Author: cmsadmin

  • திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர்….

    பொன்னேரி அருகே உள்ள திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் தினமும் வலம் வந்தனர்.
    விழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    பின்னர், உற்சவ மூர்த்தியான திருப்பாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில், நிலையை அடைந்தது. இதில், திருப்பாலைவனம், அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • ராஜகோபால சுவாமி கோவிலில் கருடசேவை

    பங்குனி திருவிழாவையொட்டி பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கருட சேவை நடந்தது. பாளையங்கோட்டையில் அழகிய வேதநாராயணர், அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. இரவில் சிம்மம், ஆதிகேசவன், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது.
    5-ம் திருவிழா நாளன்று சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவில் சுவாமி ராஜகோபாலன், அழகிய மன்னார் சுவாமிகள் இரட்டை கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது.
    சுவாமிகள் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 10-ந் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு தவழ்ந்த கோலத்தில் கிருஷ்ணர் வீதி உலா நடக்கிறது. 11-ந் தேதி காலை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.

  • திருமலையில் ராமர் பட்டாபிஷேகம்

    திருமலையில் ராமநவமியை தொடர்ந்து ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
    திருமலையில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமிக்கு மறுநாள் தேவஸ்தானம் ராமர் பட்டாபிஷேக வைபவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை இரவு ஏழுமலையான் கோயிலுக்குள் ராமருக்கு ஆஸ்தானம் நடைபெற்றது. இதேபோல் வியாழக்கிழமை இரவு ஏழுமலையான் கோயில் தங்க வாசல் அருகில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமரை எழுந்தருளச் செய்து, அர்ச்சகர்கள் ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடத்தினர்.

  • கோதண்டராமர் கோயிலில் சீதா திருக்கல்யாணம்

    திருப்பதி கோதண்டராமர் கோயிலில் சீதா திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
    ஸ்ரீராமநவமியை ஒட்டி வியாழக்கிழமை மாலை ராமருக்கும், சீதைக்கும் திருமலை ஜீயர்கள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
    சீதா திருக்கல்யாணத்தின் போது அரிசிக்கு பதிலாக முத்துகளால் ஆன சேஷம் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
    இதற்காக தேவஸ்தான அலுவலகத்திலிருந்து வெண்மையான முத்துகளை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், தன் தலையில் சுமந்தபடி கொண்டு வந்து, அர்ச்சகரிடம் அளித்தார். அந்த முத்துகளை யானை மேல் வைத்து கோதண்டராமர் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அப்போது, வழிநெடுகளிலும் பக்தர்கள் அதற்கு கற்பூர ஆரத்தி காண்பித்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விசு திருவிழா….

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்துக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஏப்ரல் 8-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 9-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. 11-ந் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
    12-ந் தேதி (புதன்கிழமை) சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது.

  • ஏகாம்பரநாதர் கோயிலில் தேரோட்டம்

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சூரிய பிரபை, சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    விழாவில் செவ்வாய்க்கிழமை 63 நாயன்மார்களுடன் ஏகாம்பரநாதர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து ஏலவார் குழலி அம்மன் திருவீதி உலா, வெள்ளித் தேர் பவனி, திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரினண்த்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடு

    சித்திரை திருவிழாவையொட்டி அடுத்த மே மாதம் 8 ஆம் தேதி அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழாவாகும். இந்த திருவிழா மே மாதம் 6-ந் தேதி அழகர்கோவிலில் தொடங்குகிறது. 7-ந் தேதி கோவிலிலேயே சாமி புறப்பாடு நடைபெறும். 8-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
    அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து அழகரை வணங்கி வழியனுப்பி வைக்கின்றனர். அதன்பின்பு மதுரை வரும் வழியில் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    9-ந் தேதி அதிகாலையில் மூன்றுமாவடி, புதூர் பகுதிகளில் பக்தர்கள் எதிர்சேவை செய்து அழகரை வரவேற்பார்கள். அன்று இரவு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோவிலில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் அங்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிகொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை சாத்துபடி செய்யப்படுகிறது.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    இதன்பின்பு அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகபெருமாள் கோவிலுக்கு போய் இரவு அங்கு எழுந்தருளுகிறார். 11-ந் தேதி அங்கிருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். பின்னர், கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    12-ந் தேதி அதிகாலையில் மோகனவதாரத்திலும், பிற்பகல் ராஜாங்க திருக்கோலத்திலும் கள்ளழகர் அனந்தராய பல்லக்கில் காட்சி தருகிறார். அன்று இரவு பூப்பல்லக்கு திருவிழா நடக்கிறது. 13-ந் தேதி அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து பிரியாவிடைபெற்று கள்ளழகர் திருமலை நோக்கி புறப்பட்டு செல்கிறார்.
    அன்று இரவு மறவர் மண்டபம், அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி காட்சி தருகிறார். 14-ந் தேதி காலையில் கள்ளழகர், அழகர்கோவில் சென்று இருப்பிடம் சேருகிறார். 

  • சபரிமலையில் புதிய கொடிமரபீடம்….

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செய்யப்பட்ட புதிய கொடி கொடிமரபீடம் செங்கனூர் சதாசிவம் ஆசாரி சிற்பக் கூடத்திலிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உள்ள கொடிமரம் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தேவ பிரசன்னம் மூலம் புதிய தங்க கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    இதற்காக பத்தனம் திட்டை வனப்பகுதியில் இருந்து கொடிமரம் அமைப்பதற்கான மரத்தடி வெட்டி எடுத்துவரப்பட்டது. பம்பையில் மூலிகை தொட்டியில் மூழ்கடித்து வைக்கப்பட்டிருந்த அந்த மரத்தடியை தங்க தகடுகள் பதித்து தற்போது கொடிமரமாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி புதிய தங்க கொடி மரம் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    தங்க கொடிமரத்திற்கான பீடம் அமைக்க தஞ்சை மாவட்டத்தில் இருந்து பெரிய பாறாங்கல் பத்தனம் திட்டா அருகே உள்ள செங்கனூர் சதாசிவம் ஆசாரி சிற்பக் கூடத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அழகிய வேலைபாடுகளுடன் கொடி மர பீடம் தயாரானது.
    இந்த கொடிமர பீடம் அங்கிருந்து இன்று காலை சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு புனிதநீர் தெளித்து பூஜை செய்தபிறகு கொடி மர பீடம் ஊர்வலம் தொடங் கியது.
    இன்று மாலை பம்பை கணபதி கோவிலை இந்த பீடம் சென்றடையும். அங்கு விசே‌ஷ பூஜைகளுக்கு பிறகு அந்த பீடம் சபரிமலை சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

  • திருப்பதியில் வருடாந்திர வசந்தோற்சவம் தொடக்கம்

    திருப்பதியில் வருடாந்திர வசந்தோற்சவம் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
    வசந்தகாலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் காலத்தில், கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்க, திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வரும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து, பலவித பழரசங்களாலும், மூலிகை கலந்த வெந்நீராலும் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
    வசந்தோற்சவம் நடைபெறும் 3 நாள்களும் திருமலையில் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • அர்சுனன் தபசு மரம் ஏறுதல் விழா

    ராணிப்பேட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, அர்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது .
    வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மருதம்பாக்கம் மதுரா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் நிகழாண்டு அக்னி வசந்த விழா மார்ச் 13-ஆம் தேதி சிகாரக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தொடர்ந்து 18 நாள்கள் மகாபாரதச் சொற்பொழிவும்,
    11 நாள்கள் கட்டைக் கூத்து நாடகமும் நடைபெற்று வருகின்றன.
    விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை திருவலம் சர்வமங்களா பீடம் சாந்தா சுவாமிகள் பங்கேற்று அக்னி வசந்த விழா நடத்துவதன் நோக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து, அர்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.