Author: cmsadmin

  • மகாபெரியவா கருணையினால் காணாமல் போன வலி

     

    காஞ்சி கருணை மகாபெரியவா , தனது அடியார்கள் மீது கருணை மழை பொழிவதில் அற்புதர். இன்றைக்கும் தனது அடியார்கள் மீது கருணை பொழிந்து கண்ணின் இமையைப் போல காத்து ரட்சிக்கிறார் காஞ்சி கருணை தெய்வம் . பக்தர்கள் வாழ்வில் மகான்  செய்த அற்புதங்கள் ஆயிரமாயிரம்.  இரு பக்தர்கள் உள்ளம் குளிர்ந்த ஒரு சம்பவத்தை இங்கு அறிந்து கொள்வோம்…

     பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட பக்தர் ஒருவர் மாசத்துக்கு ஒருதரமாவது பெரியவாளை தரிசனம் பண்ண வந்துடுவார். சொந்த ஊர்ல வேலை பார்த்து கொண்டு இருந்த அவரை சென்னைக்குப் பக்கத்துல வேலை மாத்தல் பண்ணி உத்தரவு வந்தது . பட்டணம் வந்ததும் வாங்கின சம்பளத்துல செலவெல்லாம்போக மிச்சம் பார்த்த அவருக்கு இங்கே கைக்கு வாங்கறது வாய்க்கும் வயத்துக்குமே சரியா இருந்தது.

     மாசத்துக்கு ஒருதரம் பெரியவாளை தரிசனம் பண்ணினவர் ஆறேழு மாசத்துக்கு ஒருதரம்கூட வரமுடியலை. பொருளாதார நிலைமை ரொம்ப குறைந்து  கொண்டே போனது .ஒருநாள் காதில்  போட்டு கொண்டு இருந்த கடுக்கனையும் கழட்டி விற்கிற நிலைமை வந்தது . அப்ப ரொம்பவே மனசு உடைஞ்சு போனவர், பரமாசார்யா படத்துக்கு முன்னால நின்னு, “இப்படி ஒரு நிலை எனக்கு வந்துடுத்தே…பகவானே நீங்க பார்த்துண்டு இருக்கலாமா? பாரம்பரியமா போட்டுண்டு இருக்கிற இந்த கடுக்கன் யாரோ ஒருத்தரோட கைக்குப் போகப்போறதே. இதை மட்டும் விற்க வேண்டாதபடிக்கு என்னோட கஷ்டம் தீர்ந்துதுன்னா, இதை உங்ககிட்டேயே சமர்ப்பிச்சுடறேன்..!”  என்று வேண்டிக் கொண்டார் .

     கொஞ்சநேரத்துக்கெல்லாம், அவர் வேலைபார்த்த இடத்துல இருந்து ஒரு ஆள் வந்து, “சார் முதலாளி ஒங்களை உடனே கூட்டிண்டு வரச்சொன்னார்”.அவரும் உடனே போனார்

     அவர் இடத்துக்குப் போட்ட புது ஆள்,கணக்கெல்லாம் தப்புத்தப்பா எழுதி வைச்சிருக்கானாம். உடனடியா சரி பண்ணியாகணும்,அதனால உங்க பழைய இடத்துக்கே மாற்றியுள்ளேன். பயணப்படி இத்யாதிக்கெல்லாம் பணம் தரச் சொல்லியிருக்கேன் என்றார் முதலாளி .

     பரமாசார்யாளை வேண்டின அடுத்த க்ஷணமே தன்னோடமொத்த கஷ்டமும் தீர்ந்து சந்தோஷத்தோடு மளமளன்னு புறப்பட்டுப் போய் சேர்ந்தார்.

     அப்படியே ஆறேழு மாசம் நகர்ந்தது.பரமாசார்யாளை அவர் பார்க்க வர்றதும் குறைஞ்சுது.ஒரு நாள் திடீர்னு அவருக்கு காதுல லேசா வலிக்க ஆரம்பித்து , பின் பொறுக்கவே முடியாதபடிக்கு வலி அதிகரிச்சு டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நிறைய பரிசோதனை பண்ணிவிட்டு “இது கொஞ்சம் சிவியரா இருக்கும்னு நினைக்கிறேன். அநேகமா ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கலாம். அதனால சென்னைக்குப் போய் பெரிய டாக்டர் யாரையாவது பாருங்கோ”ன்னு சொன்னார் டாக்டர்.

