புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, புதன்கிழமை பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு காலை முதல் அருணாசலேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Author: cmsadmin
-
நினைத்தது நிறைவேற பர்வதமலைக்கு செல்லுங்கள்!
நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை நினைக்காமலே முக்தி தருவது பர்வதமலை. பர்வதமலை’ என்றால் மலைகளுக்கெல்லாம் மலை. இம்மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கும் பிரமராம்பிகை அம்மனுக்கும் தினமும் இரவில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது.
கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் திருவண்ணாமலைக்கு வந்தபோது பர்வத மலையில் ஒரு காலை வைத்து மற்றொரு காலை திருவண்ணாமலையில் வைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்த மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. இந்தமலை `கடலாடி’ என்னும் கிராமத்தையும், தென்மாதி மங்கலம் என்னும் கிராமத்தையும்தன் அடிவாரத்தில் கொண்டிருக்கிறது. கம்பீரமான தோற்றம் கொண்ட இம்மலையின் பரப்பளவு 5500 ஏக்கர். மலையின் உயரம் சுமார் 4500 அடிகள். இம்மலையைச் சுற்றிலும் 365 குளங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது.
எனவே இரு வழிகளிலும் மலையேறலாம். இந்த மலையானது, சில கோணங்களில் இருந்து பார்க்கும்போது திரிசூலவடிவில் தெரிவதால், இதனைத் `திரிசூலகிரி’ என்றும் கூறுகின்றனர். இங்கு சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்று கருதப்படுகிறது. இதுதவிர கந்தமலை, அகத்தியமலை, மங்களமலை, நந்தி மலை என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது.
பர்வதமலை மிக உயரமான சிகரத்தை உடையதால், `பர்வதகிரி’ என்றும், இம்மலையில் மிகச்சிறந்த பல அரிய மூலிகைகள் நிறைந்திருப்பதால், `சஞ்சிவிகிரி’ என்றும், ஒரு காலத்தில் அகத்தியரால் இம்மலையில் திரிசூலம், நாட்டப்பட்டதால் `திரிசூலகிரி’ என்றும், பர்வதராஜன் மகளாகிய பார்வதி தேவி இங்கு வந்து தங்கியதால், `பர்வதம்’ எனவும் பெயர் பெற்றிருக்கிறது.
சிலர் இம்மலையை `ஸ்ரீசைலம்’ என்றும் அழைப்பதுண்டு. மகாலட்சுமி திருமாலைத் திருமணம் புரிவதற்காகப் பல இடங்களில் தவம் செய்து அது முடியாமற் போகவே அதன்பின் இப்பர்வதமலையைத் தேர்ந்தெடுத்து, இங்கு வந்து தவம் செய்தார். இதனைக் கண்ட சிவபெருமான், பர்வதமலையில் தவம் செய்யும் மகாலட்சுமியை உடனே திருமணம் செய்து கொள்வாயாக என்று திருமாலுக்கு எடுத்துரைக்க, அதன் பின்னர் திருமகள் திருமணம் மிகவும் சிறப்புடன் நடந்தேறியது.
இதனால் இம்மலைக்குச் சென்று வருபவர்கள் தங்களின் எண்ணம் ஒவ்வொரு முறையும் நிறைவேறுவதை உணர்கின்றனர். இதற்குக் காரணம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியே இங்குத்தவம் செய்ததால் தான். தவம் செய்து அதன் பலனால் மகாலட்சுமியின் எண்ணம் ஈடேறியதால், இம்மலை `மங்களமலை’ என்று அழைக்கப்படுகிறது.
இம்மலையில் உள்ள தெய்வத்துக்கு ஒரு முறை தீபமேற்றி வணங்கினால், வருடத்தில் 365 நாட்களுக்கும் தீபமேற்றி வைத்து வழிபட்ட பலன் கிடைக்கும். பர்வத மலையில் பவுர்ணமியின் பொது சென்று வழிப்பட்டால் அனைத்து விதமான நன்மைகளும் பெறலாம்.
-
சாபவிமோச்சனம் போக்கும் பாடி திருவலிதாயம் …
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்கல் முப்பத்திரண்டாகும். அவற்றில் இருபத்திரண்டாவது தலமாக விளங்குவதும், திரு ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருத்தலமாக விளங்குவதே சென்னையில் ‘‘பாடி‘‘ என அழைக்கப்படும் திருவலிதாயம் ஆகும். திருவலிதாய நாதரையும் தாயம்மையை வழிபடுவோருக்கு தீவிணைகள், துயரம் நீங்கி ஈசனின் திருவடியை வணங்கினால் முக்தி அடைவது நிச்சயம். பரத்வாஜர், மேனகையின் சாபத்தால் கருங்குருவியாக உருமாறினார். அந்த சாபத்தை போக்க சாபவிமோச்சனம் பெறுவதற்காக இங்கு வந்து சிவனை வழிபட்டு சுய உருவம் பெற்றார், குருபகவான் சாபம் நிவர்த்தி செய்ய சிவனை நினைத்து பூஜை செய்து சாப விமோச்சனம் பெற்றார். ஆலங்குடி, திருச்செந்தூர், தென்குடிதிட்டை போன்ற சிவஸ்தலங்களுக்கு இணையான தலம் இது.

