தமிழகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் புரட்டாசி பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து, புரட்டாசி முதல் சனிக்கிழமை உப்பிலியப்பன் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்களில் ஒவ்வொரு நாளின் மாலை நேரத்திலும் வெள்ளிப்பல்லக்கு, யானை வாகனம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாட்டு நிகழ்ச்சியும் ஊர்வலமும் நடக்கும். சுவாமி புறப்பாட்டின் மிக முக்கிய நிகழ்ச்சியே ஒன்பதாவது நாள் தான். அந்த நாளில் சுவாமி கோ ரதத்தில் ஏறி ஊர்வலமாக பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். அப்போது ஊர்வலத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.
Author: cmsadmin
-
ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியை தரும் சுவாசினி பூஜை
நலம் தரும் நவராத்திரி நாட்களில் அன்னைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பூஜை செய்கிறோமோ ,அந்த அளவிற்கு நவராத்திரி பூஜைகளில் மிக மிக முக்கியமானது சுவாசினி பூஜையாகும். சுவாசினி என்பவள் யார்? 50வயதை கடந்த பெண்களைத்தான் சுவாசினி என்பார்கள். அதிலும் குறிப்பாக மாதத்தீட்டு இல்லாதவர்கள்தான் சுவாசினி. இப்படிப்பட்ட பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களை அம்மனாக பாவித்து பூஜை செய்து சிறப்பு செய்வதுதான் சுவாசினி பூஜை எனப்படும்.
சுவாசினி வழிபாடு செய்பவர்கள் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள் என்கிறது தேசி பாகவதம். ஒருமுறை நவராத்திரி வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, லலிதா பரமேஸ்வரியே பக்தர்களின் பூஜைகள் சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்க பூவுலகம் வந்தாள்.
ஏழைப்பெண்ணுருவில் சென்ற தேவியை யாருமே கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். ஆனாலும், வறுமையில் இருந்த ஒரு பெண் மட்டும் பழையசாதமும், பயிறு சுண்டலும் தந்தாள். அதற்கு மறுநாள் கழுத்து நிறைய பொன் ஆபரணங்களை அணிந்தபடி பட்டுப்புடவையோடு சென்றாள் தேவி.
முன் தினம் தனக்கு பழைய சாதம் கொடுத்த ஏழைப்பெண் வீட்டிற்கு சென்றாள். எல்லா பெண்களையும் அழைத்து இறைவழிபாட்டில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் கூடாது. மனிதர்களுக்கு உரிய எட்டு குணங்களை அறிவுருத்தவே எட்டு தினங்களும் வந்து , ஒன்பதாம் நாள் காட்சி தந்து செல்கிறேன் என்று கூறி மறைந்தாள்.
கோலம் போட்ட மனை மீது சுவாசினி பெண்களை அமர செய்ய வேண்டும். அவர்களை அம்பிகையாக பாவித்து அர்ச்சனை செய்து நாமவளிகளை சொல்ல வேண்டும். அனைத்து வகை பூஜைகளும் முடிந்த பிறகு புடவை, ரவிக்கை மற்றும் தாம்பூலம் ஆகியவற்றை சுவாசினிகளுக்கு தானம் கொடுக்க வேண்டும்.
அப்போது இந்த பூஜையை மேற்கொள்ளும் தம்பதிகள் சுவாசினிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகு சுவாசினிகளுக்கு அன்னமிடவேண்டும். இந்த சுவாசினி பூஜையை நவராத்திரி 9 நாட்களில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். சுவாசினிகளுக்கு அணிவிக்கப்படும் மாலையை திருமணமாகாத பெண்கள் வாங்கி அணிந்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
லலிதா விரதமும் சுவாசினி பூஜையும் செய்கிற வீட்டுக்கு விரும்பி வந்து அருள்கிறேன் என்று தேவியே கூறியருளுகிறாள். நவராத்திரி பூஜையில் எல்லாப் பெண்களையும் சமமாகவே கருதி தாம்பூலம், குங்குமம் கொடுத்து சக்தி தேவியாக நினைத்து வணங்குபவர்கள் தேவியின் அருளைப் பெறுவார்கள். அம்பிகையையே சுவாசினியாகச் சொல்லப்பட்டுள்ளது. அம்பாளின் நெற்றியிலே குங்கும திலகமும், வாக்கிலே தாம்பூலம் கமழுவதாக சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் கூறியுள்ளார். பெண்கள் நெற்றியில், மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கைகளில் கண்ணாடி வளையலும், கால்களில் சலங்கையுடன் கூடிய கொலுசும் அணிந்தால்,தேவி மகிழ்வாள். கையில் அணிந்துள்ள கண்ணாடி வளையல் சப்தமும், கால்களில் உள்ள கொலுசின் சலங்கை சப்தமும் கேட்டு, அம்பாள் மகிழ்ந்து, நம் கூடவே இருப்பாள் என்பது நம்பிக்கை.