     பதறி அடிச்சுண்டு சென்னைக்கு வந்தவர், பிரபல டாக்டர் ஒருத்தர்கிட்டே காட்டியிருக்கார். அந்த  டாக்டரும் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னுசொல்லிட்டு, “நாளைக்கு கார்த்தால வந்து அட்மிட்ஆகிடுங்கோ..! அப்படி வர்றச்சே கடுக்கனைக் கழட்டி பத்திரமா வைச்சுட்டு வந்துடுங்கோன்னு சொல்லி இருக்கார் டாக்டர். அப்போதான் ஒரு விஷயம் மனசுக்குள்ளே ஞாபகம் வந்திருக்கு.

     

     “அடடா..கஷ்டமெல்லாம் தீர்ந்தா கடுக்கனை சமர்ப்பிக்கறதா வேண்டிண்டோமே. அதை செலுத்தவே இல்லையே.கழட்டறதே கழட்டறோம் கடுக்கனை கையோடு எடுத்துண்டுபோய் ஆசார்யா கிட்டேகுடுத்துட்டு வந்துடுவோம்”னு நினைச்சவர் அவசர அவசரமாக காஞ்சிபுரம் புறப்பட்டுட்டார்.

     

     சில வேதவித்துகள் போகிற வழியில் பெரியவாளை தரிசிக்க மடத்துக்கு வந்தார்கள்.அவர்களுக்கெல்லாம் குங்குமத்தோட ஆளுக்கு ஒரு பழமும் கொடுத்த பெரியவா கொஞ்சம் இளைஞரா இருந்த ஒருத்தரை மட்டும், “நீ கொஞ்ச நேரம் இரு,அப்புறம் போகலாம்!” என்றார். அவர்கள் சேர்ந்து வந்ததனால்,எல்லாரும் மடத்துல ஒரு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தார்கள் .

     

    கொஞ்சநேரம் ஆச்சு. காதுவலி பக்தர் அங்கே வந்தார். தான் வேண்டிண்ட முதல் காது ஆபரேஷன் வரை எல்லாத்தையும் சொல்லி, கடுக்கனை ஒரு மூங்கில் தட்டுல வைச்சு பெரியவாளிடம் வைத்தார்.பெரியவாஒரு ஆரஞ்சு பழம் தோலை உறிச்சு,அந்த பழத்தை பக்தர்கிட்டே குடுத்து வழி அனுப்பினார்.

     

    அடுத்ததா தன் பக்கத்தில் இருந்த ஒருத்தர்கிட்டே “வேத வித்துகள்ல இளைஞரா இருந்தவரை கூப்பிடச் சொன்னார்!” . “என்ன, நேத்திக்கு வேதமந்திரம் சொல்றச்சே இவாள்லாம்காதுல கடுக்கன் போட்டுண்டு இருக்கா. நமக்கு வசதி இல்லாம வேப்பங்குச்சியை செருகிண்டு இருக்கோமேன்னு மனசுக்குள்ளே குறைப்பட்டுண்டியா? இந்த இதை  எடுத்துண்டுபோய் சுத்தி பண்ணிப் போட்டுக்கோ”பக்கத்தில் இருந்த கடுக்கன்களைக் காட்டிச் சொன்னார்.

     எல்லோருக்கும் ஆச்சர்யம்.இளைஞர் கண்ணுலேர்ந்து ஆனந்த கண்ணீர் வழிஞ்சது.இவனுக்கு தரலாம்னு எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சார்? பெரிய ஆச்சரியம்னா, அதைவிட பெரிசா இன்னொண்ணு அடுத்த நாளே ஏற்பட்டது.

     

     ஆபரேஷன் பண்ணிகறதுக்காக ஆஸ்பத்திரிக்குப் போனவர் தன்னோட வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கிறதை உணர்ந்து டாக்டர்கிட்டே சொன்னபோது, எதுக்கும் இன்னொருதரம் செக் பண்ணினடாக்டர்,ஆபரேஷனேவேண்டாம். சாதாரண மருந்துல குணமாகிவிடும்ன சொல்ல, அதே மாதிரி குடுத்த சொட்டு மருந்துல ஒரு வேளைலே அவர் காதுவலி காணாமல் போய் விட்டது .

     காது வலி மட்டுமல்ல பக்தரின் மன வலியும் பறந்தே போய் விட்டது.

