Author: cmsadmin

  • சங்கடங்கள் தீர்க்கும் சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில்!

    கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூரில் அமைந்துள்ள அருமையான திருத்தலம், ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் திருக்கோயில். நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்த மலைக் கோயில் இது!

    இங்கு, அம்பாளின் திருநாமம்- ஸ்ரீமரகதாம்பாள்; ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீசந்திரசூடேஸ்வரர். ஹொய்சாள மன்னன் இந்தக் கோயிலை நிர்மாணித்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

    சுமார் 200 படிகளைக் கடந்தால், அற்புதமான ஆலயத்தை அடையலாம். தெற்குப் பார்த்த அழகிய ஐந்தடுக்கு கோபுரம்; ஆலயத்தில், பாறையைக் குடைந்து, தூண்களை அமைத்துள்ள விதம், அந்நாளைய கட்டடக் கலையின் சிறப்புக்குச் சான்றாகத் திகழ்கிறது.

    லிங்க வடிவில், ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் காட்சி தர, தனிச் சந்நிதியில், கனிவு பொங்கக் காட்சி தருகிறாள் ஸ்ரீமரகதாம்பிகை.

    கோயிலில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. சந்நிதிக்குள் தண்ணீரை நிரப்பி, 16 நாட்கள் பூஜை செய்து வழிபடுவார்களாம். அப்படிச் செய்தால், அந்த வருடம் மழை வெளுத்து வாங்குமாம்!

    மாசி ரதோத்ஸவம், திருவாதிரை, மகா சிவராத்திரி என வருடந்தோறும் பல விழாக்கள் விமரிசையாக நடந்தாலும், திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிறப்புற நடைபெறுகிறது. மலைக்கோயிலில், மகாதீபம் ஏற்றப்பட்டு, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், உத்ஸவங்களும் நடைபெறும்.

    ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை தரிசித்தால், சகல சங்கடங்களும் தீரும்; குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்; பிரிந்த தம்பதி ஒன்றாகச் சேருவார்கள் என்பது ஐதீகம்! எனவே, இந்த தீபத் திருநாளில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற ஊர்களில் இருந்து, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.

     மலையில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை, தரிசிப்போம்; மங்காத செல்வங்களைப் பெறுவோம்!

  • சங்கடங்கள் தீர்க்கும் சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில்!

    கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூரில் அமைந்துள்ள அருமையான திருத்தலம், ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் திருக்கோயில். நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்த மலைக் கோயில் இது!

    இங்கு, அம்பாளின் திருநாமம்- ஸ்ரீமரகதாம்பாள்; ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீசந்திரசூடேஸ்வரர். ஹொய்சாள மன்னன் இந்தக் கோயிலை நிர்மாணித்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

    சுமார் 200 படிகளைக் கடந்தால், அற்புதமான ஆலயத்தை அடையலாம். தெற்குப் பார்த்த அழகிய ஐந்தடுக்கு கோபுரம்; ஆலயத்தில், பாறையைக் குடைந்து, தூண்களை அமைத்துள்ள விதம், அந்நாளைய கட்டடக் கலையின் சிறப்புக்குச் சான்றாகத் திகழ்கிறது.

    லிங்க வடிவில், ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் காட்சி தர, தனிச் சந்நிதியில், கனிவு பொங்கக் காட்சி தருகிறாள் ஸ்ரீமரகதாம்பிகை.

    கோயிலில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. சந்நிதிக்குள் தண்ணீரை நிரப்பி, 16 நாட்கள் பூஜை செய்து வழிபடுவார்களாம். அப்படிச் செய்தால், அந்த வருடம் மழை வெளுத்து வாங்குமாம்!

    மாசி ரதோத்ஸவம், திருவாதிரை, மகா சிவராத்திரி என வருடந்தோறும் பல விழாக்கள் விமரிசையாக நடந்தாலும், திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிறப்புற நடைபெறுகிறது. மலைக்கோயிலில், மகாதீபம் ஏற்றப்பட்டு, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், உத்ஸவங்களும் நடைபெறும்.

    ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை தரிசித்தால், சகல சங்கடங்களும் தீரும்; குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்; பிரிந்த தம்பதி ஒன்றாகச் சேருவார்கள் என்பது ஐதீகம்! எனவே, இந்த தீபத் திருநாளில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற ஊர்களில் இருந்து, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.

     மலையில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை, தரிசிப்போம்; மங்காத செல்வங்களைப் பெறுவோம்!

  • சிவபூஜைக்கு ஏற்ற மலர்கள்!

    பூக்கள் இல்லாத பூஜைக்கு பலன் குறைவே என்பது பெரியோர் வாக்கு. அவ்வகையில், சகல மலர்களும் இறை பூஜைக்கு ஏற்றவையே என்றாலும், குறிப்பிட்ட சில மலர்களை சிவபூஜைக்கு விசேஷமாகப் பரிந்துரைக்கின்றன ஞான நூல்கள். 

    நீர்ப்பூ வகைகள் 

    செந்தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் ஆகியவைகள் நீர்ப் பூ வகையைச் சார்ந்தது.

    நிலப் பூ வகைகள் 

    நாயுருவி,தும்பை,வெட்டி வேர்,பச்சை,சிவந்திப் பூ,மரிக்கொழுந்து,சிவகரந்தை, விஷ்ணு கரந்தை,துளசி,இருதயத்தை,செம்பரத்தை,அனிச்சம், நந்தியாவட்டை ஆகியவைகள் நிலப்பூ வகையைச் சார்ந்தது.

    கோட்டுப் பூ வகைகள் 

    வன்னி, பலா, எலுமிச்சை, கோங்கு, நார்த்தை, மந்தாரை, மாவிலங்களை, நொச்சி, பன்னீர்-அகில், மாதுளை, அசோகு, பாதிரி, இலந்தை, நுணா, வெள்ளெருக்கு, புன்னை, மருது, விளா, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, வில்வம், குருந்து ஆகியவைகள் கோட்டுப் பூ வகையைச் சார்ந்தது.

    கொடிப் பூ வகைகள் 

    நாட்டு மல்லிகை,முல்லை, வெற்றிலை, தாளி, கருக்காக்கொன்றை, வெண்கா கொன்றை குருக்கத் தி, இருவாச்சி, கொன்றை, பிச்சி ஆகியவைகள் கொடிப் பூ வகையைச் சார்ந்தது.

    நான்கு வேளை பூஜைக்கு  உகந்த மலர்கள்…

    அதிகாலை, காலை, நண்பகல், மாலை ஆகிய நான்கு வேளைகளிலும் சிவ பூஜைக்கு உகந்த மலர்கள் இன்னின்ன என்று ஆன்றோர் வகுத்துள்ளனர். அவை:

    அதிகாலை: புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை

    காலை: அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவர்த்தம், தாமரை, பவழமல்லி.

    உச்சிக்காலம்: பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, மல்லிகை, கத்தரி, மந்தாரை, சரக்கொன்றை, தும்பை.

    மாலை மற்றும் அர்த்தசாமம்: மல்லிகை, காட்டு மல்லிகை, மகிழம்பூ, கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து.

  • கடன் தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்… வழிபாடுகள்!

    பொதுவாக, கடன் ஒருவரது வாழ்க்கையில் வருவதும் போவதுமாக இருக்கும் என்றாலும், சிலர் ஆயுசு முழுக்கக் கடனாளியாகவே இருப்பார்கள். அவர்களின் ஜாதகம் நஷ்ட ஜாதகமாக இருப்பதே அதற்குக் காரணம். அவர்கள் எந்தவித முயற்சியில் இறங்கினாலும் பொருள் நஷ்டத்தால் சிரமப்படுவார்கள்.

    ஒருவரது ஜாதகத்தில் 2 ஆம் வீட்டுக்குரிய தன ஸ்தானாதிபதி மறைந்திருந்தாலோ, 4 ஆம் வீட்டு சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி பலவீனமாகவோ, நீச கதியிலோ, வக்ரகதியிலோ மறைந்திருந்தாலோ அல்லது பாவ கிரகத்துடன் சேர்ந்து பலமிழந்து இருந்தாலோ, இந்த ஜாதக அமைப்புடன் பிறந்த எவர் ஒருவரின் ஜாதகமும் நஷ்ட ஜாதகம்தான்.

    அதேபோல், லக்னாதிபதியும் ராசிநாதனும் வலுவிழந்து, ஆனால் 6-க்கு உரியவன் வலுவாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஜாதகர் கடைசி வரைக்கும் கடனாளியாகவே இருப்பார்.

    இங்ஙனம் கடன் தோஷ ஜாதக அமைப்பு கொண்ட அன்பர்களுக்கு, பாதிப்புகள் விலகிட தானம்தான் மிகச் சிறந்த பரிகாரம். அது, உணவாகவோ, ஆடையாகவோ அல்லது எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

    ஆசிரியராக இருப்பவர்கள், மற்றவர்களுக்குக் கல்வியை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ தருவது சிறந்த பரிகாரமாகும். நம்மால் முடியும்போதெல்லாம் பசுவுக்கு உணவாக பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி ஆகியவற்றைத் தரலாம்

    வழிபாடுகள் 

    பரிகாரக் கோயில் என்று எடுத்துக்கொண்டால், சம்ஹார தலங்களுக்குச் சென்று வழிபடலாம். குறிப்பாக, சஷ்டி தினங்களில்… திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது நல்லது. முடிந்தால், வருடத்துக்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று, கந்தனை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

    லட்சுமி கடாட்சம் பெருக… 

    கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண் கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட்டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும்.  

    வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் 1, 9, 12, 108 என்ற எண்ணிக்கையில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது, தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.

  • சிதம்பரம் நடராஜர் கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆருத்ரா தரிசன உற்சவம்!

    டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்  கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். 

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனையத்து நாளை ஞாயிற்றுக்கிழமை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6 ஆம் தேதி அன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7 ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது.

     விழாவின் முக்கிய நிகழ்வான  தேர்த்திருவிழா 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும். தொடர்ந்து 14 ஆம் தேதி அன்று பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15 ஆம் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழுவினர் செய்து வருகின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

     

  • அரங்கனின் திருவடிகளை சிறப்பிக்கும் பாதுகையின் மகிமை!

    ஸ்வாமி நிகமாந்த மகாதேசிகனின் கிரந்தங்கள் பல உண்டு. அவற்றில் தலைசிறந்தது பாதுகா ஸகஸ்ரம். 32 பத்ததிகளையும் 1008 ஸ்லோகங்களையும் கொண்ட இந்த பொக்கிஷம், ஒரே இரவில், ஒரு ஜாமத்தில் அருளப்பட்டதாம்.

    வைணவ சமயத்துக்கு ஓர் அரிய பொக்கிஷம் ஸ்வாமி வேதாந்த தேசிகர். இவர், காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள தூப்புல் எனும் சிறிய கிராமத்தில் புரட்டாசியில், திருவோண நட்சத்திரத்தில், திருவேங்கடவனின் திருமணியின் அம்சமாக திருஅவதாரம் செய்தார்.

    திருக்கோயிலின் மணி எங்கெங்கும் சங்கநாதம் ஒலிப்பது போல், ஸ்வாமி தேசிகரின் படைப்புகள் பாரெங்கும் அறம் பரப்பி ஒளிவீசித் திகழ்வதாகும். இவரின் 750-வது திருநட்சத்திர வைபவம் நம் தேசத்தில் மட்டுமின்றில் லண்டனிலுள்ள House of common சபையிலும் கொண்டாடப்படுகிறது.  

    ஸ்வாமி நிகமாந்த மகாதேசிகனின் கிரந்தங்கள் பல உண்டு. அவற்றில் தலைசிறந்தது பாதுகா ஸகஸ்ரம். 32 பத்ததிகளையும் 1008 ஸ்லோகங்களையும் கொண்ட இந்த பொக்கிஷம், ஒரே இரவில், ஒரு ஜாமத்தில் அருளப்பட்டதாம். அரங்கனின் திருவடிகளைப் (பாதுகை) பற்றி சிறப்பிப்பதாகத் திகழும் இந்த நூல், ஸ்வாமி நம்மாழ்வாரைப் பற்றிய ஸ்தோத்திர ரூபமான நூலாகவும் திகழ்கிறது. சம்ஸ்கிருதத்தில் அருளப்பட்ட இந்நூலை தமிழில் உரைநடைப்படுத்தி, அதன் மேன்மையை விளக்கியுள்ளனர், வைணவ மத பூர்வாச்சார்யார்கள்.

