Category: தீபாவளி

தீபாவளி

  • தீபாவளி கொண்டாட்டம் ஏன்?

     

     

     ஒளியின் சிறப்பை உணர்த்துவது தீபாவளி தீபங்களின் வரிசை என்பதே  தீபாவளி,வெளியுலகத்திலுள்ள இருள் மட்டுமில்லாமல்,மனதில் இருக்கும் தீமை என்னும் அக இருளும் நீங்க தீபாவளி வழி காட்டுகிறது.
    புத்தாடை,பலகாரம்,பட்டாசு,உறவினர்களைச் சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமில்லாமல்,தன்னைப் போல பிறரை நேசிக்கும் அன்பு மனம் நமக்கு வேண்டும்  என்பதை உணர்த்துகிறது. எளியவர்களுக்கு இயன்ற உதவி செய்யும் நன்னாளாக அமைகிறது.

     

    தீபாவளி உணர்த்துவது

     இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் தரசு போல இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.நியாத்தின் குறியீடான தராசை துலாக்கோல் என்பர்.தீபாவளி மாதமான ஐப்பசிக்கு துலா மாதம் என்று அழைக்கப்படுவார்கள். வேண்டியவர்,வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் தராசு போல நடப்பவனே நீதிமான்.உயிர்களை துன்புருத்திய நரகாசுரனை, பெற்ற பிள்ளை என்ற குறுகிய எண்ணத்துடன் திருமாலும்,சத்தியபாமாவும் ஆதரிக்கவில்லை.அவனைக் கொன்று உலக உயிர்களை காப்பாற்றினர். நீதி உணர்வும்,மன உறுதியும் வேண்டும் என்பதே தீபாவளி.

    வடமாநிலங்களில் தீபாவளி,பாசமலர் திருவிழாவாக நடக்கிறது. இதில் எமனுக்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. எமனின் தங்கை யமுனை(நதி).அவளுக்கு தீபாவளியன்று அண்ணன் பரிசளிக்க வருவதாகவும்,அதற்கு நன்றியாக யமுனை விருந்து படைப்பதாகவும் சொல்வர்.இதன்படி வடமாநிலங்களில் சகோதரிகளுக்கு,சகோதரர்கள் பரிசு அளிப்பர். அதற்கு நன்றிகடனாக,சகோதரிகள் விருந்து வைப்பர்.

     

    இரவில் பெண்கள்,தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவர். தீபம் அணையாமல் நீண்ட நேரம் மிதந்தால் ஆண்டு முழுவதும் சுபிட்சுமாக இருக்கும் என நம்புகின்றனர். அது மட்டுமில்லாமல்  தொழில்,வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வடமாநிலங்களில்  தீபாவளியன்று லட்சுமியை வழிபடுவர். வீடு முழுவதும் மாலை நேரத்தில் வரிசையாக தீபமேற்றுவர்.தீபலக்ஷ்மியாக திருமகள் வாசம் செய்வதாக ஐதிகம்.

    அம்ர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்கள் லட்சக்கணக்கில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவது கண்கொள்ளக் காட்சியாக அமைந்திருக்கும். உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தீபாவளியன்று கோவர்த்தன விரதம் இருப்பர். இதனால் கால்நடைவளர்ப்பு,விவசாயத்தில் லாபம் பெருகும் என நம்புகின்றனர்.

    தீபவளியன்று சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவில் விழித்து நரகசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர். இதனால் இந்நாளுக்கு நரக சதுர்த்தசி என்றும் பெயர்.சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும்,ஐப்பசியில் பெருமாளுக்கும் உரியது.கிருஷ்ணர்,சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் தீபாவளி ஆகும்.

     

    தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விளக்கேற்றுவது வழக்கம். தீபாவளியன்று லட்சுமி தேவி தங்கள் வீடுகளுக்கு வருவதாக ஐதீகம் அவரை வரவேற்கும் விதத்தில் வண்ண விளக்குகளால் வீடுகளை அலங்கரிக்கிறார்கள். லட்சுமி வருவாள் என்ற ஐதீகம் இருக்கிறது. வீட்டினை சுத்தமாகி எல்லாரும் சுத்தமாக குளித்து வெளிச்சமாக விளக்கினை ஏற்றி வைத்தால் தங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் வரும் என்று சொல்லப்படுகிறது. காலப்போக்கில் அது பல நிறங்களை அள்ளித் தெளிக்கும் பட்டாசாக உருமாற்றம் பெற்றது.

    இந்த உலகத்தில் ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் உணர்த்தியவர் சிவ பெருமான்.அதற்காக அவர் தனது உடலில் சரிபாதியை பார்வதி தேவிக்கு தந்து அருளினார்.சிவனிடம் பாகம் வேண்டி பார்வதி தேவி இருந்த விரதமே கேதார கவுரி விரதம்,  இந்த விரதத்தை மேற்கொண்டு சிவனின் உடலில் பாதியானாள்,இந்நாளை தான் தீபாவளியாக கொண்டாடிகிறார்கள்.

    தீபாவளியன்று லட்சுமி குபரே பூஜை செய்து வழிப்பட்டால்,மகாலட்சுமி குபேரரை ஒரு சேர தரிசித்தால் செல்வவளம் உண்டாகும்.

     

  • தீபாவளியும் பட்டாசும்!

     

    தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் அர்த்தம்  பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ( மூட எண்ணம் ) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம். இந்த இனிய நாளில், நாமும், நம் உள்ளமென்னும் அகல் விளக்கில் அன்பென்னும் திரியேற்றி, கருணை என்னும் நெய் ஊற்றிப் பக்திச் சுடர் ஒளிக்கச் செய்து உலகை அமைதியே ஆட்சி செய்ய உறுதி கொள்ள வேண்டும். அப்போது, இந்தத் தீபாவளித் திருநாள் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நாளும் நமக்குத் தித்திக்கும் தீபாவளிதான்.

     தீபாவளி அன்றைக்குக் காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் ஊரைப் புகைமூட்டம் எப்படிச் சூழ்ந்திருக்கிறது என்று சற்று பாருங்கள். எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு, அந்தப் புகைமூட்டமாக இருக்கும்.