     

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஸ்ரீ மகாபெரியவா சரணம்…

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. மதுரை மீனாட்சியம்மன்

    கோயிலின் கிழக்கு கோபுரத்தின் நடுவிலிருந்து மேற்கு கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விசு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நிலையில், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வருகிற மே14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார். 15-ந் தேதி முதல், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, படிபூஜை உள்பட பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

  • முருகன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் வருகை

    மதுரையில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வானை, பவளக் கனிவாய் பெருமாள் ஆகியோர் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண ம் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுப்பதற்காக அருள்மிகு பவளக் கனிவாய் பெருமாளும் கடந்த 6 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது.
    விழாவில் பங்கேற்ற அவர்கள் தினமும் ஆவணி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரிடம் விடைபெறுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தெற்காவணி மூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதியம் சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
    அதேசமயம் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதிகளில் வலம் வந்து, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் இரவு 9 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடைந்தார். சுவாமிகளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது.

  • “என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் ”- சீரடி சாய்பாபா.

     

     “ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.  எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை.  என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் “- இது பகவான்  சீரடி நாதனின் வாக்கு .

     ஒவ்வொரு  நொடிப்பொழுதும் இதை மெய்ப்பிக்கும் வகையில் தன்னுடைய பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்து வருகிறார் பாபா.

     மனித உருவில் பாபா வாழ்ந்த காலத்தில்  தனது பக்தர் ஒருவர்  வாழ்க்கையில் சாயி செய்த அற்புதத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

     

    சீரடியில், காஷிராம் என்றொரு  அடியவர் இருந்தார் . துணி வியாபாரியான அவர்  பாபாவின் மிகத் தீவிர பக்தர். கண் விழித்த நேரம் முதல் , உண்ணும் போதும், உறங்கும்போதும், கடையில் துணி விற்கும்போதும் எந்த நேரமும் பாபாவின்  நினைவிலேயே  காலம் கழித்து வந்தார் . பாபாவை ஸ்மரித்தார்  என்பதை விட பாபாவை உயிர் மூச்சாகவே சுவாசித்தார் அந்த பக்தர். பாபா மனிதவடிவில் வந்துள்ள தெய்வம் என்பதை முழுமையாக நம்பிய அவர் கிடைத்த நேரத்தில் எல்லாம் பாபாவை  தரிசிப்பதில் சந்தோஷம் அடைந்தார் .

     

    அவரைப் பார்க்க செல்லும் போதெல்லாம் , அந்த கடவுளுக்கு நிவேதனப் பொருள் என எதையேனும் பக்தியோடு எடுத்துச்  செல்வது அவரின் வழக்கம் . அப்படித்தான் ஒருமுறை, பாபாவை தரிசிக்க  ஒரு சிறு துணிப்பையில், கொஞ்சம் சர்க்கரையை  எடுத்துக் கொண்டு, புறப்பட்டார்.

     

    வழக்கம் போல் பாபாவின்  நினைவையே தனக்கு  துணையாக கொண்டு அவர் நடந்தபோது, அவரை சில திருடர்கள் தொடர்ந்தார்கள் . துணி வியாபாரி என்பதால் அவர் கையில்இருந்த பையை  பார்த்த அவர்கள், அந்தப் பையில் அன்றைய துணி வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணம் அல்லது  வேறு எதோ விலை உயர்ந்த பொருள் ஒன்றை வைத்திருப்பதாக  நினைத்தார்கள். அந்தப் பையில் இருந்தது வெறும் சர்க்கரைதான் என்பதை  அந்தத் திருடர்கள் அறியவில்லை.

     

    வெறும் சர்க்கரைப் பையையா, இப்படி ஒருவன் மார்போடு சேர்த்து இறுகக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பான்?சந்தேகமில்லாமல் பையில்ஏதோ விலைமதிப்புள்ள பொருள் இருக்கிறது என்று திருடர்கள் தவறாக முடிவு கட்டினார்கள். காஷிராமை முற்றுகையிட்ட அவர்கள்., மிரட்டலுடன் கடுக்கன்களைக் கழற்றித் தரச் சொன்னார்கள்.பயந்துபோன, காஷிராம் உடனே கடுக்கன்களைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பின்னர்,கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைக் கழற்றித் தரச்சொன்னார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கிலியையும் கொடுத்து விட்டார்.

     

    மிச்சம் இருந்த அந்தச் சிறுபையைத் தருமாறு அதட்டினார்கள் . தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை அவர்களிடம் கொடுக்க மனமில்லை  காஷிராமிற்கு அடுத்த கணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு  திருப்பம் நிகழ்ந்தது .