    இதில் 30-வதாகத் திகழும் ‘சித்ரப்பத்ததி’ என்பது, கணித மேதைகளும் வியக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. இதன் நடை ஆஸுகவி, விஸ்தாரக்கவி, விகடகவி, சித்திரக்கவி  என நான்கு வகையாகப் பிரித்தருளப் பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரை 'நாலுகவி பெருமாள்’ என்று சிறப்பிப்பார்கள். அதுபோன்று, ஸ்வாமி தேசிகனும் இந்த நான்கு நடையினையும் தமது கவிதைத் தொகுப்பில் பிரயோகித்துள்ளார்.

    ஆஸுகவி என்பது, மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் பாட்டைப் படிக்கையில் வேறு அர்த்தங்களைப் புகட்டும்.

    உதாரணமாக சொல்வதானால் லக்ஷ்மி சகஸ்ரம் எழுதிய அரசாணிப்பாளை வேங்கடாத்ரி என்ற கவி,  தமது நூல் ஒன்றை மேலிருந்து கீழாகப் படித்தால் ராமாயணத்தையும், கீழிருந்து மேலாகப் படித்தால் மகாபாரதம் படிப்பது போன்றும் அருளியிருப்பார்.

    இதைப் போலவே ஸ்வாமி தேசிகன் ஒரு செய்யுளின் இடையில்,  'காது பாஸ்ய ஸதாலோக’ என்ற வரியை அமைத்திருப்பார். இதைத் திருப்பிப் படித்தால்… அதாவது ‘காலோ தாஸஸ்ய பாதுகா’ என்று வரும்.இதைப்போன்றே இப்பாதுகா ஸஹஸ்ரத்தில், சம்ஸ்கிருதத்தில் வரையறுக்கப்பட்ட பல நடையுக்திகளைப் பயன்படுத்தி, அதை விஸ்தார கவியாக அழகுபடுத்தியுள்ளார்.

    மேலும், நகைச்சுவை, சிலேடை, ஹாஸ்யம் ஆகியவற்றையும் தமது பல நூல்களில் கையாண் டுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவ்வகையில் இந்த நூலில், ஸ்வாமி நம்மாழ்வாரின் சிறப்பினைச் சிலேடையாக எல்லா ஸ்லோகத்திலும் படைத்துள்ளார்.

    சித்திர வடிவில் வடிக்கப்படுவது சித்ரகவியாகும். திருமங்கை ஆழ்வார் குடந்தை சார்ங்கபாணியைக் குறித்து இப்படியான கவியை அருளியுள்ளார். இதனைச் சார்ங்கனின் திருச்சந்நிதி சுவரில் காணலாம். ஸ்வாமி தேசிகனும், தனது பாதுகா ஸஹஸ்ரத்தில் 30 ஆவது பத்தியான ‘சித்திரப் பத்ததியில்’ யந்திர வடிவில் சதுர தளமாகவும், அஷ்ட தளமாகவும், ஷோடஸ தள வடிவமாகவும், சக்ரபந்தமாகவும் பல வடிவங்களில் ஸ்லோகங்களை அமைத்துள்ளார்.

    தெய்வாம்சம் பொருந்திய இந்த ஸ்லோகங்களை உள்ளச் சுத்தியுடன் பாராயணம் செய்துவந்தால், வேண்டிய பலன்கள் வேண்டியபடி கிடைப்பது நிச்சயம்.
     

  • திருமூலர் பாடிய நடராசரின் ஆனந்த தாண்டவம்!

    ‘தமிழ்ச் சாத்திரம்’ என்று போற்றப்படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் 10-ம் திருமுறையாகத் திகழ்கிறது. ஒன்பது ஆகமங்களைத் தமிழில் சொல்லும் ஞானப் பொக்கிஷம். 3000 ஆண்டுகள் தவத்திலிருந்து, திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடலாக உபதேசித்தது. மாடு மேய்க்கும் பாமரனும் முயன்றால் தெய்வ நிலையைப் பெறலாம் என்பதை உலகுக்கு உணர்த்தவே, மூலன் எனும் பாமரனின் மேனியில்  சுந்தரநாத யோகி புகுந்து, திருமந்திரம் பாடவைத்தார்.

