மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் மலையாகத் தோன்றி படைப்பு கடவுளான பிரம்ம தேவனை, அகத்திய மாமுனிவரை வணங்க வைத்து பூலோகம் தோன்ற கருணை புரிந்து லிங்கத்தில் எழுந்தருளி விருத்தகிரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் அருள் பாவிக்கும் ஈசனின் வரலாற்றை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
பிரம்மதேவன் புராண காலத்தின் ஆதியில் பூலோகத்தை உருவாக்க எண்ணி முதலில் தண்ணீரை படைத்தான்.
அப்போது திருமால் தீய அரக்கர்களை வெட்டி விழுத்தி அவ் உடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன. அதனை கண்ட பிரம்மன் நீரும் அரக்கர்களின் உடல்களும் ஒன்றாக இருக்க மண்ணுலகம் தோன்ற அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது ஈசன் மலை வடிவாகத் தோன்றி பிரம்ம தேவனின் எதிரி நின்றார். அதனை அறியாமல் வேறு பல மலைகளைப் படைத்தான் பிரம்மன். தான் படைத்த மலைகளுக்கு இருக்க இடம் இல்லாமல் போனதால் வருந்தி நின்றான் பிரம்மன் இருக்க இடம் இல்லை. பெரிதும் வருந்தி மயங்கி நின்றார். அப்போது குறிப்பால் உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மன் நல்லறிவு பெற்று மழையாய் நின்ற சிவபெருமானை பூஜித்து பக்தியுடன் வழிபட்டார்.
அதில் மன மகிழ்ந்து சிவபெருமான், அரக்கர்களின் தசையும் தண்ணீரையும் ஒன்றாக இறுகி பூலோகம் தோன்றுமாறு செய்தார். அதற்கு மேதினி என்று பெயரிட்டார். பிரம்மன் படைத்த மலைகளுக்கும் இடம் அளித்தார். அப்போது நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம். நான் வேறு இம்மலை வேறு அல்ல. இந்த மலை தோன்றிய பின்னரே பிரம்மா உன்னால் பல மலைகள் தோன்றின. எனவே" நம் மலைக்குப் பழமலை என பெயர் தாங்கி' இப்பழமலை மண்ணுலகுக்கு ஆணிவேராக ஆழ்ந்து நின்று மேலோங்கி சிவலிங்கமாக அருள் புரிந்து நிற்கும்.
இதனை மெய்ஞானத்தால் உணர்ந்து, பக்தியுடன் வணங்கி வழிபடும் அடியாருக்கு வாழ்வில் நலன்கள் பல கிடைக்கும் என அருளினார். இறைவன் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், முதுகுந்தர். எனவும், அன்னை அருள்மிகு ஸ்ரீ விருத்தாம்பிகை, பாலாம்பிகை, இளைய நாயகி என அழைக்கப்படுகின்றனர். புனித தீர்த்தம்: மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்.தலவிருட்சம்வன்னி மரம். இருப்பிடம்: அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருதாச்சலம், கடலூர் மாவட்டம், இங்கு செல்ல வேண்டிய வழித்தடம். கடலூர் இருந்து திருச்சி செல்லும் வழியில் விருத்தாசலம், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாலக்கரை அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்