     

    அதே சமயத்தில்,சீரடி மசூதியில் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒரு   ஆச்சரியம் காத்திருந்தது . அத்தனை நேரம் கருணையே வடிவாக தங்களுடன் அமைந்திருந்த  திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றது அவர்களை ஆச்சரியப்படுத்தியது .  ஏன்  பாபா இப்படி திடீரென ஆவேசப்படுகிறார் என்று அவரை சுற்றியிருந்த பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபா தன் கைகளையும், கால்களையும்  காற்றில் யாருடனோ சண்டையிடுவது போல் வீசத்தொடங்கினார். இதெல்லாம் ஏன் , யாருக்காக நடக்கிறது  என்று பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் பாபாவோ மிக கோபத்துடன்  காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோபத்தில் செக்கசெவேலன  சிவக்க ,சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தார் .

     

    அதே நேரம்  அங்கே  கத்தியுடன் இருக்கும் திருடர்கள் முன் நின்றுக் கொண்டிருந்த காஷிராமின் உடல் ஒரு கணம் ஆவேசம் வந்தது போல் குலுங்கியது . தன் ஒரு கையில் பற்றிக் கொண்டிருந்த சர்க்கரைப் பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டு தன் இன்னொரு கை மற்றும்  கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார்.இயல்பிலேயே காஷிராம் ஒற்றைநாடி மனிதர் . அவர் ஒருவரே  பலசாலிகளான . நான்கைந்து திருடர்ககளை புரட்டிப் போட்டதில் திருடர்கள் விக்கித்துப் போனார்கள்.

     

    காஷிராமிடம் இருந்து பிடிங்கிய  கடுக்கன், சங்கிலி எல்லாவற்றையும்அங்கேயே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடலானார்கள்.  அப்படியும் காஷிராம் விடுவதாக இல்லை. மின்னலாக ஓடி, அவர்களை ஒரே  கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

     

    பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு, அவரின் தெய்வத்திற்காக எடுத்துச் சென்ற  நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு மசூதி நோக்கி நடக்கலானார். திருடர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர் பிரமிப்போடும் அவரைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     

    காஷிராம்  மசூதியில் நுழைந்து பாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார். நிவேதனச் சர்க்கரைப் பையை அவரிடம் கொடுத்து,  ஏற்குமாறு வேண்டினார்.அதன் பிறகு  தான் பாபாவின் ஆவேசம் தணிந்து சாந்தியடைந்தார் .

     

     “அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டாயல்லவா?” என்று அமைதியாக, அவர் கேட்டபோது தான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது. பாபாவின் தாமரைப் பூ பாதங்களை நன்றிப் பெருக்கோடு தன்  கண்ணீரால் கழுவினார் . தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எந்த ரூபத்திலும் எந்த இடத்தில் இருந்தாலும் ஓடி வருவார் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா ?

     

     

     

    சாய் சரிதம் தொடரும் ….

  • அருணாசலேஸ்வரர் கோயிலில் மன்மத தகனம்…

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மன்மதனை தகனம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளில் இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அருணாசலேஸ்வரர் எய்த அம்பில் சிக்கிய மன்மதன் கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலானார்.
    இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
    எரிந்த மன்மதனின் சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் திருநீறாக பூசிக் கொண்டனர். இத்துடன், இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.

  • அருணாசலேஸ்வரர் கோயிலில் மன்மத தகனம்…

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மன்மதனை தகனம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளில் இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அருணாசலேஸ்வரர் எய்த அம்பில் சிக்கிய மன்மதன் கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலானார்.
    இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
    எரிந்த மன்மதனின் சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் திருநீறாக பூசிக் கொண்டனர். இத்துடன், இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.

  • பாவ கணக்கை குறைத்து புண்ணிய கணக்கை கூட்டும் சித்திரை பவுர்ணமி வழிபாடு

     

    தமிழ் மாதங்களில் முதலாவதாக போற்றப்படும் சித்திரை மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு .  சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் . படைப்பு கடவுளான பிரம்மதேவன் தான் சித்திரை முதல் நாளை படைத்ததாக நம் புராணங்கள் கூறுகின்றன. மற்ற எல்லா பவுர்ணமிகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த சித்திரை பவுர்ணமியும்  இம்மாதத்தில் வருவதால் இதன் சிறப்பு இன்னும் அதிகமாகிறது . சித்திரை மாதத்தில் பௌர்ணமி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கின்றனர்.