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104). ஆன்மிகத்தின் உச்சநிலையில் இருப்பது உருவமற்ற ஒரே கடவுள். மலையின் அடிப் பகுதியில் ஆயிரம் வழிகள். அதன் உச்சத்தைத் தொடும்போது சிகரம் ஒன்றுதான். நம் எல்லோராலும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்துவிட முடியாது. ஆகவே, கிடைக்கும் வழிகளைப் பிடித்துக்கொண்டு ஏறலாம்.  சிகரத்தை எட்டிவிட்டால், ஞானியாக ஆகலாம். இயலாதவர்கள், வழிபட்டு மேன்மை அடையவே நடராசரை நம்முன் நிறுத்துகிறார் திருமூலர்.

    9-ம் தந்திரம் 8-ம் தலைப்பு ‘திருக் கூத்து தரிசனம்’. இதில் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொன்தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து ஆகிய தலைப்புகளில் – 82  பாடல்களில் நடராசரின் ஆனந்த தாண்டவத்தை பாடியுள்ளார் திருமூலர். இதை முழுதும் படிப்பவருக்கு நடராசர் பேரருள் நிச்சயம் வந்து சேரும்.
    அவற்றில் சில பாடல்கள் இங்கே… 

    விழித்திரை மூடினால்..!

    `ஆதி நடம் செய்தான் என்பார்கள் ஆதர்கள்
    ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்’
    – திருமந்திரம் (2787)

    ஆதிபகவன் சிவன். அவரே ஆதாரமான தெய்வம். பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி ஐந்தொழில்களையும் ஆடல் மூலமாகவே செய்து கொண்டிருக்கிறார்.

    64 மகேசுவர வடிவங்களில் பிரதானமானவர் நடராசர். மனம் ஒன்றி, நடராசரை தரிசிக்க வேண்டும். பிறகு மனதுக்குள் அவர் நடனத்தைக் கொண்டு வந்து, கண்களை மூடி தியானிக்க வேண்டும். மூடிய திரைகள் முன் நடராசர் நடனம் தவத்தில் தெரியும். தியானத்தில் – விழித்திரைக்குள் நடன தரிசனம் காணும் முறையை அற்புதமாகப் பாடுகிறார் திருமூலர்.

    நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
    உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
    பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்த இடம்
    சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேன் (தி.மந்.-2770)

    பொதுவாக மேடைகளில் திரை விலகினால் நடனம் தெரியும். சிவ தியானத்திலோ, விழித்திரை கள் மூடினால் புருவ நடுவே சிவப் பேரொளி தோன்றும்; சிவானந்த தாண்டவம் தெரியும்.

    பாதச் சிலம்பொலி கேட்கும்!

    பரமனின் பரமானந்தத் திருநடனம் புலப்படுவது மட்டுமா? பரமனின் பாதச் சிலம்போசையும் நம் காதுகளில் கேட்குமாம்!

    ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
    பாடிய பாட்டும் பலவான நட்டமும்
    கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
    தேடி உளே கண்டு தீர்ந்தது அற்றவாறே

    நடராசரின் நடனச் சிலம்போசையைத் தினமும் கேட்டவர் சேரமான் பெருமாள் நாயனார். அப்படியான பாக்கியம் நமக்கும் வாய்க்கும் என்று இந்தப் பாடல் மூலம் சொல்கிறார் திருமூலர்.

    மரணத்தை வென்ற ரகசியம்!

    ஒருமுறை அந்த ஆனந்த தரிசனத்தைப் பெற்றவர், எப்போதும் அதை மறக்கமாட்டார். நடன தரிசனம் கண்டவர்கள், அதையே நினைத்து நினைத்து ஆனந்தப் பரவசத்தில் களித்திருப்பார்களாம்.

    புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறுமாப்போல்
    களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
    அளிக்கும் அருள்கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
    ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே
    – திருமந்திரம் 2778

    அதாவது, புளியங்காயைத் தின்றால் புளிக்கும். மறுமுறை அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சுவை மனதில் எழும். தானாகவே, வாயில் உமிழ் நீர் சுரக்கும். அதேபோல், நடராசப் பெருமானின் தாண்டவத்தைக் கண்டவருக்கு, அதை நினைக்கும்போ தெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பொங்கிப் பெருகுமாம். சரி, இதனால் என்ன பயன்?

    மரணத்தையே வெல்லலாம் என்கிறார் திருமூலர்.

    தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
    ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே – திருமந்திரம் 74

    ஆம்! திருமூலர் தனது 3000 வயது மர்மத்தை இங்கே விடுவிக்கிறார்!

    மறைப்பொருள் தத்துவம்

    யோக நிலைக்குச் சென்ற ஞானிகள் பேசமாட்டார்கள். ஞானம் என்பதை, ஒளவையார் கொன்றைவேந்தனில் ‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்று பாடியிருக்கிறார்.

    தான் பெருமுயற்சியால் பெற்ற ஞானத்தை மோனத்தால் மறைத்து, தனக்குள் வைத்துக்கொள்பவர் சுயநலவாதி. ஆனால் நமக்காகத் திருமூலர் தன் மோனத்தை கலைத்து, ஞானத்தை ‘திரு மந்திரத்தில்’ உபதேசித்த பொதுநலவாதி.

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    வான் பற்றி நின்ற ‘மறைப்பொருள்’ சொல்லிடின்
    ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
    தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
    – திருமந்திரம் 85

     அணுவுக்கு அணுவாக நின்று ஆடும் நடராசரை மனதுக்குள் தியானித்து அருள் பெறுவோம்!

  • புத்தாண்டு 2025: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

    பரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 26 ஆம்  தேதி மண்டல பூஜை நடைபெற்று முடிந்தது. மண்டல சீசனில் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். நடப்பு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவின் படி தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மண்டல பூஜை நாட்கள் நெருங்க, நெருங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு மூலம் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடந்த மண்டல சீசனில் ஒரே நாளில் அதிகப்படியாக 1 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் வரை சிரமம் இன்றி ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

    இந்தநிலையில் மகரவிளக்கு சீசன் தொடங்கியதையடுத்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து ஐயப்ப சாமியை தரிசித்து வருகின்றனர். 

    மகர விளக்கு பூஜை வருகிற 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், உடனடி தரிசன முன்பதிவின்படி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கு ஏதுவாக பம்பையில் உடனடி தரிசன முன்பதிவுக்கான கவுண்ட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

  • புத்தாண்டு: தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

    2025  புத்தாண்டை வரவேற்று தமிழகம்  முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.  

    2025 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவில் உள்படதமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   

    மேலும் திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.  

    கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அருகம்புல் மாலை, 108 தேங்காய்களால் ஆன மாலை மற்றும் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார்  5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

    அதேபோன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதேபோல், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். டெல்லியின் ஜந்தேவாலன் கிருஷ்ணர் கோயில், பிர்லா மந்திர், சத்தார்பூர் துர்க்கை கோயில், ஹனுமன் கோயில், கல்காஜி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அயோத்தியில் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சரயு நதியில் நீராடி சூரியனுக்கு தீபம் காட்டி, பின்னர் ராமர் கோயில் சென்று வழிபாடு மேற்கொண்டனர். உத்தராகண்ட்டின் ஹரித்வார் நகரில் அதிகாலை முதலே பக்தர்கள் கங்கையில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர். ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள குவாஜா கரீப் நவாஸ் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து தீபம், ஊதுபத்தி ஆகியவற்றைக் காட்டி வழிபாடு மேற்கொண்டனர்.

    ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.  
     

  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்: கோலாகலமாக தொடங்கிய பகல்பத்து உற்சவம்!

    108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார். மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம், திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல்
    பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.

    இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10 ஆவது நாள் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10 ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள்  வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.

    அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.  

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 10 ஆம் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
    ராப்பத்து ஏழாம் திரு நாளான 16 ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 17 ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19 ஆம் தேதி தீர்த்தவாரியும், 20 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடையும்.