முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பௌர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.
துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்கவேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும். அத்துடன், ‘ஸ்வாகதம்’ என்றும் 3 முறை கூறவும். இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். அடுத்து, தேங்காய், பழம், தாம்பூலம், பால் பாயசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவங்குங்கள். ‘ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:’ – என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து… ‘ஓம் கஜானனாய நம:’ என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும்.
Category: தியானம்
தியானம்
-
துளசி பூஜை செய்யும் முறை
-
சிவராத்திரி பூஜை முறைகள்….
சிவபூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம். அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.
-
மன அமைதி பெற….
மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. ஆழ்ந்த தியானம் செய்யும் போது அதன் பலனை நாம் உணர முடியும். சரி தியானம் செய்வது எப்படி என்பது பலரின் கேள்வி? தியானம் செய்ய எளிய வழிகளை தற்போது பார்க்கலாம். முதலில் உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தை தேர்தெடுக்கின்றோமோ அதே நேரத்தில் தொடர்ந்து தியானம் செய்ய அமர வேண்டும். வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமர்ந்து தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடி சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும். இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும். பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும். இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.
-
சகல நன்மைகளையும் தரும் தியானம்
அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தவும், இறைவனை நோக்கி நம் மனதை செலுத்தவும் தியானம் ஒரு சிறந்த கருவியாகும். மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின் உருவத்தையே பதித்து, மந்திர ஜபம் செய்வது தியானத்தின் சிறப்பு.
தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து செய்யும் போது பலன் இரட்டிப்பாகும். தியானம் செய்யும் போது ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் செய்ய வேண்டும். நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்யவே ஆசனம். ஜபம்செய்ய நதிக்கரை, மலை, பசுத்தொழுவம்,புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. பூஜை அறை, நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகளும் ஜபம் செய்ய சிறந்த இடம்.
ஆனாலும் பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தரும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுத்தலாம். மாலையாக இருந்தாலும், இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், மனம் இறைவனிடம் இருக்க வேண்டும்.
தியானம் பழகும் ஆரம்பக் காலத்தில் , மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவின் பாதாரவிந்தங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டோம் என்றால் தியானமும் ஜபமும் நமக்கு எளிதாக கைக் கூடும்.
சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் உபாசனையில் நாம் ஓரளவு வெற்றி பெறலாம். நமக்கான உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து, குரு அறிவுரைப்படி உபாசிக்க வேண்டும். நம்முடைய ஆத்மாவை யார் நெருங்கி வரமுடிகிறதோ,அவரே நம் குரு.
உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் . உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை . கூடியவரை ஒரே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம்.
அங்கு ஆசனத்தை விரித்து அதில் தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி அமர்ந்துக் கொள்ளவும். கைகள் மடி மீது வைத்து, கண்களை மூடிக் கொள்ள வேண்டும்.
நமது மூச்சின் மீது கவனம் வைத்து, மூச்சை மெதுவாக இழுத்து விட்டு பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.
மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்க வேண்டும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உபாசனை தெய்வத்திடம் நிறுத்தவேண்டும்.
பின்பு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை ,குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். நம் முழு கவனமும் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்க வேண்டும். எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால் தான் பலன் தர ஆரம்பிக்கும்.
தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழ வேண்டும்.
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலையான தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது என்கிறது சாஸ்திரம்.
கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி.தகுந்த குருவிடம் தியானத்தையும், உபாசனைகளையும் தெரிந்துக் கொண்டு அதை பழகும் போது சகல நன்மைகளும் உண்டாகும்.
-
எங்கே நிம்மதி ?
பல நேரம் நாம் நிம்மதியையும் , மன அமைதியையும் தேடி எங்கெங்கோ அலைந்துக் கொண்டிருக்கிறோம். பல தேவைகளின் பொருட்டு அலைகடலென மனதை ஆர்ப்பரிக்க விட்டு, அதில் நிம்மதி என்னும் முத்தை எடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறோம்.
நம் மனதில் தான் உலகின் மொத்த அமைதியும் , நிம்மதியும் குடிக்கொண்டு இருக்கிறது என்பதை உணரும் தருணத்தில் தான் இறைவனை நம்மால் உணர முடியும்.
