Category: தீபாவளி

தீபாவளி

  • கார்த்திகை மாதத்தில் பூஜை அறையில் ஏற்ற வேண்டிய தீபம்

    கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும்தான்  மண் அகல் விளக்குகளை ஏற்றி, வீட்டில் இருக்கும் இருளை நீக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. கார்த்திகை மாதம் முழுவதுமே விளக்கு வழிபாட்டிற்கு மிக மிக சிறப்பு வாய்ந்த மாதம். இந்த கார்த்திகை மாதம் 30 நாளும், ஒரு நாள் கூட வீட்டில் விளக்கு ஏற்றாமல் பெண்கள் இருக்கவே கூடாது. மாதவிடாய் நாட்கள் வந்த போதிலும், வீட்டில் அடுத்தவர்களை விட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறை தவிர்த்து மற்ற இடங்களில் வீட்டில் இருக்கும் பெண்கள் தாராளமாக விளக்கு ஏற்றலாம். கார்த்திகை மாதம் விளக்கு ஏற்றாமல் வீட்டை இருளில் மூழ்கடிக்க கூடாது. முதலில் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

     

    கார்த்திகை மாதம் தீப வழிபாடு சரி இப்போது கார்த்திகை மாதம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம். கார்த்திகை மாதம் முழுவதும் பூஜையறையில் ஏற்ற வேண்டிய விளக்கு குத்துவிளக்கு. குத்துவிளக்கில் 5 திரிகளும் ஏற்றப்பட வேண்டும். உங்கள் பூஜை அறை பிரகாசமாக இருக்கும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வைத்து, குலதெய்வத்தையும் மற்ற தெய்வங்களையும் மனதார நினைத்து வேண்டுதல் வைக்கும் போது, நிச்சயம் உங்கள் வாழ்வில் தீராத இருக்கும் கஷ்டம் தீரும். கார்த்திகை மாதம் 30 நாளும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர உங்களுடைய வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, இப்படி எத்தனை அறைகள் இருக்கிறதோ அந்த அறையில் எல்லாம் கார்த்திகை மாதம் முழுவதும் மாலை ஆறு மணிக்கு ஒரு அகல் விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி வைக்க வேண்டும்.

     

    இது தவிர கட்டாயம் நிலை வாசல் படியில் இரண்டு விளக்கு, கார்த்திகை மாதம் முழுவதும் மாலை 6மணிக்கு ஏற்றப்பட வேண்டும். இந்த விளக்கு மாலை ஒரு மணி நேரம் எரிந்தால் போதும். மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை அந்த எண்ணெய் தீரும் வரைக்கும் எரியட்டும். அப்படியே விட்டுவிடுங்கள். கார்த்திகை மாதம் முழுவதும் மேல் சொன்ன இந்த எளிமையான தீப வழிபாட்டை எவர் ஒருவர் செய்கிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் எல்லாம் விலகி உங்கள் வாழ்க்கை பிரகாசமாவதற்கு. தேவையான அத்தனை நன்மைகளையும் அந்த தெய்வம் நடத்திக் கொடுக்கும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் நம்பிக்கை.

     

  • கார்த்திகை தீபத்தின் நன்மைகள் மற்றும் அதன் பலன்கள்!

    கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு வந்து தவமிருந்த அம்பிகை, மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது, தவறுதலாக ஒரு சிவலிங்கத்தை உடைத்துவிட்டாள். அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்குவதற்காக கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றி விரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் தவறாமல் கடைப்பிடித்த நாரத முனிவர், அதன் பலனாக சப்தரிஷிகளையும் மேம்பட்ட நிலையில் இருப்பதற்கு அருளைப் பெற்றார்.

    கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து, மூன்று முறஜோதி பரப்பிரம்மம்! தீபம் சர்வ தமோபஹம்! தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே!
    என்ற மந்திரத்தைச் சொல்வது மிகுந்த விசேஷபலனை தரும்.

