சபரிமலையில் பார்கோடுடன் கூடிய இருமுடிக்கான பை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்தாண்டு மண்டல பூஜைக்கான திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவருகின்றனர். விடுமுறை நாளான இன்று அதிகாலையிலேயே இருமுடி கட்டி வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் போக, சன்னிதானத்தில் விரதமிருந்து இருமுடி கட்டும் ஐயப்ப பக்தர்களும் உள்ளனர். அவர்களது வசதிக்காக தேவசம் போர்டு அனுமதியோடு பார்கோடுடன் கூடிய இருமுடி பைகள் சன்னிதானத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பையில் இடம்பெற்றுள்ள பார்கோடை மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் பூஜைகள் நடக்கும் நேரம், நடை திறக்கும் நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் மொபைல்போன் திரையில் காட்டும். இந்த முயற்சி பக்தர்களுக்கு பலன்கொடுக்கும் என்று தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: ஐயப்பா சரணம்
ஐயப்பா சரணம்
-
2017-11-19-14-30-21
-
2017-11-18-15-00-22
சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்துள்ள பக்தர்கள் ஐயப்பன் பற்றி விரதம் அனுஷ்டிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்களை பார்க்கலாம்.
குருசாமிக்குரிய தகுதி :
சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி ஆக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன் மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.
கட்டு கட்டும் முறை :
நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜைபொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதியாக பிரித்து தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கல்கண்டு, உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்முடியில் தனக்கு தேவையான உணவுப்பொருளை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கற்பூர தீபம் :
ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.
நோய் நீக்கும் வழிபாடு:ஐயப்பன் கோயிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.
நெய் அபிஷேகம்:
சபரிமலைக்கு சென்றதும் கோயிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து, நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.
மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.
ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக் கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
பிரம்மச்சரியம் கட்டாயம் 60 நாள்:
சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும் நாள் முதல் அறுபது நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கிறது. ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு கொண்டாடப்படும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு உணவைக்குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.
41 நாளிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானது. ஆனால் கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகும் ஜனவரி 14ம் தேதி வரை பிரம்மச்சரிய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.
வாபர் வழிபாடு:
ஐயப்பன் கோயில் 18ம் படிக்குகீழாக கிழக்கு பக்கத்தில் வாபரை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இங்கே ஒரு இஸ்லாமியர் பூஜை வழிபாடுகளை செய்வார். வாபருக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தலாம்.
நெய் தேங்காய் யாருக்கு?:
சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒருபுறத்தில் எரியும் ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் ஐயப்பனுக்கு உரியது என பலரும் கருதுகின்றனர். உண்மையில், இது ஐயப்பன் சன்னதியின் இடதுபுறமுள்ள கன்னிமேல் கணபதிக்கு உரிய வழிபாடாகும்.
சபரிமலை கோயிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயாசம் வைத்தல், வெள்ளை நைவேத்யம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்உருண்டை, பழம், பானகம், இளநீர், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சார்த்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகளாகும். -
2017-11-17-14-06-08
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது ஒருசிலவற்றை மனதில் கொண்டு நடக்க வேண்டும். ஒரு மண்டலத்திற்கு விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், எப்போதும் மனதை அமைதியாக வைத்து, ஐயப்பனையே நினைத்து, சரணம் சொல்லி வழிபட வேண்டும். மாலை போட்டவர்கள், மெத்தை, தலையணை, போர்வை என்று எதையும் உபயோகிக்கக்கூடாது. வெறும் தரையில், ஒரு துணியை விரித்து மட்டுமே படுக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள், மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் கோபம் மற்றும் மற்றவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசக்கூடாது. சாந்தமுடன் இருக்க வேண்டியது அவசியம். மாலை போட்டுவிட்டால், விரதம் முடிந்து மாலையை கழற்றும் வரை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகத்தை வெட்டவோ, அலங்காரம் செய்யவோ, செருப்பு அணியவோ அல்லது வாசனை திரவியங்களை தடவிக் கொள்ளவோ கூடாது. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது, பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் தான் பார்க்க வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மற்ற பெண்களின் தொண்டும், பக்தியும் மிகவும் உயர்வானதும், போற்றக்கூடியதும் ஆகும். ஒருவேளை கழுத்தில் அணிந்திருந்த மாலை அறுந்துவிட்டால், அதை சரிசெய்து மீண்டும் அணிந்து கொள்ளலாம். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. மனம் வருந்த வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்றால், அவர்களை காண்பதைத் தவிர்ப்பதோடு, வசதி இருந்தால், அவர்களை தனி அறையில் இருக்குமாறு கூறலாம். இல்லாவிட்டால், மாலை அணிந்திருப்பவர்கள் வெளியிடங்களில் தங்கிக் கொள்வது நல்லது. எப்போதும் மாலைப் போடும் தருணத்தில், அச்சமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. ஒருவேளை மனதில் ஏதேனும் குழப்பமோ அல்லது மனம் ஏதேனும் சஞ்சலத்துடன் இருந்தால், மாலைப் போடுவதைத் தள்ளிப் போடுவது நல்லது. இருமுடி கட்டும் நிகழ்ச்சியை மற்ற இடங்களில் வைப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே நடத்துவது நல்லது. இதனால் வீடு மங்களகரமாகவும், தீய சக்திகள் அகன்றும் இருக்கும். மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும். உங்கள் குருசாமி சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு இணையானவர். எனவே அவருக்கு பணிவிடை செய்து, ஐயப்பனின் அருளைப் பெறுங்கள். எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம். ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது. மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.
-
2017-11-15-14-58-33
மண்டல பூஜையையொட்டி சபரி மலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோவில் நடையை திறந்து, பூஜை செய்தார். நாளை முதல் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணி முதல் காலை 11.30 மணி வரை சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு நடை அடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
-
aiyappanin-eru-kalgalil-thundu-katiyierupathu-yen
ஐயப்பன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை. பொன்ணம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.
-
2017-11-10-15-03-06
எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவ கிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது.
மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, தலையணையின்றி உறங்குவது, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது என எல்லாமே நமது சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறைக்கான விரதங்கள்தான். அதனால் 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வது சிறப்பு. கடுமையான மலைப் பாதையில் சிரமம் இல்லாமல் ஏறுவதற்கு இது உதவியாக இருக்கும். சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்லும் கன்னிசாமிகள், கட்டாயம் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வதே நன்று.
-
2017-11-10-14-47-01
பெரம்பலூரில் அமைந்துள்ள ஐயப்பன் திருக்கோயில் மற்றும் விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா கோலகலமாக நடைபெற்றது. மேற்கு வானொலி திடல் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் மற்றும் விநாயகர் திருக்கோவில் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த 7 ஆம் தேதி கணபதி ஹோமம், புன்யா வஹனம், வாஸ்து சாந்தி பூஜைகளோடு, யாகசாலை வேள்விகள் தொடங்கியது. தொடர்ந்து யாக வேள்வியில் பல்வேறு வகையான மூலிகைப் பொருள்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வியாழக்கிழமை திரவ்யா ஹீதி மற்றும் நாடி சந்தனம் பூஜைகளுக்கு பிறகு பூர்ணா ஹூதி பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடுடன் கோபுர விமானத்துக்கு புனிதநீர் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ஐயப்பன் மற்றும் விநாயகர் கோயில் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. குடமுழுக்கு விழாவில், பெரம்பலூர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-
2017-11-09-16-23-19
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்கள் பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் “விர்ச்சுவல் கியூ’ கூப்பன் திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்பு, நீங்கள் செல்ல விரும்பும் தேதி, எந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறீர்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த நேரம் தங்களுக்கு ஏற்றதோ அந்த நேரத்தில் முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்கலாம். முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடன் ஏதாவது ஓர் அசல் அடையாள அட்டை, பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும்.
பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையைப் பரிசோதித்த பிறகு பம்பையில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.கூப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷங்களுக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டாம் படியில் ஏறி சுவாமி தரிசனம் செய்து விடலாம்.
-
aiyapanukku-arupadai-veedugal
பொதுவாகச் சபரிமலை ஆலயம் எப்போதெல்லாம் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்? விரதமிருந்து போனால் மட்டும்தான் தரிசிக்க முடியுமா?’’ ‘‘அப்படியில்லை.
ஒவ்வொரு மலையாள மாதமும் ஒன்று முதல் ஐந்து தேதி வரை ஆலயம் திறந்திருக்கும். ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளிலிருந்து 41 நாட்கள்; மற்றும் கார்த்திகை முதல் தேதியிலிருந்து 41 நாட்கள் ஆலயம் பக்தர்களின் வருகையை எதிர்நோக்கித் திறந்திருக்கும். அதேபோல மார்கழி மாதம் 25ம் தேதி முதல் மகர விளக்கு தரிசனத்தை ஒட்டி, பன்னிரண்டு நாட்கள் திறந்திருக்கும். தவிர, பங்குனி உத்திரம், வைகாசி ஹஸ்தம் நட்சத்திர நாட்களிலும் திறந்திருக்கும்.
‘முருகனுக்கும், விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பதுபோல, நம் ஸ்வாமி ஐயப்பனுக்கு உள்ளனவாமே அப்படியா?’’ ‘‘ஆமாம், முதலாவது, குளத்துப்புழா.
இந்தத் தலம் தமிழ்நாட்டில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சிறிய கோயிலில் ஐயப்பன் பாலகனாகக் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலின் உட்பிராகாரத்தில் தீர்த்த கிணறும், மகாவிஷ்ணு சந்நதியும் அமைந்துள்ளன. கூடவே இசக்கியம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். நாகதேவதை, சிவன், விநாயகர், சந்நதிகள் வெளிப்பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகில் ஓடும் குளத்துப்புழா நதியும் தெய்வீகமானது. குளத்துப்புழாவில் சித்திரை விஷு திருவிழா மிகவும் பிரபலமானது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து நீராடி பாலகன் மணிகண்டனிடம் வேண்டி நின்றால், குழந்தை பாக்யம் கிடைக்கிறது. பிறந்த குழந்தைக்கு 9ம் மாதத்தில் இங்கு வந்து முதலில் உணவு ஊட்டி வழிபாடு நடத்தினால் குழந்தை நோய், நொடியின்றி விளங்குகிறது.இரண்டாவதாக, அச்சன் கோயில். மேலே சொன்ன செங்கோட்டையிலிருந்து 30 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம், அச்சன் கோயில் வனத்தில் இந்தக் கோயில் உள்ளது. அச்சன் கோயிலின் அரசனாக பூர்ண-புஷ்கலா தேவியுடன் அரசாட்சி செய்கிறார் ஐயப்பன். ஐயப்பனின் வலப்புறம் அரசனின் ஐயப்பனை நாடி வரும் பக்தர்களுக்கு தம் பங்காகவும் அருள்பாலிக்க தந்தையார் சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது எருமேலி. கேரளா மாநிலத்திலுள்ள மணிமாலா நதியிலிருந்து பிரியும் கிளை நதிக்கரையில் எருமேலி சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ஐயப்பன் சாஸ்தாவாக சாந்த சொரூபனாக நின்ற நிலையில் கையில் வில், அம்பு ஏந்தி தரிசனம் தருகிறார். கோயில் வெளிப்பிராகாரத்தில் ‘அம்மே நாராயணா’ சந்நதி உள்ளது. இங்கு பிற தெய்வங்கள் கிடையாது. சற்று தொலைவில் பேட்டை துள்ளல் வசந்தவிழா பக்தி பூர்வமாக நடைபெறுகிறது.