சூரியன், ராமர், அனுமன், இந்திரன், வாயு, ஆகியோர் இங்கு வந்து பூஜை செய்து, சிவனை வழிபட்டு சென்றனர். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார், பாம்பன் ஸ்வாமிகள் ஆகியோர் போற்றிப்பாடப்பட்ட திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. கோயிலின் உள்ளே சிவன், அம்மாள், வலம்புரி விநாயகர், சூரியன், நால்வர், அருணகிரிநாதர், பாலமுருகன், கோஷ்ட விநாயகர், தட்சணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், வரசித்தி விநாயகர், முருகன் வள்ளி. தெய்வானை, மகாவிஷ்னு, அனுமன் பூஜித்த லிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர், துர்கை, நடராஜர், பைரவர், நந்தி, பலிபீடம், கொடிமரம், என தனித்தனியே பிரகாரங்கள் உள்ளது. பாடி ஈசன் கோயில் இருபத்திரண்டாவது குருஸ்தலம். சிவன் கற்பறஷ்டக விமானத்தில் அருள்பாலிக்கிறார். சன்னதிக்கு எதிரில் நாககோணம், அஷ்டதிக் பாலர்கள், அஷ்டலஷ்மி, உள்ளது, இதை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. சித்திரை பௌர்ணமியில் 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடக்கும், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், சிவாரத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
-
துளசி ஏன்? பெருமாளுக்கு உகந்தது…
பெருமாளுக்கு உகந்த துளசி திர்த்தம் துளசி இலையின் நுனியில் நான் முகனும்,மத்தியில் திருமாலும்,அடியில் சிவனும்,மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது.பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.
பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது அர்ச்சனைக்காகவும்,அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை முக்கியத்துவம் பெறுகிறது.
பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர்.
துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள்.
கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.
துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.
பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.
நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா! -
வேங்கடநாதன் பரிமளாச்சாரியார் ஆன வரலாறு
ராகவேந்திரரின் வாழ்க்கை மற்றும் அவரின் அற்புதங்களை சொல்லும் இத் தொடரின் சென்ற பதிவுகளின் சுருக்கம்.
திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் திருமலை தெய்வத்தின் கருணையால் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில் ,மிருகசீரிஷ நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.வேங்கடவனிடம் வைத்த வேண்டுதலினால் பிறந்த குழந்தை ஆதலால், குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர். வேங்கடநாதனும் வேதாந்த தர்க்க வியாகரணம், சாஹித்யம் மீமாம்சை முதலிய சாஸ்திரங்களைக் கற்றார். அத்துடன் வீணா கானத்திலும் சிறந்து விளங்கினார்.
மேலும் தன்னுடைய ஞானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன் ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். சாஸ்த்திர ஞானம் ஏற்பட சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர் முன்பு நமஸ்கரித்து நின்ற வேங்கடநாதனை மிக்க மகிழ்ச்சியுடன் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார் சுதீந்திரர்.
ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்’ நியாயசுதா’ என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்த சுதீந்திரர் திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல் பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில் படுத்து உறங்கிவிட்டார்.
நடுஇரவு, குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.
இனி ……
உடல் முழுவதும் பனியில் நடுங்கிக்கொண்டிருக்க ,அந்தக் கொட்டும் பனியில் ஓலைச்சுவடிகளுக்கு மத்தியில் குளிரில் நடுங்கியவாறே உறங்கிக் கொண்டிருந்த வேங்கடநாதனைக் கண்டார் குரு. அவரருகே கிடந்த ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்த சுதீந்திரர் விக்கித்து நின்றார். வகுப்பில் தான் சொல்ல இயலாமல் பாதியில் விட்ட ‘நியாயசுதா’விற்கு அனைவருக்கும் புரியும்படியான ,எளிமையான உரையை வேங்கடநாதன் எழுதியிருந்ததைக் கண்டு உள்ளம் உருகினார் குரு சுதீந்திரர். அதை போற்றும் விதமாக ,தன்னுடைய மேல் அங்கவஸ்த்திரத்தை அவருக்குப் போர்த்திவிட்டு வந்துவிட்டார்.
மறுநாள் கண்விழித்த வேங்கடநாதன் ,குருவின் மேலாடை தன் மீது எப்படிவந்தது என அறியாமல் பதறிப்போனான் . அதை மரியாதையுடன் கைகளில் ஏந்திக் கொண்டு குருவின் முன் நின்றார். வேங்கடநாதனை எதிர்பார்த்துக் காத்திருந்த குரு புன்னகையுடன் அவரை வரவேற்று அன்புடன் ,“வேங்கடநாதா,அரிய நூலுக்கு மிகச் சிறப்பாக விளக்க உரை எழுதியுள்ளாய். இந்த உரைநூலுக்கு ‘சுதா பரிமளா’என்று பெயர் சூட்டுகிறேன். இந்த அரியநூல் எழுதிய உனக்கு ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன்.”என்று அகமகிழ்ந்து கூறி அவருக்கு மந்த்ராக்ஷதை கொடுத்து ஆசீர்வதித்தார்.