    திருக்கார்த்திகை நாளில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

    கார்த்திகை திருநாளில், நெல் பொரியுடன் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பொரி உருண்டை தயாரித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.
    வெள்ளை நிறப் பொரி திருநீறு பூசிய சிவனை குறிக்கிறது; தேங்காய் துருவல் கொடைத் தன்மையின் அடையாளமான மாவலியை குறிக்கிறது; வெல்லம் பக்தர்களின் மனப்பக்தியைச் சுட்டிக்காட்டுகிறது.

    ஆத்மார்த்தமான பக்தியால் மகிழும் சிவன், நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால், இந்நாளில் பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

  • தீபாவளி திருநாளில் மீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம்…

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் காலை, மாலை இருவேளைகளிலும் மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்தப்பட்டது. சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப் பட்டையும், சாத்துப்படியானது. தீபாவளியையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 20ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடையும். வரும் 26ஆம் தேதி காலை 7 மணி முதல் முத்துகுமாரசுவாமி வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகும். சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் மற்றும் சண்முகார்ச்சனையும் நடைபெறும். வரும் 30ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை சந்திரசேகரர்சுவாமி சன்னதி 2 ஆம் பிரகாரம் சுற்றி சேர்த்தியாவார். நவம்பர் 3 ஆம் தேதி ஐப்பசி சுவாமிக்கு அன்னாபிஷேகம் உச்சிக்கால பூஜையின்போது நடைபெறும்.

  • தீபாவளி நோன்பு…

    பண்டைய காலம் முதல் தீபாவளி நோன்பு மற்றும் அமாவாசை நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நோன்பு மூலம் குடும்பம் வளம் பெறும் என்பதை ஐதீகமாக கருதி பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். நோன்பு எடுக்கும் குடும்ப பெண்கள் அதிகாலையிலேயே வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து விரதத்தை தொடங்குவார்கள். மாலையில் அதிரசம் தயார் செய்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். அதன் பின்னர் வீட்டில் சாமிக்கு படையலிட்டு விரதத்தை முடிப்பார்கள். அது வரையில் உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சாமிக்கு படையலிட அதிரசம் தயார் செய்வதற்கு என்று புதிய விறகு அடுப்பு, சட்டி, பானை என அனைத்தும் புதிதாகவே பயன்படுத்துவார்கள். மேலும் கோவிலுக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பூஜை பொருட்கள் வாங்க செல்லும் போது குளித்து முடித்து சுத்தமாக சென்று பூஜை பொருட்களை வாங்கி வருவார்கள். இந்த நோன்பு பண்டிகைக்காக பிரத்யேகமாக புதுவை பெரிய மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜை பொருட்கள் விற்கப்படும். குறிப்பாக நோன்பு பண்டிகைக்காக வில்வ பூ அதிகம் விற்பனை செய்யப்படும். மேலும் பல வண்ணங்களில் நோன்பு கயிறு விற்கப்படும். அவரவர்கள் குல மரபுப்படி கறுப்பு இல்லாத நோன்பு கயிறு, சுங்கு வைத்த நோன்பு கயிறு, மணி வைத்த நோன்பு கயிறு என பல விதங்களில் விற்கப்படும். அதுபோல் எண்ணிக்கை அடிப்படையிலும் பூஜை பொருட்களை வாங்கி பூஜை செய்வார்கள். மேலும் காய்கறி வகைகளையும் எண்ணிக்கை அடிப்படையிலேயே வாங்கி சமையல் செய்வார்கள். அதிரசம் செய்ய முடியாதவர்கள் பூஜை பொருட்களுடன் வாழைப் பழங்களை வைத்து வழிபடுவார்கள்.

  • தீபாவளியில் பட்டாசும்! பாதுகாப்பும்!

     

     

     

    தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் அர்த்தம் பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ( மூட எண்ணம் ) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம். இந்த இனிய நாளில், நாமும், நம் உள்ளமென்னும் அகல் விளக்கில் அன்பென்னும் திரியேற்றி, கருணை என்னும் நெய் ஊற்றிப் பக்திச் சுடர் ஒளிக்கச் செய்து உலகை அமைதியே ஆட்சி செய்ய உறுதி கொள்ள வேண்டும். அப்போது, இந்தத் தீபாவளித் திருநாள் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நாளும் நமக்குத் தித்திக்கும் தீபாவளிதான்.