    எல்லா மாதங்களிலும் தான் பவுர்ணமி வருகிறது . அதென்ன சித்திரை மாதத்து பவுர்ணமிக்கு அப்படி ஒரு விசேஷம் ?

    இன்றைய நாளை  சித்திர  குப்தன் பிறந்தநாள் என்றும், இன்னும் சிலர் சித்திர  குப்தனின் திருமண நாள் என்றும் கூறுவர் .  இதன் பின்னணியில் சில புராணக்கதைகள் சொல்லப்படுகிறது .

    இவ்வுலகின் பாவ புண்ணிய  பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்ட ,  சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் , சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.

     

    ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார்.

     

    சித்திர புத்தரைப் பற்றி இன்னும் ஒரு சுவாரசியமான கதையும் சொல்லப்படுகிறது . கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை தான் ஒருவரே மேற்பார்வையிடும் பணி எமதர்மனுக்கு சிரமமாக இருக்கவே ஈசனிடம் சென்று முறையிட்டார் .  ஈசனும் அவருக்கு மனமிரங்கி , அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது பொறுப்பை ஒப்படைத்தார் . எமனின் தந்தையான சூரியபகவானிடம்  பிரம்மன் அச்செயலை ஒப்படைக்கும் பொருட்டு , சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார்.

     

    இதன் காரணமாக சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களாக  ஒருங்கிணைக்க அது ஒரு பெண்ணாக உருமாறியது .  அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பல வண்ண துணியை சாற்றுகிறோம் .

    ஒரு சமயம் சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்ததன் பலனாக , அறிவாற்றலும் எல்லா சித்திகளும்  அவருக்கு கிடைத்தன. வரம் பெற்றவர்கள் வழக்கம் போல் செய்வது போல் சித்திர குப்தரும் தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். இதனால்  பிரம்மா உட்பட தேவர்கள் அனைவரும் அதிர்ந்தனர். இதனை  அவரது தந்தையான சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். என் மகனான நீயும் அதே போல்  மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என்று எடுத்துரைத்தார் .   

    மேலும், தனது மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்று நினைத்த  சூரியன், சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வ பிரம்மாவின்  மகளான கர்ணகி ஆகியோரை  தன் மகனுக்கு திருமணம் செய்வித்தார்.

    சித்திரகுப்தன் பணியினை மறந்து இல்லற வாழ்க்கையில் மூழ்கி தன் கடமை மறந்தார் .  இதனால் மீண்டும் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் மனக் குறையை விளக்கினார். சூரியனும் சித்ரகுப்தருக்கு அவரின்  பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவிபுரிய அனுப்பிவைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

     

    சித்திரை பவுர்ணமி விழா  

     

    சித்திரை பவுர்ணமி விழா  சைவர்களுக்கு மிக முக்கிய விழாவாக கருதப்படுகிறது . இந்த விழாவை  கொண்டாடுவதன்  மூலம் எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தர்,  தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.

    இந்த பூஜை  இன்றளவும்  கிராமப்புறங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது . அன்றைய தினம் வீட்டின் பூஜை  அறையில் சித்திர குப்தன் படியளப்பு எழுதி , கூடவே விநாயகர் படத்தினை வைத்து  அதற்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். மேலும் இவற்றோடு காய்கறி ,பருப்பு மற்றும்  தயிர் கடையும் மத்தினையும் வைக்கின்றார்கள். சித்திர குப்தரிடம் “எங்களில் மலையளவு பாவத்தினைக் கடுகளகாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்” என வேண்டுகின்றனர். இந்நாளில் சித்திர குப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதைக் கிராமத்தில் இன்றும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.இந்த நாளில் கடல், ஆறு, வாயக்கால் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதும் சிறப்பு .

     

    இந்திரன் தன் குருவை அலட்சியம் செய்த பாவம் அகலுவதற்காக மதுரைக்குச் சென்று அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திர விமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தைப் போக்கிக் கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது . ஆண்டுதோறும் தேவேந்திரனே நேரில் வந்து சுந்தரேஸ்வரருக்கு இந்நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அந்தப் புண்ணிய தினத்தில் அன்னதானம் செய்வது மிகச்சிறந்தது என்றும் கூறுவர்.

     

    இவ்வளவு  சிறப்புமிக்க சித்திரகுப்தருக்கு  காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது மக்களிடையே  காலகாலமாக  நிலவி வரும் நம்பிக்கை.