சகல சாஸ்திரங்களையும் தன் குருவிடமிருந்து குறைவற கற்றுணர்ந்த வேங்கடநாதன் மீண்டும் புவனகிரிக்கு வந்தார். தம்பிக்கு சரஸ்வதிபாய் என்ற மங்கை நல்லாளை அண்ணன் குருராஜர் திருமணம் செய்து வைத்தார். வேங்கடநாதனும் சரஸ்வதிபாயும் ஆதர்ச தம்பதிகளாக இனிதே இல்லறம் நடத்தி,தக்க காலத்தில் லக்ஷ்மி நாராயணன் என்னும் புதல்வனைப் பெற்றனர். ஆனால் பூர்வ ஜன்ம பலன் வேங்கடநாதனையும் விட்டு வைக்க வில்லை.
மகானின் சரித்திரம் தொடரும்…..
-
நவகிரக தோஷங்களை நீக்கும் சக்கரத்தாழ்வார்…
திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன. சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில். சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது. சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது. மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.
-
கடனில்லா பெரு வாழ்வு தரும் ஐந்து நரசிம்மர்கள்
‘கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற கம்பனின் வரிகள் கடன் சுமைப்பற்றி அழுத்தமாக உணர்த்துகிறது. கடன் , மனிதனை நிம்மதியில்லாமல் அல்லலுறச் செய்கிறது. மனிதர்கள் கடன் சுமை நீங்கி மன நிம்மதி பெற சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து நரசிம்ம ஆலயங்களை தரிசனம் செய்தால் போதும்.
இந்த ஐந்து நரசிம்ம ஆலயங்களின் கதை சுவாரசியமானது
ஐந்து நரசிம்ம பெருமாள் கோயில்களுக்கு எவர் ஒருவர் ஒரே நாளில் சென்று வழிபடுகிறார்களோ அவர்கள் கடன் தொல்லை தீரும். எதிரிகள் தூர விலகி ஓடுவார்கள்.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கும் இந்த கோயில்களுக்கும் உள்ள உறவு முக்கியமானது சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் என்ற ஊரில் பிறந்தவர் திருமங்கை ஆழ்வார். சோழ மன்னர்கள் அரசாண்டு கொண்டு இருந்த காலத்தில் திருக்கறையலூர் பகுதியில் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த பல மக்கள் வசித்து வந்தார்கள். அப்போது நகரை நிர்வகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள். அந்த குழந்தை வளர்ந்து வீரதீர சாகசங்களில் சிறந்து விளங்கியது.
இது குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் நீலரை அழைத்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். தனது திறமையினால் நீலர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள். திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர்.
ஒரு சந்தர்பத்தில் திருமால் திருமங்கை மன்னன் காதில் வேறொரு மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார். அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார். அவர் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை பாடத் துவங்கினார். அதன் பின் அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.
திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள்.
குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள், மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்,திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள், திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்,திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்.
இந்த ஐந்து நரசிம்ம திருக்கோயில்களை தரிசனம் செய்து வாழ்க்கையில் கடன், பகை இல்லாத நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம் ……
-
16 வார்த்தைகளில்_ராமாயணமா!
பிறந்தார்,,,,,,,,,,,,,,,, வளர்ந்தார்
கற்றார்……………….. பெற்றார்
மணந்தார்…………… சிறந்தார்
துறந்தார்…………….. நெகிழ்ந்தார்
இழந்தார் ……………..அலைந்தார்
அழித்தார் …………….செழித்தார்
துறந்தார்…………….. துவண்டார்
ஆண்டார்……………. மீண்டார்விளக்கம்:
1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
8. நெகிழ்ந்தார்:
*அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
*அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.
11.அழித்தார்: இலங்கையை அழித்தது.
12.செழித்தார்:சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது. ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
13.துறந்தார்: அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
13.துவண்டார்: அன்னை சீதையை பிரிய நேர்ந்தது ஸ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் கவலை செய்தது.
15.ஆண்டார்: என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
16.மீண்டார்: பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.
ஜெய்_ஸ்ரீராம். -
திருப்பதியில் விரைவில் முழுநேர இலவச தரிசனம்!
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் முழு நேர இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 23ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்குப் பின் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இலவச தரிசனத்திற்கு நேர ஒதுக்கீடு செய்ய கவுன்டர்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றார். மேலும், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சோதனை முறையில் இலவச தரிசனத்திற்கு நேர ஒதுக்கப்படும் என்றும் அப்போது ஏற்படும் பிரச்னைகள் சரி செய்யப்பட்ட பிறகு, 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து மூலம் இலவச தரிசனத்திற்கு முழு நேர அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
அனுமனுக்கு வெண்ணெய் ஏன்?
ராவணன் சம்ஹாரத்திற்கு பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை சம்ஹாரம் பண்ணக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமன் கடவுளே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு பண்ணி அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசிர்வாதம் பண்ணி அளித்தார்கள். ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணை அளித்து ‘இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்’ என்று சொல்லி ஆசீர்வதித்தார். அதன்படி அனுமன் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார். ஆகவே அதேபோல நாம் வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.