     

          

     

     

    1.முதலில் அங்கீகரிக்கபட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கியபட்டாசுகள் நீங்கள் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்க்கு வேட்டுவைக்ககூடிய வாய்ப்பு அதிகம். அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.

      2.ஒருபட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்யவேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன் படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்தவேண்டும். ஏனெனில் , ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனை தெரிந்துகொள்ளாமல் பயன் படுத்தினால் கண் உட்பட எந்த உடல்உறுப்பும் பாதிக்கப்படலாம்.

    3.தொழிற்சாலைகள், பெட்ரோல்பங்க்குகள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்ளை தவிர்த்து குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்த வெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்புபகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளைநோக்கி செலுத்துவதையும் தவிர்க்கவேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.

    4.தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்குமட்டுமல்ல ஒருவெளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒருபக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

    5.ஒருநேரத்தில் ஒரே ஒருபட்டாசினை மட்டுமே கொளுத்தவேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்க்கு காரணமாகலாம்.

    6.நீங்கள் பற்றவைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒருபோதும் அத்னை கையில் எடுப்பதற்க்கோ அல்லது மீண்டும் உடனே பற்றவைப்பதற்க்கோ முயற்சி செய்யக்கூடாது.அந்தபட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.

    7.குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.

    8.நீங்கள் பற்றவைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்துநிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒருபக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்கவேண்டும். புஷ்வாணம் எரியவில்லை என்றால் கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ளது. திரி எரிந்தும் வெடிக்காதவெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.

    9.பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக்பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்கமுடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில் குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்திவைக்கலாம்.

    10.நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒருபக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சிறிது நேரம்கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத்தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    11.பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றிற்க்குறிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசினை மட்டுமே பற்றவைக்க் வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.

    12.ஒரு பட்டாசினை பற்ற வைக்கும் போது கை மற்றும் உடம்பின் எந்தபாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.

    13.ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக்கண்ணாடி (Plain Spectacle) அணிந்துகொள்வது நல்லது.

    14.மிகஅதிகமான ஒளியையும், மிகஅதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால் அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம்.

     

    15.செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள்வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடைசெய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

    16.எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.

    17.குழந்தைகளும் சிறுவர்களும் எந்தசிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்க்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் மேற்ப்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதேசிறந்தது.

    18.பட்டாசினை கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரேநேரத்தில் ஒரேஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.

    19.ஒருபட்டாசு அல்லது மத்தாப்பினை கொளுத்துவதற்க்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்டகம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது.

    20.மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசுகொளுத்தி விளையாட, அல்லது உதவிசெய்ய யாராவது வந்தால் அவர்க்ளை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.

    21.வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும் போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்கவேண்டும். அதனால் பெரியவிபத்துகளை தவிர்க்கலாம்.

    22.தரைச்சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்கவேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின்தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.

    23.நீளமான மத்தாப்புக்களை வைத்துக்கொண்டே வெடிகளை வெடிக்கவேண்டும்.வெடிகளைப் பற்ற வைக்கும் போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில்கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.ஏனெனில் விபத்து ஏற்ப்பட்டால் விபத்துடன் வெடிப் பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளேசென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.

    24.பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாக செல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷுக்களோ அல்லது செருப்புகளோ அணிந்துகொண்டே பட்டாசுகளை கொளுத்தி விளையாட வேண்டும்.

    25.வெடிக்காத வெடிகளைத்தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது..

     

    தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்படுவது உடல் நலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்து விடும்..

    ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது!

    பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோம்!

     

     

     

  • தீபாவளியின் போது தீப வழிபாடு ஏன்?

