Author: cmsadmin

  • நாத்திகருக்கும் நல்லாசி வழங்கிய காஞ்சி மாமுனி

     

     

    உலகம் தோன்றிய காலம் தொட்டே ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையே முரண்கள் நிலவி வருகிறது . கடவுள் உண்டு என்று சொல்வோரும் , இல்லை என்று சொல்வோருக்கும் இடையே பெரிய வேற்றுமை எதுவும் இல்லை .. இன்னும் சொல்ல போனால் ஆத்திகரை விட நாத்திகம் பேசும் மக்கள் தான் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள்  . வளர்ந்து வரும் விஞ்ஞானம் மெய் ஞானத்தை மறைக்கப் பார்க்கலாம் . ஆனால் முடிவில் அஞ்ஞானம் என்னும் மேகத்தை விலக்கிக்கொண்டு மெய்ஞான சூரியன்  வெளிப்பட்டே ஆகும் . அதற்கு ஒரு உதாரணம் தான்  கீழ் வரும் சம்பவம் .  தன்னை எட்டி உதைக்கும் சிசுவுக்கும் அமுதூட்டுபவள் தானே அன்னை . மஹா பெரியவா அவர்களும் தன்னை தூஷித்த நாத்திகரை ஆன்மீகப் பாதைக்கு வழி நடத்திய சம்பவத்தைப் பார்க்கலாம் .

     ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக சாண்டோ சின்னப்ப தேவரும், கண்ணதாசனும்  காரில் போய்க்கொண்டிருந்தார்கள் . அப்போது  ஏற்பட்ட மிகமோசமான விபத்தில்  சின்னப்பதேவர் சிறு காயங்களுடன்  தப்பித்துக் கொண்டார் .  ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

    காஞ்சிப்பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர்  தேவர் . சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘ விபத்து நேர்ந்துவிட்டது’ என்று தான் சொன்னார் . அவர் சொல்லாமலேயே , அடுத்த நிமிடம்  ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும்பெரியவர்  கேட்க, வாயடைத்துப் போனார் தேவர்.  கண் கலங்க “அவர் படுகாயத்துடன் நினை வில்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

    தேவரின் கவலையை உணர்ந்தபெரியவர், ‘சரி, கவலைப்படாதே… இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவுபோடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்துமடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரின்  பேச்சை மறுக்க துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

    தேவர் பெரியவர் சொல்லியும் அவ்வளவு  தயங்கியதற்கு காரணம், கண்ணதாசன், நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் மேடைகளில்  மிகவும்  தரைக்குறைவாகப் பேசிவந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒருவாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையிலேயே மடாதிபதிகளை இழிவு படுத்திப் பேசியிருந்தார்.

    எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக்கொடுப்பது என்பது தான் தேவரின் பெரிய தயக்கமாயிருந்தது. ஆனால்  த்ரிகாலமும் உணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவர் சொல்லாமலேயே அவரின்  மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பதுபோல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது.

    இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

    வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

    தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச்சென்று  நினைவிழந்துபடுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின்கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன், நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ  என்பதைப் பற்றியே இருந்தது .

    மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண்விழித்திருந்தார். தேவரை பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

    நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில்  அப்படியே இருக்க, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்னவிபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப்பார்க்க, வேறு வழியின்றி கடவுள் மேல் பாரத்தைப் போட்டு ,வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளை கண்ணீர் நிறைத்தது .

     ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம் தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம், ஒருவேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட் டிற்குச் செல்லமாட்டேன். இப்பாவியிடம் கருணை வைத்த அந்த மகானிடம் முதலில் என்னை  தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மன முருகி வேண்டினார்.

    அர்த்தமுள்ள இந்துமதம் உதயமான தருணம்                                                                           

    சொன்னது போல் கண்ணதாசன்  காஞ்சி மாமுனிவரை சந்தித்து  அவரிடம் தனது பாவத்திற்கான மன்னிப்பையும் வேண்டிகொண்டார் . அச்சமயம் மனதில் உத்தித்த கவிதையை சமர்ப்பித் தார் . அக் கவிதை இதோ :

    பார்த்த மாத்திரத்தில்                                       

    பாவத்தை அலம்புகின்ற

    தீர்த்தப் பெருக்கு,

    திருவாசகத்தின் உட்கருத்து

    கூர்த்த மதியால் மெய்ஞானக்

    கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்

    கலிமொய்க்கும் இவ்வுலகைக்

    காக்கவந்த கண்கண்ட தெய்வம்

    எம்மதத்தோரும் சம்மதத்துடன்

    தம்மதத் தலைவனென தொழுதேத்தும்

    தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

     

    கவிதை வரிகளைக்கண்ட பெரியவர், கண்ணதாசனை கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறியதோடு ‘அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று  ஆசீர்வதித்தார் . அக்கணமே கண்ணதாசனின் மனதில் தோன்றியது தான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ . கண்ணதாசனின் ஆன்மீக சிந்தனையில் முளைத்த செந்தாமரை  .

  • அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை

    அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

    பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்.

    அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.

  • செல்வம் அருளும் அட்சய திருதியை

    சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, ‘அட்சய திருதியை’ எனப்படுகிறது. ‘அட்சயம்’ என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.
    வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில்தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான். தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.

  • திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் ….

    சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதற்காக வருகிற 29-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 30-ந்தேதி காலை மிதுன லக்கனத்தில் தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்குகிறது.

    இதில் மே மாதம் 4-ந்தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் செட்டிப்பெண் மருத்துவம் என்ற ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுகபிரசவ மருந்து, பீஜாதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும். குழந்தை தொட்டிலில் இடும்விழா காலை விழாவாகவும், மாலை விழா அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி தெரு அடைச்சான் விழாவாக நடைபெற உள்ளது. இதில் 6-ம் நாளான 5-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக அம்மன் காலையில் நந்தவன திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், திருக்கல்யாண உற்சவத்தில் மாலை மாற்றுதல் வைபவம் ஆகியவையும் நடைபெறும். பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 11 மணிக்கு திரு நாண் பூட்டுதல் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலிசரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படும். இதில் 9-ம் நாளான 8-ந்தேதி காலை 6 மணிக்கு சாமி புறப்பாடு செய்யப்பட்டு தேர் நிலைக்கு விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் ஒரு தேரிலும், சுவாமி அம்பாள் சோமாஸ் கந்தராக சுவாமி தேரிலும், அம்பாள் தனியாக அம்மன் தேரிலும் காலை 6 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

  • நெல்லையப்பர் கோவிலில் குபேர மகாலட்சுமி சிறப்பு யாகம்

    பிரசித்தி பெற்ற குபேரலிங்கம் சன்னதி உள்ள 3 கோவில்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் அட்சயதிருதியையொட்டி குபேர மகாலட்சுமி சிறப்பு யாகம் ஏப்ரல் 29-ந் தேதி நடக்கிறது. குபேரலிங்கம் சன்னதி உள்ள 3 கோவில்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற தலம் இதுவாகும். நெல்லையப்பர் கோவிலில் சுவாமி சன்னதி உள்பிரகாரத்தில் குபேரலிங்கம் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் அட்சயதிருதியையொட்டி 29-ந் தேதி காலை 6 மணிக்கு பக்தர்களுக்காக சிறப்பு குபேர லட்சுமி ஹோமமும், காலை 9 மணிக்கு சிறப்பு குபேர மகாலட்சுமி சிறப்பு யாகமும் நடக்கிறது. தொடர்ந்து குபேரலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.

  • திருப்பதியில் நன்கொடை திட்டத்தின் கீழ் வாடகை அறைகள்….

    திருப்பதியில் உள்ள வாடகை அறைகளை காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருமலை அறங்காவலர் குழுவின் இறுதிக் கூட்டம் அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதில், வரும் மே மாதம் 20 முதல் 26-ஆம் தேதி வரை ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மாவட்டத்துக்கு ஆயிரம் மாணாக்கர்களை தேர்ந்தெடுத்து தேவஸ்தானம் சார்பில் சுபப்ரதம் வகுப்புகள் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கு கொள்ளும் மாணாக்கர்களுக்கு ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் வகுப்புகள், தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் புதிய காத்திருப்பு வளாகம் கட்ட ரூ. 2.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதம் நடத்திய தலைமுடி விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ. 5.27 கோடி வருமானம் கிடைத்தது.
    தேவஸ்தான காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ், திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வறையில் உள்ள ஓர் அறைக்கு ரூ. 15 லட்சமும், விஷ்ணு நிவாசத்தில் உள்ள ஓர் அறைக்கு ரூ. 10 லட்சமும், சூட் அறைகளுக்கு ரூ. 18 லட்சமும் என நன்கொடை பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு பக்தர்கள் தேவஸ்தானத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மத்திய அரசு உதவியுடன் திருப்பதியில் அறிவியல் அருங்காட்சியகம் ஏற்படுத்த 19 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது.
    திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு வெள்ளியினால் ஆன புதிய சிம்ம வாகனம் தயாரிக்க ரூ. 72 லட்சமும், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பொன்விழா வளைவு அருகில் ஏழுமலையான் கோயில் கட்ட ரூ. 29 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வார்த்தைகளுக்குள் வசப்படாத சாயி மகத்துவம்