நான்காவது ஆரியங்காவு. இத்தலம் செங்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கேரளா எல்லையில் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. வனப்பகுதியில், தரையிலிருந்து 300 அடி ஆழத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில், மதுரை பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. பூஜை வழிபாடுகள் தமிழக கோயில் கலாசாரத்தைப் பின்பற்றியே நடைபெறுகின்றன. ஆரியங்காவு ஐயப்பன் தமிழ்ப்பெண் புஷ்கலாதேவியை இங்கு திருமணம் முடித்தார் என்பதற்கு புராண ஆதாரம் உண்டு. ஆரியங்காவு கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள், மண்டல பூஜையும், நவராத்திரி திருவிழாவும். ஐயப்பன் சந்நதி அருகே மாம்பழத்துறை பகவதி புஷ்கலாதேவி சந்நதியுள்ளது. இந்த சந்நதி, திருக்கல்யாண உற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவத்திற்கு மட்டுமே திறக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வந்து திருக்கல்யாணம் பார்த்து மஞ்சள் கயிறு பிரசாதம் பெற்றுச் சென்ற சிறிது காலத்திற்குள்ளேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது.
ஐந்தாவது, பந்தனம். திருவனந்தபுரம், எம்.ஜி.சாலையில் உள்ள, ஐயப்பன் மணிகண்டனாக வாழ்ந்த பழைய அரண்மனை எதிரே வாழியக் கோயிலில் உள்ள கருவறையில் ஐயப்பன் விக்ரக வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எதிரே பம்பை நதி பாய்கிறது. இங்கேதான் ஐயப்பன் பந்தள மன்னனால் குழந்தையாக கண்டெடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. பங்குனி உத்திரம் நாள் ஐயப்பனின் அவதார தினவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சித்திரை விஷு, மண்டல பூஜை, மகர ஜோதி விழாவும் கொண்டாடப்படுகின்றன. பந்தளம் கோயிலே, கேரளா ஐயப்பன் கோயிலின் மூலம் ஆகும்.
ஆறாவதாக சபரிமலை. இங்கு ஐயப்பன் கோயில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. பம்பையிலிருந்து நடைப்பயணமாக நான்கு கி.மீ. தொலைவு. எரிமேலியிலிருந்து பெருவழி நடைபாதையில் 42 கி.மீ. தொலைவு. சபரிமலை வனத்தில் 18 படி நடை வைத்து கலைநயத்துடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் கட்டப்பட்டுள்ள கோயில் அமைப்பு மிக வித்தியாசமானது. 18 படி ஏறி கோயில் வாயிலின் உள்ளே சென்றால் எதிரே தங்கக் கொடிமரம் காட்சியளிக்கிறது. சோபன மண்டபத்தை அடுத்து தங்கக் கூரை வேய்ந்த கருவறையில் ஐயப்பன் கொலுவிருக்கிறார். ஐயப்பன் கோயில் பிராகாரத்தைச்சுற்றி நாகர், விநாயகர், காவல் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பதினெட்டாம்படி அருகே கருப்பசாமியும், கருத்தசாமியும் காவல் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். ஐயப்பனுக்கு முக்கியமாக நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. சந்தனபிஷேகம், புஷ்பாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியவை பிற அபிஷேகங்களாகும்.
உதய ஸ்தமன பூஜை, உஷத் பூஜை, உச்சி பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை முக்கியமான பூஜைகளாகும், 18ம் படி பூஜையும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் 10ம் நாள் ஆராட்டு உற்சவம் மிக முக்கியமானது. இந்த நாட்களில் உற்சவ பலி தரிசனம், ஸ்ரீபூதபலி பூஜை, சுவாமி பள்ளிவேட்டை பம்பை நதியில் ஆராட்டு ஆகியவை பிரதான சம்பிரதாயங்களாக நடத்தப்படுகின்றன.’’
-
2017-11-09-07-07-34
சபரிமலை பம்பை ஆற்றில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ஒன்றரை முதல் 6 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டலகால பூஜை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. மண்டலகால பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மண்டல சீசனை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். இவர்கள் புனித நீரான பம்பையில் குளித்த பின்னரே சாமிதரிசனம் செய்ய சன்னிதானம் செல்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதாலும், உடை, கவர்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வீசுவதாலும் பம்பை அசுத்தம் ஆவதாக ஏராளமான புகார்கள் உள்ளன. இதையடுத்து பம்பை நதியை மீட்க பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. ஏற்கனவே பம்பை ஆற்றை அசுத்தப்படுத்தக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பம்பை ஆற்றில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தி குளிக்க பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் கிரிஜா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.