     

    தீபாவளி பண்டிகையின் வயது ஒன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. தமிழகத்தில் விஜயநகர பேரரசு வேரூன்றியதும் அவர்கள்  பரவலாகப் பல ஊர்களில் குடியேறினார்கள். இவர்களுடைய முக்கியமான முதன்மையான பண்டிகைதான் தீபாவளி. தீப வழிபாடு இயற்கை வழிபாடாகும்.இது பண்டைய வழிபாடு முறையாகும். எனவே விஜய நகர பேரரசு மூலம் அறிமுகமான இந்த தீபாவளி பண்டிகை மெள்ள,மெள்ள தமிழக மக்களின் நாகரிகத்தில் இரண்டறக் கலந்துவிட்டது.

    ஒளி மனித உயிருக்கு இன்றியமையாதது. ஆதிகாலப் பிரபஞ்சத் தோற்றாத்தில் அணுக் கூட்டங்கள் கூடி ஒரு குழப்பமாக கடலோரத்தில்  மிதந்து  கொண்டிருந்த போது,அதில் சூரிய ஒளி பட்டு முதல் உயிர் தோன்றியது.உண்மையில் நாமெல்லாம் ஒளியின் புத்திரர்கள் தான்.

    சூரிய ஒளியின் கிரகணங்களை வாங்கி ,மரங்கள் இலைகளில் குளோரோபில்லைத் தோற்றுவித்து காய்,கனிகளை உண்ணத் தருகின்றன. சூரிய ஒளி இல்லையேல் கடல் நீர் ஆவியாகாது.மேகம் இல்லை, மழையில்லை.குடிக்க  நீர்ல்லாமல் போகும். ஒளி வியாதி கிருமிகளை அழிக்கிறது. ஒளி மூலம் தோல் வைட்ட மின்-டி பொருளைச் சேகரித்து எலும்பை உறுதியாக்குகிறது.

     ஒளியின்றி இருண்ட அறையில் ஒரு மனிதனைப் பலகாலம் அடைத்து வைத்தால்,அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.எனவே தான் இந்துக்கள் இவ்வொளி அருட்பெருஞ்சோதியாகவும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபமாகவும் வழிபடுகிறார்கள்.

     

     தீபாவளி என்றால் தீபம்+ஆவளி அதாவது  தீபங்களின் வரிசை என்று பொருள். இருளைக்கொண்டு ஒரு மலையை மறைக்கலாம்.ஆனால் மலையளவு இருளால் கூட சுடர் விட்டு எரியும்.ஒரு அகல் விளக்கை மறைக்க முடியாது. ஒவ்வொரு விளக்கையும் தனக்காக தன் குடும்பத்திற்காக,தன் உறவினர்களுக்காக,தன் ,தன் நண்பர்களுக்காக,தன் சமுகத்திற்காக வேண்டி வரிசை வரிசையாக ஏற்ற  வேண்டும்.

     அவ்விளக்கில் நல்லெண்ணைய்யை ஊற்றும் போது நமது நல்ல எண்ணங்களை அதில் பிரதிபலிக்க வேண்டும். எரியும் விளக்கை கவிழ்த்தாலும் தீபம் மேல் நோக்கியே இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது.   மனிதனின் லட்சியம் ,மேலும் மேலும்  உயர வேண்டும் என்பதை அது காட்டுகிறது. ஒரு தீபத்தை கொண்டு பல தீபங்களை ஏற்றுவது போல,நாமும் பல குடும்பங்களில் விளக்கேற்ற  வேண்டும்.

    உலகமெல்லாம் நிறைந்து விளங்கும் இறைவனை  நாம் வழிபடும் இடத்தில் எழுந்தருளச் செய்ய  தீபாவளி திருவிளக்கு வழிபாடு வழி செய்கிறது. விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அண்டத்தில் உள்ள ஐந்து பூதந்களையும்.உடலில் உள்ள ஐந்து பொறிகளையும் குறிப்பவை.விளக்கினை ஏற்றி அவ்வொளியால் கண்,காது,மூக்கு,வாய்,தோல் என்ற ஐம்பொறிகளையும் ஒளி பெற செய்ய வேண்டும் என்பதே அதன் நோக்கம் .சூரியன்,கணபதி,மகேஸ்வரர்,அம்பிகை விஷ்ணு என்ற ஐந்து தெய்வங்களை வணங்குவதாக இது பொருள் படும். விளக்கில் அடி பாகம்  பிரம்ம சொரூபம் என்றும், அதன் தண்டு விஷ்ணு பாகம் என்றும்,அதன் ஐந்து  முகங்கள் சிவ பாகம் என்றும் வர்ணிக்கப்படும்.