-
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. கோயிலில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் இந்த பிரமாண்டமாக கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 22 அடி உயரத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமாக கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய பொம்மைகள் முதல் பெரிய பொம்மைகள் வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ளன. 9 தினங்கள் நடக்கும் இந்த நவராத்திரி விழாவில் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் மற்றும் தீபாராதனை நடப்பது வழக்கம். இளம் தலைமுறையினர் புராணங்களை மறந்து வரும் நிலையில், மனிதனின் பரிமாண வளர்ச்சிகளை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கொலு அனைவரையும் பிரமிக்கச் செய்தது.
-
திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு பழனியில் இருந்து மலர்கள்…
பழனியில் இருந்து திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவுக்கு புஷ்ப கைங்கர்ய சபா மூலம் மலர்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. முதல் நாளன்று சம்பங்கி, தாமரை, அரளி, மருகு, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, பட்டுப்பூ, துளசி, தாமரை, வாடாமல்லி என பலவகையான மலர்கள் சுமார் ஆயிரம் கிலோ அனுப்பப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்துக்கு முதல்நாளன்று இங்கிருந்து மலர்கள் அனுப்பப்படும். பிரம்மோற்சவம் நிறைவு பெறும் வரை பூக்கள் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ வரையில் அனுப்பப்படும்.
-
ராமர் அனுஷ்டித்த நவராத்திரி விரதம்
ராமாவதாரத்தில்,வனவாசத்தின் போது, சீதையை ராவணன் கவர்ந்து செல்ல தேடி ராமரும் அவரின் சேனைகளும் அன்னையை நாலாபுறம் தேடிக் கொண்டிருந்தனர். இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே என்றும் அதனை நிறைவேற்ற அன்னை பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்றும் சொல்கிறார் நாரத மாமுனி.
நாரதரின் ஆலோசனைப்படி ,மிகவும் சிரத்தையுடன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் ராமருக்கு,அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை அவருக்கு நினைவுபடுத்தி, ‘ தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் சகோதரன் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்று அருளினாள்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் எண்ணிலடங்காதது.திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்ய சிவ பெருமான் இந்த விரதத்தை கடைப்பிடித்ததாக புராணம் கூறுகிறது. மேலும் விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், இந்த விரதத்தை அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.
நவராத்திரி நாட்களில் கொலுவீற்றிருக்கும் அம்பிகையின் முன் சுண்ணாம்பு மாவினால் ஆன கோலம் போடக்கூடாது.அதற்கு பதில் அரிசி மாவைப் பயன்படுத்த வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும். நவராத்திரி கோலத்தை சுற்றி காவியால் கோடிட்டு போட்டால் ஐஸ்வர்யம் பெருகும்.
நவராத்திரி காலங்களில் காலையில் செய்யப்படும் பூஜை சிவனுக்கும், மாலை இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு உகந்தது. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்து துவங்க வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்தால் அம்பிகையோடு அய்யனின் அருளும் கிடைக்கும். . நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று விரதமிருந்து வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். சப்தமி திதியில், ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது மென்மேலும் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் நிறைவாகும்.
-
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா துவங்கியது….