    பட்டாசை முதன் முதலில் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்கள். பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் கெட்ட சக்திகள் எல்லாம் விலகி ஓடும் என்று நம்பப்பட்டது. ஆரம்ப காலங்களில் வெடிகள் மட்டுமே வெடிக்கப்பட்டிருந்தது. பட்டாசு வெடிப்பதினால் உண்டாகும் சத்ததினால் தங்களை நெருங்க வரும் கெட்ட சக்திகள்,ஆவிகளை விரட்ட முடியும் என்று நம்பினர்.

     

    ஆரம்ப காலத்தில் பட்டாசு என்பது ஆடம்பரப்பொருளாக இருந்தது. நம்முடைய சந்தோசத்தை கொண்டாடும் வகையிலும் அதனை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகளை வெடித்தார்கள். தீபாவளி என்பது வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வெற்றியை கொண்டாடும் மக்கள் தங்கள் சந்தோஷத்தை விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு தெரிவிப்பதன் அடையாளமாய் தான் பட்டாசு வெடிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. பட்டாசு சத்தத்தின் மூலமாக தங்களுடைய மகிழ்ச்சியை தாங்கள் வணங்கும் கடவுளுக்கு தெரிவிக்கிறார்களாம்.

    பண்டிகைகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மற்றவர்களோடு அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே பட்டாசுகள் வெடிக்கும் பழக்கம் தோன்றியது. இந்த மகிழ்ச்சி சில நேரங்களில் துயரம் தரக் கூடியதாக மாறி விடுவதுதான் பரிதாபம். 

    நம் நாட்டில் நினைத்த இடங்களில் எல்லாம் பட்டாசுகளை கொளுத்திப் போடும் செயல் சாதாரணமாக நடக்கிறது. வீட்டிலிருந்து வெளியே நடந்து போக முடியாத அளவிற்கு வீதிகளில் பட்டாசு குப்பைகளின் குவியல் குவிந்து விடும்.

    பொதுவாக முகம், கை, விரல்கள் ஆகியவற்றில் தான் தீக்காயங்கள் உண்டாக வாய்ப்பு அதிகம்.  ஆனால், தீக்காயம் பட்ட கையைத் தண்ணீரில் நனைப்பதற்கு பலரும் தயங்குவார்கள். தீக்காயம் பட்ட உடல் பகுதியைத் தண்ணீரில் நனைத்தால், கொப்பளங்கள் ஏற்பட்டுவிடும் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தீவிரம் குறையும். கொப்பளங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும். 

     

     

     நம்மை பொறுத்தவரை தீபாவளி என்பது மிகவும் பிடித்த பண்டிகையாக விளங்கும். ஆனால் செல்லப் பிராணிகளை பொறுத்த வரை, அது அவர்களுக்கு ஒரு சித்திரவதை ஏற்படுத்தும் பண்டிகையாகும். தீபாவளி என்பது ஒரு இந்து பண்டிகை என அனைவருக்கும் தெரியும். அதனை உலகத்தில் உள்ள பல மக்களும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். ஆனால் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் அப்படி இருப்பதில்லை. அது அவர்களுக்கு மரண பயத்தை உண்டாக்கும். வீட்டில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் என்றால் அது நாயும் பூனையும் தான். தீபாவளி பண்டிகையின்ன் போது, அவைகள் வீட்டில் தூக்கமில்லா இரவுகளையே சந்திக்க வேண்டியிருக்கும்.

    இந்த பயத்துடன் நின்று விடாமல், தீபாவளியின் போது வெடிக்கப்படும் ராக்கெட் மற்றும் வான வெடிகளால் அவைகள் பாதிக்கப்படுவதும் உண்டு. தீபாவளின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் இருந்து அதிக சப்தம் வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இது துப்பாக்கி சத்தம் மற்றும் நம் வீட்டிற்கு அருகில் பறக்கும் விமான சத்தத்தை விட அதிக சத்தத்தை எழுப்பும். இந்த சத்தத்தினால் நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகளுக்கு இது கொண்டாட்டமாக இருப்பதில்லை. இவ்வகை வெடிகள் அவைகளுக்கு பயம், பீதி மற்றும் குழப்பங்களை ஏற்படுத்திவிடும். சாதாரண வெடி சத்தம் நாய்களுக்கு குண்டு வெடிப்பதை போல இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் துல்லியமான கேட்கும் சக்தி. அதனால் அவைகளுக்கு சத்தம் என்றாலே பயம் ஏற்படும் நோய் உருவாகலாம். மேலும் வெடிகளில் இருந்து வரும் புகையை சுவாசிப்பதால், வேறு சில உடல்நல கோளாறுகளும் ஏற்படலாம். இந்த தீபாவளியின் போது உங்கள் செல்லப் பிராணிகளின் மீது அதிக அன்பையும், அக்கறையையும் காட்ட உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

     

     தீபாவளிப் பண்டிகையின்போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்க நினைப்பது அனைவரின் விருப்பம் என்றபோதிலும், கொண்டாட்டங்களின் போது, பாதுகாப்பு அம்சத்தையும் கவனத்தில் கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் நீடிக்கும்!

  • குபேர அருள் பெற நாணய வழிபாடு….

    தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு ஸ்ரீகுபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்!
    ஸ்ரீகுபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும்.
    அப்போது, ‘அளகாபுரி அரசே போற்றி…’ என்று துவங்கும் ஸ்ரீகுபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.
    தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப- தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு. குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியிருப்பார்.

  • தீபாவளிக்கு புதிய முறையில் வீட்டை அலங்கரிப்பது எப்படி?

    தீபம் என்றால் ஒளி, விளக்கு என்றால் ஆவளி வரிசை, வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபாவளியின் போது நம் இல்லத்தை துய்மைபடுத்தி, இருளை போக்க  ஒளி ஏற்றுவதும் அலங்காரப்படுத்துவதும் வழக்கம். வழக்கம் போல் இல்லாமல் புதுமையாக அலங்கரிப்பது பற்றி காண்போம்.