     

     தெய்வ தரிசனத்தில் ஒளியின் பங்கு பெரியது.இறைவன் அண்டத்தில் உள்ளவன்.அண்டம் என்றால் கருப்பு.தெய்வம் கருப்பு நிறம்.கிருஷ்ணம் என்றால் கருப்பு என்று பொருள்.அது கர்ப்பக்கிரகம் என்ற இருளில் வாழ்கிறது.  அதை தரிசிக்க கற்பூர ஒளியைக் காட்டுகிறோம். புருவ நடுவே விளங்குகிற விளக்கு,உடலின் நளாமில்லா சுரப்பியையும் அதன் நேர்க்கோட்டில் இருக்கிற இதயம்,நுரையீரலை  இயக்குகிற முகுலத்தையும் குறிக்கும்.

     இவற்றை எல்லாம் நினைவில் கொண்டு தீபாவளியில் ஒளி விளக்குகளையும்,நம்மோடு இணணந்த உயிர் விளக்குகளையும் வரிசை வரிசையாக ஏற்றுவோம்.நல்ல எண்ணெய் குளியலில் நல்ல எண்ணங்களில் திளைப்போம்.புத்தாடை உடுத்தி புதிய சிந்தனைகளை விதைத்து மகிழ்ச்சியோட கொண்டாடுவோம்.

  • லட்சுமி குபேரன் கோயிலில் தீபாவளிக்கு சிறப்பு பூஜை….

    சென்னையை அடுத்த வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள்ள பழமையான லட்சுமி குபேரன் கோயில். தீபாவளி தினத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தீபாவளி தினத்தன்று குபேரனை வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதால், அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தினமும் கோயில் நடை காலை 5.30 மணிக்கே திறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இறைவனை தரிசிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும். லட்சுமி குபேரன் கோயிலில், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார் குபேரன். அந்த சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிரகாரங்களும் உள்ளன. இங்கு மிக அழகாக ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பது நம்பிக்கை. அதேப்போல கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே, இந்த கோயிலில் இருக்கும் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பழங்கள் அளிப்பது குபேரனுக்கு செய்யும் பூஜையாகவே கருதப்படுகிறது.

  • எல்லோரும் கொண்டாடிய தீபாவளி!

     

    தீமை அழித்து நன்மை  பிறக்கும்  நாள் தீபாவளி!

    தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் தீபாவளி என்கின்றனர்.ஒளி என்பது வெற்றியின் அடையாளம்.இருள் என்பது தோல்வியின் பொருள் ஆகும்.தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் மற்றும்  இந்துக்களை தவிர  பிற நாட்டவரும்,பிற மதத்தவரும் கூடக்   தீபாவளியை கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.

    பழங்கால இந்திய மன்னர்கள்,இந்துக்களாக இருந்தாலும்,முகலயர்களாக இருந்தாலும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும்  மக்களுக்கு பரிசுகள் மற்றும் சலுகைகள்  தர வழக்கத்தில் இருந்தது. தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில் ரோம்,எகிப்து, பாபி லோன், கிரேக்கம்,பராசீகம் பல உலக நாடுகளுடன் வர்த்தக  தொடர்புகள் இருந்துள்ளன. இந்தியாவிலிருந்து  வாசனை திரவியங்கள்,மூலிகைகள்,யானை தந்தங்கள் எடுத்து சென்றதாக வரலாற்று கூறுகிறது. அந்த வணிக தொடர்பின் போது  இந்தியாவிலிருந்து சென்ற பல வணிகர்கள் இடம்பெயர்ந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். ஆகவே பல தேசங்களுக்கும் பரவி உள்ளது தீபாவளி.சீக்கியர்களும் சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக  கொண்டாடிகின்றனர்.