    சீரடி சாய்பாபாவின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளாலோ அல்லது எழுத்துக்களாலோ  சிறப்பாக சொல்லி விட முடியும் என்று தோன்றவில்லை . கடலை கைகளால் அள்ளி விட முடியுமா? ஆம் அப்படி ஒரு மகத்தான உணர்வு தான் சாய் பாபாவின் சரிதத்தை சொல்லுவது  . எங்கும் நிறை பேரறிவான அவரின் அருகாமையை  அவரின் பக்தர்களால் மட்டுமே   நன்றாக உணர முடியும்  .  சாய் பாபாவின் கருணை வெளிச்சம் ஒருவர் மீது பட்டால் மட்டுமே அவரை மனத்தால் வரிக்கவோ அல்லது அவரின் நாமத்தை ஜெபித்திடவோ  முடியும். பூர்வ ஜென்ம புண்ணிய பலன் காரணமாக மட்டுமே சாயி நாமத்தை ஒருவரால் சொல்ல முடியும் . அவரைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு கடினமானதா என்ன …..? இல்லை ,  அதற்காக கடின யோகா பயிற்சியோ , மூச்சை அடக்கும் வித்தையையோ தெரிந்திருக்க வேண்டாம் .  அவரிடம் பொறுமையும் நம்பிக்கையும்  இருந்தால் மட்டும் போதும் . அவருக்காக  பொறுமையோடு காத்திருந்தவர்கள்  தங்கள் வாழ் நாளில் பெற்ற புண்ணியங்கள் ஏராளம். அது இந்த பிறவிக்கும் இனி தொடர இருக்கும் ஏழேழு பிறவிக்குமான  பலன்கள்  தரும் . நம்பிக்கையோடு அவர் முன் நம் தலை தாழ்ந்தால் ,இந்த ஜென்மம் ஈடேற சாயி  நமக்கு துணையாக நிற்பார் என்பதில் ஏதேனும் ஐயம் இருக்க முடியுமா ?

     

    பாபாவின்  யோக நிலை

     

    பாபாவின் தெய்வீக தன்மையை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்கள் ஆனார்கள் . சத்குருவான பாபா  மக்கள் மனதில் தெய்வமாகவும் , குருவாகவும் உயர்ந்து நின்றார் . இருப்பினும்  அவர் சமாதி நிலை அடையும் வரை ஒரு  யோகியைப் போலவே தான் வாழ்ந்து வந்தார் .  அன்றாடம் தனது உணவுக்காக  பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். அவரது பாதம் பட்ட தெருக்கள் புண்ணியம் செய்தன . அவருக்கு உணவளித்த பெண்கள்   மகா பாக்கியசாலிகள் . உலகிற்கே  தனது கருணையால் பசிப்பிணியை போக்கும் அந்த  மகானின் குரல் கேட்டு அன்னம் அளித்த அன்னையர்கள் ஆசீர்வசிக்கப் பட்டவர்கள்  அல்லவா .  தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார்.  பாபா  பசியோடு தன்னை நாடி வந்தவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பியதே இல்லை  .  எத்தனை பக்தர்கள் தன்னை நாடி வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா. இதனால் அந்த கருணாமூர்தியை தேடி தாய்ப் பசுவை தேடி செல்லும் கன்றுக்களை போல் மக்கள் சீரடியை நோக்கி வரத் தொடங்கினர் .

    பாபாவிற்கு பகவத் கீதையும்   தெரியும் …குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும்  அறிவார் . இரண்டிலும் உள்ள  சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து  தேர்ந்த பண்டிதர்களைக் கூட  ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் . பாபாவிற்கு எம்மதமும் சம்மதம் .

     

    நீரிலே விளக்கேற்றிய  அற்புதம்

     

    பாபா தான்  எப்போது தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம் .  அந்த விளக்குகளுக்கான  எண்ணையை அந்த ஊர் இருந்த இரண்டு  எண்ணெய் வியாபாரிகள் கொடுத்து வந்தனர். ஒருநாள் பாபாவின் சக்தியை  சோதிக்க  நினைத்த அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.அன்று பாபா எவ்வாறு விளக்குகளை ஏற்றப் போகிறார் என்று பார்க்க மசூதிக்கு சென்ற அவர்கள் ஒளிந்துகொண்டு பார்த்தார்கள் . பாபா விளக்குகளில் தண்ணீரை விட்டு திரி போட்டு ஏற்றுவதைப் பார்த்த அவர்கள் வெட்கி தலை குனிந்தார்கள் . பாபா நிகழ்த்திய இந்த அற்புதத்தால்  அவர் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. தினந்தோறும் அவரின் அற்புதங்களைக் காண அந்த சீரடி கிராமம் தயாரானது .