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூலித்து கோயிலில் வழங்குவர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலை 8 முதல் 9 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மாலை 3 மணி முதல் 6 மணி வரை சமயசொற்பொழிவுகளும், இரவு 8 மணிக்கு கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. 23ம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 24ம் தேதி இரவு மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 25ம் தேதி இரவு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 26ம் தேதி இரவு சிம்மவாகனத்தில் மகிசா சுரமர்த்தினி திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு மகிசாசூரன் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலாவும், 28ம் தேதி இரவு 9 மணிக்கு கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 29ம் தேதி இரவு அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணி மற்றும் அதிகாலை 3.30 மணி வரை கடற்கரை வளாகத்தில் சிறப்பு பக்தி இன்னிசை, இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சிம்மவாகனத்தில் அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசா சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
-
ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி திருவிழா
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா புதன் கிழமை மாலை காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருக்கோயிலின் அம்மன் சந்நிதியில் சிறப்பு அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பர்வதவர்த்தினி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி முதல் நாளில் பர்வதவர்த்தினி அம்மன் அன்னபூரணி திருக்கோலத்தில் காட்சியளித்தார். அம்மனுக்கு அருகில் நூற்றுக்கணக்கான பொம்மைகளைக் கொண்டு நவராத்திரி கொலு திருக்கோயிலின் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. கோயில்கள், பக்தர்களின் இல்லங்களில் கொலுபொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவர்.
-
மூடனாயிருந்த காளிதாசனை மகாகவியாக்கிய சியாமளா தேவி
நம் பாரத திருநாட்டில்,நவராத்திரி நான்கு விதமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி நம் எல்லோர்க்கும் தெரியும். அதேப்போல் ராமநவமி சமயத்தில் பிரதமை திதி முதற்கொண்டு , வடநாட்டில் தேவி உபாசகர்கள் லலிதா நவராத்திரி விழாவை கொண்டாடுவர். ஆடி மாதப் பிரதமை நாள் தொடங்கி வரும் நவராத்திரியை வாராஹி திருவிழாவாகக் கொண்டாடுவர். இவை தவிர நான்காவதாக கொண்டாடப்படும் ஒரு நவராத்திரி விழாவும் உண்டு. அதுதான் சியாமளா நவராத்திரி. இது மாசி மாதப் பிரதமை நாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பான விழாவாகும்.
ஜெகன் மாதா ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையான சியாமளா தேவி, அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில் தான், அறிவு என்னும் அம்பை கட்டுப்படுத்துகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் அடக்கி , அம்பிகையிடம் நம்மை லயிக்கச் செய்ய முடியும்.
தனது மந்திரியான சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே அம்பிகை ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எதையும் செய்வாள். இதனால் சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி,மன இருளை அகற்றி ஞான ஒளியைத் தருபவள்.
தேவியின் ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை உஜ்ஜயினியில் வணங்கியதால் மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருனை மகாகவியாக மாற்றியது. மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால் மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சியாமளா தேவியை தியானிப்பவர்களுக்கு வாக்கு , இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை சித்திக்கும்.
மாதங்கியின் பதினாறு பெயர்களைப் பற்றி பார்ப்போம்.
சங்கீத யோகினி, சியாமா, சியாமளா, மந்த்ர நாபிகா, மந்த்ரிணி, சசிவேசானி, ப்ரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, பிரிய கப்பிரியா, நீபப்பிரியா, கதம்பேசி, கதம்பவன வாசினி, சதாமாதா ஆகியவையாகும்.
மாதங்கி தேவி எட்டு கரங்களை உடையவள். அவளுடைய ஒரு திருக்கரத்தில்உள்ள சம்பா கதிர், உலகியல் இன்பங்களையும், மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர், கலை உள்ளத்தையும்,இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு சக்தியையும்,வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும், இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன. மேற்கண்ட வடிவுடைய தேவியையே காளிதாசனின் சியாமளா தண்டகம் கொண்டாடுகிறது. சியாமளா தண்டகத்தை துதிப்பவர்களுக்கு தேவி பேரருள் புரிகிறாள்.
காஞ்சி காமாட்சி யம்மன் கோவிலில் சியாமளா தேவியின் திருவுருவத்தை காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள் என்பது சான்றோர் நம்பிக்கை. அதனால் தான் அங்கு எண் கை வடிவமும் சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
சியாமளா தேவிக்கு லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி எனப்படும் மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். அவர்களைப் பற்றி காளிதாசனின் சுலோகங்களையும் அதற்கான விளக்கங்களையும் தெரிந்துக்கொள்வோம்.