     

    சீக்கியர்களின் தீபாவளி …!!

      

    சீக்கிர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசீக்கியசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார். அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை “பந்தி சோர்ரா” என்று கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் “கால்ஸா” என்ற கூட்டமும் உருவானது அத்துடன் குரு கிரந்த சாஹேப் என்ற புத்தகமும் சிறிது மாற்றங்களுடன் சீக்கியர்களின் குருவானது.

     

    சைனர்களின் தீபாவளி..!!

     

    சைனர்களுக்கும் இது மிக முக்கியமான நாள் சைமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். இன்று தீபங்கள் ஏற்றி “உத்தராத்த்யாயன் சூத்ரா”வைப் படிக்கின்றனர். இதில் மகாவீரரின் ஐந்துபிரவசங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் அகஞான  இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

     

    வங்காளத்தில் தீபாவளி …!!

     

     

     கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள் பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள். சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் “பாய் போலே” என்ற பெயரில் நடக்கிறது.

    ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் தீபாவளி ..!!

     

     ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தது நம் அனைவருக்கும் தெரியும் ,இதைக் குறித்து “அன்னகுட்” என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள்.

     குஜராத்தில் தீபாவளி …!!

     

    தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன. குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை முதலிலிருந்தே சுத்தப்படுத்தி, வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயார் செய்து கொள்கிறார்கள். மாவிலைகள் கட்டப்படுகின்றன, கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர, பூஜை செய்யப்படுகிறது, வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்றனர், அன்று கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை, பல இனிப்புக்கள் இலட்சுமிக்குப் படைக்கிறார்கள் அவளை வரவேற்க இரவு முழுவதும் கதவை அடைக்காமல் திறந்தே வைக்கின்றனர்,

     

    மஹாராஷ்ட்ராவில் தீபாவளி..!!

     

    மஹாராஷ்ட்ராவில் இதை “பலிபாத்யாமா என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. தீபாவளியின் ஒரு வாரம் முன்பே “ரங்கோலி” என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது. இதிலே போட்டிகளும் வைத்துப் பரிசுகளும் தரப்படுகின்றன. தீபாவளிஅன்று கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அத்னுள் விளக்குகள் பொருத்துகின்ற்னர், அதைத் தன் வீட்டு வாசல், பால்கனியில் எரியவிடுகின்றனர். நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர். தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்க்கின்றனர், இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா, அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்ற்னர். பின் “பாவுபீஜ்” என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கின்ற்னர், சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர்.

     

    தீபாவளி பிறந்த கதை!

     

     

    நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் தீபாவளி, அதாவது தீபங்களின் வரிசைகள், இந்த ஆசையைக் கேட்டது நரகாசுரன் தான். தான் மரணம் அடையும் தருவாயில் இந்தத் தினத்தை எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் கேட்டுக் கொண்டான். ஆமாம் யார் இந்த நரகாசுரன்?

    பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆக ஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் படித்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.

    இதற்கு நடுவில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம்  செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, “அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், ஏதாவது வரம் கேள்” என்றார். “நான் சாகக்கூடாது ,என்க்குச் சாகாவம் அருளுங்கள்”

     “உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்” “ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது” “தந்தேன் நரகா, நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்” இதைக்கூறி பிரும்மா மறைந்து விட்டார்.

    ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். எல்லா லோகத்தையும் ஜயிக்க ஆவல் கொண்டு முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலமையைக் கூறி காப்பாற்றுமபடிக் கேட்டுக் கொண்டனர். “கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்” என்றார் கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாம ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் க்லைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் த்ன் கதை வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்?

    சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள், “என் கண்ணனுக்கா இந்த நிலை” என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் கீழே சாய்ந்தான். அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். பின் அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான் வரனைக் கொடுப்பதாகச் சொன்னார், நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

    இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். தீப ஒளி நாம் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றி வைப்போம்.

  • தீபாவளி வந்திருச்சு…!!!