இப்படி தான் ,ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று வெகு நாளாக ஆசை. ஆனால் அவரை எப்படி சந்திப்பது,என்று குழப்பம். அதற்காக நிறைய பேரை கேட்டான். கடவுளைத்தானே பார்க்க வேண்டும். அதிலென்ன சிரமம் கோவிலுக்கு போ என்றார்கள். இவனும் உடனே புறப்பட்டான்.
போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். முகத்தில் ஏகப்பட்ட குழப்பத்துடன் சென்றுக்கொண்டிருந்த அவனிடம் அவர்,” எங்கே போகிறாய் ?”என்று கேட்டார்.
“கடவுளை காண போகிறேன் !”என்றான் நம்மவன்.
“எங்கே போய் காணப்போகிறாய்” என்றார் ஞானி.
“வேறு எங்கே கோவிலில் தான் !”என்றான்.
“சரி அங்கே போய் ……..”?
“அங்கே போய் அவரை வழிபட போகிறேன் ! “
“ஓ …அப்படியா ?அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?”
“இல்லை தெரியாது “
“பிறகு எந்த வகையிலும் கடவுளை அறியாத நீ , எப்படி அவரை வழிபட முடியும்?”
“சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே , அப்படியென்றால் “
“உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் “
ஞானியின் பதிலால் அவன் ரொம்பவே குழம்பி விட்டான்.
ஞானி பொறுமையாக அவனுக்கு தெளிவு படுத்தினார்.
“ஏ, மனிதனே ….. நீ செய்யப்போவது உண்மையான வழிபாடு இல்லை …. இன்றைக்கு மனிதர்கள் ” பக்தி” என்ற பெயரில் ஆண்டவனிடம் பண்டமாற்று வியாபாரம் மாதிரி தட்சணை கொடுத்து தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.
பக்தனோ ,“நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் …”என்றான் விடாப்பிடியாக. ஞானியும் ,“ நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?”என்றார் . “அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?”. “கடவுளை நீ சந்திக்க முடியாது . அவரை உணரத் தான் முடியும் !”.
“அதற்கு என்ன தான் வழி ?”.
“தியானம் ஒன்றே வழி”
முன்னிலும் அதிகமாக குழம்பிய பக்தன், ” தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?”என்றான்.
“இல்லை,தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் .உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் “என்றார் ஞானி.
அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார் . ஞானியின் முன்னால் பணிவோடு நின்ற அவர் தன்னுடைய தேவையை சொன்னார் :
” I WANT PEACE”
அதற்கு ஞானி ,“முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை சுலபமாக நீ நெருங்கலாம் !” எனக் கூற , வந்தவர் யோசித்தார்.
‘ I ‘ . ‘ WANT ‘ இரண்டையும் விட்டு விலகினால் ‘PEACE ‘ நெருங்கி வருகிறது !’ நான் ‘ என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ‘ என்னுடையது ‘ என்கிற ஆசைகளை விலக்குங்கள். ‘ அமைதி ‘ என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் என்றார். வெளிநாட்டுகாரர் விளக்கம் கிடைத்த மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கே வந்தான்.
“சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !”என்று ஜம்பம் பேசினார்.
“ எப்படி அது ?என்றார் ஞானி.
“ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !”என்று சொல்லும் போதே ,அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !
ஞானி கேட்டார்,”அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருந்தது ?”
” ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !”உற்சாகமாக சொன்னான் .
“உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?”என்று ஞானி கேட்க
“இல்லை “. அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !”
“யார் அவர் “
“அங்கே இருக்கிற அர்ச்சகர் !”.வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .
” சரி , சுவாமி . நான் வர்றேன் !”என்று சொல்லிவிட்டு சோர்வோடு நடந்து போனான் .
இறுதியில் முதலில் வந்த மனிதன் எழுந்தான். ஞானியிடம் விடை பெற்றான். திரும்பி நடந்தான் .ஞானி கேட்டார் :
“எங்கே போகிறாய் ? ”
“வீட்டுக்கு !”
“கோவிலுக்கு போகவில்லையா ?”
“இல்லை “
“அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?”
“ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதையும் , ‘நான் ‘ . ‘என்னிடம் ‘ இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையையும் தெரிந்து கொண்டேன் “என்றான்.
ஞானி இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்தார்.
“ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் நான்,என்னிடம் என்ற அகந்தையில் இருந்து விலகியிருக்கிறோமோ , அவ்வளவு தூரம் இறைவனிடம் நெருங்கி இருக்கிறோம் என்பது பொருள் என்றார் ஞானி.
‘நான்’ , ‘என்னிடம்’ இருந்து விலகி , இறைவனிடம் நெருங்குவோம் நாம்.
-
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் யோகா
( ஜூன் 21 சர்வதேச யோகா தினம் )
பாரத புண்ணிய பூமி உலகிற்கு பல அற்புத கலைகளை வழங்கியுள்ளது. இதில் தொன்மையான கலை தான் யோகா . நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான நன்மைகளை பெரும் போது , பணம், செல்வாக்கு , புகழ் என உயரும் போது அக்கம்பக்கத்தினர் எல்லாம் யோகம் தான் என்று சொல்வது வழக்கம். யோகா என்பதே இந்தியா உலகிற்கு கொடுத்த பெரும் யோகம்.
யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம் .
யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும் , மன அழுத்தத்தை குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும் .

அழகிய உடல் அமைப்பை பெறவும் சீரான எடையை கடைபிடிக்கவும் யோக நமக்கு வழிகாட்டி வருகின்றது.
மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் யோகா மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரிசெய்கின்றது. யோசிக்கும் திறனை மேம்படுத்தும் தன்மை யோகாவிற்கு உள்ளது. மூளைக்கும் உணர்வுக்கும் சமநிலை இல்லாத நிலை ஆரோக்கியமற்றது. யோகா செய்வதால் முழுமையான உடல் அமைப்பையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். மேலும் நோயற்ற வாழ்வை மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் கொண்டாட முடியும்.
யோகாசனங்களை தினமும் செய்தால், தொப்பையற்ற வயிற்றை பெறலாம்.
யோகாவின் முலம் இதய நோய்களை கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகின்றது
யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம். உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களும், டிரைவர்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் முதுகு தண்டுகளில் பிடிப்புகளை போக்க முடியும்.
மூச்சு பயிற்சியால் சீரான சுவாசத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களை சீர்படுத்தி சீரான சுவாசதத்தைப் பெறலாம். அதிலும் ஆழமான மூச்சு பயிற்சி உடல் வலிமையை கூட்டி மன அழுத்தத்தை போக்குகின்றது. முதுகு வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் யோகா நிவாரணம் அளிக்கின்றது. இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக செயல்படுகின்றது.
கடினமான வேலையை செய்தவுடன் யோகா செய்தால், மன அழுத்தத்தை போக்கி கொள்ள முடியும். யோகா மட்டும் இல்லை மற்ற உடற்பயிற்சிகளாலும் மன அழுத்தத்தை போக்க முடியும்.
ஆனால் ,புதிதாக பயில்பவர்கள் , நல்ல ஆசானின் துணைக்கொண்டு ஆரம்பித்தல் நல்லது . ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.ஆசனத்தின் முடிவிலும் இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.உடல் வளைந்து வலுக்கட்டாயமாக யோகா செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயலக் கூடிய ஆசனங்களையே செய்ய தவேண்டும்.ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும். இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து, 10-20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.

நம்முடைய பல பாரம்பரியங்களை மறந்து விட்ட நிலையில் , மீண்டும் அவைகளை மீட்டெடுத்து நோயற்ற பெரு வாழ்வு வாழ்வோம் .
-
வாழ்வை நெறிப்படுத்தும் மந்திர ஜெபம்
இன்றைய காலகட்டத்தில் , ஆறில் இருந்து அறுபது வயது வரை வயது வித்தியாசம் இன்றி , தவறாமல் புலம்புவது ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் . நம் முன்னோர்கள் வாழ்ந்த எளிமையான வாழ்வியல் முறைகளில் இருந்து விலகியதால் இன்று இந்த மன அழுத்தத்தில் இருந்து விடு பட , எதை தின்றால் பித்தம் சரியாகும் என்ற அளவிற்கு வந்த விட்டோம்.
ஆன்மீகத்தை உலகிற்கே எடுத்து சொன்ன நம் நாட்டில் ,அதை இன்று நம்முடைய அடுத்த தலைமுறைக்கு முறையாக சொல்லிக் கொடுக்க ஆளில்லை . அதனால் தான் இத்தனை நாள் கண்டுக்கொள்ளாமல் விட்டிருந்த ,நம் நாட்டின் பாரம்பரிய கலைகளான யோகா மற்றும் தியானக் கலையை , தூசி தட்டி எடுத்து மூலைக்கு மூலை கூவி கூவி வியாபாரம் செய்துக் கொண்டிருக்கிறோம் .