     

     

    மணி கோலம்

     

     

    எந்த ஒரு பண்டிகை வந்தாலும் நமக்கு முதலில் நியாபகம் வருவது கோலம் தான். நாம் விட்டின் வாசலில் மற்றவரின் கண்களை கவரும் வகையில் நம் கோலம் அழகாக அமைய கோலத்திற்கு வண்ணங்கள் திட்டி அழுகுபடுத்துவோம். இப்பொது புதுமையாக வீட்டில் இருக்கும் மணிகளை  கொண்டே எளிய முறையில்  கோலங்களை அலங்கரிக்கலாம். இது வீட்டை அழகுபடுத்துவதோடு உங்களுக்கு பாராட்டையும் சேர்க்கும்.

    தீபம்

     

     

     

    தீபாவளி என்றாலே தீப திருநாள் தான். தீபம் இல்லாமல் தீபாவளி கிடையாது. தீபத்தை நாம் அன்றாட பயன்படுத்துகிறோம் ஆனால் அதில் புதுமை சேர்ப்பது உங்கள் வீட்டை இன்னும் மெருகேற்ற செய்யும். தீபம் பல வகைகளிலும் வடிவத்திலும் இருக்கும்.

    வண்ண தீபம்

     

     

     

    சாதாரண தீபத்திற்கு பல வண்ணங்களில் வரைந்து எளிய முறையில் தீபத்தை அழகுறச் செய்யலாம். அது தீபத்தின் அழகை கூட்டும். இதுவே உங்கள் கைத்திறனை காட்டும் நேரம்.

    பழ தீபம்

    ஆரஞ்சு பழத்தின் தோலை வைத்து கூட தீபம் ஏற்றலாம், தெரியுமா?. ஆரஞ்சு பல தோலை படத்தில் காண்பது போல் நறுக்கி அதில் தீபத்தை வைக்கலாம். அது அழகு சேர்ப்பதோடு வீட்டில் நல்ல மனத்தை தரும்.

    மணி தீபம்

    வெறும் தீபமே பிராகாசத்துடன் அழகாய் காட்சியளிக்கும். அதில் வீட்டில்லுள்ள ஒளிரும் மணிகளை ஒட்டி அழுகுப்படுத்தினால் ஒளியுடன் சேர்ந்து இன்னும் அழகாய் மின்னும். குறைந்த தீபத்தில் அதிக வெளிச்சம் கிடைக்கும்.

    தண்ணீரில் தீபம்

     

    வாழ பட்டையில் தீபம் வைத்து அதை தண்ணீரில் மிதக்க விடும் காட்சி அழகாய் இருக்கும். ஆனால் நாம் இப்பொழுது இருக்கும் சமூக சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் வீட்டிலயே கண்ணாடி குவளையில் தண்ணீர் ஊற்றி அதில் தீபத்தை மிதக்க செய்யலாம். வீட்டின் மற்றொரு அலங்கரமாய் இது அமையும்.

    பூ கோலமிட்டு அதில் தீபம்

    ஓணம் பண்டிகையில் தான் பூக்கோலம் போடா வேண்டும் என்பது இல்லை. பூக்கோலம் எப்பொழுதுமே வீட்டிற்கு அழகு சேர்க்கும். பல வண்ண பூக்களை கொண்டு ரங்கோலி போடுங்கள். வீட்டுவாசலில் மட்டுமின்றி வரவேற்பு அறையிலும் இடலாம்.அதை இன்னும் அழகாக்க தீபங்களை கொண்டு பூ கோலத்தை அலங்கரியுங்கள்.

    பேப்பர் தோரணம்

     

    பண்டிகையின் போது அனைவரின் இல்லத்திலும் மா இலை கொண்டு, விட்டு வாசலின்  முற்றத்தை அலங்கரிப்பார்கள்.அதை நாம் பல வண்ணங்களில் உருவான பேப்பரைக் எந்த வடிவத்தில் வேண்டுமோ,அவற்றை  துண்டுகளாகப்பட்டு ,கம்மைக் கொண்டு அதை  எந்த வடிவத்திலும் செய்யலாம் . பேப்பரினால் செய்ததை  எந்த ஒரு இடத்தில் அலங்கரிக்க வேண்டும் என்று நினைக்கறோமோ அந்த இடத்த்தில் எளிய முறையில் மிக அழகாக அலங்கரித்துக் கொள்ளலாம். இதை கொண்டு நம் இல்லத்தை மேலும் அழகுற செய்யலாம்.

     

    சின்ன பல்புகள்

    பண்டிகை மற்றும் விழாக்களின் பொது ,அனைவரும் லைட் செட் பயன்படுத்துவார்கள். அதை சாதரணாமாக உபயோகிக்காமல் பேப்பர் கப்பில் ஓவியம் தீட்டி படத்தில் காண்பது போல் சிறு பல்புகளை மூடாலாம். இது அதிக வெளிச்சம் தராமல் மிதமாக அலங்கார தோரணம் போல் காட்சியளிக்கும்.

    இது போன்று புதுமையான முறையில் அலங்காரம் செய்து   உங்கள் உறவினர்களின் முன் அசத்துங்கள்.

  • வடநாட்டில் தீப ஒளி திருநாள்

     

    தீபாவளியை பொறுத்தவரை  தென்னிந்தியாவில்  பாரம்பரியப்படி,அதிகாலை கங்கா ஸ்நானம், லக்ஷ்மி பூஜை, புத்தாடை, பட்டாசு, பட்சணங்கள் என  குதூகல கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், வட நாட்டிலோ, தீபாவளி என்பது,ராமரும், சீதையும் 14 ஆண்டுகள் வன வாசத்திற்குப் பிறகு நாடு திரும்பும் நாள். ஆதலால் , ராமர் ,சீதாதேவியை வரவேற்க வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு தீபாவளி என்பது  ஐந்து நாள் கொண்டாட்டம். இந்த ஐந்து நாட்களிலும் தவறாமல் விரதமும் இருப்பார்கள்.