     

    தீபாவளி நெருங்குகிறது, ஆ, மஜாதான். இனிப்பு என்ன! புது உடைகள் என்ன! விதவிதமான பட்டாசுகள் என்ன! விஜயதசமி அல்லது தசரா முடிந்தவுடனேயே தீபாவளி களை கட்டிவிடுகிறது. எல்லாக் கடைகளிலும் ஜே ஜே என்று கூட்டம், அதுவும் ஜவுளிக் கடைகளில் கேட்கவே வேண்டாம், தவிர, அடுத்து வருவது பட்டாசுக் கடைகள். இப்போதே பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கி விட்டது. வாண வேடிக்கைகள் பார்க்கக் கண்களுக்கு ஒரு விருந்துதான், ஆனால் இதனால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது என்பதும் உண்மைதான்.

    முன் காலத்தில் மாடி வீடுகள் அதிகம் இல்லை. திறந்த வெளிகள் நிறைய இருந்தன, ஆகையால் புகை வானத்தில் போக வசதியாக இருந்தது. இப்போது பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்து அடைத்துக் கொண்டு விட்டன. சில பதினாறு மாடிகள் வரை உயர்ந்து நிற்கின்றன. ஆகையால் இந்தப்ப புகை மண்டலம் கீழேயே அதிகம் சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் திருநாள் என்றால் வாண வேடிக்கை வேண்டுமே! இந்தத் தீபாவளிப் பண்டிகைக்குக் காரணாமான நரகாசுரனே தன் மரணத்தை வாண வேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டானாம், ஏன் என்றால் அவனுக்குக் கடைசியில் கண்ணன் அல்லவா காட்சி அளித்தார்?

     

    இப்போது பட்டாசு வெடிப்பதைப் பற்றிப் பார்க்கலாம். பட்டாசு கொளுத்தும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் விபத்து நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச்சுற்றி இருப்பவருக்கும் வருவது உண்டு. மகிழ்ச்சியுடன் இருக்கும் வேளை வருத்தத்தைக் கொடுத்து விடும். பெரிய வெடிகளை பெரிய அண்ணா அல்லது வேறு பெரியவர்கள் துணையுடன் அல்லது அவர்கள் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட ஊதுவத்தி ஏற்றி நேருக்கு நேர் நிற்காமல் சாய்ந்தவாட்டில் நின்று கொளுத்த வேண்டும். நைலான்

    ஆடை அல்லது பட்டாடை தவிர்க்க வேண்டும். பட்டாசு விடும் போது ஒரு கர்ச்சீப்பை நனைத்து முகத்தில் முகமூடி போல் கட்டிக் கொள்வது நல்லது, ஆஸ்மாகாரர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் அவ்சியம். எதை ஏற்றினாலும் அது முடிந்தவுடன் ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். சுடச்சுடக் கீழே போட்டுவிட்டு அதைத் தவறிப் போய் யாராவது மிதித்துப் பின், “ஆ சுட்டுவிட்டதே எரியறதே!” என்று அலறுவதைத் தவிர்க்கலாமே. பட்டாசு வெடிக்கும் போது அருகில் கார், ஸ்கூட்டர் இல்லாமல் இருப்பது நல்லது. பெட்ரோல், டீசல் போன்றதிலிருந்து தூரமாக இருப்பது நல்லது தானே! வீட்டில் நோயாளிகள் அல்லது வயதானவர்கள் இருந்தால், அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அங்கு வெடிக்காதீர்கள். பாவம், நோயால் அவதிப் படும்போது இதனால் இன்னும் சிரமம் ஏற்படலாம். அதே போல் சின்னப் பாப்பா இருந்தாலும் அந்த வெடிச் சத்தத்தில் அதன் உடல் தூக்கித் தூக்கிப் போடும், அதன் அருகில் வேண்டாமே!