அமைதி மற்றும் நிம்மதி வெளியே காசு கொடுத்து வாங்கும் விஷயம் இல்லை . அது நமக்குள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய புதையல் . இருந்த இடத்தில் இருந்தே இறைவனை காணவும் , மனதை நெறிப்படுத்தவும் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த விஷயம் தான் மந்திர ஜெபம் . ஆனால் உண்மையில் தியானம் என்றால் என்ன ?. மந்திர ஜெபம் என்றால் என்ன ? . மந்திர ஜெபம் செய்யும் முறை பற்றி இப்பதிவில் காணலாம் .

மந்திர ஜெபம் செய்ய நல்ல ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலை வேண்டும் . அதை நல்ல குருமார்களின் அறிவுரையோடு தேர்வு செய்துக்கொள்ளலாம் . இதற்காக 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். இதன் தாத்பரியமாவது ,உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் எனக் கூறப்படுகிறது .
மந்திர ஜெபம் செய்யும் போது வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் தான் மாலையை அழுத்த வேண்டும். நமக்கு வசதியாக இருக்கிறது என்று ஆட்காட்டி விரலில் ஜபம் செய்யக்கூடாது . மந்திர ஜெபம் செய்யும் போது , கிருஷ்ண மணி என்று அழைக்கப்படும் 109 வது மணியை எப்போதும் தாண்டக்கூடாது. மேலும் மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும் என்பது நியதி .
நாம் அமரும் இடமும் , தேர்ந்து எடுக்கும் ஆசனமும் கூட மந்திர ஜெபத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் தான் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் நேர்மறை சக்தி ஏற்படும் என்பதால் , அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். ஆதலால் வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யவேக்கூடாது. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.
ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை யார் கண்களுக்கும் வெளியே தெரியாதபடி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.
குருவிடம் தீட்சை பெற்றவர்கள் , அந்த மந்திரத்தை சத்தமாகவோ , உதடுகள் அசையயும் படியோ சொல்லாமல் ,மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். ஆனால் நாமாவளி மந்திரங்கள் மட்டும் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம்.
இவ்வளவு மகத்துவம் வாய்ந்த மந்திர ஜெபத்தை எல்லா இடங்களில் இருந்தும் சொல்லலாமா ?. சாதாரணமான ஒரு விஷயத்திற்கே இடம் ,பொருள் , ஏவல் இருக்கும் போது , உன்னதமான மந்திரங்களை பாராயணம் ஏற்ற இடத்தையும் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் .
வயோதிகம் காரணமாகவோ , உடல் நிலையின் பொருட்டோ , என்னால் வெளியே செல்ல முடியாது என்பவர்கள் வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்யலாம் . அதற்கு ஒரு பங்கு பலன் கிடைக்கும் என்றால் ,திருமகள் வாசம் செய்வதாக நம்பப்படும் பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்வதால் 100 மடங்கு பலன் கிடைக்கும். இதுவே ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன் கிடைக்கும் . பர்வதத்தின் மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.
இடத்தை அவரவர் வசதிக்கேற்ப தேர்வு செய்தாயிற்று , அடுத்து மந்திர ஜெபம் செய்வதற்கான நேரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வதும் முக்கியம் . சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்தாலும் பன்மடங்கு பலன் ஏற்படும்.
ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை மந்திர ஜெபத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் என்பதால் , தீராத வியாதியஸ்தர்களின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்தால் அவர்கள் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாகக் காணலாம்.
இன்னும் எண்ணிலடங்கா நன்மைகளை கொண்ட இந்த மந்திர ஜெபத்தை முறையாக தெரிந்துக் கொண்டு , பிறர் நன்மைக்காக ஜெபிக்கும் போது இந்த பிறவியின் பயனை அடைய முடியும்
-
விநாயகரை குளிர்விக்க அருகம்புல் மாலை….
அனலாசுரன் என்ற அசுரன் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றி எரித்து விடுவான்.
விநாயகர் மக்களைக் காக்கும் பொருட்டு அனலாசுரனுடன் போரிட்டார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.
எனவே கோபத்தில் அவனை விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக் கக்கினான்.
விநாயகரை குளிர்விக்க குடம்குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை.
உடனே முனிவர் ஒருவர் அருகம்புல்லை தலையில் வைத்து வழிபட்டார். விநாயகரின் எரிச்சல் அடங்கியது.
அது முதல் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாதது ஆகிவிட்டது.