    குஜராத்தில் தீபாவளியை லட்சுமி பூஜையாக கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் அங்கு தீபாவளி. மேலும் குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை சுத்தப்படுத்தி, பல அழகான வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயாராகி விடுகிறார்கள். செய்து மாவிலை தோரணங்கள் கட்டி கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர செய்து  பூஜை செய்யப்படுகிறது. அன்று தான் வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை எழுத ஆரம்பிக்கின்றனர்,

    இதுவே மஹாராஷ்ட்டிரத்தில், தீபாவளி ‘பலிபாத்யாமா’ என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று நிகழ்வை  நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் போது, வண்ணங்களால் ஆன ‘ரங்கோலி’ என்ற கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது. தீபாவளி அன்று தங்கள்  வீட்டு வாசல், பால்கனியில் கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அதனுள் விளக்குகள் பொருத்தி ,நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர்.

    ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் தீபவளியன்று ,கோவர்தன பூஜை செய்கிறார்கள். கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்ததைக் குறிக்கும் வகையில், ‘அன்னகுட்’என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள். கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள்.

     காளி பூஜையை பிரதானமாக செய்யும் பெங்காலிகள் ,சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனை செய்யும் ‘பாய் போலே’ என்ற பூஜையை செய்கிறார்கள்.

    சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அரசர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரை அவரது கைது செய்து குவாலியர் கோட்டையில் ,அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களையும் உள்ளே அடைத்தார். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் பஞ்சாப்பில் இந்நாளை ‘பந்தி சோர்ரா’என்று கொண்டாடுகின்றனர் சீக்கியர்கள்.

    ஜைனமத குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாளாக  தீபாவளியன்று தீபங்கள் ஏற்றி ‘உத்தராத்த்யாயன் சூத்ரா’வைப் படிக்கின்றனர் ஜைனர்கள்.

    மொத்தத்தில் எந்தப் பெயர் சொல்லி கொண்டாடினாலும் தீபாவளி என்றாலே நம் மனம் சந்தோஷம் மற்றும் குதூகலத்தால் நிறைந்து ததும்பும் என்பதில் சந்தேகமில்லை.

  • தீபாவளி மகிழ்ச்சியா? செலவா?

    தீபாவளி என்றாலே இனம் புரியாத நிலை, அறியாத சந்தோசம் வந்து என்ன செய்வதென்றே தெரியாமல் எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்க செய்யும் ஒரு வித கிளர்ச்சியின் வெடித்தல் தான். எதையாவது செய்து விட மாட்டோமா என்று எதையெதையோ செய்து விட்டு தூங்கி விடும் ஒரு வகை புது கலாச்சாரத்தை இன்றைய நவீன குடும்பம் பின் பற்றுகிறது.

    இப்படிப்பட்ட தீபாவளி  மகிழ்ச்சியா…. செலவா…..என்பதை  பார்க்கலாம்.

    பண்டிகை என்பது மனிதன் தன்னை புத்துணர்வு படுத்த எடுத்துக் கொள்ளும் இளைப்பாறல். அது தேவையான கொண்டாட்டம். இந்த சமூகம் கொண்டாட்டத்தின் வழியே உறவை வளர்த்த சமூகம். குடும்பமாய்…. உறவுகளாய்… பக்கத்துக்கு வீட்டோடு…. எதிர் வீட்டோடு… சேர்ந்து உணவுகளை  பரிமாறிக்கொண்டு நாம் பண்டிகைகளை கொண்டாடினோம்..  .தீபாவளியில் பட்டாசுகளை வெடிக்கவிட்டோம்.

    ஓடி ஓடி உழைத்த மனதின் அமைதி…. சிரிக்க……சிந்திக்க… புரிந்து கொள்ள… புரிய வைக்க…. ஒரு தவம் கலைந்த கொண்டாட்டம்… உற்சாக நதியின் மொத்தங்களின் பக்கங்கள் அனைத்தும் கவிதையாய் கிறுக்கி விட்டு சிரிக்கும் பிள்ளையின் மனதுக்குள் திரும்பும் நமக்கான பாதை தீபாளியாகவே இருக்கிறது. மதமற்ற சாதியற்ற பண்டியாகையாகவே நாம் பார்க்கிறோம்.  ஆசையின் ரூபம் சேர்ந்து கொண்டே வந்து ஒரு நாளில் அவனை அவனுக்காக வாழ வைத்து வைக்க அன்றொரு நாள் போதுமானதாய் இருக்கிறது. இருக்கும் பணத்தையெல்லாம் துணி எடுக்கவும்… தின்பண்டம் வாங்கவும் செலவழிக்கிறோம். 

     

    மகிழ்ச்சி செலவு என்று இரண்டு திசைகளைப் பற்றியும் போகிற போக்கில் ஒரு சேரதான் பார்க்க வேண்டி இருக்கிறது.. அது அப்படித்தான். அது தொடர் நீட்சி. அது எல்லாக் கால வாழ்வியலின் சூட்சுமம் கூட…. 
    தீபாவளி மகிழ்ச்சிதான்,  இருப்பினும் ஒவ்வொரு தீபாவளிக்கும் உள்ளுக்குள் வந்து அமர்ந்து கொள்ளும் நரகாசுரனை அத்தனை சீக்கிரம் கட்டவிழ்த்து விடாமல் ஓடி ஓடி விரட்டி சுட்டு அடித்து நொறுக்கும் சாகசங்களை என்னுள்ளே சுமந்து கொண்டிருக்கிறோம். இன்னும் அவை வெவ்வேறு காட்சிகளாய் தன்னை மாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதுதான் வாழ்வின் பலம். இன்னும் வேகமாய் இந்த வாழ்வின் ஆசையை நோக்கி ஓடுவதற்கான தவம். நாம் தீபாவளியில் நடந்ததை நினைத்து நினைத்தே இன்றைய தீபாவளியை கொண்டாடுகிறோம். 

    காசு எல்லாரிடமும் எல்லாமுமாக இருப்பதில்லை. அது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபடுகிறது. அதன் பொருட்டே தீபாவளி ஆனாலும் அதன் மீது கட்டமைக்கப் படுவதில்லை தீபாவளி. நண்பர் ஒருவர் கூறினார். காசு நிறைய இருந்தும்…. குடும்பம் நிறைந்து இருந்தும்…..ஏனோ தீபாவளி மனதில் ஒட்டவில்லை என்றார். இதை என்னவென்று சொல்வது.  காசுகளாலும் காட்சிகளாலும்….ஆடைகளாலும்.. இனிப்புகளாலும். அதையெல்லாம் தாண்டி ஒரு வித தேடல் இருக்கிறது. ஒரு வித உயிர்ப்பு இருக்கிறது. மன நிறைவையும் மகிழ்ச்சியையுமே தந்திருக்கிறது… 

    குழந்தையோடு கொஞ்சும் மனநிலையை, குடும்பத்தோடு இருக்கும் பாதுகாப்பை தீபாவளி தரத்தானே செய்கிறது. குடும்பம் என்றால் செலவுகள் இருக்கத்தான் செய்யும். கஷ்டங்கள் மட்டுமா வாழ்வு. இஷ்டங்களும் தானே. வீட்டுக்கு தகுந்த வாசல்படி தானே அழகு. நமக்கு என்ன முடியுமோ அது தான் கொண்டாட்டம். அதிகம் ஆசைப் படுதலே துன்பம். புத்தர் சொன்னதை இன்னமும் தவறாக புரிந்து கொள்பவர்களுக்கு ஆங்காங்கே நின்று தீபாவளி அத்து மீறத்தான் செய்யும். பாட்டி தாத்தா பெரியம்மா பெரியப்பா.. சித்தி சித்தப்பா… அண்ணன் தம்பி தங்கை என்று அங்கங்கே பொருளாதார ரீதியாக பிரிந்து கிடக்கும் சொந்த பந்தங்கள்… மாப்ள மட்சான் நண்பன் தோழி என்ற வீதிக்காரர்கள் என்று ஆளுக்கொரு பட்டாசும்.. ஆளுக்கொரு இனிப்பும் சந்தோசம் தானே. 

    வாரம் முழுக்க வேலை.. மாதம் முழுக்க வேலை.. வருடம் முழுக்க வேலை. பொருளாதாரத்தின் பின் ஓடி ஓடி களைத்த உடலுக்கும் மனதுக்கும் ஆறுதல் ஆக தீபாவளி மயில் இறாகய் வருடி விட்டு போகும்.  தீபாவளி என்பது வெறும் செலவை மட்டும் தரும். இஷ்டத்தோடு கொண்டாடியது ஒரு காலம். கஷ்டம்  வந்தாலும் கொண்டாடுவது ஓர் அனுபவம். இங்கே இனி ஒவ்வொரு தீபாவளியும் நம் வாழ்வின் பக்கத்தின் அனுபவமாகவே இருக்கட்டும். அது கூட்டு வாழ்வின் முன்னுதாரணமாக இருக்கும். சந்தோசத்தை வெளியில் தேடுவது பொருளாதாரம் மானுடம் . அதை உள்ளிருந்து அள்ளி தருவது மானுடம் பூரணத்துவம் மகிழ்ச்சியில் தான். கொண்டாடிக் கிடக்கவே இந்த பிறவி ஆக.. இந்த தீபாவளி மகிழ்ச்சி தான்.

     

     

     

    மகிழ்ச்சி எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் செலவும். இங்கு எதுவும் சும்மா கிடைப்பதில்லை. கேட்ட துணி எடுத்து தரவில்லை என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் மனைவியை வைத்துக் கொண்டு எங்கிருந்து மகிழ்ச்சியை கொள்வது. 2000 ரூபாய்க்கு வெடி வேண்டும் என்று மகன் கேட்கையில்…. காசில்லாத அப்பன் எங்கிருந்து       மகிழ்ச்சி கொள்ள! 

    தீபாவளி செலவு தான். தீபாவளி வருகிறது என்றாலே அந்த மாதம் முதல் தேதியில் இருந்தே கணக்கு போடும் ஆட்களை நாம் அறிவோம். தீபாவளி மனம் சமபந்தப் பட்டது என்ற காலத்தைக் கடந்து விட்டோம். இது காசுக்கு வாழும் காலம். இங்கே.. தீபாவளியை வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கும் கூட்டம் நாம்மை சுற்றி இருக்கிறது. இனிப்புகளாலும் துணிகளாலும்…..வெடிகளாலும் நாம் ஏமாறவே ஒவ்வொரு தீபாவளியும் வந்து கொண்டிருக்கிறது. காசை கரியாக்கி கரியை புகையாக்கி…..சந்தோஷம் என்ற பெயரால் சுற்றுசூழலைக் கெடுத்து வானத்தை அடைத்து வீதியை நிரப்பி….. குப்பைகளாலும் சத்தங்களாலும் ஊர் முழுக்க இருக்கும் சிற்றுயிர்களை அடித்து விரட்டி விட்டு சந்தோஷம் கொள்ளும் நாம் யாரை கொல்ல இத்தனையும் செய்கிறோம்….? 

    “நரகாசுரன் இறந்தானா… உண்மையில் இருந்தானா”? என்றொரு கேள்வி , ஆனால் இம்முறையும் சாகத் கிடப்பது நம் பொருளாதாரம். அந்த செலவு இந்த செலவு என்று ஒரு நாள் கூத்துக்கு மீசையை மட்டும் அல்ல. முகத்தையே எடுத்து விட்டு பின் முண்டமாய் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வட்டி கட்டிக் கொண்டு அலைவது எந்த விதத்தில் நியாயம். ஊருக்கு பெருமை காட்டி உள்ளுக்குள் புகைந்து வாழ்வைதை தான் இந்த தீபாவளியும் காட்டியது. செலவு தான் தீபாவளி. அதுவும் அதீத செலவு. ஒரு கிலோ கோழியில் இருந்து…. ஒரு கிலோ இனிப்பு வரை.. தொட்டதெல்லாம் கை மீறிய செலவு. 

      

    மகிழ்வு என்பது முகத்தில் இருந்தது என்பதை விட அகத்தில் இருந்ததா என்றொரு கேள்வி வருகிறது. சிவகாசி பிழைக்கிறது தான். சிலபோது ஏற்படும் விபத்தில் மொத்தமாய் சாகிறதே. அதுவும் படிக்க வேண்டிய எழுத வேண்டிய பிஞ்சுக் கைகள் பட்டாசு வேலையில் ஈடுபடுவதை நாம் எல்லாரும் உணர்ந்தே இருக்கிறோம். பின் எப்படி வெடித்து அதை கொண்டாட்டம் என்று நம்ப முடிகிறது. ஆக, கொண்டாட்டங்கள்… செலவில் இல்லை. பகட்டில் இல்லை. அது குடும்பத்தில் இருக்கிறது. சரியான திட்டமிடுதலுடன் தீபாவளியை எதிர் நோக்கியவர்களுக்கு அது அழகான அற்புதமான கொண்டாட்டம் தான். அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்து… ஆற அமர குளித்து…அளவாக வீட்டில் செய்த இனிப்பு உண்டு… நம்மை பிடித்திருக்கும் நரகாசுரனை விரட்டி அடித்து விட்டு இன்னும் பலமாய் வேகமாய் இந்த உலகின் ஓட்டத்தை எதிர் நோக்க நாம் கொண்டாடி இருந்தால் அது தான் மகிழ்வு.. அவரவர் வசதிக்கு ஏற்ப புத்தாடை இருந்தால் அது தான் நிறைவு. என் வருமானம் இது. இதற்குள் என் தீபாவளி அழகு என்று உணர்ந்த குடும்பத்துக்கு தீபாவளி கொண்டாட்டம் தான். அது செலவின் பதிவேட்டில் வராது. அது அழகியலின் சந்தோசத்தில் நிரம்பும். காக்கா குருவியை, வீதி நாய்களை அடித்து விரட்டும் பாட்டாசுகள் இல்லாமல் காற்றை மாசாக்கும் தூசுகள் நிறைந்து வழியாமல்… தேவைக்கு ஜோதியாய் நிரம்பி மலரும் சிறு சிறு வெடிகளுடன் கொண்டாடினால் இந்த தீபாவளி மகிழ்ச்சியாக அமையும். 

     

  • செல்வம் கொழிக்கும் லட்சுமி குபேர பூஜை!

    அதிகாலை குளியல், வெடித்துச் சிதறும் பட்டாசுகள், விதவிதமான பலகாரங்கள், என தீபாவளி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது இவைதான். ஆனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்க தீபாவளி அன்று செய்யப்படும் குபேர லட்சுமி பூஜை மிகவும் விசேஷம். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
    லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை
    தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, ஸ்வாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாக வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.
    பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
    விநாயகர் வழிபாடு
    குபேர லஷ்மி பூஜைக்கு முன் முதலில் முழுமுதற் கட்வுலான விநாயகரை கும்பிட்டு பூஜையை தொடங்குவது அவசியம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம்.
    லட்சுமி குபேர பூஜை
    விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ‘ஆனைமுகனே போற்றி… விநாயகா போற்றி… அஷ்டலட்சுமியே போற்றி… குபேர லட்சுமியே போற்றி… தனலட்சுமியே போற்றி…’ என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம்.
    தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், ‘குபேராய நமஹ… தனபதியே நமஹ…’ என்று துதித்து, உதிரிப் பூக்களை பூஜைக் கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

  • பாரம்பரியமாக கொண்டாடும் தல தீபாவளியின் சிறப்பு அம்சங்கள்!

    தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் எங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்க தானே செய்யும். தீபாவளி என்பது வருடா வருடம் வரக் கூடியது. ஆனால் தலை தீபாவளி என்பதோ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரக்கூடியதாகும். இந்த தலை தீபாவளி நமது தமிழகத்தில் மிக மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

    திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளியாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது! திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு.

    புதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென்று சீர் வரிசை (வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள் ) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பர். அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.

     

    தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம்..

    பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமக‌ன் த‌ன் மனை‌வி‌யி‌ன் குடு‌ம்ப‌த்தாருட‌ன் ‌தீபாவ‌ளியை கொ‌ண்டாடுவதுதா‌ன் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி.

    பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.

    தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். 

     

     
    தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.

    இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.

    பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.

     

    நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
    இறுதி நேரத்தில்தான் நரகாசுரனுக்கு அவனுடைய பிறப்பு ரகசியம் உணர்த்தப்பட்டது. அதாவது, ஒரு காலத்தில் கடலுக்குள் பூமி மறைக்கப்பட்டிருந்தபோது மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, கடலுக்குள் புகுந்து பூமியை வெளிக்கொண்டு வந்தார். அச்சமயம் அவருக்கும் பூமாதேவிக்குமான சங்கமத்தில்தான் நரகாசுரன் பிறப்பெடுத்தான்! மகாவிஷ்ணுவின் அவதாரமே கிருஷ்ண பகவான், பூமாதேவியின் அம்சம்தான் சத்யபாமா, இந்த உண்மைகளைத் தன்னுடைய உயிர் பிரியும் தருவாயில் தான் நரகாசுரன் தெரிந்துகொண்டான். 

    நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

     

     

    நரகாசுரன் கொல்லப்பட்ட அந்நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி வருகின்றோம்.அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள்.

     

  • தீபாவளி பலகாரங்களை பாரம்பரியத்துடன் செய்வது எப்படி?

    1.முள்ளு முறுக்கு

    என்னென்ன தேவை?

    பச்சரிசி – 3 கப், 
    கடலைப் பருப்பு – 1 கப், 
    பயத்தம் பருப்பு – 1/4 கப், 
    எள் தேய்த்து காய்ந்தது – 1/2 டீஸ்பூன், 
    சீரகம் – 1/2 டீஸ்பூன், 
    கட்டி பெருங்காயம் – சிறிதளவு, 
    வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், 
    உப்பு – தேவைக்கு, 
    எண்ணெய் – பொரிப்பதற்கு. 


    எப்படிச் செய்வது?  

    சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 
    வி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து செய்யவும்.

     

    2. மைசூர்பாக்கு

    என்னென்ன தேவை?

    கடலை மாவு – 1 கப், 
    சர்க்கரை – 2 கப், 
    நெய் – 3 கப், 
    தண்ணீர் – 1 கப். 

    எப்படிச் செய்வது?  

    கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாக்காக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும். 

     

    3.அதிரசம்

    என்னென்ன தேவை?

    பச்சரிசி மாவு – 2 கப், 
    வெல்லம் – 2 கப், 
    தண்ணீர் – 1 கப், 
    எண்ணெய் – தேவைக்கு, 
    ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன். 

    எப்படிச் செய்வது?  

    வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து, கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். உடனே அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் கொட்டி கை விடாமல் கிளறவும். ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை  இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.     

    (பச்சை அரிசியை ஊற வைத்து வடித்து, நிழலில் உலர்த்தி, மெஷினில் அரைத்து அதிரசம் செய்தால் மிருதுவாக இருக்கும். அதிரசத்துக்குப் பாகுதான் முக்கியம். ஒரு தட்டில் தண்ணீர் விட்டு 1/4 டீஸ்பூன் பாகை விட்டால் கரையாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.

     

    4.முந்திரிகத்லி 

    என்னென்ன தேவை?

    முந்திரிப் பருப்பு – 1 கப், 
    சர்க்கரைத் தூள் – 1 கப், 
    ரோஸ் எசென்ஸ் – சில துளிகள், 
    சில்வர் பேப்பர் – அலங்கரிக்க, 
    நெய் – 2 டீஸ்பூன். 

    எப்படிச் செய்வது?  

    முந்திரிப் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ஓர் அடிகனமான கடாயில் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்துக் கை விடாமல் கிளறவும். சுருண்டு வரும்போது எசென்ஸ் சேர்க்கவும். உடனே இறக்கி மீண்டும் கிளறவும். 1 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். சில்வர் பேப்பரால் அலங்கரிக்கவும்.

    இன்னொரு செய்முறை

    முந்திரிப் பருப்பை உலர வைத்து மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பாகுப் பதத்துக்கு காய்ச்சவும். அதில் முந்திரிப் பொடியை கொட்டி, கிளறி இறக்கவும். எசென்ஸ் சேர்த்து சூடாக இறக்கியப் பின் கிளறி, தட்டில் நெய் தடவி ஊற்றி ஆறியதும் துண்டுகள் போடலாம். சுலபமாக செய்யலாம் இந்த கத்லி.

     

    5.ரவாலட்டு

    என்னென்ன தேவை?

    பாம்பே ரவை – 1/2 கிலோ, 
    சர்க்கரை – 1/2 கிலோ, 
    ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன், 
    முந்திரி, திராட்சை – தலா 50 கிராம், 
    நெய் – 1/4 கிலோ அல்லது தேவைக்கு.

    எப்படிச் செய்வது?  

    ரவையை வெறும் கடாயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வறுத்து உடைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூளுடன் கலக்கவும். இப்போது வறுத்த ரவை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள், உடைத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யைக் காய்ச்சி அதில் சிறிது, சிறிதாக ஊற்றி உருண்டை உருட்டும் பதத்துக்கு வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.   

    (ரவையை பொடித்தும் ரவா லாடு செய்யலாம். இத்துடன் சிலர் 1/2 கப் வறுத்துப் பொடித்த பாசிப் பருப்பு தூள் சேர்த்தும் செய்கிறார்கள். சிலர் வறுத்த தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். ஆனால், உருண்டை பிடிக்க நெய் சூடாக இருக்க வேண்டும். 

     

    6.சோமாஸ் 

    என்னென்ன தேவை?

    மேல் மாவுக்கு… 

    மைதா – 250 கிராம், 
    ரவை – 1/2 கப், 
    நெய் – 1 டீஸ்பூன்.

    பூரணம் செய்ய… 

    கசகசா – 1 டேபிள்ஸ்பூன், பொடித்த பொட்டுக் கடலை – 1/2 கப், பொடித்த சர்க்கரை – 1 கப், வறுத்து நறுக்கிய முந்திரி – தேவைக்கு, கொப்பரை தேங்காய் – 1 மூடி (துருவிக் கொள்ளவும்), ஏலக்காய் – தேவைக்கு, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.  

    எப்படிச் செய்வது
     
    மேல் மாவுக்குக் கொடுத்ததை சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஈரத் துணி போட்டு மூடி வைக்கவும். கசகசாவை வறுத்து பொடிக்கவும். அத்துடன் பூரணத்துக்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த மைதா மாவை பூரிகளாக இட்டு, சோமாஸ் அச்சில் வைத்து சோமாஸ் வடிவம் கொடுக்கவும். இதனுடன் தேவையான பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.     

    (அச்சு இல்லாமலும் செய்யலாம். அல்லது பூரியின் மத்தியில் வைத்து மடித்து, சோமாஸ் கட்டரால் ஓரங்களை வெட்டியும் செய்யலாம். இதுதான் பாரம்பரிய சோமாஸ்.

     

    7.தேங்காய்பர்பி

    என்னென்ன தேவை?

    தேங்காய்த் துருவல் – 2 கப், 
    சர்க்கரை – 2 கப், 
    நெய் – 1 டீஸ்பூன், 
    ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன், 
    பால் – 1 டீஸ்பூன்.

    எப்படிச் செய்வது?  

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் பால் விட்டு பொங்கி வரும்போது கசடை எடுக்கவும். பின் சர்க்கரை சேர்ந்து கொதித்து கம்பிப் பதம் வந்தவுடன் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் நெய், ஏலக்காய் தூள் போட்டு சுருள வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போடவும்.   

    (தேங்காயை அடி வரை துருவாமல் மேலோட்டமாகத் துருவிச் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பர்பி வெள்ளையாக இருக்கும். கலர் சேர்த்தும் கலர் பர்பி செய்யலாம்.

     

     

    8.கோதுமைஅல்வா 

    என்னென்ன தேவை?

    சம்பா கோதுமை – 1/4 கிலோ, 
    சர்க்கரை – 1/2 கிலோ, 
    நெய் – 1/4 கிலோ, 
    முந்திரி – 25, 
    ஏலக்காய் தூள் – சிறிதளவு, 
    ஆரஞ்சு கலர் பவுடர் – சிறிது.

    எப்படிச் செய்வது?  

    சம்பா கோதுமையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து மசிய அரைத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் வடிகட்டி, பால் எடுக்கவும். அந்தப் பாலை 8 மணி நேரம் பாத்திரத்தில் அப்படியே வைத்தி ருக்கவும். அடியில் கெட்டியாக தங்கி, நீர் மேலே தெளிந்து நிற்கும். அந்த நீரை எடுத்து விடவும். கோதுமைப் பாலில் சர்க்கரை சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கரண்டியில் ஒட்டும் போது கலர் பவுடர் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ருசியான கோதுமை அல்வா ரெடி.   

     

    9.அச்சுமுறுக்கு

    என்னென்ன தேவை?

    மைதா – 1 கப், 
    சர்க்கரை – 1/2 கப், 
    தேங்காய்ப் பால் – 1 கப், 
    எசென்ஸ் – 1 டீஸ்பூன் அல்லது ஏலக்காய் – 1/2 டீஸ்பூன், 
    ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை, 
    எண்ணெய் – தேவைக்கு.

    எப்படிச் செய்வது?  

    மைதா மாவுடன் எண்ணெயை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு நீர்க்க மாவாகக் கரைக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் அச்சு முறுக்கு கரண்டிகளை வைத்துச் சூடாக்கவும். இந்த சூடான கரண்டிகளை மாவில் முக்கால் பாகம் மூழ்கும் அளவுக்கு நனைக்கவும். ஒட்டிக் கொண்ட மாவுடன் திரும்பவும் கரண்டியை எண்ணெயில் விடவும். ஒட்டிய பாகம் வெந்து வெளியில் வந்து விடும். திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.   

    (மாவில் எசென்ஸ் சேர்த்ததும் புது மணத்தோடு இருக்கும். சுட்டெடுக்க தீ மிதமாக இருக்க வேண்டும். நன்கு சலித்த பச்சரிசி மாவு 2 கப், சர்க்கரை 
    1 1/2 கப், உளுந்து மாவு 1/2 கப், ஏலக்காய் தூள் சேர்த்தும் செய்யலாம். பல முறை சலித்து, கரைத்து அல்லது அரிசியை வெண்ணெயைப் போல் அரைத்து கலந்து செய்ய வேண்டும்.

     

     

    10.பூந்தி

    தேவையானவை:  கடலை மாவு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றேகால் கப், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, பைனாப்பிள் ஜூஸ் – கால் கப், பைனாப்பிள் எசன்ஸ் – சில துளிகள், எண்ணெய் – பொரிக்க.

    செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.

     

  • நரகாசுரனை கொன்றது மட்டுமா தீபாவளி?

     

    தீபம் என்றால் ஒளி, விளக்கு என்றால் ஆவளி வரிசை, வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளி ஆகும்.தீபத்தில் பரமத்துமாவும்,நெருப்பில் ஜீவாத்துமாவும்  வாசம் செய்து அருள் தருவதாக ஐதிகம்.. ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை,தலைக்கணம் போன்ற இருட்டுகளை  அகற்ற வேண்டும். ஒரு தீய  குணத்தை எரித்திட வேண்டும். தீபாவளி ஐப்பசி மாதம்  அமாவாசை அன்று கொண்டாப்படும் ஒரு  இந்து பண்டிகை ஆகும்.

    தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.

    தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. , கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணுவராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன்.

    ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாக தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான். நாளடைவில் நரகாசுரன் கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். இதற்கு இடையில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யதான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, “அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், விரும்பிய வரம் கேள்” என்றார்.

    “நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்” என்றான். அதற்கு “உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது என பிரமா கூறி, வேறு எதாவது கேள்”  என்றார். அதனால் அவன் “ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது” என்று வரமருளக் கேட்டான்.

    வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு கர்வம் (அசுரக் குணம்) தலைக்கேறியது. ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். அதனால் அவன், அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும்  உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான்.

    இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். “கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்” என்றார் கிருஷ்ணர்.

     ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.

     கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு “முராரி” என்ற பெயர் வந்தது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் ”கதையை” வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? 

     எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தற்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள்,”என் கண்ணனுக்கா இந்த நிலை” என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான். அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். 

    நரகாசுரன் கொல்லப்பட்ட அந்நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி வருகின்றோம். உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார்.

    அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது.

    தீபாவளியை இப்படியும் சொல்லாம்!

    நரகாசுரன் கொல்லப்பட்ட அத் தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன. அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.

    கிருபானந்த வாரியார், ” பார்வதி தேவியர் கேதார கெளரி விரதம் இருந்து, சிவபெருமானின் இடப்பக்கத்தில் இடம்பெற்ற திருநாளே தீப விழாவாகக் கொண்டாடப்படுகிறது ” என்றுரைக்கிறார்.

     தீபாவளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. இதை நினைவூட்டும் விதத்தில் குஜராத்தில் தீபாவளி தினத்தில் இந்து மக்கள் சொக்கட்டான் விளையாட்டு ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

     கானக வாழ்வு முடிந்து அரக்கன் இராவணனை அழித்து, சீதையை மீட்ட இராமபிரான், வெற்றித் திருமகனாக அயோத்தி திரும்பிய திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்களை ஏற்றிவைத்து மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்களாம். அதுவே தீபத் திருநாளாக மாறியது என்று உரைக்கும் சான்றோரும் உண்டு.

     இப்படி பலவிதமான காரணங்கள் கொண்டு தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டாலும், அத்திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே ஒன்றுதான். ” தீமைகள் என்னும் இருள் அகன்று, உலகம் முழுவதும் பக்திப் பேரொளியைப் பெற வேண்டும் ” என்பதே அது. எனவே, தீபாவளித் திருநாளில், பெரியவர்கள் வகுத்துத் தந்த வழியில், முறையாக இறைவனைப் பூஜித்து அவனது அருள் பெற வேண்டும்.