     

    இதே போல் வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் பட்டாசு என்றால் மிகவும் பயம். அதன் உடல் சத்தம் கேட்டாலே நடுங்கும், அதை ஒரு அறையில் வைத்துக் கதவைச் சத்தம் வராதபடி மூடி வைக்க வேண்டும். பட்டாசுகளை டப்பாவிலோ பாட்டிலிலோ வைத்து விடுவது கூடாது. சில ஏழைக் குழந்தைகள் ஏக்கமாகத் தானும் விடமாட்டோமே என்று பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கும் திறநத மனதுடன் பாட்டாசுகளைக் கொடுங்கள். உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு நாம் மகிழ்ச்சி கொடுக்க நம் மனமும் மகிழும்.

    தமிழகத்தில் பாட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 முதல் இரவு 10 வரை. பொது இடங்களில் பொது வழிகளில் வெடிக்கக்கூடாது. சுற்றுப்புறச்சூழல் விதிப்படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசை வெடிக்கக் கூடாது. பட்டாசு ஏற்றி ஹீரோ போல் கையில் வைத்துப் பின் விசிப் போடக்கூடாது.

    தவறிப்போய் உடையில் தீப்பற்றினால் ஓடக்கூடாது. ஒருவரையும் பயத்தில் அணைக்கக்கூடாது. உடனே கீழே படுத்து உருள வேண்டும். தீப்புண் மேல் குளிர்ந்த நீரை ஊற்றி மெல்லிய காட்டன் துணியினால் மூட வேண்டும். பின் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். தன் இஷ்டப்படி மருந்துகளை அதன் மேல் தடவக்கூடாது.

    தீபாவளிப் பண்டிகையின்போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்க நினைப்பது அனைவரின் விருப்பம் என்றபோதிலும், கொண்டாட்டங்களின் போது, பாதுகாப்பு அம்சத்தையும் கவனத்தில் கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் நீடிக்கும்!

     

  • செல்வம் கொழிக்கும் குபேர பூஜை

     

    இருள் அகற்றி நமது வாழ்வில் ஒளியேற்றும் தீபாவளி திரு நாளில் குபேர பூஜை செய்தால், பல வழிகளிலும் செல்வம் நம் வாசல் வந்து சேரும்.அருள் இல்லார்க்கு  அவ்வுலகம் இல்லை என்றால் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் நம் வாழ்வின் பல விசயங்களை முடிவு செய்கிறது. ஒருவர்  வீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி, குபேர பூஜை செய்வது அவசியம்.  தீபாவளி குபேர பூஜை செய்ய உகந்த நாள் . வீட்டில் தீபாவளியன்று குபேர பூஜை செய்ய செல்வ செழிப்பு தழைத்தோங்கி வளரும்.

    மகாலட்சுமி சுத்தமாகவும், நறுமணம் நிறைந்திருக்கும்  வீட்டில்  விரும்பி கொலுவிருப்பாள். முதியோர்களுக்கும் மரியாதையும், குழந்தைகளுக்கு தேவையான  அன்பும் எங்கு இருக்கிறதோ அந்த வீட்டில் லட்சுமி  அருள்மழை பொழிவாள் என்கிறது புராணம்.

    லட்சுமி  குபேர பூஜையை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தினம் இரவே செய்வது நல்லது.

    தீபாவளி திருநாள் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில்  கிழக்கு அல்லது மேற்கு திசையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும்  புஷ்பலங்காரம்  செய்யவேண்டும்.

     லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து, நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

    அடுத்து  மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வாழையிலையின் வலது பக்கமாக வைத்து  குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    விநாயகர் வழிபாட்டுடன் மகாலட்சுமி துதி பாடல்களை பாடி வணங்கலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாவிட்டால் குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்தாலே போதும்.உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் இவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கதீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

     இப்படி பூஜை செய்த பின்னர் தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டும்.  தீபாவளி திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் , சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கி கடன் பிரச்னைகளில் இருந்து  விடுபடுவர்  என்பது ஐதீகம்.

    தீபாவளி அன்று புதன் ஹோரையில்  லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதை தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

    இப்படிச் செய்யும் போது , நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி… என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

     

    தீபாவளி அன்று செய்யும்  ள ட்சுமி குபேர பூஜையும், நாணய பூஜையும் ஆண்டு முழுவதும் நம் செல்வ நிலையை மேம்படுத்தி தரும்.