லகு மாதங்கி
“மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸாம்
மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி.’
மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும்.
வாக்வாதினி
“அமலகமல ஸம்ஸ்தா லேகினி புஸ்தகோத்யத்
கரயுகள ஸரோஜா குந்த மந்த்ரகௌரா
த்ருதசதா கண்டோல்லாஸி கோட்ரபீடா
பவதுபவ பவபயானாம் பங்கின பாரதி ந.’
நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்களைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.
நகுலி
ஞானத்தை அடைந்தால்கூட தவறு செய்வதற்கான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். விஷம் போன்ற அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுபவள் நகுலி. நகுலம் என்றால் கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டு விஷப் பாம்புகள் அஞ்சி விலகு வதைப்போல நகுலியின் அருளால் தவறுகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்பது உட்கருத்து.
சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே. ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன் களைப் பெறலாம்.
எனவே இந்த நவராத்திரி நாட்களில் அன்னை சியாமளாவையும், அவளது மறு உருவான மீனாட்சியம்மனை வணங்கினால் மாணவ மாணவியர் கல்வியில் மேன்மையடைவார்கள்.
-
அறியாமை அகற்றும் லிங்கோத்பவர்
பகவான் மகாவிஷ்ணுவுக்கு பத்து அவதாரங்கள் என்றால் சிவபெருமானின் அவதாரங்களில் 25 முக்கியத்துவம் பெற்றவை.அவற்றுள் முக்கியமான ஒன்று லிங்கோத்பவர். சிவபெருமான் தான் லிங்கம் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தியாக வணங்குகிறோம்.
மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று கேட்டதில் , உருவான வடிவமே லிங்கோத்பவர்.
சிவ பெருமானின் திருவடியை அடியைக் காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் லிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற வரலாற்றை புராணங்கள் சொல்கிறது.
அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தில்ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கிய சிற்பமாக லிங்கோத்பவர் இருக்கிறார்.
இந்த லிங்கோத்பவமூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) பார்க்க முடியும். மும்மூர்த்திகளின் அருளும் ஒரே திருவுருவில் அமைந்துள்ள லிங்கோத்பவரை வழிபட்டு வருவது சிறப்பாகும். லிங்கோத்பவமூர்த்தியை மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.
இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் வாழ்வில் ஏற்படும் கர்வங்களை அழித்து வழிகாட்டும் திருவுருவமாக விளங்கும் லிங்கோத்பவரை வணங்கி அமைதியான வாழ்வை பெறுவோம்.
பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும்
லிங்காஷ்டகம் மந்திரம்
பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் – நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் – குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்.
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் – பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
இந்த லிங்காஷ்டக ஸ்லோகத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.
-
மஹாலட்சுமியின் கடாட்சம் கிடைக்க…
லட்சுமியின் அருள் கிடைக்க அதிகாலையில் வீட்டின் முன்பு சாணம் அல்லது தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். காலை எழுந்தவுடன் பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு வடிவ பொம்மைகளை படுக்கையறையில் வைத்துக் கொண்டு அதன் முகத்தில் விழிக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது. பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழ வகைகள் நைவேத்தியம் செய்து அதை சாப்பிடுவதும் நல்லது. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது மட்டுமல்லாமல், சினத்தை தவிர்ப்பதன் மூலமும் பணத்தைக் கொடுக்கும் லட்சுமியை இல்லத்திற்கு வரவழைத்துக் கொள்ளலாம். திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். இதற்கு காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட்சதை. முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது தான் அட்சதை ஆகும். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். மஞ்சள் அரைத்துத்தடவி பல நோய்கள் குணமாவதை மருத்துவர்கள் எடுத்துரைப்பர். அதற்காக முகத்தில் மஞ்சள்தடவி முன்பு பெண்கள் குளிப்பது வழக்கம். குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த வஸ்திரம் மஞ்சள் நிற ஆடைதான்.