     

    இத்தகைய சிறப்புமிக்க இன்றைய சித்திரை பவுர்ணமி தினத்தில் நாமும் தனங்கள் பல செய்து நமது புண்ணியக் கணக்கில் அதிக வரவினை வைப்போம் . 

  • பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்….

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் அழகர் இன்று இறங்கினார். வைகை ஆற்றில் இறங்கிய அழகரை கைகளில் தீபம் ஏந்தி ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் வான் அதிர்ந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்ரா பெளர்ணமி தினமான இன்று நடைபெற்றது. இதனையொட்டி வைகை ஆற்றில் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசிக்க மதுரையில் திரண்டனர். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா மதுரை மக்களுக்கு இன்னொரு தீபாவளி போன்றது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் அணிந்து வரும் உடையை பொறுத்தே அந்த ஆண்டில் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் ஊகிக்கப்படும். கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு அழகர் பச்சைபட்டுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த அழகருக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர் சேவையுடன் உற்சாக வரவேற்பளித்தனர். வைகையில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்மலையில் இருந்து தங்கப் பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு அழகர் மதுரை புறப்பட்டார்.

    நேற்று அதிகாலை மதுரை மூன்றுமாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவையுடன் அவரை வரவேற்றனர். தொடர்ந்து நேற்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தார். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கிளி பரிவட்டம் உள்ளிட்டவைகள் அணிந்துதான் வைகை ஆற்றில் கள்ளழகர். அதன்படி இரவு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கிளி பரிவட்டம் உள்ளிட்வைகளை உடுத்தி கொண்டு பக்தகோடிகளுக்கு கள்ளழகராக காட்சியளித்தார். முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகளை திருக்கோவிலின் சார்பில் ஸ்தானிகர் பெற்று கொண்டு நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மதுரைக்கு சென்றார். முன்னதாக ஆற்றுக்கு செல்லும் வழியில் அழகர், வெட்டிவேர் சப்பரத்திலும், பின்னர் மைசூர் மண்டபத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் இறங்கினார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.

  • நவ கிரகங்களுக்கான காயத்ரி மந்திரம்

     

    இந்த பிரபஞ்சம் நவ கோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக  நம்பப்படுகிறது . நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்த நவ கோள்களின்  ஆதிக்கமும் முக்கிய காரணிகளாக  நம் முன்னோர் கருதுகின்றனர் . அதனால் தான் அவரவர் ஜாதகத்தில்  ஏற்படக்கூடிய  பலாபலன்களுக்கு ஏற்ப நவகிரக பரிகார ஸ்தலங்களுக்கு  சென்று வழிப்பட  அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

    ஆதித்யன் (சூரியன்)

     

    (கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)

     

     ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

    பாசஹஸ்தாய தீமஹி

    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

     

     சந்திரன்

     

    (ஞானம் வளர)

     

     ஓம் பத்மத்வஜாய வித்மஹே

    ஹேமரூபாய தீமஹி

    தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

     

     

    அங்காரகன்

     

    (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

     

     ஓம் வீரத்வஜாய வித்மஹே

    விக்ன ஹஸ்தாய தீமஹி

    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

     

     புதன்

     

    (படிப்பும், அறிவும் பெற)

     

     ஓம் கஜத்வஜாய வித்மஹே

    சுகஹஸ்தாய தீமஹி

    தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

     

     குரு

     

    (நல்ல மனைவி அமைய)

     

     ஓம் குருதேவாய வித்மஹே

    பரப்ரஹ்மாய தீமஹி

    தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

     

    சுக்கிரன்

     

    (தடைபட்ட திருமணம் நடக்க)

     

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

    தனு ஹஸ்தாய தீமஹி

    தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

     

     சனி பகவான்

     

    (வீடு, மனை வாங்க)

     

     ஓம் காகத்வஜாய வித்மஹே

    கட்கஹஸ்தாய தீமஹி

    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

     

     ராகு

     

    (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)

     

     ஓம் நகத்வஜாய வித்மஹே

    பத்மஹஸ்தாய தீமஹி

    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

     

    கேது

     

    (துஷ்ட சக்திகளை விரட்டிட)

     

    ஓம் அம்வத்வஜாய வித்மஹே

    சூலஹஸ்தாய தீமஹி

    தன்னோ கேது ப்ரசோதயாத்

     

    நமக்கு வரும் வினைகளை முற்றிலும்  தவிர்க்க இயலாத போதிலும் , அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும்  . நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜபிப்பதினால் நற் பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு .