை . இந்தக் காலக்கட்டத்தில் தான் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . ‘நான்’ , ‘எனது’ , ‘என்னால் தான்’ என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

     

     ‘‘நம் கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவம் தான் இந்த காலகட்டத்தில் உத்தமம் .  நம் நேர்மையை சோதிக்கவும் சனி பகவான் செய்வார் . மனம் சஞ்சலப்படாமல் நேர்மையின் பக்கம் நின்று விட்டால் பின் எல்லாமே ஜெயம் தான் .

    நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் என முக்கூட்டு எண்ணெயினை  ஓர் இரும்புச் சட்டியில் இட்டு , வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத்  திரியாக இட்டு , நீலசங்கு புஷ்பம், , வில்வ இலைகளைக் கொண்டு  சனி பகவான் சன்னதியில் மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர நலம் பயக்கும் .

     

    சனி பகவான் ஸ்தோத்திரம்

     

    ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:

    தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:

     

    சூர்யபுத்திரனும், நீண்டதேகமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை எல்லாம் போக்க வேண்டும்.

  • சோதித்து, பின் சாதிக்க வைக்கும் சனி பகவான்

    நவகிரகங்களில் ஒன்றான சனி பகவானுக்கு மட்டும் தான்  தன் பெயருக்குப் பின்னால் ஈஸ்வரன் பட்டம் உள்ளது . நாம் யாருக்கு பயப்படுகிறோமோ  இல்லையோ, நம் மனசாட்சிக்கு அதாவது சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் சனி பகவானிடம் இருந்து யாராலும் தப்ப முடியாது. அது சிவனாக  இருந்தாலும்,  சரி… ஆண்டியாக  இருந்தாலும் சரி…அவரின்  தீர்ப்பு தர்ம நெறிக்கு உட்பட்டதாக தான் இருக்கும் .  ஆனால் பெரும்பாலும் மக்கள் இவரை  தண்டிக்கும் தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள் . ஆனால் சோதனையின் மூலம் ஒருவரைப் பக்குவப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை எனலாம் .  

    ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ , அதனை அவரிடம் இருந்து பிரித்து, அதன் மூலம் அவர் மனதைப் பக்குவப்படுத்தி பின் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார்.

    சனீஸ்வரன் ஒரு ராசியில்  21/2   ஆண்டுகள் இருப்பார். அதாவது சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு ,இரண்டரை ஆண்டுகள் எனக் கூறப்படுகிறது . ஜாதகத்தில் ஒருவரின்  ராசிக்குப் பின் ராசியிலும் , அவரின் ராசிக்குள்ளும்  மற்றும் ஒருவரின் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும்  சொல்கிறோம் .

    இந்தப் பதிவில்  ஏழரையின் முதல் சுற்றில் , நிகழக்கூடிய சாதகப் பாதகங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் .

                                                       

    ஏழரையின் முதல் சுற்று

     

    மனிதன் பிறந்ததிலிருந்துஅவனுடைய  இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை  சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காண முடியும் .  சனி பகவான் இந்தக் காலக்கட்டத்தில் ஃபுல் பார்மில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது . முதல் சுற்று, நடக்கும் பொது , குழந்தைகளை கையாளுவதே பெற்றோர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள் . செய்த தவற்றையே திரும்ப திரும்ப செய்து பெற்றோறரை டென்ஷனாக்குவதில்  தொடங்கி , அடிக்கடி மருத்துவ செலவு என்று முழி பிதுங்கும் .

    குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் தான் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே  கருத்து மோதல்கள் , ஏட்டிக்குப் போட்டி வாதங்கள் ,  பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் தலையை காட்டும் .

    கணவன் மனைவிக்குள் மூன்றாவது நபரால்  பிரச்னை உருவாகும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

     

    மந்தம், மறதி, தூக்கம் என்று ‘வீட்ல அடங்காத பிள்ளைகளை  ஊர் அடக்கும் விதமாக ’  சனிபகவான் திருத்துவார் .  ஏழரைச் சனியின் போது  பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும்  ,அவர்கள் வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். அதுவே வாழ்க்கையை சீர் தூக்கிப் பார்த்து திருந்த வழி வகுக்கும் .

    இந்த நேரத்தில் தான் பெற்றவர்களும் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையையும் , நேர் மறை சிந்தனையையும்  ஊக்குவிக்க வேண்டும் . தினமும் காலையில் எழுந்து வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வர பழக்க வேண்டும் .

     

    சனி பகவான் காயத்ரி

    காகத்வஜாய வித்மஹே

    கட்க ஹஸ்தாய தீமஹி

    தந்னோ மந்தப்ரசோ தயாத்”

    என்னும் இந்த சனி பகவான் காயத்ரி மந் திரத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்  கொடுத்து , அவர்களை தினமும் சொல்ல வைத்து , சனீஸ்வரர் அருள் கிடைக்கச் செய்யலாம் .

     

    ஏழரையின் இரண்டாம் சுற்றில் நடக்கூடிய விளைவுகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் 

  • நாடி வருபவர்களின் வாழ்வை இனிமையாக்கும் அன்னை மதுரகாளியம்மன்

    காளி என்றதும்பொதுவாகவே நம் மக்களுக்கு  அவளிடம் பக்தியையும் தாண்டி  பயம் தான் ஏற்படும் . ஆனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மனைப்  பார்த்தால் அந்த எண்ணமே மாறி விடும் . தேனை தேடி பறந்து வரும் தேனீக்களாக ,ஒரு முறை  அம்மனை தரிசித்து வந்தால் மீண்டும் மீண்டும் அத்தலம் செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறாள் அன்னை .

    இங்கு தான், கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அளிக்கும் வரப் பிரசாதியாய் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை மதுரகாளி. காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ  என்றால் இல்லை . பெயருக்கு ஏற்றார் போல் முகத்தில் சாந்தமும் ,கருணையும்  ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி  .

     

     சிலப்பதிகார நாயகி  கண்ணகி தான் இங்கு மதுர காளியம்மனாக  வீற்றிருக்கிறாள் என்பது செவி வழி செய்தி . பிரம்மேந்திராள் ஸ்ரீ சக்கரத்தை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை.   

    மதுர காளியம்மன் திருக்கோயிலில்  ,காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு நிறைவடைகிறது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர்  இருவர் ,உடுக்கை ஒலிக்க அன்னையை  உரத்த குரலிட்டு அழைக்கின்றனர். அதை நேரில் கேட்கும் போது நம்மையறியாமல் உடலும் உள்ளமும் சிலிர்ப்பதை உணர முடியும் . அப்படி அழைக்கும்போது மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம். 

    ஸ்தல வரலாறு 

     

    ஆதியிலே சிறுவாச்சூரில்  செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம்  ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால்  அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு உட்படுத்தினான் அவன். மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான். தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை அற்ப மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து  வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் அன்னை மதுர காளியம்மன் .

     

     செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே  இப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை  முதலில் மலை நோக்கி காட்டப்பட்டு ,பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

     

     மதுரை காளியம்மன் என்ற திருநாமமே மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவதால் மதுர காளியம்மன்  என்ற திருநாமம் கொண்டாள் என்பதும் வழக்கு .

     

     வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் தரிசனம்

      

     சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது . இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது. திங்கள் , வெள்ளிக் கிழமைகள் தவிர  பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும்,நவராத்திரி நாட்களிலும் மதுரகாளியம்மனை தரிசிக்கலாம்.

     

    மதுரமான இந்த அன்னையை தரிசித்து நம் வாழ்வையும் இனிமையானதாக ஆக்கிக் கொள்ளலாம் .

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள்

     

    சிவனை தவிர வேறெந்த சிந்தனையின்றி அவன் தாள் பற்றி  வழிநடந்தவர்கள் நாயன்மார்கள். சிவாய நம என்றால் அபாயம் ஏதும் இல்லை என்று தொண்டாற்றிய நாயன்மார்களின் பாடல்கள் , சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். ஒவ்வொருவரும் தம் வாழ் நாளில் ஓர் குறிப்பிட்ட தொழிலை செய்து வந்தாலும் , சிவ நாமத்தையே மூச்சாக கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் .

    அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர்  மட்டுமே பெண்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையார் ,  நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படும் மதுரையை ஆண்ட கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்கரசியார் , திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார்  என்று மூன்று பெண்கள் உள்ளனர் .

    வரும் பதிவுகளில்  இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் .முதலாவதாக அதிபத்தர் என்னும் ஆதி சிவனின் பக்தரைப் பற்றி  தெரிந்துக் கொள்வோம் .

     

    பொன்னுக்கு ஆசைப்படாத அதிபத்தர்

     

    மீனவச் சமூகத்தை சேர்ந்த அதிபத்தர், சோழ நாட்டில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினம் துறைமுகத்தில் வாழ்ந்து வந்தவர் . சிறந்த சிவ பக்தரான அவர் ,  தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்வார்.  அப்படி போகும் போது நடுக்கடலில் கிடைக்கும் முதல் மீனை “இது ஈசனுக்கு” என்று சொல்லி மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்.

    சில நாட்களில் மீன் எதுவும் கிடைக்காமல்  போவதும் உண்டு . அப்படி மீன்களே கிடைத்திடாத காலங்களிலும் கூட , வலையில்  மிக அரிதாக கிடைக்கும் மீனையையும்  கூட இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு  பட்டினியாக கிடக்கும் பக்குவத்தையும்  பெற்றிருந்தார் . அதிபத்தர் இந்த  செயல் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தது .

    ஒரு முறை கொடிய பஞ்சம் வந்தது. அப்போதும் கூட கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தர் , வறுமையிலும் தான்  கொண்ட கொள்கையை  மட்டும் தவறவிடவில்லை. தினமும் கிடைக்கும் ஒரே ஒரு மீனையும்  , இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி நாட்கள் சென்றாலும், தன்னுடைய பணியையும், பக்தியையும் அவர் விடவே இல்லை.

    சும்மா இருப்பாரா நம் திருவிளையாடல்களின் நாயகன் , அதிபத்தர் அன்பை சோதிக்க விரும்பினார் .  ஒருநாள் அதிபத்தரின் வலையில் நவரத்தினமும் , பொன்னும் பதிக்கப்பட்ட அதிசய மீனை சிக்க செய்தார். வறுமை காலத்திலும் ,வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற அந்த ஒரு மீனையும் அதிபத்தர் எவ்வித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார்.  தொடர்ந்து ஈசனும் அந்த அதிசய மீனை அவர் வலையில் சிக்கும்படி செய்தார் . அதிபத்தரும் பொன் பொருளுக்கு ஆசைப்படாமல்  அந்த மீனையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்தார் .

     

    அவரது அன்பில் மயங்கிய சிவபெருமான், பார்வதியுடன் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்கிறது  வரலாறு.

    நாயன்மார்களின் வரலாறு தொடரும் ….

  • வைகாசி விசாகம் வழிபாடு,,,,

    விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

    வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.

    வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

    வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

    முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

  • துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்

    சிவபெருமானின் பெருமையை உணராத பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து அவன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டனர். அதனால் அவர்கள் அனைவரும் பெரும் துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது.

    உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு வந்து சேர்ந்தது.

    சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி கொள்ளப்பட்டனர். பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவித்து வந்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இயற்றினர். அவரை சந்திக்க நந்தி எம்பெருமானிடம் அனுமதி கேட்டு கயிலையின் கதவு அருகே காத்திருந்தனர். எதற்கும் பலனில்லாமல் போயிற்று. செய்த பாவங்கள் அவர்களை துரத்தி வந்தன.

    இறுதியாக ‘சிவபெருமானை தரிசித்து தங்கள் துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது எப்படி’ என்று விஷ்ணுவிடம் தேவர்கள் அனைவரும் சென்று கேட்டனர். அதற்கு அவர், ‘சிவபெருமானின் அம்சத்தில் உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு நேரும். இமயனிடம் வளர்ந்து வரும் பார்வதியின் மீது சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில், மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.

    அதன்படி பிரம்மதேவர், மன்மதனை அழைத்து, சிவ பெருமான் மீது மன்மத அம்பு தொடுக்கும்படி கூறினார். நெருப்பே வடிவான ஈசனின் கோபத்தைப் பற்றி தெரிந் திருந்ததால், பயந்து போன மன்மதன் எவ்வளவோ மறுத்தும், பிரம்மதேவர் விடவில்லை. இறுதியில், ‘என் சாபத்திற்கு ஆளாவாய்!’ என்ற பிரம்மதேவரின் மிரட்டலுக்கு அடிபணிந்தான் மன்மதன்.

    நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது காம பாணத்தை தொடுத்தான். அந்த அம்பு அவரை தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன் தன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்விட்டனர்.

    அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித்து பாடத்தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன், இமயமலை சென்று பார்வதியை மணம் முடித்து கயிலாயம் திரும்பினார்.

    அப்போது தேவர்கள் அனைவரும், ‘சர்வேஸ்வரா! இவ்வுலகில் தங்களுக்கு சமமானவர் எவரும் இல்லை. ஆயினும், சூரபத்ம அசுரர்களை அழிக்கும் வகையில், உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினர்.

    தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும்பாத சிவபெருமான், தனது பழமையான ஆறு திருமுகங் களையும் கொண்டார். ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் என்னும் அந்த ஆறு முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய அந்த தீப்பொறிகள் வெளிக் கொணர்ந்த சத்தமும், வெப்பமும் அம்பிகை, தேவர்கள் அனைவரையும் நடுநடுங்கச் செய்தன.

    பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில் விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு சிவபெரு மான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை கங்கையில் சேர்த்தனர். கங்கை அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது. அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம் கொண்ட குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை ஆறு தாமரை மலர்கள் தாங்கின.
    விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம். ‘வானவர்களுக்கும், வையகத்தில் அனைவருக்கும் வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெருமான்‘ என்று எங்கும் ஒரே முழக்கம். சிவ பெருமான், அம்பிகையுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால் பருகக் கொடுத்தார்.

    அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப்பால் குடித்து தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர் களுக்கு அந்த அழகு சிரிப்பில், சூரபத்மனின் அழிவு கண்கூடாக தெரிந்தது.