     

    நாமும் அடுத்த பதிவில் இருந்து அவரின் அற்புதங்களை அனுபவிக்க தயாராவோம்

     

     

     

  • தாயுமானவனுக்கே தாயான காரைக்கால் அம்மையார்

    நடராஜர் உலகம் உய்யும் பொருட்டு நாட்டியமாடிய பஞ்ச சபைகளில், முதன்மையான  தலம் என்று போற்றப்படுவது  திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். எப்படி நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, “சிதம்பர ரகசியம்’ என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. அதற்கு ஒரு சுவையான கதையும் உண்டு .  சிவனைத் தரிசிக்க, கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் காரைக்கால் அம்மையார். சிவன் அவரை, “அம்மா!’ என்றழைத்து, “என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்க, அவர், “எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்…’ என்று  கேட்க , அப்படியே  வரத்தை அருளினார் சிவன்.

    அம்மையின் மேல்  ஆதுரம் கொண்ட  எம்பெருமான், அவ்வூர் மன்னன் கனவில் தோன்றி, காரைக்கால் அம்மையார், தன் கோவிலில் தங்கப் போவதால்  தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். தற்போதும், இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதை தான் “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.

     

    இங்குள்ள அம்பாளின்  விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ளதால், சமிசீனாம்பிகை’  என்றும்  அழைக்கப்படுகிறாள் . “சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’  என்று அர்த்தமாம் .

    பங்குனி உத்திரத்தன்றும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்றும் மட்டுமே நகருக்குள் உலா  வரும் நடராஜர்,  பஞ்ச சபைகளில் இங்கு மட்டுமே எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.

    ஒரு முறை காளியுடன் சிவன் போட்டி  போட்டு நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன். இதனடிப்படையில் தான் சிவன் கோவிலாக இருந்தாலும், பெருமாள் கோவில்களைப் போல  இங்கும் தீர்த்தம் தருகின்றனர் என்கிறார்கள் .

     நடராஜரின் நடனத்தைப் பார்த்து அம்பாளே ஆச்சரியப்பட்ட திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் சென்று அற்புத தரிசனம் பெறுவோம் .

    திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.

  • கடலுக்கடியில் சிவாலயம்

    இயற்கை பல அதிசய விநோதங்களைக் கொண்டது .  பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகில் , இயற்கையை மிஞ்சியவர் , விஞ்சியவர் எவருமில்லை . கடல் தன்னுள் எண்ணற்ற அதிசயங்களை உள்ளடக்கியுள்ளது . அத்தகைய அதிசயங்களில் ஒன்று தான் குஜராத் மாநிலம் ,பாவ் நகரில்   இருந்து 30 கி மீ  தொலைவில் உள்ள கோலியாக் கடற்கரையில் உள்ள நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் . இங்கு  கடலுக்குள் உலகப் புகழ்ப் பெற்ற  நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் உள்ளது . இங்குள்ள சிவனை தரிசிக்க கடல் நீர் விலகி வழிவிடும் அதிசயத்தை காணலாம் .  இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. இங்குள்ள நிஷ்களங்கேஷ்வரரை  பாண்டவர்கள் வழிபட்டதன் அடையாளமாக , இந்த சிவாலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளதை காண முடியும் .

     

    இருபது முதல் முப்பதடி உயரம் உள்ள  இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் இதுவரை வீசிய எந்த புயல்களினாலும்  சேதமடையாமல் இன்றளவும் கம்பீரமாக நிற்பது சிறப்பு . தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டமானது  இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.அந்த அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்து காணப்படும் நிலையில் , பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரை திரும்பும் அதிசயத்தை காணலாம் .

    குஜராத்தின் பாவ் நகரின் அருகில்  இருந்து 30 கி மீ  தொலைவில் உள்ள கோலியாக் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது .

     

  • ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா….

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவில் நேற்று நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். ஏப்ரல் 25 ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 7-ம் திருநாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றார்.

    8-ம் திருநாளான இன்று(திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 8.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்கிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

    பின்னர் 5 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறு கிறது.